PS1 Animation: MGR வந்தியத் தேவன்; ஜெயலலிதா குந்தவை; இந்தியாவின் 2 வது பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம்

மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பிரமாண்ட காட்சியமைப்புகள் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் `பொன்னியின் செல்வன்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. எழுத்தாளர் கல்கியின் மிகச் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் கதை லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக வரவிருக்கும் இச்சூழலில் இந்தக் கதையைக் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக அனிமேஷன் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் சிவ முகில், D.FTech. இவர் அரசு அடையாறு திரைப்பட கல்லுரி மாணவர். முழுவதும் நம் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்தே தயாரிக்கப்பட்டுள்ள முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம். கும்பகோணத்தில் நடைபெற்ற விகடனின் சமீபத்திய பொன்னியின் செல்வன் யாத்திரை நிகழ்வில் எம்.ஜி.ஆரின் பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பழுவேட்டையருக்கான பாடல் திரையிடப்பட்டு நிகழ்விற்கு சிறப்பூட்டியதைக் கண்டு ஆனந்த விகடன் வாசகர்கள் சிறப்பாக இருப்பதாகக் கூறி நெகிழ்ந்தார்கள். எம்.ஜி.ஆர் அவர்களை வந்தியத்தேவனாகவும், ஜெயலலிதாவைக் குந்தவையாகவும் சித்திரப்படுத்தியிருக்கும் இயக்குநருடன் ஒரு சிறிய உரையாடல்.

எம்.ஜி.ஆர் - வந்தியத்தேவன்
பொன்னியின் செல்வன் யாத்திரை - ஆனந்த விகடன் வாசகர்கள்

பொன்னியின் செல்வன் அனிமேஷன் படம் எப்படி உருவானது?

ரஜினி நடித்து வெளிவந்த கோச்சடையான் இந்தியாவின் முதல் அனிமேஷன்  திரைப்படமாக வெளியாகியது. நாங்கள் எடுத்திருக்கும் பொன்னியின் செல்வன் இந்தியாவின் இரண்டாவது அனிமேஷன் (Animation Movie) திரைப்படம். `எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் பொன்னியின் செல்வன்' என்பதுதான் எங்களது அனிமேஷன் திரைப்படமாக பெயர் வைத்து, 2017-ல் இதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். நாங்கள் தொடங்கியபோது பொன்னியின் செல்வன் பற்றிய பெரிய பேச்சு எதுவும் இல்லை. ஆனால் இதை அறிந்த ஆனந்த விகடன் 2018-ல் பொன்னியின் செல்வன் யாத்திரையில் எங்களை அழைத்து கௌரவித்தைமைக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது மணிரத்னம் அவர்களின் திரைப்படம் வெளிவரவிருக்கும் சூழலில் பொன்னியின் செல்வன் குறித்த உரையாடல்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது டிஸ்னி போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் அனிமேஷனில் 3.0 தரத்தில் 4K தெளிவுத்திறனுடன் படத்தை உருவாக்கியிருக்கிறோம். சாய் அனிமேஷன் மற்றும் ஸ்கை-ஹை மீடியா என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியிருக்கிறோம். 94 பேரின் மூன்றரை ஆண்டுகால உழைப்பு இதில் இருக்கிறது. முழுக்கமுழுக்க டீம் ஒர்க்.

இயக்குநர் சிவமுகில், D.FTech.

படம் எப்படி வந்திருக்கிறது?

வழக்கமான 2D கார்ட்டூன் படங்கள் போல அல்லாமல் குங்ஃபூ பாண்டா போன்ற 3D லைவ் அனிமேஷன் திரைப்படமாக வந்திருக்கிறது. கவிஞர் மதன் கார்க்கியின் வரிகளில் 2018-ல் ஒரு பாடல் வெளியிட்டோம். 2020-ல் மொத்தத் திரைப்படத்திற்கான வேலையும் முடிந்த நிலையில் கொரோனா பரவலால் இத்திரைப்படத்தைச் சந்தைப்படுத்துவது சிரமமாகிவிட்டது. ஆனால், தற்போது அதற்கான சரியான நேரம் என்பதை உணர்ந்துகொண்டு திரைப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது என்பதே சவாலான செயல். நாவலின் தன்மை கெடாமல் அதேநேரத்தில் சுவாரஸ்யம் குறையாமல் மூளைக்கு இறுக்கமாகவும், நெஞ்சுக்கு நெருக்கமாகவும் வெளிவரவேண்டும் என்பதற்காக திரைக்கதையில் பல மாறுதல்கள் செய்திருக்கிறோம். எம். ஜி. ஆர், ஜெயலலிதா தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் நாவலாசிரியர் கல்கி பதிவு செய்திருக்கும் உருவ நேர்த்தியைத் தழுவியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா - குந்தவை

படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு எப்படி மேற்கொள்ளப்பட்டது? 

வந்தியத்தேவன் மாவீரன் என்றால் எந்த மாதிரியான மாவீரனாக இருக்கவேண்டும் என்பதைக் கற்பனை செய்து தனித்துவமாக உருவாக்கியிருக்கிறோம். உதாரணமாக பெரிய பழுவேட்டரையர் பற்றிக் கூறும்போது 24 போரில் 64 விழுப்புண்கள் கொண்ட திருமேனி கொண்டவர் என்றால் அந்தத் திருமேனியில் 64 விழுப்புண்கள் இருக்கும்படியாக வடிவமைத்தோம். இரண்டு கதாபாத்திரங்கள் தவிர மற்ற அனைத்துமே எந்த நடிகரையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. முழுமையாக நாவலை உட்கொண்டு கற்பனையில் உருவாக்கப்பட்டது.

கதாபாத்திரங்களை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று வடிவமைத்திருப்பதன் காரணம் என்ன?

பல காலங்களாகவே பொன்னியின் செல்வன் என்பது தமிழ் திரைத்துறையில் பேசப்பட்டு வரும் நாவல். எம்.ஜி.ஆர் அவர்கள் 1956ல் பொன்னியின் செல்வன் படத்தைத் திரைப்படமாக்கி அதில் நடிக்கவேண்டும் என்பதற்காக கல்கி அவர்களிடம் 10,000 ரூபாய் அளித்து திரைப்படத்திற்கான உரிமையை வாங்கினார். இரண்டு முறை படமெடுப்பதற்கான முயற்சியெடுத்தும் எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறவில்லை. 1994ல் கமல்ஹாசன் முயற்சியெடுத்தார். இருந்தும் படமாக எடுக்கப்படவில்லை. இச்சூழலில் திரைப்படமாக உருவாவதற்கு முன் அனிமேஷன் படமாக பொன்னியின் செல்வன் நாவலைத் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் நாங்கள் இறங்கினோம். மண் சார்ந்த வாள் வீச்சு என்று வரும்போது எம்.ஜி.ஆர் இதில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறும் என்பதோடு அவரின் ஆன்மா மகிழ்ச்சியடையும் என்ற நெகிழ்வுதான் வந்தியத்தேவனை எம்.ஜி.ஆராக வடிவமைத்திருப்பதற்கான முழுமுதற் காரணம். 

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா

தற்கால அரசியல் மற்றும் நிலவியல் சூழலில் பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாகவோ அல்லது தொடராகவோ வெளிவருவதன் முக்கியத்துவம் என்ன?

தற்காலச் சூழலுக்கும் பொருந்தும் வகையிலான நாவல் பொன்னியின் செல்வன். அதுமட்டுமில்லை, நாவல் குறிப்பிடும் காலகட்டத்திற்கான சூழலியலை நாம் எவ்வளவு தொலைத்திருக்கிறோம் என்ற ஏக்கத்தையும் இவை உருவாக்கும். 64 மதகுகளைக் கொண்ட வீராணம் ஏரி திறக்கும் போது சோழப்பேரரசு எப்படியிருக்கும் என்ற காட்சியை இக்காலத்தில் அனிமேஷனில் மட்டுமே துள்ளியமாக காட்சிப்படுத்தமுடியும். இன்றைக்கு அதற்கான தொழில்நுட்பங்கள் இருக்கிறது. வீரமும், விவேகமும் சார்ந்த நிலம் நம் நிலம் என்று சொல்லப்பட்ட விஷயங்களைக் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது அந்த உணர்வுகள் இன்னும் தீவிரமாக மேலெழும். இன்றையக் காலகட்ட குழந்தைகளுக்கு நம் பண்பாட்டையும், நம் மூதாதையர்கள், அரசர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்சிப்படுத்தும் படமாக இந்த அனிமேஷன் பொன்னியின் செல்வன் இருக்கும். 

பொன்னியின் செல்வன் கதை

படத்தை எப்போது வெள்ளித்திரையில் பார்க்கலாம்?

பொன்னியின் செல்வன் முதல் பாகம் அக்டோபர் அல்லது நவம்பர் 2022-ல் வெளிவரவிருக்கிறது. மொத்தம் ஐந்து பாகங்கள். முதல் பாகத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நான்கு பாகங்கள் வெளிவரும். ஒவ்வொரு திரைப்படமும் 2 மணிநேரமாக வெளிவரும். தற்போது விநியோக முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் படம் வெளிவரும். 



from விகடன்

Comments