தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு தொடர்ந்த வழக்கு - `காந்தாரா' படப்பாடலுக்குத் தடை விதித்த நீதிமன்றம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள கன்னட மொழித் திரைப்படமான 'காந்தாரா' தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதன் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்றிருந்த ‘வராஹ ரூபம்’ பாடல் கேரளத்தைச் சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு 2017-ம் ஆண்டு வெளியிட்டிருந்த 'நவரசம்' பாடலுடன் ஒத்துப்போவதாகவும், இரண்டு பாடலுக்கும் தவிர்க்க முடியாத நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

மேலும், "இப்பாடல் 'நவரசம்' பாடலின் காப்பி என்பதால் 'காந்தாரா' படக்குழுவினர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்" என்று பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் 'காந்தாரா' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘வராஹ ரூபம்’ பாடலை படக்குழுவினரும், தயாரிப்பாளர்களும் எந்தவொரு தளங்களிலிலும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்துப் பதிவிட்டுள்ள தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு, "கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் அனுமதியின்றி `காந்தாரா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராஹ ரூபம்’ பாடலை அதன் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் Amazon, Youtube, Spotify, Wynk Music, JioSaavn போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் எந்தவொரு வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளனர்.



from விகடன்

Comments