இந்த எபிசோடின் மூலம் அசல் எவிக்ட் ஆனதை அறிய முடிந்தது. எளிய சமூகத்திலிருந்து வந்த ஓர் இளைஞன், இந்தப் பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. தனது இசைத்திறமையை அவ்வப்போது அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். நட்பு அல்லது காதல் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், நிவாவுடன் மட்டும் அதிக நேரத்தை செலவழித்ததை குறைத்துக் கொண்டிருக்கலாம். குறிப்பாக அசிமின் வலது கரம் போல செயல்பட்டதின் மூலம் அணி மனப்பான்மை அரசியலுக்கு பலியாகாமல் இருந்திருக்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் நிறைய பேரை அசிம் இன்ப்ளூயன்ஸ் செய்வது நன்றாகத் தெரிகிறது. இதற்குப் பலியானவர்களில் ஒருவர் ஆயிஷா. பொம்மை டாஸ்க்கில் அசிம் தன்னை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டார் என்பதுகூட ஆயிஷாவிற்குப் புரியவில்லை. எனவேதான் கமல் முன்பு ‘எனக்குப் புரியல’ என்று கதற வேண்டியிருந்தது. அல்லது அவர் புரியாதது போல் நடிக்கிறார் என்றால் அது மிகச்சிறந்த நடிப்பு.
நாள் 21-ல் நடந்தது என்ன?
நைட் கவுனையே சட்டையாக ஆல்டர் செய்த மாதிரியான ஆடையில் வந்தார் கமல். இதையெல்லாம் சாமானியர்கள் போட்டுக் கொண்டு வெளியே உலவ முடியாது. “ஏம்ப்பா.. நல்ல டைய்லர் கிட்ட துணிய கொடுக்கக்கூடாது? ரொம்ப லூஸா தைச்சிட்டான்” என்று கேட்டு மனம் புண்படச் செய்வார்கள்.
வீட்டிற்குள் நுழைந்து நேரடியாக உரையாடலைத் துவக்கிய கமல் “யாருக்காவது.. சந்தேகங்கள்.. கேள்விகள்.. இருக்கா.. சொல்லுங்க?’” என்று ஒரு வாய்ப்பு தந்தார். இதுவொரு நல்ல ஜனநாயகப் பண்பு. பல பெரிய மனிதர்கள், மற்றவர்களைப் பேசவே அனுமதிக்க மாட்டார்கள். ‘கமல் சார் கிட்ட எப்படி ஆர்க்யூ பண்றது?' என்று தயங்கி பிறகு வீட்டிற்குள் அதைப் பற்றி தொடர்ந்து புலம்புவதை விடவும் கமலிடமே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்வது நல்ல விஷயம். ஆனால் இது போன்ற வாய்ப்புகளில் “ஹி..ஹி.. ஒண்ணுமில்ல சார்” என்று மழுப்புவதே பிக் பாஸ் வீட்டு வழக்கம். எதையாவது கிளறி மேலும் மாட்டிக் கொள்வோமோ என்கிற அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம். கேள்வியில் தெளிவு இருந்தால் இத்தகைய குழப்பம் தோன்றாது.
‘அப்ப புரியல.. இப்பவும் புரியல..’ ஆயிஷாவின் அனத்தல் அட்ராசிட்டி
கமல் க்ளூ தந்தும் ஆயிஷாவும் ஷெரினாவும் அமைதியாக இருக்க, அவரே அழைத்துப் பேச வேண்டியிருந்தது. “என்னால ஆட முடிஞ்சது. அதனாலதான் மறுபடியும் வந்தேன்” என்கிற தன் தரப்பை மீண்டும் ஷெரினா பதிவு செய்தார். “ஹெல்த் முக்கியம். ஆனா ஆட்டத்திற்குள்ள அந்த ஸ்ட்ராட்டஜியை கொண்டு வராதீங்க. புலி வருது கதையா ஆகிடும்” என்று பொதுவாக அறிவுறுத்தினார் கமல்.
நேற்று முழுக்க வீட்டில் புலம்பிக் கொண்டிருந்த ஆயிஷாவும் இப்போது அமைதியைப் பின்பற்ற, அவரையும் உரையாடலுக்குள் இழுத்தார் கமல். ஆனால் ‘எனக்குப் புரியல” என்றே அனத்தினார் ஆயிஷா. கமல் சற்று இழுத்திருந்தால் “ஏன் சார்.. நான் இவ்ள சொல்றனே.. உங்களுக்குப் புரியலையா?” என்று கூட கமலிடம் ஆயிஷா கத்தியிருக்கக்கூடும். அந்தளவிற்கான டென்ஷனில் இருந்தார். ஆனால் ஆயிஷாவின் அனத்தலில் ஒருவகையான உண்மை இருந்தது.
இந்த விவகாரத்தை சற்று விரிவாகப் பார்ப்போம். பொம்மை டாஸ்க்கின் போது ஒரு கட்டத்தில் “என்னால ஆட முடியலை. நான் வெளியேறுகிறேன்’ என்று பொதுவில் அறிவித்தார் ஆயிஷா. “ஏன். அப்படிச் செய்யறே.. ஏதாவதொரு பொம்மையை உள்ளே கொண்டு போயிடு. உன்னோட பொம்மை உள்ளே போக விடாம பண்ணிடலாம். நீ தானா அவுட் ஆன மாதிரி இருக்கும்” என்கிற யோசனையைச் சொன்னவர் அசிம். மைனாவும் இதை வழிமொழிந்தார்.
ஆனால் ஆட்டத்தில் நிகழ்ந்தது முற்றிலும் வேறு. ஷெரினாவின் கையில் இருந்தது ‘ஆயிஷா’வின் பொம்மை. ஷெரினா விளையாடாமல் அமைதியாக இருந்து ஆயிஷாவை அவுட் ஆக்க வேண்டும் என்பதுதான் ஒரிஜினல் பிளான். ‘ஏதோவொரு’ பொம்மையை ஆயிஷா தேடும் போது அவரது கையில் கிடைத்தது ரச்சிதாவின் பொம்மை. திட்டத்தின் படி அவர் அதை உள்ளே கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். ஆனால் தடுப்பு அணியின் வேகம் காரணமாக திகைத்து நின்று விட்டார் ஆயிஷா. இந்தச் சமயத்தில் ‘ஆட வேண்டாம்” என்று முடிவு செய்திருந்த ஷெரினாவை ‘வா.. வா..’ என்று அசிமின் டீம் அவசரப்படுத்த தயங்கித் தயங்கி வந்தார் ஷெரினா. “நீ போகாத. நான்தான் போகணும்” என்று ஆயிஷா கத்தியும் அது நடக்கவில்லை. விளைவு ஆயிஷாவின் பொம்மை உள்ளே போனது. ரச்சிதாவின் பொம்மை வெளியில் தங்கி விட்டது.
இதைச் சுருக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஆட விரும்பாத ஆயிஷா ஆட்டத்தில் நீடிக்கும் படி ஆயிற்று. ஆட விரும்பிய ரச்சிதா, பலிகடாவாக்கப்பட்டார். அசிமின் திட்டத்திற்கு தன்னையும் அறியாமல் ஆயிஷா உடந்தையாகி விட்டார். ஷெரினாவும் பலியாடா அல்லது அசிமின் பிளான் அவருக்குத் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. டீம் பாலிட்டிக்ஸால் வரும் குழப்பங்கள் இவை. கமல் எடுத்துச் சொல்லியும் தன் தவறை ஆயிஷாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. கண்கலங்கி அழத் துவங்கி விட்டார். “என்னை தப்பா சித்தரிக்காதீங்க’ என்று ஆயிஷா புலம்ப, அதற்கு கமல் தந்த ரியாக்ஷனும் பதிலும் நன்று. “வேற யாருக்காவது அழணுமா. ஸாரி. கேட்கணுமா?” என்று ஆயிஷாவின் சிறுபிள்ளைத்தனத்தை கமல் காமெடியாக கடந்து போன விதம் சிறப்பு.
‘அடுத்தவங்க பேச்சைக் கேட்கும் பொம்மைகள் யாரு?’
அடுத்ததாக, ‘சொந்தமாக யோசிக்கும் திறன் இல்லாமல், மற்றவர் பேச்சை கேட்டு நடப்பவர் யார்?” என்கிற டாஸ்க்கை ஆரம்பித்தார் கமல். இந்தச் சூழலில் இது மிகப் பொருத்தமான டாஸ்க். அசிமின் தலைமையில் ஒரு அணியே கண்மூடித்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
‘ரொம்ப டிப்ளமேட்டிக்கா இருக்காரு’ என்று கதிரவனின் பெயரைச் சொல்லி இந்த டாஸ்க்கிற்கு பிள்ளையார் சுழி போட்டார் ஷிவின். ‘அசிம் தந்த யோசனையால்தான் பொம்மையை ஒளித்து வைத்தார்’ என்று ஷெரினாவை ராபர்ட் சுட்டிக் காட்டிய போது, அவர் காதில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் பூவை வைத்து ‘உங்க காதுல மத்தவங்க பூ வைக்காம பார்த்துக்கங்க” என்று கமல் அடித்த டைமிங் நகைச்சுவைக்கு சபையே ஆரவரித்து சிரித்தது.
“ஜனனியோட பொம்மையை எடுத்து வெச்சு நான்தான் கேமையே முதன்முதலில் ஸ்டார்ட் பண்ணேன்.” என்று ஷெரினா சொல்வது உண்மைதான். ஆனால் பல சமயங்களில் அசிமின் பிளானைத்தான் அவர் கேட்கிறார் என்பது வெளிப்படை. ‘ராபர்ட்டின் சுவிட்ச் அமுதவாணனிடம் இருக்கிறது. அவர் மற்றவர்களிடம் அதிகம் பேசுவதில்லை’ என்று அசிம் வைத்த குற்றச்சாட்டை மறுத்த ராபர்ட் “பயமா இருக்கு சார். துப்பாக்கி என் பக்கம் திரும்பிட்டா” என்று சொன்னது உண்மை. அசிமின் கோபமும் ஆட்சேபகரமான வார்த்தைகளும் அத்தகைய அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
‘அசிம் செய்த விஷயங்களால் நான் இன்ப்ளூயன்ஸ் ஆயிட்டேன்’ என்று நோ்மையாக ஒப்புக் கொண்ட ஏடிகேவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ‘நான் எனக்கே எடுத்துக்கறேன்” என்று வெறுப்பில் சொன்ன ஆயிஷாவை கமல் தடுக்கவில்லை. ‘போகட்டும்’ என்று விட்டு விட்டார். இதையே வேண்டுகோளாக முதலில் கேட்ட ஏடிகேவிடம் ‘இல்லல்ல. அப்படி பண்ணக்கூடாது.. அது அசிம் பண்ற விளையாட்டு’ என்று நையாண்டியாக தடுத்த கமல், ஆயிஷாவை மேலும் நோண்ட விரும்பவில்லை. கமல் பிரேக் விட்டுச் சென்றதும் மீண்டும் தன் அழுகையை ஆரம்பித்து விட்டார் ஆயிஷா. ‘ஓகே. நீங்க நிறைய பேச வேண்டியிருக்கும்’ என்று கமல் சூசகமாக சொல்லி பிரேக் விட்டுச் சென்றதும் இதற்குத்தான் போல.
‘கலக்கிட்டீங்க தனலஷ்மி – கிண்டலடித்த கமல்’
பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில்’ ஹவுஸ்மேட்ஸ் எதிர்கொண்ட விநோதமான சவால்களைப் பற்றி விசாரித்தார். மைனா கோதுமை மாவு கவ்வியது, ரச்சிதா ஒரு டஜன் வாழைப்பழங்களை விழுங்கியது ஆகியவற்றைத் தொடர்ந்து தனலஷ்மியின் டர்ன் வரும் போது ‘கலக்கிட்டீங்க” என்று சர்காஸ்டிக்காக கமல் பாராட்டிய டைமிங் அருமை. பிக் பாஸ் டீம் தந்த விசித்திரமான திரவத்தை சற்று கூட மிச்சம் வைக்காமல் தண்ணீர் விட்டு கலக்கிக் குடித்த தனலஷ்மியின் கடமை உணர்ச்சியை பிக் பாஸ் கூட அப்போது கிண்டலடித்தார்.
நிவாவும் ஷிவினும் குப்பைத் தொட்டியில் மோதிரம் தேடிய கதையை முகச்சுளிப்புடன் சொன்ன போது, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படப்பிடிப்பில் நடந்த ஒரு பழைய சம்பவத்தை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார் கமல். (அதானே பார்த்தேன்.. இன்னமும் எங்கடா இதைக் காணோம்னு!).
உண்மையான சாக்கடையில் கையை விட நேர்ந்த அனுபவத்தைச் சொன்ன கமல் “ஒரு நிமிஷத்துக்கே நாம இப்படி முகம் சுளிக்கறோம்.. இதையே தொழிலா வெச்சிட்டிருக்கறவங்க கதியை யோசிச்சுப் பாருங்க. ராக்கெட் விடற நுட்பம் கூட வந்துடுச்சு. ஆனா இதுக்கு ஒரு கருவி இங்க இல்ல. கேரளால வந்துடுச்சு. இங்க அரசாங்கங்கள் மாறினாலும் இந்த அவலம் அப்படியே இருக்கு. மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலை ஒழிய வேண்டும்” என்று உணர்வுப்பூர்வமாக கமல் சொன்ன ‘செய்தி’ நன்று.
‘அதென்னது. இங்க ‘இருந்தா’ விளையாடுவேன்’ன்னு சொல்லிட்டீங்க.. மக்கள் இருக்கச் சொல்றாங்க.. நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்” என்று ஜனனிக்கு நல்ல செய்தியைச் சொன்ன கமல், எண்டர்டெயின்மென்ட்டுக்காக ஏடிகே வை அழைத்தார். ஜனனி, அசிம், அசல், அமுதவாணன், மகேஸ்வரி மற்றும் விக்ரமன் ஆகியோரின் உடல்மொழியை நையாண்டியாக ஏடிகே நடித்துக் காட்டிய விதம் அருமை. இதில் குறிப்பாக அமுதவாணனின் மாடுலேஷன் அருமையாக நகலெடுத்தார் ஏடிகே. “கிண்டல் செய்யப்படுவர்களும் இணைந்து சிரிக்கிற நகைச்சுவைதான் அவசியம். நீங்க SAVED” என்று ஏடிகேவிற்கு பரிசளித்தார் கமல்.
“நாம நெனக்கற மாதிரியே மக்களும் வெளிய நினைக்கறது சந்தோஷமா இருக்கு” என்று கிடைத்த பிரேக்கில் விக்ரமனிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தார் ஷிவின். ஆயிஷாவிற்கு இன்னமும் குழப்பம் தீரவில்லை; அழுகையும் நிற்கவில்லை. “அசிம் வெச்ச டிராப்புல நீ மாட்டிக்கிட்ட. விடு’ என்று ரச்சிதா ஆறுதல் சொன்னார்.
‘நோகாம நுங்கு சாப்பிட ஆசைப்படாதீங்க’
பிரேக் முடிந்து திரும்பிய கமல், ஒரு கொத்து நுங்குகளை கொண்டு வந்து மேஜையில் வைக்கச் சொன்னார். (என்னைப் போலவே உங்களுக்கும் அதன் அர்த்தம் உடனே புரிந்திருந்தால் தோளில் தட்டிக் கொள்ளுங்கள்.) ஆம், ‘நோகாமல் நுங்கு சாப்பிட விரும்பும் போட்டியாளர்களை’ குறியீடாக கிண்டலடிக்கும் செய்தி இது. “எல்லா நுங்கையும் சாப்பிட்டா, ஆயிரம் பாயிண்ட்ஸ்’ என்று முதலில் ஆசை காட்டிய கமல், பிறகு “தோல் உரிக்காம சாப்பிடணும்” என்று பிறகு விளையாட்டாக கலவரமூட்டி மகிழ்ந்தார்.
‘நோகாமல் நுங்கு சாப்பிடும் ஆசாமி’ டாஸ்க்கில் பெரும்பான்மையாக கதிரவனின் பெயர் வந்ததில் ஆச்சரியமில்லை. அவர் அந்த வீட்டில்தான் இருக்கிறாரா’ என்கிற நிலைமை. எந்த சர்ச்சையிலும் அவர் ஈடுபடுவதில்லை. எந்த பிரமோவிலும் வருவதில்லை. “நான் அவசரப்பட்டு யாருக்கும் குரல் தர மாட்டேன். எதிர் தரப்பு நியாயத்தையும் கேட்டு விட்டுத்தான் பேசுவேன்” என்று கதிரவன் தரும் விளக்கமெல்லாம் ஓகே. அவரது அடிப்படையான இயல்பு கூட அப்படியாகவே இருக்கலாம். ஆனால் ‘தீ தன்னால் அணையட்டும்’ என்று காத்திருப்பது பல சமயங்களில் ஆபத்தானது.
தன்னுடைய விளக்கத்தைத் தந்த அசிம் “நான் கோவக்காரன்தான், ஆனா மோசக்காரன் இல்ல” என்று தெலுங்கு டப்பிங் டைட்டில் மாதிரி சொல்ல “இந்த அநாவசிய விளக்கம்லாம் கொடுக்காதீங்க” என்று கமல் கிண்டடிலத்தது சிறப்பு. அசிம் வாயை மூடிக் கொண்டிருந்தாலே கூட அவரது இமேஜ் அதிகமாக டேமேஜ் ஆகாது. ‘விளக்கம் தருகிறேன்’ போ்வழி என்று ஆப்பில் அவராகவே சென்று பல சமயங்களில் சிக்கிக் கொள்கிறார். மைனா பற்றி விக்ரமன் சொன்ன கருத்திற்கு “உங்க பிரெண்ட்ஷிப்பே வேணாம் சாமி” என்கிற அளவிற்கு பிறகு ‘ஓவர் ஆக்ட்’ செய்தார் மைனா.
‘ஆப்புகளைத் தேடிச் சென்று அமரும் அசிம்’
ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் “இன்னமும் சேவ் ஆகாத மூணு பேரும் ஒண்ணா உக்காருங்க” என்று எவிக்ஷனிற்கான சடங்கை ஆரம்பித்த போது “நான் எது பேசினாலும் தப்பாகுது” என்று அசிம் விளக்கம் சொல்ல ஆரம்பிக்க “நீங்க தப்பா பேசினா.. தப்பாதான் தெரியும்” என்று கமல் அடித்த டைமிங் சிக்ஸர் காரணமாக உடனே வாயை மூடிக் கொண்டார் அசிம். (இன்னொரு ஆப்பு!).
எவிக்ஷன் வரிசையில் இருந்த மூவரில் மகேஸ்வரி காப்பாற்றப்பட்ட செய்தியை முதலில் சொன்ன கமல், “போன வாரம் அப்படிப் புலம்பனீங்க. அதுமக்களுக்கு கேட்டுடுச்சு போல” என்று கிண்டலடிக்க “நான் தப்பா விளையாடறனோன்னு தோணிடுச்சு சார்” என்று மகிழ்ச்சியில் சிரித்தார் மகேஸ்வரி. ஆக மீதமிருந்தவர்கள் அசிம் மற்றும் அசல்.
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சரண் அடைந்தார் அசிம். (ஆங். அது.. அப்படி வரணும் அடக்கம்!). “நான் எப்படி இங்க வந்தேன்னு புரியல” என்று அசல் சொல்ல சபையிடமிருந்து சிரிப்புச் சத்தம் வந்தது. “அசிம் இருக்கணும்” என்பதை ஒரு விநோத ராகத்தில் பாடலாகப் பாடி அப்போதே அழத் தயாராக இருந்தார் நிவா. ‘அசல் இருக்கணும்” என்று நிறைய வாக்குகள் விழுந்தன. “அசிம் இருக்கணும் சார். தன் தவறைத் திருத்திக் கொண்டு நல்ல பேரோட அவர் வெளில போகணும். கில்ட்டோட போகக்கூடாது” என்று தனலஷ்மி சொன்ன குறிப்பு சிறப்பானது. தனலஷ்மியின் மெச்சூரிட்டி லெவல் இப்படியே சென்றால் வலிமையான போட்டியாளராக மாறுவார்.
ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு ‘அசல் எவிக்டட்’ என்கிற செய்தியை வெளிப்படுத்தினார் கமல். நாம் எதிர்பார்த்தபடியே நிவாவின் அழுகை பலமாக ஆரம்பித்து ஓயவில்லை. “ப்ரீயா வுடு.. மக்கள் என்னை வெளிய பார்க்க ஆசைப்படறாங்க போல.. நிறைய வேலை இருக்குது” என்று தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு செயற்கையான உற்சாகத்துடன் வெளியேறினார் அசல்.
ஆனால் நிவாவால் தன் அழுகையை அடக்கவே முடியவில்லை. அது எப்படியோ அனைத்துச் சீசன்களிலும் இப்படியொரு ‘உறவு’ம் பிரிவுத் துயரக் காட்சியும் நிகழ்ந்து விடுகிறது. இப்படி அழுது தீர்க்கும் அளவிற்கு இருபதே நாட்களில் ஒரு ‘உறவு’ ஏற்பட்டு விடுமா? பல வருடங்கள் சோ்ந்து வாழ்ந்தாலும் கூட சண்டையும் சச்சரவுமாக வாழ்பவர்களே அதிகம். இந்தப் பிரிவுத் துயரங்களில் பெண்களே அதிகம் இருக்கிறார்கள். எனில் ஓர் அரவணைப்பிற்கு, ஆதரவிற்கு அவர்கள் நிறைய ஏங்குகிறார்கள், சமூகத்தில் அது பெரும்பாலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை’ என்பதுதான் இதன் பொருளா?
நிவா மட்டுமல்ல, அசிமும் பாத்ரூமிற்குள் சென்று அழுது தீர்த்தார். தான் காப்பாற்றப்பட்ட ஆனந்த அதிர்ச்சியின் காரணமாக இந்த அழுகை வந்திருக்கலாம். தன் நெருக்கமான நண்பனின் பிரிவும் அவருக்குத் துயர் தந்திருக்கலாம்.
‘சங்கர்லால் துப்பறிகிறார்’ – புத்தகப் பரிந்துரை
ஒரு இடைவேளைக்குப் பிறகு திரும்பிய கமல் ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் அறிமுகப்படுத்தியது, தமிழ்வாணன் எழுதிய ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ என்கிற தொகுதி நூல். இளைய தலைமுறையினர், நூல் வாசிப்பின் உள்ளே ஈர்க்கப்படுவதற்கு ஆரம்பக் காரணமாக இருப்பவற்றில் ஒன்று, எளிமையாக எழுதப்பட்ட ‘டிடெக்டிவ் நாவல்கள்’. எழுபதுகளில் தமிழ்வாணன் அப்படியொரு அடையாளமாக இருந்தார். சங்கர்லால் துப்பறியும் தொடர் நாவல்களை அப்போதைய சிறார்கள் விரும்பி வாசித்தார்கள். இந்த நூல் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொண்டார் கமல். (ஒரு படத்தின் தலைப்பு கூட ‘சங்கர்லால்’ பெயர் கொண்டதாக இருந்தது).
மேடைக்கு வந்த அசலிடம் கமல் விசாரிக்க “நான் எதையும் யோசிக்கலை. எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்தேன்” என்று கூலாக பதில் சொன்னார் அசல். அவரைப் பற்றிய பயண வீடியோ ஒளிபரப்பானதும் “வந்த நோக்கம் நிறைவேறுச்சா?” என்று கமல் கேட்க “இன்னமும் பாக்கி இருந்தது. இருந்திருந்தா முடிச்சிருப்பேன்” என்று அசல் பதில் சொன்னார். கமல் எந்த நோக்கத்தில் கேட்டாரோ, அசல் எந்த பொருளில் பதில் சொன்னாரோ தெரியாது. ஆனால் அசலை ‘தடவியல் நிபுணராக’ வெளியில் கிண்டலடிப்பவர்கள், நிச்சயம் இதற்கு விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். ‘வெளிய போய் நண்பர்கள் கிட்ட பேசுங்க. தெரியும்’ என்கிற சர்காஸ்டிக்கான குறிப்புடன் அசலுக்கு விடை தந்து விட்டு தானும் விடைபெற்றார் கமல்.
இன்னமும் அழுகை தீராமல் இருந்த நிவாவிற்கு மைனா ஆறுதல் சொல்ல “சீக்ரெட் ரூம்ல அசலை வெச்சிருப்பாங்களோ?’ என்கிற சந்தேகத்தை சிலர் எழுப்ப “அதெல்லாம் பலத்த காரணம் இருந்தாத்தான்” என்று சரியாக யூகித்தார் ரச்சிதா. அசலும் நிவாவும் பெரும்பாலும் ஒன்றாக உலவி வேறு உலகத்தில் இருந்ததுதான் அசலின் வெளியேற்றத்திற்கு காரணம்’ என்பதாக பேசிக் கொண்டிருந்தார்கள் விக்ரமனும் ஷிவினும். “அப்படியே அவங்களுக்குள்ள ஏதாவது ரிலேஷன்ஷிப் இருந்தா வெளிய போய்ப் பார்த்துக்கலாம். இங்க கேம்ல கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்பது இவர்களின் நியாயமான கருத்து. ஆனால் ‘பிக் பாஸ் வீட்டு காதல் என்பது தற்காலிகம்தான்’ என்பதையே முந்தைய சீசன்களின் வரலாறு நிரூபித்திருக்கிறது.
வேறென்ன? அடுத்த எபிசோடில் இன்னொரு நாமினேஷன் சடங்கு நடக்கும். இன்னொரு எவிக்ஷனுக்கான விதைகள் உற்சாகமாக நடப்படும். காத்திருந்து பார்ப்போம்.
from விகடன்
Comments