``போண்டா மணி உயிரைக் காப்பாத்துங்க" கண்ணீர் மல்க வேண்டுகோள் வைக்கும் நண்பர்கள் பெஞ்சமின்,கிங்காங்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் போண்டா மணி. அதன்பின் உடல்நிலை சரியாகி வீடு திரும்பினார். இப்போது மீண்டும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அவருக்கு உதவ வேண்டும் என நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்த காணொளியில் அவர் பேசியிருப்பதாவது..

''அன்பு அண்ணன் போன்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இந்த காணொளியைப் பார்க்கும் நண்பர்கள் அவருக்கு மேல்சிகிச்சைக்கு உதவும் படி பனிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அவருக்கு இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்க.. நாடு கடந்து நாடு வந்து, இலங்கையில் இருந்து வந்து, தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சினிமா நடிகரானவர். எவ்வளவோ போராட்டத்திற்கு மத்தியில் கல்யாணம் செய்துகிட்டவர். இரண்டு குழந்தைகளையும் படிக்க வச்சு, ஆளாகிட்டு இருக்கார். தயவு செய்து அவரை காப்பாத்துங்க நண்பர்களே... அனாதையாக இந்தியாவுக்கு வந்தார். அவர் குழந்தைகளை அனாதையாக விட்டுட்டுப் போகக்கூடாது. நம்மளால முடிஞ்சதை செய்வோம். உதவுங்க..'' என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

போண்டா மணி

அவருக்கு மூச்சுத்திணறல் வந்ததற்கான காரணத்தை போண்டா மணி, முன்பே நம்மிடம் பகிர்ந்திருந்தார். ''ஒரு படப்பிடிப்பில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் வச்சிருந்தாங்க. அவங்களால சாக்கடை மாதிரி செட்டப் ரெடி பண்ண முடியல. செட்ல எல்லாரும் யோசிச்சிட்டு இருந்தாங்க. அந்த சீனை முடிச்சுக் கொடுக்கணும்ங்கிறதால நிஜ சாக்கடையிலேயே விழ வேண்டியதாகிடுச்சு. ரொம்ப நேரம் சாக்கடைக்குள் இருக்க வேண்டிய சூழல். அந்தக் காட்சி நடிச்சு முடிச்சப்போ நைட்ல இருந்து மூச்சுத்திணறல் இருந்துட்டே இருந்துச்சு. அதையும் பொருட்படுத்தாம கோவாவிற்கு ஒரு நிகழ்ச்சிக்காகப் போக வேண்டியிருந்ததுன்னு அங்க கிளம்பிட்டேன். தொடர்ந்து நிகழ்ச்சிக்காக மதுரை போயிருந்தேன். அங்க உடல்நிலை மோசமாகி மயக்கமாகிட்டேன். பிறகு அங்கிருந்து சென்னை வந்தேன். சென்னை வந்த பிறகு மூச்சு விடவே சிரமப்படும் அளவுக்கு உடல்நிலை மோசமாகிடுச்சு. '' என்று சில மாதங்களுக்கு முன் அவர் நம்மிடம் சொல்லியிருந்தார்.

இதுகுறித்து போண்டா மணியின் நண்பரான நடிகர் கிங்காங்கிடம் பேசினேன்.

''போன தடவை அவர் மருத்துவமனையில் இருந்த போது, கிட்னி பலவீனமாக இருக்கு. அதுக்கான ட்ரீட்மென்ட் எடுங்க. இல்லைன்னா டயாலிசிஸ் பண்ண வேண்டியிருக்கும்னு மருத்துவர்கள் சொன்னதாக போண்டாமணி சொல்லியிருந்தார். ஆனா, அவர் உடல் நலம் குறித்த சிந்தனை இல்லாமல் மறுபடியும் நடிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார். எங்களை மாதிரி நடிகர்களுக்கு வேலை செஞ்சா தானே வருமானம் வரும். உடம்பை கவனிக்காம விட்டதால, இப்ப மறுபடியும் அட்மிட் பண்ணியிருக்காங்க. டயாலிசிஸ் செய்வதற்கான பணம் அவர்கிட்ட இருக்காது. யாராது உதவி அவர் உயிரைக் காப்பாத்துங்க'' என கிங்காங்கும் வேண்டுகோள் வைத்தார்.



from விகடன்

Comments