ஒரு பெண் கடத்தலுக்கும், நடப்பதை முன்னரே கணித்து எழுதிவிடும் ஒரு எழுத்தாளருக்கும் இருக்கும் தொடர்பை த்ரில்லராய் சொல்கிறது அருள்நிதி நடித்திருக்கும் `தேஜாவு' (Dejavu).
தான் கதையாய் எழுதும் எல்லா விஷயங்களும் உண்மையில் நடப்பதாகவும், அந்தக் கதாபாத்திரங்கள் நிஜத்தில் தனக்கு போன் செய்து மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் எழுத்தாளரான அச்யுத் குமார். காவல்துறை அதைப் பெரிதாகச் சட்டை செய்யாமல் கடந்து செல்ல, அந்த இரவு டி.ஐ.ஜி மதுபாலாவின் மகளான ஸ்மிருதி வெங்கட்டைச் சிலர் கடத்திவிடுகிறார்கள். ஆனால், அது நடக்க நடக்க அதை அப்படியே கதையாக எழுதிக்கொண்டிருக்கிறார் அச்யுத் குமார்.
பிரச்னை விஸ்வரூபமெடுக்க விசாரணை அதிகாரியாக அருள்நிதி உள் நுழைய அடுத்தடுத்து திருப்பங்களுடன் கதை விரிகிறது. யார் கடத்தினார்கள், எழுத்தாளருக்கு உண்மையிலேயே ESP சக்திகள் இருக்கின்றனவா, மதுபாலாவின் மறைப்பது என்ன எனப் பல பிளாஷ்பேக் கிளைக் கதைகளுடன் ஒரு பாக்கெட் நாவல் த்ரில்லராக விரைகிறது இந்தத் திரைப்படம்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால், D Block படத்தில் கல்லூரி மாணவர், இந்த முறை காவல்துறை உயர் அதிகாரி. இரண்டுக்குமே செட் ஆகும் அளவுக்கு உடல்வாகுடன் இருக்கிறார் அருள்நிதி. அங்கு நிகழும் விஷயங்களில் எது உண்மை, எது பொய் என்பவற்றை ஆராய்ந்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் கதாபாத்திரம் என்பதாலேயே கதை நகர்த்தவும் இவரின் கதாபாத்திரத்தையே அதிகம் நம்ப வேண்டியதாய் இருக்கிறது.
எழுத்தாளராகக் கன்னட நடிகர் அச்யுத் குமார். காவல்துறையின் மீது எந்தப் பயமும் இல்லாமல் நக்கல் அடிக்கும் கதாபாத்திரம். அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், அவரைவிடவும் நமக்கு அதிகம் பரிச்சயமான எம்.எஸ்.பாஸ்கர், அச்யுத் குமாருக்கு குரலுதவி செய்திருப்பதால் எமோஷனல் காட்சிகளில் எம்.எஸ்.பாஸ்கரும் நம் செவிக்கு அருகே வந்து போகிறார்.
படத்தில் எல்லா திருப்பங்களுக்கும் காரணமான நபராக மதுபாலா. ஆனால், பெரிய அளவில் அவரது நடிப்பு சோபிக்காததால் எந்தவித பாதிப்பையும் அந்தக் கதாபாத்திரம் ஏற்படுத்தவில்லை. மதுபாலா மிரட்டும் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என எல்லாவற்றிலும் அவர் பேசும் வசனங்கள் அளவுக்குக்கூட அவர் முகத்தில் எந்தப் பாவனைகளும் இல்லை. கடத்தப்படும் பெண்ணாக ஸ்மிருதி வெங்கட், காவல்துறை ரைட்டராக காளி வெங்கட் என நமக்குக் கொஞ்சம் பரிச்சயமான முகங்கள் அவ்வப்போது தலைகாட்டுகிறார்கள்.
பேருந்தில் அமர்ந்துகொண்டு பாக்கெட் நாவல் படிப்பதில் இருக்கும் சுவாரஸ்யமே அடுத்து என்ன என்கிற திருப்பமும், எப்போது முடியும் என்கிற விறுவிறுப்பான நடையும்தான். அந்த வகையில் முதல் பாதி முழுக்க அடுத்து என்ன என்னும் சுவாரஸ்ய முடிச்சை அவிழாது பார்த்துக்கொள்கிறார் அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீனிவாசன். ஜிப்ரானின் பின்னணி இசை பல இடங்களில் படத்தை மேல் இழுத்துக் காப்பாற்றுகிறது. ஆங்காங்கே 'கடாரம் கொண்டான்' பின்னணி இசை ஏனோ நினைவுக்கு வருகிறது. P.G.முத்தையாவின் ஒளிப்பதிவும், அருள் E.சித்தார்த்தின் படத்தொகுப்பும், விறுவிறுவென செல்லும் படத்துக்கு உதவி புரிகின்றன.
ஆனால், இடைவேளைக்குப் பின்னர் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் போது, காட்சி அனுபவமாக இல்லாமல் வெறுமனே வசனமாகப் பேசியே பலவற்றைக் காட்டியிருப்பது ஒரு கட்டத்துக்கு மேல் சுவாரஸ்யத்தை இழக்கச் செய்கிறது. அதே போல், சில நடிகர்களின் லிப் சிங்க் பிரச்னைகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. கதை சொல்லப்பட்ட விதத்தில் இருக்கும் புத்திசாலித்தனம் படத்தின் நடிகர்களிடம் சுத்தமாய் இல்லை. ஒரு முக்கிய அதிகாரியின் ஐடியைக்கூட பார்க்காமல் எல்லோரும் எப்படி நம்புகிறார்கள்; அவருக்கு ஏன் ஊரே ஆதரவாக வருகிறது; ஒரு போலீஸ் அதிகாரி, குற்றவாளி எனக் கருதப்படும் ஒரு நபரை முழுதாக செக்கப் கூடச் செய்ய மாட்டாரா எனப் பல லாஜிக் கேள்விகள் எட்டிப் பார்க்கின்றன.
இரண்டாம் பாதியையும் இன்னும் சிரத்தையுடன் எழுதியிருந்தால், அட்டகாசமான ஒரு பாக்கெட் நாவல் த்ரில்லராய் இருந்திருக்கும் இந்த `தேஜாவு'.
from விகடன்
Comments