பிக் பாஸ் 6 நாள் 51: `பொண்ணுங்கன்னா சப்போர்ட்டுக்கு வந்துடுவீங்களா' கத்திய அசிம்; ஷிவின், ஜனனி அழுகை
இந்த வாரம் பழங்குடிகள் x ஏலியன்ஸ் டாஸ்க். முன்னது நிஜம். பின்னது கற்பனை. இரண்டிற்கும் இடையில் நடக்கும் ஃபேண்டஸி போட்டி. மறுபடியும் அதேதான். இவர்கள் நினைத்தால் இந்த டாஸ்க்கை சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் நிகழ்த்தி, அந்த உற்சாகத்தை பார்வையாளர்களுக்கு கடத்தலாம்.
மாறாக, ஒரே கத்தல், ஒரே சண்டை. ரூம் போட்டு யோசிக்கும் பிக் பாஸ் டீம், நுட்பமாக வடிவமைத்த டாஸ்க்குகளில் இதுவும் ஒன்று. சிலர் குடிபோதையில் இருக்கும் போது வாய்க்கு வந்ததைத் திட்டுவார்கள். அதைக் கேட்பவரால் கோபப்படாமல் இருக்க முடியாது. அதே சமயத்தில் ‘குடிச்சவன் கிட்ட என்ன பேசறது?!” என்றும் தோன்றும். இந்த டாஸ்க்கும் அப்படித்தான். டாஸ்க் என்கிற சாக்கில் மனதில் ஒளித்து வைத்த வன்மங்களையெல்லாம் கொட்டலாம். எதிராளி ஆத்திரப்படுவார். பிக் பாஸிற்கு கன்டென்ட் கிடைக்கும்.
‘போக பிஸ்ஸா’ என்னும் விநோதமான ஆட்டம்
இந்த ஆட்டத்தின் விதியை சுருக்கமாகப் பார்த்து விடுவோம். பழங்குடிகளுக்கு தேவைப்படும் அதிசயமான பூ, ஏலியன்ஸ்களின் ஆக்ரமிப்பில் இருக்கும். இதைப் போலவே ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும். எனவே பரஸ்பரம் தேவைப்படும் பொருளை எடுப்பதற்காக ஒருவர், இன்னொரு அணியின் ஏரியாவில் நுழைவார்.
அவர் பிடிபட்டு விட்டால், ஒரு நாற்காலியில் அவரை அமர்த்தி எதிரணியினர் ‘ரியாக்ஷன் டார்ச்சர்’ செய்வார்கள். பிடிபட்டவர் இதற்கு ரியாக்ட் செய்து விட்டால் தோல்வி. அந்தக் கூட்டத்துடன் ஐக்கியமாகி விட வேண்டும். மாறாக ரியாக்ட் செய்யாமல் பஸ்ஸர் அடிக்கும் வரை தாக்குப் பிடித்தால், தேவைப்படும் பொருளுடன் வெற்றிகரமாக வெளியே வரலாம். டாஸ்க்கின் இறுதியில் யாரிடம் அதிகமான கற்கள் இருக்கிறதோ, அவர்களுக்கு ‘நாமினேஷன் ஃப்ரீ ஜோன்’ உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். தங்களின் பெயர் பொறித்த கல்லை, ஒவ்வொரு பழங்குடியும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
‘நான்தான் பழங்குடி.. நான்தான் பழங்குடி’ என்று அணி பிரிக்கும் போது கூச்சலிட்டு இடம் பிடித்தவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது. அவர்களுக்கு கார்டன் ஏரியாதான். அங்குதான் புழங்க வேண்டும். மாறாக ஏலியன்ஸ்களுக்கு அடித்தது லக். அவர்கள் வீட்டிற்குள் இருக்கலாம். வரவேற்பறையின் கண்ணாடிக் கதவுதான் எல்லைக் கோடு.
டாஸ்க் ஆரம்பித்தது. இரண்டு அணியினரும் விநோதமான ஒப்பனையில் இருந்தார்கள். பழங்குடிகள் எப்படிக் கத்துவார்கள் என்று நாம் இதுவரை சினிமாவில் பார்த்துப் பழகியபடியே அந்த அணியினர் கத்த, ஏலியன்ஸ்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களும் அதையே சற்று வேறு மாடுலேஷனில் கத்தினார்கள். இரண்டு அணியும் தங்களின் வேட்டைக்கு கிளம்ப வேண்டிய தருணத்தை உணர்த்தும் அடையாள ஓசையை பிக் பாஸ் அறிமுகப்படுத்தி வைத்தார். பழங்குடிகளின் தெய்வமான ‘போக பிஸ்ஸா’விற்கு பசியெடுக்கும் நேரத்தின் சத்தமும் ஏலியன்ஸ்களின் பாட்டரி டவுன் ஆகும் சத்தமும் வந்தன.
‘நான் கோபப்படலை’ – அடம் பிடித்த அசிம்
இரண்டு டீம்களும் வார்ம்-அப் ஆகின. முழங்காலிட்டு ஆக்ரோஷமாக கத்தி நம்முடைய மூதாதையர்களை நினைவுகூர்ந்தார் ஏடிகே. கிளம்ப வேண்டிய அடையாள ஒலி வந்த பிறகுதான் ஒருவர் கிளம்ப வேண்டும். ஆனால் இரண்டு அணியிலும் விதிகளை கன்னாபின்னாவென்று மீறினார்கள்.
முதலில் அசிம் வீட்டிற்குள் ஓடினார். அவரை பிடித்து ரியாக்ஷன் நாற்காலியில் அமர வைத்தார்கள். அம்மாவிடம் ‘மம்மு’ ஊட்டிக் கொள்ளாமல் தப்பித்து ஓடும் சிறுவன் மாதிரி, அசிம் அவ்வப்போது எஸ்கேப் ஆக “அதான் பஸ்ஸர் அடிச்சாச்சுல.. ஏன் ஓடற?” என்று கோபமான முகத்துடன் வந்தார் மணிகண்டன். அதைக் கண்டு அசிம் சற்று ஜொ்க் ஆனார். என்றாலும் சமாளித்துக் கொண்டார். பஸ்ஸர் அடித்ததும் ‘நான் கோபப்படவில்லை’ என்று அசிம் சாதிக்க ஏலியன்ஸ் வெற்றி பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தார். ஆக அசிமிற்கு தோல்வி. அயல்கிரகவாசிகளுக்கு முதல் வெற்றி.
அசிம் வெளியே வந்த களேபரம் அடங்குவதற்குள் ஷிவின் உள்ளே புகுந்து விட்டார். அவரையும் சிரமப்பட்டு பிடித்து நாற்காலியில் அமர வைத்து டார்ச்சரை ஆரம்பித்தார்கள். ‘வெங்காயத்தை கண்ணில் பிழியலாமா.. மிளகாயை மூக்கில் காட்டலாமா?’ என்று டெரராக யோசித்துக் கொண்டிருந்தார் தனலஷ்மி. “யம்மா... தாயி. உங்க கைல இருக்கற கத்தியை முதல்ல தள்ளி வையுங்க’ என்று பிக் பாஸே கேட்டுக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அத்தனை உக்கிரமாக இருந்தார் தனலஷ்மி.
இந்த நேரத்தில் அசிம் தப்பித்து வெளியே ஓடி விட்டார். பழங்குடிகள் மூர்க்கமாக கதவை உடைத்து வருவது போல் பாவனை செய்ய, ஆயிஷா மிகவும் டென்ஷன் அடைந்து ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார். தனலஷ்மி உள்ளிட்டவர்கள் எத்தனை டார்ச்சர் செய்தாலும் சிரித்துக் கொண்டே சமாளித்தார் ஷிவின். தனலஷ்மி கத்திய கத்தலில் நமக்கே பயமாக இருந்தது. ‘உன் மூஞ்சிய பார்த்து உங்க அம்மா வரமாட்டாங்க’ என்று விளையாட்டின் எல்லையைத் தாண்டிச் சென்று கிண்டல் செய்தார் தனலஷ்மி. அப்போதைக்கு ஷிவின் ரியாக்ட் செய்யாவிட்டாலும் உள்ளே பலமாக காயப்பட்டார் என்பது பிற்பாடு தெரிந்தது.
தனலஷ்மியின் கமெண்ட்டால் புண்பட்ட ஷிவின்
பஸ்ஸர் அடிக்கும் வரை சித்திரவதைகளை ஷிவின் தாங்கிக் கொண்டு ரியாக்ட் செய்யாததால் பழங்குடி அணி வெற்றி. ஏலியன்ஸ்கள் தோல்வி. தனக்குத் தேவையான அதிசயப்பூவை எடுத்துக் கொண்டு உற்சாகமான ஆட்டத்துடன் வெளியே வந்தார் ஷிவின். பழங்குடிகள் கற்கள் செய்வதற்கான பொருட்கள் வந்து விழுந்தன. திடீரென்று வீட்டிற்குள் இருந்து ஓடி வந்த அமுதவாணன் அவற்றில் சிலதை லவட்டிக் கொண்டு உள்ளே ஓட, பின்னாலேயே சென்று துரத்திப் பிடித்ததில் தள்ளுமுள்ளு நடந்தது. ‘இப்படில்லாம் கேம் ஆட வேணாம்’ என்று ஆயிஷா சொன்னதில், அவற்றை தனலஷ்மி திருப்பித் தந்தார்.
அடுத்ததாக ஏலியன்ஸ் அணியில் இருந்து முதல் ஆளாக வேட்டைக்கு கிளம்பினார் தனலஷ்மி. இவர் மீது சில குறைகள் இருந்தாலும், டாஸ்க் என்று வந்து விட்டால் ஆர்வமாக களத்தில் இறங்கும் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். ஷிவினை தான் டார்ச்சர் செய்த விதத்திற்கு எதிரணியினர் பழிவாங்குவார்கள் என்பது நன்கு தெரிந்தும் முதல் ஆளாக சவாலை எதிர்கொள்ள சென்றார்.
இவரைப் பிடித்து நாற்காலியில் அமர வைத்த பழங்குடிகள் நன்கு வெறுப்பேற்றினார்கள். இதற்கு நடுவில் ஷிவின் உணர்ச்சிகரமாக கேட்ட கேள்வி முக்கியமானது. ‘எங்க அம்மாவோட எனக்கு எவ்வளவு எமோஷனல் கனெக்ட் இருக்குதுன்னு உனக்குத் தெரியும். டாஸ்க்கிற்காக என்ன வேணா பேசுவியா.. நான் எப்பவாவது உன்னை அப்படி பேசியிருக்கனா?’ என்று கேட்க, அதற்கும் ஒழுங்கு காட்டி சிரித்தார் தனலஷ்மி. ஷிவினின் கேள்வியையும் டாஸ்க் என்று நினைத்துக் கொண்டாரோ, என்னமோ.
‘உனக்கு சூடு, சொரணையே கிடையாதா?’ என்று இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு தனலஷ்மியை திட்டித் தீர்த்தார் அசிம். ஆனாலும் தனலஷ்மி அசரவில்லை. சிரித்து மழுப்பினார். ‘எனக்கு எதுவுமே கிடையாது’ என்கிற நக்கலான பதில் வேறு. பாவம், திட்டிய அசிம்தான் நொந்து போக வேண்டியிருந்தது.
தனலஷ்மியின் அட்ராசிட்டியான எக்ஸ்பிரஷனால் மனம் புண்பட்ட ஷிவின், விரைந்து சென்று பாத்ரூம் ஏரியாவில் கதறி அழ, டாஸ்க்கில் இருந்து விலகாமல் கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் ரச்சிதா. மற்றவர்களுக்கு பல ஆலோசனைகளை சொன்ன ஷிவினே, மனம் உடைந்து போகும் தருணத்தையும் பிக் பாஸ் வீடு ஏற்படுத்தி விட்டது. ‘எல்லாமே டாஸ்க்தானே?!’ என்று தனலஷ்மியும் பிற்பாடு வந்து சமாதானப்படுத்த, சற்று தெளிவடைந்தார் ஷிவின்.
பழங்குடிகள் செய்த டார்ச்சரை வெற்றிகரமாக தாக்குப் பிடித்த தனலஷ்மி வெற்றி. அவர் ‘விக்கிரமனின்’ கல்லை தேர்ந்தெடுத்து கொண்டு சென்றார். விக்ரமன் ஸ்ட்ராங்க் ஆன போட்டியாளர் என்பதால் இருக்கலாம்.
ஜனனியை ‘செம’யாக வெறுப்பேற்றிய அசிம்
அடுத்ததாக ஏலியன்ஸ் தரப்பிலிருந்து ஜனனி வெளியே வந்து பழங்குடிகளிடம் பிடிபட்டார். ‘அமுதவாணன் ஆதரவு.. ஆப்பிள் தின்பது..’ என்று இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அசிம் நன்றாகவே ஜனனியை வெறுப்பேற்றினார். உள்ளே இருந்து இவற்றையெல்லாம் வெற்றுக் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அமுதவாணன். “உனக்கு அறிவிருக்கா.. உன் டிரஸ் நாறுது... நீ ஒரு டம்மி பீஸூ. ஜோக்கர்.. ’ என்றெல்லாம் அசிம் வெளுத்து வாங்க, ஜனனியும் சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி ‘என்னடா சொல்றே?’ என்று செல்லம் கொஞ்ச “நான் வயசுல பெரியவன்” மோடிற்கு சென்றார் அசிம்.
ஆனால் ஜனனி என்னதான் சிரித்து மழுப்பினாலும் அவரின் முகம் மாறியது நன்கு தெரிந்தது. எனவே ‘பழங்குடிகள்’ வெற்றி என்று பிக் பாஸ் அறிவித்தார். ஏலியனாக இருந்த ஜனனி, இப்போது ‘பழங்குடி’யாக கன்வொ்ட் ஆக வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பழங்குடிகளின் கற்கள் ஒன்றை சாமர்த்தியமாக லவட்டிக் கொண்டு போனார் க்வீன்சி. (பார்றா!). “ஹே.. என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி என்னை மட்டும் ஏண்டா எல்லோரும் பார்க்கறீங்க.. எல்லோருமேதானே திரும்பி நின்னுக்கிட்டு இருந்தோம் ” என்று அலர்ட்டாக இல்லாமல் போன ராம் கோபப்பட, ‘சரி ஒழிஞ்சு போ’ என்று அவரை சமாதானப்படுத்தினார்கள்.
அடுத்ததாக ஏலியன் தரப்பிலிருந்து வெளியே வந்த மணிகண்டன் பிடிபட்டார். ஆனால் மணிகண்டனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். இந்தச் சமயத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக இவரைச் சரியாக வெறுப்பேற்றாமல் விட்டு விட்டார்கள். அது என்ன சண்டை என்று பார்ப்போம். “சமையல் ரெடி ஆயிடுச்சா?” என்று கேப்டன் அசிம் கேட்க “உங்களுக்கு வடிச்சுக் கொட்டிக்கிட்டு டாஸ்க்கும் எங்களால செய்ய முடியாது” என்று தனலஷ்மி கத்த, ‘ஒரு கேப்டனா அதைக் கேட்க எனக்கு உரிமை இருக்கு’ என்று அசிமும் பதிலுக்கு கத்த, சமாதானப்படுத்துவற்காக விக்ரமன் உள்ளே புகுந்தார். இது அசிமிற்கு இன்னமும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘நீங்க ஏன் இதுல மூக்கை நுழைக்கறீங்க.. ஏன் எல்லாத்திலயும பஞ்சாயத்து பண்ண வர்றீங்க” என்று அசிம் டென்ஷன் ஆக, ஒரே அணியில் இருந்தாலும் அசிமும் விக்ரமனும் முட்டிக் கொண்டார்கள்.
ஏதாவது ஒரு சர்ச்சை நிகழ்ந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. விசாரணை நாளில் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். யாராவது ஒருவர் சண்டையில் தலையிட்டுத்தான் ஆக வேண்டும். அந்த நோக்கில் விக்ரமன் உள்ளே வந்ததை ‘ஈகோ’ பிரச்சினையாக எடுத்துக் கொண்டார் அசிம். இந்தச் சர்ச்சை காரணமாக மணிகண்டன் அதிக டார்ச்சரை எதிர்கொள்ளாமல் ஜாலியாக நாற்காலியில் அமர்ந்திருந்தார். பஸ்ஸர் அடித்ததும் ‘மணிகண்டன் கோபப்பட்டார்” என்று பழங்குடிகள் சாதிக்க அதை சிரித்துக் கொண்டே மறுத்தார் மணிகண்டன். ‘ஒவ்வொரு தடவையும் நான் ரிசல்ட் சொல்ல முடியாது. நீங்களே அடிச்சுக்கங்க’ என்று பிக் பாஸ் கை கழுவினார்.
‘என்னை லூஸூன்னு சொல்லாத’ – ஆத்திரமடைந்த அசிம்
‘கோபம் வேற.. ரியாக்ஷன் வேற. நீ கோபப்பட்டே மணி..’ என்று அசிம் சொல்ல, ‘உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க’ என்கிற காமெடி போல, இந்தச் சர்ச்சைக்குள் ஜனனி புகுந்தார். “அப்ப எனக்கு வேற மாதிரி சொன்னீங்க. இப்ப மாத்தறீங்க.. லூஸூ மாதிரி கதைக்காதீங்க” என்றதும் அசிமிற்குள் இருந்த மிருகம் உக்கிரமாக வெளியே வந்தது. “யாரைப் பார்த்து லூஸூன்ற.. உன் வயசு என்ன.. என் வயசு என்ன..? இனிமே என் பெயர் சொல்லி கூப்பிடாதே..” என்று அவர் எகிற மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.
“அவ சாரி சொல்லிட்டா.. விட்டுடுங்க” என்று விக்ரமன் மறுபடியும் சமாதானத்திற்கு வர அதற்கும் கோபப்பட்ட அசிம் ‘உங்க ஸாரி பூரில்லாம் வேணாம். பொண்ணுங்கன்னா சப்போர்ட்டுக்கு வந்துடுவீங்களா. உங்க பஞ்சாயத்தையெல்லாம் வீட்டுக்கு வெளில வெச்சிக்கங்க..” என்று பழைய புராணத்தைப் பாடினார். மணி ஒப்புக் கொள்ளாததால், வேறு வழியில்லாமல் ‘மணி கோபப்படவில்லை’ என்று பழங்குடிகள் தீர்ப்பு சொல்ல, ஏலியன்ஸிற்கு வெற்றி கிடைத்தது. ‘லூஸூன்னு என் வாயில இருந்து தெரியாம வந்துடுச்சு. அதுக்காக ஸாரியும் கேட்டுட்டேன்.. அவர்தான் என்னை அண்ணான்னு கூப்பிடாத. அசிம் என்று கூப்பிடு’ என்று சொன்னவர்’ என்று ஜனனியும் பழைய புராணத்தை தோண்டியெடுத்து அனத்திக் கொண்டிருந்தார்.
உணவிற்காக அசிம் வீட்டிற்குள் நுழைய ‘இது டாஸ்க் நேரம். உள்ளே வராதீங்க. உங்களுக்கு பணிவிடை செய்ய நாங்க இங்க வரலை’ என்று தனலஷ்மி அமர்த்தலாக பதில் சொல்ல, “இந்தப் பொண்ணுக்கு என்னா திமிரு பாரேன்” என்று புலம்பிக் கொண்டே வெளியில் சென்றார் அசிம். (வல்லவனுக்கு வல்லவள் வையகத்தில் உண்டு!).
ஏலியன்ஸ்களின் ஒற்றுமை – பழங்குடிகளின் சண்டை
ஏலியன்ஸ்கள் ஒற்றுமையாக இருக்க, பழங்குடிகளுக்குள் சண்டை தொடர்ந்து கொண்டேயிருந்தது. “போனவங்களே.. போகலாம்... அடுத்தது நான் போறேன்” என்று அசிம் ஆரம்பிக்க “அப்படின்னா.. மத்தவங்களுக்கு எப்ப வாய்ப்பு?” என்கிற ஆட்சேபணை எழுந்தது. “டீமா முடிவு செஞ்சு போகணும்’ என்று விக்ரமனும் ஷிவினும் சொன்னது சரியான ஆலோசனை. “இது தனியா ஆடற ஆட்டமா.. க்ரூப் ஆட்டமா.. இதன் பலன்கள் யாருக்குச் சென்று சேரும்?” என்று பங்கு பிரிப்பதில் சர்ச்சை எழுந்தது. ‘நீயே போயிட்டு இருந்தா எப்படி?” என்று மைனாவும் அசிமிடம் சலித்துக் கொண்டார்.
“அசிம் எல்லாத்துலயும் பிரச்சினை பண்றாரு.. பெண், ஆண் கிடையாது. பாதிக்கப்பட்டவங்களுக்குத்தான் நான் பேசறேன். அந்தப் பொண்ணுதான் ஸாரி சொல்லிடுச்சு.. மக்கள் எப்படியும் சேவ் பண்ணிடுவாங்கன்ற நெனப்புல அசிம் ரொம்ப ஆடறாரு” என்று விக்ரமன் சலித்துக் கொள்ள “ஆனா அவர் சொல்றதுலயும் பாயிண்ட்ஸ் இருக்கு” என்று பழைய நட்பை விட்டுத் தராமல் பேசினார் ஏடிகே.
‘நான் உள்ளே போறேன்’ என்று அசிம் மறுபடியும் ஆரம்பிக்க மீண்டும் சண்டை எழுந்தது. ‘ஜனனியை அனுப்பிச்சா அவ சரியா விளையாட மாட்டா’ என்று அசிம் ரகசியமாக சொன்ன ஆலோசனையை, இக்கட்டான நேரத்தில் வேறு வழியின்றி ஷிவின் பொதுவில் போட்டு உடைக்க, இதைக் கேட்டு ஜனனி அழ ஆரம்பிக்க ஒரே குஷ்டமப்பா.. ச்சே. கஷ்டமப்பா..
கடைசியில் ராம் வீட்டினுள் சென்றார். நிச்சயம் தோற்று விட்டு திரும்புவார் என்று நினைத்தால், மனிதர் வெற்றிகரமாக டார்ச்சரை சிரிப்புடன் தாங்கி வெற்றி மலருடன் திரும்பி அசத்தினார். இந்த ‘போக பிஸ்ஸா’ விளையாட்டு முடிவதற்குள் நம் காதுகள் ‘புஸ்’ ஆகி விடும் போலிருக்கிறது. அத்தனை சத்தம்.
from விகடன்
Comments