* அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'கோப்ரா' படம் அடுத்த மாதம் 11ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். அந்தப் படத்தை உதயநிதியின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கிடையே அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தையும் உதயநிதியே வாங்கியிருப்பதால், அதுவும் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் என்ன செய்வது என யோசித்ததில் இப்போது 'கோப்ரா' ரிலீஸைத் தள்ளி வைத்துவிட்டதாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது.
* விஜய்யின் 'வாரிசு' படத்தில் ஏற்கெனவே ஒரு பெரும் பட்டாளமே நடித்து வருகிறது. அதில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்து வருகிறார். அவரும் விஜய்யும் வரும் காட்சிகளில் க்ளாப்ஸ் அள்ளும் என்கிறார்கள். இன்னொரு விஷயம், படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் விஜய் ராஜேந்திரன் என்றும், ஆப் டெவலப்பராக (அப்ளிகேஷன் டிசைனர்) நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
* அஜித் பட ஷூட்டிங்குகள் தொடர்ந்து ஹைதராபாத்தில்தான் நடந்து வருகின்றன. இதனால் பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்புகள் பறிபோகிறது என ஆர்.கே.செல்வமணி முன்பு மீடியாவைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகும் அஜித் படத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ஹைதராபாத்திலேயே படமாக்கி வந்ததும் பெப்சி தொழிலாளர்கள் இது குறித்து ஆர்.கே.செல்வமணியிடம் முறையிட்டனர். உடனே அவர், 'இது குறித்து அஜித்தைச் சந்தித்துப் பேச உள்ளோம்' என்றார். இந்தத் தகவலுக்குப் பின், அஜித்-61 படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மணலி, வண்டலூர் ஏரியாக்களில் நடந்து வருகின்றன. அடுத்த ஷெட்யூலில் அஜித் பங்கேற்கிறார். அதை புனேயில் நடத்தத் திட்டமிட்டு வந்தாலும் கூட, அதையும் சென்னையிலேயே எடுக்கலாமா என இப்போது யோசித்து வருவதாகத் தகவல்.
* கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்' வெப்சீரீஸ் இம்மாதம் 28ம் தேதி ஒ.டி.டி-யில் வெளியாகிறது. இதற்கிடையே சந்தானம் தனது 'குலுகுலு' தயாரானதும் உதயநிதியை அழைத்துத் திரையிட்டுக் காட்டியதுடன், படத்தையும் 'ரெட் ஜெயன்டில்' வெளியிடக் கேட்டுக்கொண்டார். உடனே, அதற்கு 28ம் தேதியை முடிவு செய்தார் உதயநிதி. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட கிருத்திகா, தன் கணவரிடம் 'அன்னைக்கு என்னோட சீரிஸ் வெளியாகுது' எனச் சொல்லவும், 'குலுகுலு'வை 29ம் தேதிக்கு மாற்றினார்களாம். "தன் வெப்சீரீஸ் ஓ.டி.டி-யில் வெளியானாலும் கூட, தியேட்டர் ஆடியன்ஸ் கவனம் தன் சீரீஸின் மேல் இருக்கணும்னு நினைக்கிறார் கிரு" எனக் கிருத்திகாவைக் கலாய்த்திருக்கிறார் உதயநிதி.
* நடிகை சுகன்யாவின் மகளை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. பா.இரஞ்சித் தயாரிக்கும் ஒரு படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். சுகன்யாவின் மகள் பரதநாட்டியம் பயின்றவர் என்பதாலும் அப்படி ஒரு கேரக்டர் படத்திற்குத் தேவைப்படுவதாலும் அவரை அணுகியிருக்கிறார்கள். மகளுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் என்றாலும் சுகன்யா, இன்னும் க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அதேபோல கௌதமியின் மகளைத் தேடியும் சினிமா வாய்ப்புகள் குவிகின்றன என்பதால், அவர் வீட்டிலிருந்தும் நல்ல தகவல் வரவிருக்கிறது.
* மூன்று மாதங்களுக்கு முன்பு வரைக்கும் கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருந்தது. சமீப காலங்களில் அவரது உடல்நிலை அவ்வளவு சரியில்லாமல் இருப்பதால் கவலையில் இருக்கிறார்கள் குடும்பத்தினர். கேப்டன் உடல்நிலை தேறி வருவதும் பிறகுச் சற்று உடல்நலம் குன்றி விடுவதுமாக மாறி மாறி தென்படுகிறதாம். இதனால் அவரை மறுபடியும் அமெரிக்கா அழைத்துச் செல்லவும் யோசித்து வருகிறார்கள். இதற்கிடையில் மூத்த மகனுக்குத் திருமணம் செய்து வைக்கவும் கேப்டன் விருப்பப்படுகிறாராம். அதற்கு முன்னால் விஜயகாந்த்தைச் சகஜமான உடல்நிலைக்குக் கொண்டு வந்துவிட குடும்பத்தினர் முயற்சி செய்கிறார்கள். அதனால் கட்சி வேலைகளை முழுக்க முழுக்க தம்பி சுதீஷிடம் ஒப்படைத்துவிட்டார் பிரேமலதா விஜயகாந்த்.
* சூர்யாவும், கார்த்தியும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதற்கான வேலையைத் தொடங்கி இருக்கிறார்கள். அதற்கான ஸ்கிரிப்டை யாரிடம் கொடுப்பது என்ற யோசனையில் இருக்கிறார்கள். அதில் சிவக்குமாரும் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். 'ஷோலே' படத்தில் தர்மேந்திரா, அமிதாப் கூட்டணி மாதிரி நட்பிற்கான கதையையே 'தீம்' ஆகத் தேர்ந்தெடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இதற்கான ஆரம்ப வேலைகள் தற்போதே நடந்து வருகின்றன. அதைப் பெரிய ஓ.டி.டி கம்பெனி ஒன்றுக்காகத் தயாரித்துவிடலாமா எனவும் யோசித்து வருகின்றனர்.
from விகடன்
Comments