பிக் பாஸ் 6 நாள் 47: கதிரவனுடன் மோதிரம் மாற்ற முயன்ற க்வீன்சி; முதல் மரியாதை எபெக்ட்டில் ராபர்ட்!

பிக் பாஸ் வீட்டில் இரண்டு விதமான ‘லவ் டிராக்குகள்’ ஓடிக் கொண்டிருக்கின்றன. இரண்டுமே ஜாலியாகப் பயணிக்கும் வரை எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது.

ஒன்று, ‘முதல் மரியாதை’ திரைப்படத்தின் மினி வெர்ஷன். ராபர்ட்டிற்கும் ரச்சிதாவிற்கும் இடையில் ஓடும் டிராக். நடன மாஸ்டர் எக்ஸ்பிரஸ்ஸ்வ்வாக இருந்தாலும் ரச்சிதா சற்று அடக்கியே வாசிக்கிறார். வாரத்தைக் கடத்துவதற்கு இந்த ரொமான்ஸ் விளையாட்டு தேவை என்று இருவருமே நினைத்திருக்கலாம்.

இரண்டாவது, ஜாலியானதொரு முக்கோணக் காதல். ஷிவினுக்கு கதிரவன் மேல் ஈர்ப்புண்டு என்பதைத் தெரிந்து கொண்டு ஒட்டுமொத்த வீடே அவரைக் கலாய்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், க்வீன்சி இதில் முன்னணியில் இருக்கிறார். ஆனால் இந்தக் கலாய்ப்பை மிக அநாயசமாகச் சமாளிக்கிறார் ஷிவின்.

பிக் பாஸ் 6 நாள் 47

நாள் 47-ல் நடந்தது என்ன?

உணவுத் தட்டுக்களைக் கழுவாமல் வைக்கும், கதிரவனின் ‘பொதுநல வழக்கு’ விசாரணைக்கு வந்தது. ‘இது தனிநபர் மீதான வழக்கல்ல. விழிப்புணர்வு அடிப்படையில் போடப்பட்டது’ என்று தனது சேஃப் கேமை விடாமல் இருந்தார் கதிரவன். எதிரே ஜூரிகள்தான் கும்பலாக அமர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்தால்... இல்லை. அந்த ஏழு பேருமே குற்றம் சாட்டப்பட்டவர்கள்தானாம். "இந்த ஏழு போ் மேல மட்டும்தான் தவறு இருக்குன்னு நெனக்கறீங்களா?” என்று கதிரவனைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார் ரச்சிதா.

‘க்வீன்சிதான் ஏ1 குற்றவாளி’ – அதிரடியாகச் சாட்சி சொன்ன அசிம்

சாட்சியங்களாக வந்தவர்களில் சிலர் தைரியமாகப் பெயர்களைச் சொன்னார்கள். சிலர் நழுவினார்கள். ‘நீதிபதி நாற்காலியில் அமர்ந்திருக்கும் க்வீன்சியே ஏ1 குற்றவாளி’ என்று தைரியமாகச் சொன்னார் அசிம். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் சிரிக்க, அமுதவாணனின் சிரிப்பு பிரதானமாகத் தெரிந்ததால் அவரை விலகி நிற்குமாறு நீதிபதி க்வீன்சி ஆணையிட “இத்தனை போ் சிரிச்சாங்க... என்னை மட்டும் ஏன் போகச் சொல்றீங்க...” என்று கோபித்துக் கொண்டார் அமுதவாணன். “உங்க பல்லுதான் தெரியுது" என்று நீதிபதி ஸ்தானத்திற்குப் பொருத்தமில்லாமல் க்வீன்சி பேச அதை வலுவாக ஆட்சேபித்தார் அசிம். “தமிழ் கிளாஸ்ல தூங்கிட்டாங்க போல" என்று சொன்ன போது, அசிமிற்கு இதே சபை நாகரிகம் இருந்திருக்க வேண்டும்.

பிக் பாஸ் 6 நாள் 47

"குடிக்கற கப்பைக் கையோட கொண்டு போறது ஆயிஷா மட்டும்தான்" என்று ‘திடீர்’ சான்றிதழ் தந்தார் அசிம். தானே பிரதான குற்றவாளியாகச் சுட்டப்படுவதால் அவசரம் அவசரமாக கேஸை முடிக்க நீதிபதி முயல, ‘வழக்கறிஞர்களும் நீதிபதியும் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல’ என்று பிக் பாஸ் உத்தரவிட்டார். (என்ன இருந்தாலும் சுப்ரீம் கோர்ட் ஆச்சே!). “இனிமே பண்ண மாட்டேங்கய்யா" என்று மணிகண்டன் உறுதிமொழி தர “என் கைல அலர்ஜி இருக்குது... அதுதான். மத்தபடி நானு...” என்று சமாளித்தார் க்வீன்சி.

“இது ஒன்றும் பெரிய குற்றமல்ல. அனைவருக்குமான கோரிக்கைதான். இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்குமே சுயபொறுப்பு தேவை” என்று தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் எவ்வித சச்சரவும் இல்லாமல் நீதிமன்றம் கலைந்து சென்றது.

பிக் பாஸ் 6 நாள் 47

“நீ அசிமை ஒரு கேஸ்ல தோக்கடிச்சல்ல... அதான் அவருக்கு உன் மேல கோபம்” என்று க்வீன்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆயிஷா. இருக்கலாம். பல சமயங்களில் அசிமும் தனலஷ்மியும் ஒரே மாதிரியாகத்தான் ரியாக்ட் செய்கிறார்கள். அசிமின் பெண் வடிவம் தனலஷ்மி. தனலஷ்மியின் ஆண் வடிவம் அசிம். “ஆமாம்... அவர்கிட்ட ஜாலியா கூட பேச முடியாது... எங்காவது பயன்படுத்திடுவாரு” என்பது போல் அலுத்துக் கொண்டார் க்வீன்சி. “கப் கழுவற விஷயத்துல என்னைப் பாராட்டினாரு. அதுக்காக அவர்கிட்ட போய் பேசுவனா, என்ன... ம்ஹூம்! அவருக்கும் எனக்கும் செட்டே ஆகாது. தள்ளித்தான் இருப்பேன்” என்றார் ஆயிஷா.

ஷிவினைக் கிண்டலடித்த க்வீன்சி – ஆயிஷா கூட்டணி

‘ஜிங்கிலியான்... ஜிங்கிலியான்...’ என்கிற விநோதமான பாடலோடு நாள் 47 விடிந்தது. (அவதார் 2–ல் வருவதாக இருக்குமோ?!). ஷிவினை கதிரவனோடு தொடர்புப்படுத்தி, காலையிலிருந்தே கிண்டலடிக்கும் பணியில் க்வீன்சியும் ஆயிஷாவும் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான காட்சிகளை விஸ்தாரமாகக் காட்டிக் கொண்டிருந்தது பிக் பாஸ் எடிட்டிங் டீம்.

ஒரு கட்டத்தில் “க்வீன்சி... உன்னைக் கூட மன்னிச்சுடுவேன். ஆனால் ஆயிஷாவை மன்னிக்க மாட்டேன். பின்னாடி இருந்து அத்தனை குசும்பு” என்று சிரித்துக் கொண்டே கூறினார் ஷிவின். இருவரும் செய்யும் கிண்டல்களினால் அவர் புண்படவில்லை. மாறாக அவற்றை ரசிக்கிறார் என்று தெரிகிறது.
பிக் பாஸ் 6 நாள் 47

இதில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். திருநங்கைகள், தங்களைப் பெண்ணாகத்தான் உணர்கிறார்கள். அவ்வாறுதான் இந்தச் சமூகமும் தங்களை அணுக வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அதுதான் நியாயமும் கூட. ஆனால் இந்தச் சமூகத்தில் அத்தகைய மாற்றம் கணிசமாக உருவாகவில்லை. விழிப்புணர்வுச் செய்திகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கான மாற்றம் மெல்ல ஏற்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீடும் இதைப் பிரதிபலிப்பது மகிழ்ச்சிக்குரியது.

ஆரம்ப நாள்களில் ஷிவினைப் பற்றி ஜனனி, க்வீன்சி, ஆயிஷா போன்றவர்கள் புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ அவரையொரு பெண்ணாகவே பார்க்கின்றனர்; கதிரவனுடன் இணைத்துக் கிண்டல் செய்கின்றனர். இது நல்ல முன்னேற்றம். ஆனால் எவருடைய மனமும் புண்படாமல் இந்த விளையாட்டு ஜாலியாக முடிந்துவிட்டால் நல்லதுதான்.

ஷிவினைப் பற்றிய கிண்டலில் இப்போது ராபர்ட்டும் இணைந்தார். அவர், தன் மகள் க்வீன்சியை ஆதரித்து கதிரவனை ‘மாப்ளே... மாப்ளே...’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டார். "மாப்ளே... உங்க டிரஸ் கலரும் என் பொண்ணு டிரஸ் கலரும் ஒண்ணு. நடுவுல வேறு யாரும் வரக்கூடாது” என்று நமட்டுச்சிரிப்போடு சொன்னார்.

நின்று போயிருந்த விஷ்ணு சக்கரம் மீண்டும் சுற்ற ஆரம்பித்தது. ‘ஸ்பின் போர்டு’ டாஸ்க்கிற்கான பஸ்ஸர் அடிக்க பாய்ந்து சென்ற மணிகண்டன், அதில் ஏறி ‘ஹாயாக’ படுத்துக் கொண்டார். வித்தியாசமான சிந்தனை. ராம், ஆயிஷா, கதிரவன் ஆகியோர் மாற்றி மாற்றி சக்கரத்தைச் சுற்றியும் மணிகண்டனை அசைக்க முடியவில்லை. எனவே அவருக்கு 400 பாயிண்ட்ஸ். கோபம் வருவதை மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டால், மணிகண்டனைப் போல் ஜாலியான ஆள் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

பிக் பாஸ் 6 நாள் 47
கதிரவனின் மோதிரத்தை வாங்கி தன் விரலில் போட்டுக் கொண்ட க்வீன்சி, திருப்பித் தர மறுத்தார். ‘வேண்டுமானால் என் மோதிரத்தைத் தருகிறேன்’ என்றார். இதன் அர்த்தம் புரிந்துதான் சொல்கிறார் போல. ஆயிஷாவும் இந்த விளையாட்டிற்கு ஒத்து ஊதினார். ஷிவினை ஜாலியாக வெறுப்பேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டில் உண்மையான காதல் எங்காவது ஒளிந்திருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.

சிறைக்குச் சென்ற தந்தையும் மகளும்

‘நீதிமன்ற டாஸ்க்கில்’ சிறப்பாகப் பங்கேற்ற இருவரைத் தேர்ந்தெடுக்கும் தருணம். சந்தேகமே இல்லாமல் அசிம் மற்றும் விக்ரமனின் பெயர்கள் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. இருவருமே அதற்குத் தகுதியானவர்கள்தான். குறிப்பாக விக்ரமனின் நிதானமான தர்க்கத்திற்குப் பெரிய பாராட்டு கிடைத்தது. ‘கிளாஸ் படம் இருக்கும் போது மாஸ் படமும் வேணுமில்லையா... அதனால விக்ரமனோட அசிமையும் சொல்றேன்’ என்று ராபர்ட் சொன்ன விளக்கம் கனகச்சிதம். ஷிவின், தனலஷ்மி, ஏடிகே ஆகியோர்களின் பெயர்களும் சொல்லப்பட்டன.

ஆனால் பெரும்பான்மையாக அசிம் மற்றும் விக்ரமனின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்கள் தேர்வானார்கள். அடுத்த கேட்டகிரியில் ‘வாரம் முழுவதும் சிறப்பாகப் பங்கேற்றவரின் பெயரைச் சொல்ல வேண்டும்’. இதில் சந்தேகமில்லாமல் மெஜாரிட்டியில் ஷிவின் தேர்வானார்.

பிக் பாஸ் 6 நாள் 47

“டாஸ்க், வீட்டு வேலை, மேக்கப்போட சைட் அடிக்கறதையும் நல்லா செஞ்சா” என்று மணிகண்டன் குசும்பாகச் சொல்லச் சபை கலகலத்தது. ‘எனக்கு டஃப் பைட் கொடுத்தா’ என்று சர்காஸ்டிக்காக க்வீன்சி சொல்ல, சிரிப்பை அடக்க முடியாமல் தத்தளித்தார் கதிரவன். அவருடைய முறை வரும் போது ‘என்ன சொல்வார்?’ என்கிற எதிர்பார்ப்பில் சபையே ஆர்ப்பரித்தது. அவரும் ‘ஷிவின்’ பெயரைச் சொல்ல, அம்மணியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. ‘எப்படி... பாத்தியா...' என்பது போல் க்வீன்சியை பெருமிதம் பொங்கப் பார்த்தார் ஷிவின்.

ஆக... அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவரும் அடுத்த வாரத் தலைவர் தேர்தலுக்கான போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.

அடுத்தது வில்லங்கமான பகுதி ‘டாஸ்க்கில் குறைவாக பங்களிப்பு செய்த நபர்’ பற்றிய தேர்வு. இதில் மெஜாரிட்டியில் ராபர்ட் மாஸ்டர் வந்தார். ரச்சிதாவே ராபர்ட்டின் பெயரைத்தான் சொன்னார். (குத்துங்க எஜமான்... குத்துங்க!) ‘வாரம் முழுவதும் வீட்டுப் பணிகளில் குறைவாகப் பங்களிப்பு செய்தவர்’ என்கிற பிரிவில் க்வீன்சியின் பெயர் பெரும்பான்மையாக வந்தது. தன்னுடைய முறை வரும் போது ரச்சிதாவின் பெயரை ராபர்ட் சொல்ல “ஏன்... போன தடவை மாதிரி ராஜா – ராணியா ஜோடியா ஜெயிலுக்குப் போக பிளானா?” என்று டைமிங்கில் கிண்டலடித்தார் மைனா. ஆக ராபர்ட் மற்றும் க்வீன்சிக்கு சிறைத் தண்டனை.

பிக் பாஸ் 6 நாள் 47

நீதிமன்ற டாஸ்க்கில் தனக்குச் சரியாக வாய்ப்புகள் கிடைக்காதது பற்றி ஆயிஷா அனத்திக் கொண்டிருந்தார். குறைவான பங்களிப்பில் தனது பெயரை ஜனனி சொல்லி விட்டதால் ஆயிஷாவிற்கு மனவருத்தம். "அசிம் கோபப்படுவாரே ஒழிய, மனசுல ஒண்ணும் வெச்சுக்காத ஆளு... ரொம்ப ஸ்ட்ராங்கான பிளேயர். அவரை வீட்டிலிருந்து நகர்த்தவே முடியாது" என்று சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் தனலஷ்மி. அது சரி, இனம், இனத்தோடுதானே சேரும்?!

ராபர்ட்டின் ரொமான்ஸ் – ஜூம் போட்டு அழகு பார்த்த பிக் பாஸ் டீம்

கதிரவன், க்வீன்சி, ஷிவினின் ‘ரொமாண்டிக் காமெடி டிராக்’ ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம், ‘முதல் மரியாதை’ திரைப்படத்தின் மினி வெர்ஷன் ஓடிக் கொண்டிருந்தது. ‘இன்னமும் ஒன்றரை நாள்தான் இருப்பேன். அப்புறம் வீட்டை விட்டு போயிடுவேன்” என்று அனுதாப அலையில் ரொமான்ஸ் தேடிக் கொண்டிருந்தார் ராபர்ட். இதனாலோ என்னமோ, துயரமும் வருத்தமும் கலந்த முகபாவத்தில் ரச்சிதா அமர்ந்திருக்க, அப்போது அவருக்கு டைட் க்ளோசப் எல்லாம் வைத்து காண்பித்தார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 47

பிக் பாஸ் கேமிரா மற்றும் எடிட்டிங் டீமில் யாரோ ஆர்வக்கோளாறு ரசனையுடன் ஒரு நபர் புதிதாக இணைந்திருக்கிறார் போலிருக்கிறது. ராபர்ட் மற்றும் ரச்சிதாவின் முகபாவங்களை ஜூம் இன்... ஜூம் அவுட் எல்லாம் போட்டு கௌதம் வாசுதேவன் படம் போலக் காட்ட முயன்று கொண்டிருந்தார். அவர் ஜூம் போட்டது போதாதென்று ராபர்ட்டும் தன் கைகளால் ரச்சிதாவை ஜூம் செய்து பார்த்து கைகளை விரித்து ரொமான்ஸாக அழைக்க ‘அடி விழும்’ என்று செல்லமாக எச்சரித்தார் ரச்சிதா.

மிக்ஸி விளம்பரத்திற்கான டாஸ்க் ஒன்று நடந்தது. குறைந்த விநாடிகளில் பொருள்களை அரைத்து எந்த அணி சிறப்பாக அலங்கரித்து வைக்கிறது என்கிற போட்டி. ஷிவின் நடுவராக இருந்த இந்தப் போட்டியில் அசிம் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. நடுவர் உட்பட, வெற்றி பெற்ற அணியில் உள்ள அனைவருக்கும் நவீன ரக மிக்ஸி பரிசாகக் கிடைத்தது. "அம்மா... சட்னி அரைச்சு வைம்மா... வந்து சாப்பிடறேன்” என்று அசிமும் அமுதவாணனும் கேமரா முன்னால் செய்தி சொன்னார்கள்.

காலை முதலே க்வீன்சியின் கிண்டல்களைத் தாங்கிக் கொண்டிருந்த ஷிவின், இப்போது செய்த காரியம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. கதிரவன் மற்றும் க்வீன்சியின் நடுவே வந்து அவர் ஜாலியாக அமர்ந்து கொள்ள கதிரவனுக்கு வெட்கச் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. “நீ ஏன் நடுவுல உக்காந்தே... எந்திரிச்சு வா" என்று க்வீன்சியின் அப்பாவான ராபர்ட் ஆட்சேபிக்க “நீயும் உன் அப்பாவும் கூண்டோடு ஜெயிலுக்குப் போங்க” என்று க்வீன்சியிடம் ஷிவின் அடித்த கமெண்ட் ரகளை. அதுவரை க்வீன்சி செய்த அத்தனை கலாட்டாக்களையும் இந்த ஒற்றைக் கமெண்ட்டின் மூலம் காலி செய்துவிட்டார் ஷிவின்.

பிக் பாஸ் 6 நாள் 47

‘அப்பாவும் பொண்ணும் வாங்க... ஜெயிலுக்குள்ள தள்ளி கதவைச் சாத்தணும்” என்று கேப்டன் மைனா அழைக்க, சிறைக்கான ஆடையில் இருவரும் வந்தார்கள். ‘என்ன... வாரா வாரம் ஃபேமிலியோட ஜெயிலுக்குப் போறீங்க?” என்று ராபர்ட்டைக் கிண்டலடித்தார் மைனா. ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற பாடலை இவர்கள் குறும்பாகப் பாட ராபர்ட்டும் க்வீன்சியும் சிறையில் செட்டில் ஆனார்கள். ‘அப்பாடா... கொஞ்ச நேரத்துக்கு இம்சை இருக்காது’ என்று ரச்சிதா நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கலாம்.

இன்று பஞ்சாயத்து நாள். சிறிய உடல்நலக்குறைவு காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் இருப்பதாக சில நாள்களுக்கு முன் செய்தி வந்தது. எனவே இந்த வார நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்க அவர் வருவாரா, மாட்டாரா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. வருவார் என்றே நம்புவோம். வேலை என்று வந்துவிட்டால் அவர் வெள்ளைக்காரன் மாதிரி.


from விகடன்

Comments