பாலிவுட் நடிகரான கமால் ரஷீத் கான் பாலிவுட் பிரபலங்கள் பற்றி பல ட்வீட்களைப் பதிவிட்டு சர்ச்சைக்குரிய நபராகப் பேசப்பட்டு வந்தவர். அந்த வகையில் இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றைப் பகிர்ந்தார்.
அதில், "ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இறந்துவிடக் கூடாது. ஒயின் ஷாப்கள் இப்போதுதான் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன" என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் நடிகர் இர்ஃபான் கான் பற்றியும் சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்வை அடுத்து ஏப்ரல் 29-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் அரிய வகை புற்றுநோயால் உயிரிழந்தார். அடுத்த 24 மணி நேரத்தில் ஏப்ரல் 30-ல் மூத்த நடிகர் ரிஷி கபூரும் மறைந்தார்.
இதனால் பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களான இர்ஃபான் கான், ரிஷி கபூர் குறித்தும் அவர்களின் மறைவைக் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்ததாக நடிகர் கமால் ரஷீத் கான் மீது யுவ சேனா அமைப்பின் உறுப்பினர் ராகுல் கனல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து மும்பை காவல்துறையினர் கமால் ரஷீத் கான் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மும்பை விமான நிலையத்தில் கமால் ரஷீத் கானை மும்பை மலாட் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 11 மணிக்கு மும்பையில் உள்ள போரிவலி நீதிமன்றத்தில் கமால் ரஷீத் கான் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
from விகடன்
Comments