மாடியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் சிவகுமார். விதவிதமான புத்தகங்கள் அடங்கிய ஒரு லைப்ரரியே தன் வீட்டில் வைத்திருக்கிறார்!
“இது எனது யாகசாலை... என்னைச் சமனப்படுத்தும் அறிவுத் தொழிற்சாலை....” என்று தனது குட்டி லைப்ரரியைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டபடியே நம்மை டைனிங் ஹாலுக்குக் கூட்டி வந்துவிட்டார்.
திருமதி. பழனிச்சாமியின் (பழனிச்சாமி - சினிமா பெயரல்ல... சிவகுமாரின் நிஜப் பெயர் அதுதான்! சினிமாவுக்காகத்தானே சிவகுமார் ஆனார்! ) கைப்பக்குவத்தில் மிளகுக் குழம்பு கீரை - அவரைக்காய் பொரியலும் முட்டைப் பொடிமாஸும் ருசித்தேன். லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டே ‘டின்னரை’ப் பற்றிப் பேச ஆரம்பித்தோம்.
“உங்கள் டின்னர் விருந்தாளி யார்...?” என்று கேட்டதுதான் தாமதம்... அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சிவகுமார், சடக்கென்று உணர்வு மாறினார். விழிகளின் இலக்கையும் தாண்டி மனம் தொலைதூரத்துக்குப் போய்விட்டது போலும். அவர் மனப்புரளலை அவரது துணைவியார் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அவர் முகத்திலும் உணர்வுக் கலவை! சில விநாடி மௌனத்துக்குப் பிறகு பேச ஆரம்பித்தார் சிவகுமார்.
“முகம் தெரியாத மனிதரை என் வீட்டு விருந்துக்கு அழைக்க விரும்புகிறேன்...” என்ற சிவகுமாரின் கண்களிலே ஆர்வமும் ஆசையும் கலந்து நிறைந்தன.
“முகம் தெரியாத மனிதரா...?! உங்களுக்கு யாதவரா அவர்...?”
“என் அம்மாவும் பெரியவர்களும் சொல்லிச் சொல்லி நிறையவே அவரைப் பற்றித் தெரிந்திருக்கிறேன். ஆனால், தனது முப்பத்துநான்கவாது வயதிலேயே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டுவிட்ட, புகைப்படம்கூட எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதால் என் மனதில் அரூபமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த அற்புத மனிதர்... என்னைப் பொறுத்தவரை முகம் தெரியாத மனிதரே! முகம் பார்த்துச் சிரிக்கக்கூடத் தெரியாத பிஞ்சுக் குழந்தைப் பருவத்தில், என்னைத் தன் மார்மீது தூக்கிப் போட்டுக் கொஞ்சி, என் பிஞ்சுக் கால்களால் தன் நெஞ்சில் மிதிபட்ட அந்த மனிதரே - என் டின்னர் கெஸ்ட்! இதில் என் மனைவி லட்சுமிக்கும் முழு உடன்பாடே... தன் கையால் வகைவகையாய் அவருக்கு உணவு சமைத்துப் போட்டு, அவர் சாப்பிடுவதைப் பார்த்துப் பார்த்து மகிழ அவரும் துடித்துக் கொண்டுதானிருக்கிறார். என் இரண்டு மகன்களும் (சரவணன், கார்த்திக்) ஒரு மகளும் (பிருந்தா) கூட அவரோடு சேர்ந்து சாப்பிடுவதில் எல்லையில்லாத ஆனந்தம் கொள்வார்கள்...”
“அவரை அழைப்பதற்குக் காரணம் என்ன...??”
“அவர் நல்ல பக்திமான்... ஜோதிடக் கலையில் வல்லவர். செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்கவர். அவர் கணித்துச் சொன்னால், அது அப்படியே நடக்குமாம்! தனக்கு இரண்டாவது மகன் பிறந்ததும் அவன் ஜாதகத்தை ஓலைச்சுவடியில் குறித்து வைத்தாராம்! அந்த அன்பு மகனுக்கு ஓராண்டு நிறைவதற்குள் தந்தையான தன் வாழ்வு முடிந்துவிடும் என்று கணித்துச் சொல்லியிருக்கிறார். உறவினர் ஒருவர் போட்டோ எடுக்க முயன்றபோதும் ‘போகப் போகிறவனுக்கு எதுக்கப்பா போட்டோ...? போனபின் காலகாலத்துக்கு அதைப் பார்த்து மற்றவர்கள் கலங்கவா...?’ என்று கூறி, போட்டோ எடுத்துக்கொள்ள மறுத்தவர் அவர். ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று பழநிமலைக்குப் போய், தான் பாராயணம் செய்து வைத்திருந்த ‘திருப்புகழ்’ மொத்தப் பாடலையும் முருகன் சந்நிதியில் நின்று மனமுருகப் பாடி, மூன்றுகால பூஜையும் முடிந்த பின்பே தன் கிராமத்துக்குத் திரும்பியவர்....
தமிழ் கற்றுத் தரவே தரமான ஆசிரியர் இல்லாத காலத்தில், ஆங்கில போதகன் வாங்கி வைத்து அதன் உதவியால் ஆங்கிலம் பயின்றவர். தான் கற்றதால், ஊர்ப் பிள்ளைகளுக்கு இரவு நேரங்களில் விளக்கொளியில் கல்வி போதித்திருக்கிறார். அதுவும் இலவசமாக! ”
“தன் மரணத் தேதியைக் குறித்தவரா...?! ஆச்சரியமாக இருக்கிறதே...”
“அது மட்டுமா...? வாரச் சந்தைக்குச் சென்று வந்த மனைவி, புதிதாக நான்கு வண்ணப் புடவைகள் - சின்னாளப்பட்டிச் சேலைகள் வாங்கி வந்தபோது பைத்தியக்காரி! ஓரேயடியா நாலு சேலைகளை எதுக்கு வாங்கிட்டு வந்திருக்கே...? ஒவ்வொண்ணா கிழிஞ்ச பிறகு அப்பப்போ எடுத்துக்கலாம் இல்லே...’ என்று கடிந்து, வெள்ளைச் சேலை கட்டி அவள் விதவையாகும் நாள் நெருங்கிவிட்டதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தனக்கொரு மகன் பிறந்து தன் கணக்கை முடிப்பான் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘அப்பனுடன் சேர்த்து ஆண் வாரிசு எவரும் இந்தக் குடும்பத்தில் இருக்க விடமாட்டான். ஆனால், அனைவரின் கீர்த்தியையும் சேர்த்து இவன் பெறுவான்!’ என்று தனது இரண்டாவது மகன் குறித்துச் சொல்வாராம். அவர் போட்ட கணக்குப்படி, அந்த இரண்டாவது மகனுக்கு ஐந்து வயதாகும் முன்னர், அவரது முதல் மகனை (15 வயது) ஒரு காலைப்பொழுதில் ‘பிளேக்’ நோய் தாக்க... அன்று மாலையே மண்ணுக்குப் போய்விட்டான்!
அந்த மனிதரது வாழ்க்கையின் கடைசி கிருத்திகை நாள்... பழநி முருகன் சந்நிதியில் ‘முத்தைத்தரு பத்தித்திருநகை அத்திக்கிறை சந்திச்சரவண...’ என முழுவதுமாய்த் திருப்புகழைப் பாடி முடிக்கும்போது, அங்கேயே நாடி விழுந்துவிட்டது. குரல் ஒடுங்கிவிட்டது. ஓரிரு வாரம் படுக்கையில் இருந்திருக்கிறார். தொண்டையில் ஏதோ கட்டி! வைத்தியம் பலனளிக்காமல், அவர் ஓலைச்சுவடியில் குறிப்பிட்ட தேதியிலேயே பூவுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார். அன்று மாலை வரை தவழ்ந்து விளையாடிய அவரது குழந்தை, அப்பனின் சடலத்தை அடக்கம் செய்துவிட்டு அனைவரும் திரும்பி வந்தபோது தள்ளாடி, சுவர் பிடித்து எழுந்து நின்றானாம்! ‘அப்பனை எடுத்து முழுங்கிட்டுச் சுட்டித்தலையன் நிக்கறாம் பாரு...’ என்று வேதனையால் உறவினர்கள் வெம்பி வெடித்தார்களாம்...”
“அந்த விசித்திர மனிதருக்கு எங்கு வைத்து விருந்து கொடுப்பீர்கள்...?”
“நான் ‘சினிமா’ கலைஞனாகிச் சொந்தமாகச் சம்பாதித்த பணத்தில் கட்டிய எங்கள் வீட்டிலேயே விருந்தை வைத்துக் கொள்வேன். அந்த மனிதரை என்றாவது சந்திக்க வேண்டுமென்று என்னைப் போலவே ஆவலுடன் இருக்கும் என் மனைவியை முதலில் அவருக்கு அறிமுகப்படுத்தி வைப்பேன். அதற்குப்பின் என் பிள்ளைகள்...”
“டின்னரை ஒட்டி வீட்டை அலங்கரிப்பீர்களா...?”
“அவர் வரவை ஒட்டி எங்கள் வீட்டை எளிமையாக அலங்கரித்து வைப்போம். அவரை எதிர்கொண்டு வரவேற்றுப் பூஜையறைக்குள் அழைத்துச் செல்வேன். அங்கே நாலடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் பி.குருசாமி என்ற ஓவியர், தஞ்சாவூர் பாணியில் கண்ணாடியல் வரைந்துள்ள முருகனின் வண்ண ஓவியம் உள்ளது. அதை அவர் உற்று உற்றுப் பார்ப்பார். ஐம்பது வருடங்களுக்குமுன், பழநியிலிருந்து அவர் வாங்கிவந்த ஓவியம் அது! ‘இங்கே எப்படி வந்தது...?’ என அவர் சற்றே திகைக்கக்கூடும். அப்போது ‘முத்தைத்தரு பத்தித்திரு’ என்ற இனிய குரல் திடீரென ஒலிக்கும். வாய் ஓயும்வரை அவர் பாடிய திருப்புகழாயிற்றே... அந்தப் பாடல் ஓசை கேட்டுப் புல்லரித்துப் போய்த் திரும்பிப் பார்ப்பார். கர்னாடக சங்கீதம் கற்றுவரும் என் மகள் பிருந்தா பாடிக்கொண்டிருப்பாள். அதைப் பார்த்து அவர் பரவசமடைவார்.
என் மூத்த மகன் சரவணன், சிறிய துணிமூட்டை ஒன்றைக் கொண்டுவந்து அவர்முன் வைப்பான். அதை அவர் பிரிப்பார். அதனுள் அப்பளமாக நொறுங்கிய நிலையில், மிகப்பழைய ஆங்கிலப் போதகன் இருக்கும். அந்தக் காலத்தில் அவர் படித்தாரே, அதே புத்தகம்தான் அது. அப்போது மஞ்சள் தடவிய ஓலைச்சுவடி ஒன்றை அவர்முன் என் மனைவி நீட்டுவாள். அதை வாங்கும்போது, அவர் உடலே நடுங்கும். ஐம்பது வருடங்களுக்குமுன் எந்த மகனின் தலையெழுத்தைக் கணக்கிட்டுத் தன் மரணத் தேதியைக் கண்டு சொன்னாரோ, அந்த மகனின் ஜாதகம்தான் அது...”
“எங்கு வைத்து டின்னர் கொடுப்பீர்கள்...? டைனிங் டேபிளிலா...?”
“பூஜை அறைக்குள் நடந்த சம்பவங்களால் மனம் கசிந்து நிற்கும் அந்த முகம் தெரியாத மனிதரை, எங்கள் வீட்டு மொட்டைமாடிக்கு அழைத்துச் செல்வோம். நிலவொளியில் அங்கேதான் விருந்து...”
“பிளேட்டிலா.... இலையிலா...?! எதில் பரிமாறுவீர்கள்...?”
“அந்தக் காலத்தில் எங்கள் குடும்பங்களில் விருந்து என்றால், வெண்கால வட்டில்களும் வெண்கல தம்ளர்களும்தான் உபயோகிப்போம். ஆனால், இந்த டின்னர் - தலைவாழையிலையில்! ”
“நீங்கள் அவருக்கு அருகில் அமர்வீர்களா...? எதிரே உட்காருவீர்களா...?”
“பெரியவர்களோடு குழந்தையை உட்காரவைத்து, ஒரே இலையில் சாப்பிட வைப்பது எங்கள் பழக்கம். என் இளைய மகன் கார்த்திக்கை அவர் அருகில் உட்காரவைத்து, அவரோடு சேர்ந்து சாப்பிட வைப்பேன். அவனை மட்டும் அவரருகே உட்கார வைப்பதில் ஒரு விஷயம் உண்டு! என் அம்மா இருந்தபோது, என் கடைசி மகன் அந்த மனிதரை அப்படியே அச்சாய் உரித்து வைத்திருப்பதாகச் சொல்லிப் பூரிப்பார்கள். அந்த உண்மையைக் காணும்போது, தன் சின்ன வயது நினைவுகளில் அவர் நெகிழ்ந்து போவார்...”
“அவரிடம் என்ன பேசுவீர்கள்...?”
“நிறைய நிறைய பேசவேண்டும் என்று மனம் துடிக்கும். ஆனால், பேசாமல் அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். என் மனைவி, தன் கைச் சமையல் எப்படி இருக்கிறது என்று கேட்பாள். ‘நான்தான் உன் சமையலை நிறையச் சாப்பிட்டிருக்கேனே அம்மா... என்பார். திகைத்துவிடுவோம். ‘ஏன் இந்தத் திகைப்பு..? நீங்கள்தான் தினமும் காக்கைகளுக்குச் சாதம் வைக்கிறீர்களே... அவை தின்றாரே, நானும் சாப்பிட்டது மாதிரிதானே...’ என்ற சொல்லிச் சிரிப்பார். நாங்கள் புல்லரித்துப் போய்விடுவோம்...”
“பேச்சு இல்லையென்றால் வேறென்ன...?”
“பேச்சைவிட மௌனம் கனமானதாயிற்றே! வீட்டைச் சுற்றிக் காட்டுவேன். என் சுய சம்பாத்தியத்தில் பார்த்துப் பார்த்துக் கட்டியது இது என்பேன். அவர், வீட்டுச் சுவர்களை மேஜை - நாற்காலிகளை - ஒவ்வொன்றாய்த் தொட்டுத் தொட்டுப் பார்த்துச் சிலிர்ப்பார். நான் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்களைக் காட்டுவேன். அவற்றையும் என்னையும் மாறி மாறிப் பார்ப்பார். ‘இவையெல்லாம் நான்-என் கைப்பட வரைந்தவை. ஓவியம் என்றால் உங்களுக்குப் பிடிக்குமே... நான் ஓவியம் கற்றவன். அந்தக் கலையிலிருந்து சினிமாக் கலைஞனானவன்’ என்பேன். அவர் பெருமைப்பட்டுக் கொள்வார்...”
“டின்னர் முடிவில் அவருக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்...?”
“முகம் தெரியாத அந்த மனிதர் - அந்தக் காலத்தில் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அவரைப் பலவாறாக போட்டோ எடுப்பேன். அவருடன் என் மனைவி மக்களை நிற்கவைத்து நானும் நின்று குரூப் போட்டோ போலவும், அவரைத் தனியாகவும் அவரோடு என் பிள்ளைகளை மட்டும் நிறுத்தியும் விதவிதமாக போட்டோ எடுத்து அவருக்கு பரிசாகத் தரவேண்டும்... நானும் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமென்றும் எனக்கு ஆசை....
கடைசியாக... கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் உள்ள என் தாயின் சமாதிக்கு அவரை அழைத்துச் செல்வேன். பத்து மாதத்திலேயே தந்தையை இழந்துவிட்ட இந்த அபாக்கியவானுக்குத் தந்தையாய் - தாயாய் - ஆசானாய் - அனைத்துமாய் இருந்த என் அன்னை அமைதிகொண்ட இடம் இது என்று கூறுவேன். அதில் பொறித்துள்ள ‘அம்மா! உயிராய், உடலாய், உதிரமாய் என்னுள்ளே நீ இருக்க, பிரிவென்பதேது....’ என்ற வாசகங்களை அவர் உற்று உற்றுப் பார்ப்பார். அவரது இதழ்கள் அதை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும். நடுங்கும் கரங்களால் அதைத் தடவித் தடவிப் பார்ப்பார். அந்த நிலையில் அவரைப் படமெடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால்...
‘பனையோலையில் நான் எழுதி வைத்தபடியே நீ வாழ்வில் உயர்ந்து, உன் குடும்பத்தோடு குதூகலம் இருப்பது கண்டு எனக்குச் சந்தோஷம்! தொடர்ந்து அது நீடிக்கட்டும்! ’ என்று சொல்லிக் கண்கலங்க எங்களை ஆசீர்வதிப்பார் அந்த மனிதர்! ”
இதற்குமேல் பேச முடியாமல் திக்கித் திணறிவிட்டார் சிவகுமார். அவர் கண்களில் நீர்த்தேக்கம்... கன்னக்கதுப்புகளில் உப்புக்கோடுகள்....
“என்ன இது...?! ஏன் அழுகிறீர்கள்...?” என்று துடித்துப் போய்க் கேட்க....
“டின்னருக்கு அழைப்பதாகச் சொன்ன அந்த முகம் தெரியாத மனிதர் வேறு யாருமில்லை. என் தந்தைதான்...” என்றார் சிவகுமார். மனம் ‘பக்’ கென்றாகிவிட்டது.
“நான் பிறந்த மறுநாளே ஜாதகத்தைக் கணித்து என் தலைவிதியை நிர்ணயித்துவிட்டு, பத்து மாதக் குழந்தையாய் நான் தவழ்ந்து கொண்டிருந்தபோது மரணித்துப்போன என் அப்பாதான் அந்த முகம் தெரியாத மனிதர்...”
சின்னக் குழந்தை போலக் குலுங்கிக் குலுங்கி அழுதார் சிவகுமார். அவர் மனைவியின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர்...
- ‘புல்லட் அங்கிள்’
படங்கள் - சு. குமரேசன்
(என்ற தலைப்பில் அந்த முகம் தெரியாத மனிதர் 27.02.1994 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
from விகடன்
Comments