எல்லோருக்கும் ஓரளவு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் சொல்லுகிறோம்! இன்றைய பட உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருப்பவர் சிலுக்கு ஸ்மிதாதான். நாளொன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டு படங்களிலும் அதிகபட்சம் நான்கு படங்களிலும் நடிக்கிறார் அல்லது ஆடுகிறார். நால் கணக்கில் கால்ஷீட் பேசாமல் இத்தனை மணி நேரம் மட்டும்தான் என்று கால்ஷீட் கொடுக்கும் ஒரே நடிகை இவர்தான். கூடிய சீக்கிரம் நிமிஷக் கணக்கில் இயங்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்!இன்றைக்கு தருகிறேன், நாளைக்குத் தருகிறேன் என்று இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்கள் நடிக்கச் சொல்லி அழைத்தால், முழுத் தொகையையும் எண்ணி வைத்த பிறகே செட்டிற்குள் நுழைகிறார்.
காலையில் ஐந்தரை மணிக்கே எழுந்து வீட்டிலேயே மேக்-அப் போட்டுக் கொண்டு புறப்படுகிறார். இரவு படுக்கைச்குச் செல்லும்போது இரண்டு அல்லது மூன்று மணி ஆகிவிடுகிறது. பின்னிரண்டிலிருந்து பதினாறு மணி நேரத்திற்குள், (இரண்டு நாட்களில்)பாடலுக்கான நடனத்தை ஆடி முடித்துக் கொடுத்து விடுகிறார். நடனக் காட்சிகளுக்கான உடை (கொஞ்சம்தானே!) டிஸைன், கலர் இவற்றை இவரே தேத்ந்தெடுக்கிறார் படப்பிடிப்பிற்குச் சென்று விட்டால் இவருக்கு வரும் போன்கால்களை இவரது தாயார்தான் அட்டெண்ட் செய்வார்.
எத்தனை மணிவரை எந்த படப்பிடிப்பில் சிலுக்கு இருப்பார் என்பதை, தெளிவாக யார் கேட்டாலும் கூறுவார். தமிழைப் புரிந்து கொள்ளுமளவிற்கு சரளமாகப் பேச வராது. தெலுங்கில் பேசினால் விஷயத்தை இன்னும் சுலபமாகக் கிரகித்துக்கொள்ள முடியும். தன்னுடைய மகள் பாப்பா- சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், பத்திரிகையில் வரும் செய்திகளையும் ஏக ஆர்வத்தோடு பார்ப்பார்.
ஆனால், தன்னுடைய மகளுக்கு, படவுலகிலிருக்கும் வால்யூ இவருக்குத் தெரியாது புரிந்து கொள்ளவும் ஏனோ விரும்புவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சிலுக்கு, செகண்ட்ஹேண்ட் ஃபியட் கார் ஒன்றை வாங்கினார், அதாவது, நடிக்க வந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இன்னும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறார், ஆயுத பூஜையன்று புதிய வாடகை வீட்டில் குடியேறினார். பெங்களூரில் படப்பிடிப்பிற்குச் சென்றபோது ஒரு ரசிகர் இரண்டு நாய்க் குட்டிகளை (பாமரேனியன், அல்சேஷன்) பிரசண்ட் செய்ய, அவற்றை ஆசையோடு வளர்க்கிறார், அல்கேஷனின் (கிராஸ்) பெயர் பாமரேனியனின் பெயர் பாபி. நடிக்க வந்தபோது-மோகனப் புன்னகை-படத்தின்போது இருந்த, எடையைக் காட்டிலும் பதினைந்து கிலோவை வெற்றிகரமாகக் குறைத்திருக்கிறார்.
இப்போது இடுப்பு கச்சிதமாக இருக்கிறது. "அப்பல்லாம் நான் உட்காரரெண்டு நாற்காலிங்க தேவைப்படும் எல்லாரும் என் உருவத்தைப் பார்த்துக் கிண்டல் செய்வாங்க." என்று வெளிப்படையாக இப்போதும் ஒப்புக்கொள்கிறார், உடல் மெலிதாவதற்காக எந்தவித உடற்பயிற்சியும் செய்வு தில்லை.
உணவு விஷயத்தில் கட்டுப் பாடாக இருக்க ஆரம்பித்தாராம் இப்போது டயட் கண்ட்ரோலெல்லாம் இல்லை."இரவு பகலாக ஷூட்டிங்லே இருப்பதால் அதுவே எக்சர்ஸைஸ் ஆயிடுச்சோ என்னவோ-சதை போடுவதில்லன்னு தோணுது" என்கிறார், ' உறவினர்களுடன் எப்போதுமே நெருங்கிய பழக்கம் இருந்ததில்லை. பிரபலமாகிவிட்ட பிறகு முட்டை முடிச்சுடன் ஓடி வந்து சில உறவினர்கள் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வது படவுலகில் பழக்கம். சிலுக்கு விஷயத்தில் உறவினர்களுடைய குறுக்கீடும், பிக்கல்பிடுங்கலும் இதுவரை வந்ததில்லை. யார் எப்படி விமரிசனம் செய்தாலும் சிரித்துக் கொண்டே கேட்பார்.
ஆனால், தனிமையில் தன்னைத் தானே எடை போட்டுக் கொண்டு சுதந்திரமாகச் செயல்படுவதுதான் வழக்கம். தனக்குப் பிடித்தமான விஷயத்தை ஆர்வத்தோடு அவர் சொல்லும்போது கேட்பவர் அதை மறுத்துச் சொன்னால், "உங்களுக்கெல்லாம் டேஸ்ட்டே கிடையாது" என்று சிரித்துக் கொண்டு கிண்டல் செய்வாரே தவிர, மூர்க்கத்தனமாகத் தர்க்கம் செய்து கொண்டிருக்கமாட்டார். பழகும்போது மிகவும் கண்டிப்பானவராகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் ரொம்ப் ஸாஃப்ட் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் போன்றவற்றைச் சுலபமாகப் படித்து விடுவார். தெலுங்கு மட்டும்தான் எழுத வரும்.
இப்போதைய நிலவரப்படி ஒரு வாரம் இவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஒய்வெடுக்க நினைத்தால் போதும்-குறைந்த பட்சம் பத்து தயாரிப்பாளர்களாவது பாதிக்கப்படுவார்கள், செட் செலவு மற்றும் சக நடிக நடிகையர் கால்ஷிட் விஷயங்களினால் இருபது அல்லது முப்பது லட்ச ரூபாய் முடக்கம் ஏற்பட்டுவிடும்.
இவருடைய நடனத்தை மட்டும் சேர்த்தால் படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நான்கு தயாரிப்பாளர்களாவது தலையைப் பிய்த்துக் கொள்வார்கள்.
கால்ஷீட் விஷயங்கள், பண விஷயங்களைக் கவனிக்க இதுவரை செயலாளரோ, உதவியாளரோ கிடையாது. இவராகவே மானேஜ் செய்துகொண்டு வருகிறார், காலையில் ஒரு சப்பாத்தி, மதியம் விரும்பினால் கொஞ்சம் சாதம், இறால் வகையறா கொஞ்சம், இரவு பல சமயங்களில் சாப்பிடுவதே கிடையாது. இடையிடையே ஜூஸ் அல்லது இளநீர் சாப்பிடுகிறார், பொதுவாக, சாப்பாடு விஷயத்தில் செலவழிப்பதிலும் சிக்கனமானவர்தான்! பண விஷயத்தில் கண்டிப்பானவராக இருந்தாலும், "பணம் இன்றைக்கு வரும், நாளைக்குப் போகும். உண்மையான பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்தும் அம்மாவோ அல்லது யாரோ என்னுடன் இருந்தால் அதுவே எனக்குப் போதும். ஆனாலும் நாம் உழைப்பதற்கேற்ற ஊதியத்தைக் கறாராக வாங்கிக் கொள்வதில் தவறு கிடையாது. நமக்குச் சம்பந்தமில்லாதவர்களுக்காக ஓசியில் ஏன் உழைக்க வேண்டும்?" என்று நெருங்கியவர்களிடம் மனம் விட்டுச் சொல்வார்.
தற்போது மூன்று இந்திப் படங்களில் நடித்து வருவதால் விரைவில் பம்பாய் படவுலகிலும் இவரது ஆக்ரமிப்பை எதிர் பார்க்கலாம் என்று பேச்சு இருப்பதை இவர் பெரிதாகச் சட்டை செய்வதில்லை.
"நேரம் நன்றாக இருந்தால் எந்தமொழியாக இருந்தாலும் தானாகவே சந்தர்ப்பம் கிடைக்கும். தமிழ்ப் படவுலகில் பழகி விட்டதால் மற்ற மொழிப் படங்களில் நடிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆக்ரமிப்பு செய்யவேண்டும் என்ற ரீதியில் மற்றவர்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நான் எப்போதுமே தட்டிப் பறித்ததில்லை. வாய்ப்பு கிடைத்தால் எந்த மொழியாக இருந்தாலும் நடிக்கத் தயார்" என்பார்.
- பாரி
(12.01.1983 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் இருந்து...)
from விகடன்
Comments