பொம்மை டாஸ்க் ஒருவழியாக முடிந்து தொலைத்தது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த பொம்மைகளுக்கு ஒருவேளை வாய் இருந்தால் “ச்சை... என்னப்பா மனுசங்க நீங்க... ஒரு விளையாட்டை இப்படியா கொடூரமா ஆடுவாங்க?!” என்று சலித்துக் கொண்டிருக்கும்.
மக்களின் நன்மதிப்பைப் பெற்றால் எப்படியும் அவர்கள் காப்பாற்றப் போகிறார்கள். அதை விட்டு விட்டு நாமினேஷன் பயத்தில் முட்டி மோதி, வசைபாடி, அழுது புலம்பி... புறணி பேசி… மயங்கி விழுந்து...
“நீ வாயை மட்டும் வுட்றாத... கேம்ல கவனம் செலுத்தி கூலா விளையாடு” என்று அசிமிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார் மணிகண்டன். நல்ல உபதேசம்தான். ஆனால் அசிமின் காதில் ஏறுமா?
நாள் 19-ல் நடந்தது என்ன?
கடமை வீரராக அடுத்த சுற்றிற்கான பஸ்ஸரை அடித்தார் பிக் பாஸ். தடுக்கும் அணி, மற்றவர்களை அனுமதித்து விட்டு நிவாவை மட்டும் டார்கெட் செய்து தடுத்தது. ஏனெனில் அவர் கையிலிருந்தது அசலின் பொம்மை. ஆனால் தடுப்பதில் ஆவேசம் காட்டாமல் “செல்லக்குட்டி... சொன்னா கேளும்மா... போக்கூடாது” என்று நிவாவை தனலக்ஷ்மி கொஞ்சியது சுவாரஸ்யம். ‘கட்டிப்பிடி வைத்தியம்’ மாதிரி இப்படிக் கூட தடுக்கலாம்.
கதிரவனின் பொம்மையை ராம் கொண்டு வந்து உள்ளே போட்டதால் “என்னப்பா நீ... பிளானே உனக்குப் புரிய மாட்டேங்குது” என்று விக்ரமன் சலித்துக் கொள்ள, ராம் சற்று உஷ்ணமானார். இப்படியான தள்ளுமுள்ளுவில் மோதி வெற்றி பெற கதிரவன் விரும்பவில்லை. என்றாலும் ராம் அவரைக் காப்பாற்ற விரும்பினார்.
‘அசிமின் பொம்மையை டார்கெட் செய்த தடுப்பு அணி’
நிவாவைத் தொடர்ந்து வந்த அசலையும் தடுப்பு அணி அனுமதிக்கவில்லை. ஏனெனில் அவர் கையில் வைத்திருந்தது ‘அசிமின்’ பொம்மை. “என்னை ஏன் தடுக்கறீங்க?” என்று சமாதானமாகப் பேசிப் பார்த்தும் முடியாததால் வெறுப்புற்றார் அசல். பெண்களிடம் சற்று மோதிப் பார்த்தாலும் முடியாத காரணத்தால் இரண்டாவது முயற்சியையும் கைவிட்டார் அசல். ஒரு எல்லைக்கு மேல் பெண்களிடம் மூர்க்கமாக மோதி கெட்ட பெயர் எடுக்க விரும்பாத அசலின் ஜாக்கிரதையுணர்ச்சிக்கு பாராட்டு. இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ‘உர்’ரென்று பார்த்தபடி தூரத்தில் அமர்ந்திருந்தார் அசிம்.
‘ஒரு இடம் காலியாக இருக்கிறது. அது நிரப்பப்படாதவரை இந்தச் சுற்று முடிவடையாது’ என்று அறிவித்தார் பிக் பாஸ். அசிமின் கையிலிருந்தது விக்ரமனின் பொம்மை. அசலின் கையிலிருந்தது அசிமின் பொம்மை. அவர்கள் விளையாடினால்தான் முடிவு தெரியும். அசிம் ஆடத் தயாராக இருந்தார். ஆனால் ‘என்ன செய்யலாம்?’ என்கிற யோசனையில் அசல் ஈடுபடும் போதே காலம் கடந்து விட்டது. இரண்டு பேரையும் போட்டியிலிருந்து நீக்கினார் பிக் பாஸ். இதனால் அசிம் மற்றும் விக்ரமனின் பொம்மைகள் குப்பைத் தொட்டிக்குச் சென்றன. இத்தனை மோதியும் தனது ஃப்ரீ நாமினேஷன் வாய்ப்பு பறிபோனதால் அசிமின் முகபாவம் டெரராக ஆனது.
“நான் ஜெயிக்கறது முக்கியமில்லன்னு அசிம் ஆரம்பத்துல சொன்னான். இப்ப கோபமா உக்காந்திருக்கான்” என்று ஏடிகே சொல்ல “நான் விளையாடலைன்னு கூட அவனுக்குக் கோபமா இருக்கலாம். நான் என்ன பண்றது... ஒட்டுமொத்த வீடே எதிர்ப்பா இருந்தா எப்படி உள்ளே போறது?” என்று சலித்துக் கொண்டார் அசல். அசிம் வாங்கி வைத்திருக்கும் பெயர் அப்படி. அவரின் பொம்மை எக்காரணத்திற்காகவும் உள்ளே சென்று விடக்கூடாது என்பதைத் தடுப்பு அணி முக்கிய லட்சியமாக வைத்திருந்தது.
கண்ணியவானாக விளையாடும் கதிரவன்
அடுத்த பஸ்ஸர் அடித்தது. இந்த முறையும் நிவாவை மெலிதாகத் தடுத்தார்கள், என்றாலும் அசல் உதவி செய்ததின் மூலம் நிவா உள்ளே சென்று விட்டார். ஓர் அமைதியான வெள்ளைப் புறாவாக இருக்கும் கதிரவனின் கண்ணியம் கவரத்தான் செய்கிறது. ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாக ஒதுங்கி நின்றாலும் ஆபத்துதான். ஆக, இந்தச் சுற்றில் கதிரவன் அவுட்.
அடுத்த சுற்றிலும் நிவாவை உக்கிரமாகத் தடுத்தார் ஷிவின். ஏனெனில் நிவாவின் கையிலிருந்தது அசலின் பொம்மை. தடுப்பு அணியிடம் போராட முடியாமல் பின்தங்கினார் நிவா. எனவே அசல் அவுட். இதனால் அசல் அப்செட் ஆனார். “நான் அப்பவே சொன்னேன். என்னுடையதை எடுக்காதேன்னு... அவ கேக்கலை. இதுக்கா நான் இவ்ளோ தூரம் வந்தேன்” என்று அவர் அனத்த, நிவா பாத்ரூமிற்குச் சென்று கண்கலங்கினார். “சரி ப்ரீயா வுடு... அப்புறம் பேசிக்கலாம்” என்று பிறகு சமாதானப்படுத்தினார் அசல். “நாம வேணா பொம்மையை மாத்திக்கலாமா? பிக் பாஸ் கிட்ட கேட்டுப் பார்க்கட்டா?” என்று நிவா அபத்தமாகக் கேட்க, ‘அட! கிறுக்குப்பய புள்ள’ என்பது மாதிரி சிரித்தார் அசல்.
முட்டைக் கஞ்சியை ரசித்துக் குடித்த தனலக்ஷ்மி
“எங்க கூட டீமா இருந்தீங்க... இப்ப என்னடான்னா, அவங்களைத் தடுக்காதீங்கன்னு சொல்றீங்க. என்ன உங்க கதை?” என்று அமுதவாணனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் தனலஷ்மி. “சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட இங்க டென்ஷன் ஆயிடறாங்கள்ல. பயமா இருக்குதுப்பா” என்றார் ராபர்ட். கதிரவனுக்கு அடுத்தபடியாக எப்போதும் கூலாக இருக்கும் ஆசாமி ராபர்ட்தான். ‘ரொம்பக் கோவக்காரரா இருப்பாரோ’ என்று ஆரம்பத்தில் இவரைப் பற்றித் தோன்றியது தவறான கணிப்பாக ஆகி விட்டது. ரச்சிதாவிடம் ‘ஜொள்’ விடுவதைத் தவிர, ஆசாமி கட்டின பசு மாதிரி சமர்த்தாக இருக்கிறார்.
தனலக்ஷ்மிக்கான ‘லக்ஸரி பட்ஜெட்’ சவால் வந்தது. ‘சூடான ஆம்லேட்டை ஆற வைத்து அதில் ஆரஞ்சு சோடாவை ஊற்றி மிக்ஸியில் அடித்து...’ என்று 'இம்சை அரசன்' பானம் மாதிரி எந்தக் கருமத்தையோ பிக் பாஸ் டீம் தயார் செய்து வைத்திருந்தது. ஆரம்பத்தில் முகத்தைச் சுளித்தாலும் ‘நான் அப்படியே சாப்பிடுவேன் மம்மி’ என்பது மாதிரி மிக்ஸியில் மீதமிருந்ததையும் தண்ணீர் ஊற்றிக் கலக்கிக் குடித்தார் தனலக்ஷ்மி. அவர் அதைச் செய்திருக்கவே தேவையில்லை. "உங்க கடமையுணர்ச்சியை பாராட்டறேன்” என்று பிக் பாஸ் செய்த குறும்பு ரசிக்கத்தக்கது. "உங்க அன்பிற்கும் ஸ்பெஷல் உணவிற்கும் நன்றி" என்று சர்காஸ்டிக்காக நன்றி சொன்ன தனலக்ஷ்மி, டாஸ்க் முடிந்ததும் பாத்ரூமில் வாந்தியெடுக்க ஒரே ஓட்டமாக ஓடினார்.
‘பேரு வெச்சாலும் வெக்காம போனாலும்’ என்கிற அட்டகாசமான பாடலுடன் நாள் 19 விடிந்தது. ஒரு துள்ளலிசைப் பாடலை கேட்பதைக் கூட, நல்ல கவிதையை வாசிப்பது போன்ற அனுபவமாக மாற்றும் மாயத்தை ராஜாவால் மட்டுமே செய்ய முடியும். பாடலைக் கேட்கக் கேட்க மனம் இனித்தது. கெடுக்காத ரீமிக்ஸ் மூலம் இந்தப் பாடலை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்திய யுவனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பாடலின் உற்சாகம் ஹவுஸ்மேட்ஸ்களையும் தொற்றிக் கொண்டது போல. எனவே நளினத்துடன் ஆடினார்கள்.
பொம்மை டாஸ்க் தொடர்பாக அடுத்த சுற்றிற்கான வியூகத்தை வீடு வகுத்துக் கொண்டிருந்தது. “என்னை யாரும் தடுக்காதீங்க” என்று அமுதவாணன் சொல்ல “யாரா இருந்தாலும் தடுப்பேன். எனக்கு மாஸ்டர் பொம்மை உள்ளே போகணும்” என்று தனலக்ஷ்மி வீர சபதம் எடுக்க “என்ன மாஸ்டர்... இந்தப் பெண்ணைத் தள்ளிட்டு உங்களால போக முடியாதா?” என்று அமுதவாணன் உசுப்பேற்ற “ஏம்ப்பா, நல்லாத்தானே போயிட்டு இருக்கு... ஏன் என்னைக் கோத்து விடறே?" என்று சிரித்தார் ராபர்ட். இன்னொரு பக்கம், ‘உர்’ரென்று அமர்ந்திருந்த அசிமிடம் ஏடிகே பேசிக் கொண்டிருந்தார். ராமை ‘ஒட்டகம்’ என்கிற அடைமொழியால் ஏடிகே குறிப்பது நெருடல். இது ராமிற்குத் தெரியுமா?
ஒரு பக்கெட் நிறைய இருந்த சமையல் கழிவில் மோதிரங்களைத் தேடி எடுக்கும் ‘உவ்வேக்’ சவாலை நிவாவிற்குத் தந்தார் பிக் பாஸ். ‘பிரியாணி சாப்பிடும் போது கூட லெக் பீஸ் கிடைக்காது. இப்ப என்னடான்னா ஒரே சிக்கன் காலா கிடைக்குது... ச்சை...” என்பது மாதிரியான முகச்சுளிப்புடன் நிவா எவ்வளவு தேடினாலும் மோதிரம் கிட்டவில்லை. எனவே அவருக்கு 200 பாயிண்ட்ஸ் கிடைக்காது.
பொம்மை டாஸ்க்கில் வெற்றி பெற்ற மூவர்
ஒருவழியாக பொம்மை டாஸ்க் இறுதிக் கட்டத்திற்கு வந்தது. பஸ்ஸர் அடித்த போது ராம் தாமதமாக வந்ததால் நிவாவின் பொம்மையை உள்ளே வைக்க முடியவில்லை. இதற்காக ராம் வருந்த “ஒண்ணும் பிரச்னையில்ல’ என்றார் நிவா. ஆக... எஞ்சியிருந்த அமுதவாணன், ராபர்ட், ராம் ஆகிய மூவரும் இந்த பொம்மை டாஸ்க்கில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அடுத்த வார நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
பொம்மை டாஸ்க் முடிந்தாலும் இடைவெளி விடாமல் மக்களை அடிக்க முடிவு செய்தார் பிக் பாஸ். ‘Best Performer’ தேர்ந்தெடுக்கும் சடங்கு. இரு பெயர்களைச் சொல்ல வேண்டும். இதில் நிவாவின் பெயர் நிறையத் தடவை வந்தது. விக்ரமனின் முறை வந்த போது அசிமின் பெயரை அவர் சொன்னது ஆச்சரியம். “அவரோட வியூகம் நல்லா இருந்தது” என்றார் விக்ரமன். இதையே தனலக்ஷ்மியும் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். இறுதியில் நிவாவும் மணிகண்டனும் சிறந்த பங்கேற்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்த வாரம் முழுவதும் வீட்டில் சிறப்பாக பணியாற்றியவரைத் தேர்ந்தெடுக்கும் நேரம். இதற்கு ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் குயின்சி. அவ்வப்போது அசிமிற்கு நோஸ் கட் கொடுத்தற்காகவே இவருக்குச் சிறப்பு விருது தரலாம். ஆனால் பொம்மை டாஸ்க் சர்ச்சைகளில், ஒரு தலைவியாக இவரின் வழிகாட்டுதல் அதிகமில்லை என்பது ஒரு மைனஸ் பாயின்ட். என்றாலும் தனியொருவராக இத்தனை பேரைச் சமாளித்தது நல்ல விஷயம். நிவா, மணிகண்டன், குயின்சி ஆகிய மூவரும் அடுத்த வாரத் தலைவர் போட்டிக்குத் தகுதியாகியிருக்கிறார்கள்.
அடுத்தது வில்லங்கமான அயிட்டம். ‘டாஸ்க்கில் மோசமாகச் செயல்பட்டவரை’ தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் பெரும்பான்மையாக ஷிவினின் பெயர் வந்தது. பொம்மை டாஸ்க்கில் மிக ஆக்ரோஷமாகவும் விதிகளை மீறியும் செயல்பட்டாராம். அசிமின் பெயரை தனலக்ஷ்மி சொன்ன போது ‘அதெப்படி ரெண்டுத்துலயும் சொல்லலாம்’ என்று ஆட்சேபம் எழுந்தது. “வியூகம் நல்லா வகுத்தாரு. ஆனா ரொம்ப வன்முறையா நடந்துக்கிட்டாரு" என்று தனலக்ஷ்மி சொன்ன அதே விளக்கத்தை விக்ரமனும் சொன்னார். இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷிவின்.
‘என்கிட்ட ஒளிஞ்சிருக்கிற நல்லவனையும் பாருங்கப்பா’ – அசிமின் ஆதங்கம்
வாரம் முழுவதும் வீட்டில் வேலை செய்யாத ஆசாமியை அடுத்ததாகச் சொல்ல வேண்டும். ‘டாஸ்க்கில்தான் இவரது முழுக்கவனமும் இருந்தது. வீட்டில் வேலை செய்யவில்லை’ என்று அசிமின் பெயரைப் பலரும் சொன்னார்கள். ஆக... ஷிவினும் அசிமும் சிறைக்குச் செல்ல வேண்டும். (என்னவொரு காம்பினேஷன்!). குழந்தை போலச் சிணுங்கினார் ஷிவின்.
“நான் ஜெயிக்கறது சிலருக்குப் பிடிக்கலை. ‘வாழ்த்துகள்’ன்னு முன்னாடி சிரிச்சிட்டே சொல்றாங்க. ஆனா பின்னாடி திட்றாங்க...” என்று அமுதவாணனிடம் அனத்திய ஜனனி, பிறகு கேமரா முன்பு தனிமையில் நின்று ‘கஷ்டமா இருக்கு... முடியல’ என்று கண்ணீர் விட்டதைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. (டாஸ்க்கில் ஆவேசமாகச் செயல்பட்ட அதே பெண்தானா இவர்?!)
போன் மணி அடிக்க, ‘அதை யார் முதலில் எடுத்தது?’ என்று மைனாவிற்கும் குயின்சிக்கும் இடையில் ஜாலியாக சண்டை நடந்தது. மைனாதான் இதற்குத் தகுதியானவர். பிக் பாஸே இதைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவரோ, முறைப் பெண்களிடம் விளையாடுவது போல “நீங்களே முடிவு பண்ணிட்டு வாங்க” என்று ஜாலியாக டபாய்த்தார். அடம்பிடித்து உள்ளே சென்ற குயின்சி, “என்னால வெங்காயத்தைக் கடிக்க முடியாதே?” என்று சொல்லி 200 பாயின்ட்டுகளை வீணாக்கினார். இதற்கு மைனாவே சென்றிருக்கலாம்.
"என்கிட்ட எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு. அதைப் பத்தி யாரும் பேச மாட்டேன்றாங்க" என்று அனத்தினார் அசிம். (அப்படியா?!). “நான் நிறைய சொல்லியிருக்கேன். ஆனா உனக்கு வாய் ரொம்ப ஓவர். அதை மட்டும் குறைச்சுக்கோ” என்கிற விஷயத்தை நயமான வார்த்தைகளில் ராம் சொன்னது சிறந்த ஆலோசனை. “சில பேர் சைலண்ட்டா இருந்து சாதிப்பாங்க... ஆனா நான் நியாயத்தைக் கேட்டே தீருவேன்” என்று வயலண்ட்டாக பதில் சொன்னார் அசிம்.
“ஆளப் பார்த்தா ராமராஜ்... செய்யற வேலை சத்யராஜ்” என்று அமுதவாணனின் டெரர் முகம் வெளியானது தொடர்பாகக் கிண்டலடித்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார் ஏடிகே. இந்த விஷயத்தில்தான் அசலின் பங்களிப்பு ஏமாற்றமளிக்கிறது. அசிமும் ஷிவினும் சிறைக்குச் செல்ல வேண்டிய நேரம். சிணுங்கிக் கொண்டே கிளம்பினார் ஷிவின். “வீரர்களுக்குச் சிறை என்பது பூஞ்சோலை” என்று அசிம் கொடூரமாக பன்ச் டயலாக் பேச அவரை மைனாவும் ஏடிகேவும் கலாய்த்த விதம் சிறப்பு.
இன்று பஞ்சாயத்து நாள். பொம்மை டாஸ்க்கில் நடந்த கலவரங்களைப் பற்றி கமல் விசாரிக்க வேண்டும். தொடர்ந்து அராஜகமாக நடந்து கொள்ளும் அசிமிற்குக் கடுமையான எச்சரிக்கையைத் தர வேண்டும். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
from விகடன்
Comments