பபூன் விமர்சனம்: இரண்டு சமூகப் பிரச்னைகளைக் கையாளும் சினிமா - ஆனால், நம்மைச் சிந்திக்க வைக்கிறதா?

தங்களின் கூத்துக்கலைக்குப் போதிய வரவேற்பில்லாமல் தவிக்கும் இருவர், பணம் சம்பாதிக்க வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்க, அதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களே இந்த `பபூன்'.

கூத்துக் கட்டும் தொழில் செய்யும் குமரன் (வைபவ்) குடும்பம், உடன் ஆந்தகுடி இளையராஜா என மொத்தமாக அவர்களின் குழுவுக்கே வருமானம் இல்லை. இதனால் தந்தையின் எதிர்ப்பையும் மீறி வைபவ்வும், இளையராஜாவும் ஒரு லட்சம் பணம் சேர்த்து வெளிநாட்டுக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். அதற்காக லோக்கலில் டிரைவர் வேலைக்குச் செல்பவர்கள் அரசியல்வாதி 'ஆடுகளம்' நரேன் சம்பந்தப்பட்ட போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிக் கொள்கின்றனர். பலராலும் தேடப்படும் குற்றவாளி தனபால் என்று வைபவ் கைது செய்யப்படுகிறார். இந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்க, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான அனகா இவர்களுக்கு உதவுகிறார். வைபவ்வும் இளையராஜாவும் எப்படி மீண்டனர், இதனால் அனகாவுக்கு என்ன சிக்கல் வருகிறது, உண்மையான தனபால் யார், இந்தக் கடத்தல் வழக்கிற்குப் பின்னால் இருக்கும் அரசியல் விளையாட்டு என்ன, அதில் யாரெல்லாம் பபூன் ஆக்கப்படுகிறார்கள்... இதுதான் படத்தின் கதை.

பபூன் விமர்சனம்

ஃப்ரெண்ட்ஸ், பார்ட்டி, காதல் என்றே டெம்ப்ளேட்டாக படம் நடித்துவந்து வைபவ், அதிலிருந்து வெளியே வந்து, கூத்துக் கலைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படத்தில் நடித்துள்ளார். கூத்துக் கலைஞராக ஆந்தகுடி இளையராஜாவே சிறப்பாக ஸ்கோர் செய்தாலும், வைபவ்வும் தன்னால் முடிந்தளவு தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். பிற்பாதியில் அவர் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் நம்ப தகுந்ததாகவே இருக்கிறது. ஹீரோவின் நண்பன் பாத்திரத்தில் ஆந்தகுடி இளையராஜா பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.

நாயகி அனகாவுக்குக் கதையில் முக்கியமான பாத்திரம். ஆனால், பாதி படத்துக்கும் மேல் காணாமல் போயிருக்கிறார். முகபாவங்கள் ஓகே என்றாலும் லிப் சின்க் பிரச்னை அவரின் நடிப்போடு ஒன்றவிடாமல் செய்கிறது. காவல்துறை எஸ்.பியாக வரும் தமிழ் மிரட்டல் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரின் நோக்கம் என்ன என்பதில் இன்னமும் தெளிவு இருந்திருக்கலாம். சிறப்புக் கௌரவத் தோற்றத்தில் ஜோஜு ஜார்ஜ், கிட்டத்தட்ட 'ஜகமே தந்திரம்' கதாபாத்திரத்தையே இங்கேயும் பிரதியெடுத்திருக்கிறார். ஆடுகளம் நரேன், மூணார் ரமேஷ் எனப் பலரும் தங்களின் பாத்திரங்களைச் சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.

பபூன் விமர்சனம்

நவீனத்தால் வாழ்விழந்து தவிக்கும் கூத்துக் கலைஞர்களின் பிரச்னைகள், வெவ்வேறு தொழிலுக்கு அவர்களைத் தள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள், மண்டபம் கேம்ப் போன்றவற்றில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் சிக்கல்கள், புலம்பெயர்வு, வெளிநாட்டுப் பயணம் போன்றவற்றுக்கு வேறு வழியின்றி அவர்கள் செய்யும் தகிடுதத்தங்கள் என்ற இருவேறு பிரச்னைகளை ஒரே படத்தில் சொல்ல நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன். தென் மாவட்ட கடலோர கிராமத்தின் வாழ்வியலைத் திரையில் கொண்டு வர மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கக் குற்றம் செய்கிறார்கள் என்று காட்டுவது இன்னமும் அவர்களுக்குக் கூடுதல் சிக்கலை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

கூத்துக்கலையுடன் தொடங்கும் சினிமா, கியர்போட்டு கடத்தல், ஆக்ஷன் டிராமாவாக மாறும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இரண்டு மணிநேரத்துக்கும் குறைவாக பல்வேறு திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாகவே இருக்கிறது. திரைக்கதை அமைப்பில் தனபால் யார் என்பதை கோடிட்டு காட்டிவிட்டு அதன்பின் இன்னொரு பக்கம் மடை மாற்றுகிறார் இயக்குனர். அது சஸ்பென்சை தக்க வைக்கும் முயற்சியா இல்லை யார் இந்த தனபால் என நிறுவுவதற்கான காட்சியமைப்புகளா என்கிற குழப்பம் பார்க்கும் நமக்குமே எழுகிறது.

பபூன் விமர்சனம்

ஆனால், மேஜிஸ்திரேட்டால் ரிமாண்ட் செய்யப்பட்ட குற்றவாளியான வைபவ், போலீஸிடமிருந்து தப்பிச் சென்றுவிட்டு ஜாலியாக ஊருக்குள் வண்டி ஓட்டுவது, படகில் செல்வது என்பதெல்லாம் லாஜிக்கே இல்லாத மசாலா. கடைசிக்கு மாறுவேடமாக முகத்தில் ஒரு மருவையாவது ஒட்டி வைத்திருக்கலாம். சந்தோஷ் நாராயணனின் இசையில் தொடக்கத்தில் வரும் கூத்துப் பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசையில் ச.நா-வின் முத்திரை மிஸ்ஸிங்.

கூத்துக் கலைஞர்களின் பிரச்னைகளைக் கையாண்டதைப் போல, இலங்கைத் தமிழர் பிரச்னைகளையும் இன்னமும் கொஞ்சம் சமூகப் பொறுப்புடன் கையாண்டு, லாஜிக் பிழைகளையும் தவிர்த்திருந்தால், நம்மைச் சிந்திக்க வைக்கும் `பபூன்'னாக இது இருந்திருக்கும்.


from விகடன்

Comments