`டாப் மட்டும் அணிந்துகொண்டு வெளியே போகும் நபர் அல்ல நான்'- விமர்சனத்துக்கு விளக்கம் அளித்த பாவனா

கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகை பாவனா 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமா உலகில் பிரவேசித்துள்ளார். 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' (Ntikkakkakkoru Premandaarnnu) என்ற மலையாள சினிமாவில் நடித்துவரும் நடிகை பாவனா-வுக்கு துபாய் நாட்டின் கோல்டன் விசா கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது. இ.சி.ஹெச் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் நடந்த கோல்டன் விசா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விசா பெறுவதற்காக வெள்ள நிற டாப் அணிந்து சென்றிருந்தார் பாவனா. இ.சி.ஹெச் நிறுவன சி.இ.ஓ இக்பாலிடம் இருந்து கோல்டன் விசாவை பாவனா பெற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனாவின் சில வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. பாவனா டாப் மட்டும் அணிந்து வந்ததாகவும், அதனால் கையை உயர்த்தும்போது அவரது உடல் தெரிந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

கோல்டன் விசா வழங்கும் நிகழ்ச்சியில் பாவனா

கோல்டன் விசா வாங்க சென்ற பாவனாவின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நெட்டிசன்கள், பாவனவாக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் முன்வைத்தனர். ஆனால் அது பார்க்கும் நபர்களின் மனதின் வெளிப்பாடு என சிலர் சமூக வலைதளங்களில் பாவனாவை ஆதரித்து பதிவிட்டனர். விமர்சனங்கள் அதிகரித்ததை அடுத்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் பாவனா.

கோல்டன் விசா நிகழ்வுகளில் பாவனா

இத குறித்து நடிகை பாவனா கூறுகையில், ``கை உயர்த்தும்போது தெரிந்தது உடல் அல்ல. அந்த உடையில் டாப்புடன் ஸ்லிப் என்ற பகுதியும் சேர்ந்துதான் வருகிறது. ஸ்லிப் என்பது உடலின் நிறத்தில் உடலுடன் சேர்ந்து இருக்கும் டாப்பின் ஒரு பகுதிதான். இது புதிய கண்டுபிடிப்பு ஒன்றும் இல்லை. அந்த ஆடையை பயன்படுத்தியவர்களுக்கு அது தெரியும்.

இதுதான் அந்த ஆடை என விளக்கம் அளித்த பாவனா

டாப் மட்டும் அணிந்துகொண்டு வெளியே போகும் நபர் அல்ல நான். எது கிடைத்தாலும் அதை வைத்து என்னை வேதனைப்படுத்தும் சிலர் உள்ளனர். என்னைப்பற்றி அவதூறும், பொய்யும் கூறுவதில் அவர்களுக்கு ஆனந்தம். இதன் மூலம் அவர்களின் மனதுக்கு சந்தோஷமும், சுகமும் கிடைக்கும் என்றால் கிடைக்கட்டும். அவர்களை எதிர்ப்பதற்கும், அவர்களுக்கு பதில் சொல்லவதற்கும் ஒன்றும் இல்லை" என்றார்.



from விகடன்

Comments