எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் பொற்காலத்தின் அரசன் - எம்.எஸ்.வி ஆச்சர்ய பக்கங்கள்!

நம்மை வெகுகாலம் தாலாட்டியது எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை. அந்த மெல்லிசை மன்னரின் பிறந்தநாள் இன்று (ஜூன் 24). 1940 முதல் 1965 வரை டி.கே.ராமமூர்த்தியின் காம்போவில் நூற்றுக்கும் அதிகமான படங்கள், 2015 வரை தனியாக ஆயிரக்கணக்கில் படங்கள் எனத் தொடர்ந்தது அவரின் சகாப்தம். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் எனப் பல அவதாரங்களை எடுத்தவரின் சில ஆச்சர்ய பக்கங்கள் இதோ...

* விஸ்வநாதன் - ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் வாரிசுகளாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே இசைத்துறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகள்களுடன் எம்.எஸ்.வி

* இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பெரும்பாலான முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியிருக்கிறார் எம்.எஸ்.வி. இப்படித் தலைமுறைகள் தாண்டியும் அவரின் குரல் சாதனை படைத்தது.

* தன்னுடைய குரு, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைக் கடைசிவரை போற்றிப் பாதுகாத்தார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது மனைவியைத் தாய்போல் கருதி அவரது கடைசிக் காலம்வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமையைக்கூடச் செய்தார் இந்த மாமனிதன்.

* முதன்முதலாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சினிமா கம்பெனிகளில் ஆபிஸ் பாயாக, சர்வராக, வேலை பார்த்திருக்கிறார். அந்த அனுபவங்களை எல்லாம் நகைச்சுவையோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்

* மெல்லிசை அரசனுக்கு அத்தனை பாராட்டுக்களும் மக்களிடம் இருந்தே வந்தன. கலைமாமணி, ஒரு சில வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என அவரின் விருதுகள் பட்டியல் குறைவுதான். குறிப்பாக அவருக்குத் தேசிய விருதே கிடைத்ததில்லை என்பது பெரும் அதிர்ச்சிகரமான தகவல்.

* இசையமைப்பாளராக ஓடி முடித்தபின், 1998 முதல் 2013 வரை என ஒரு 8 படங்கள் மற்றும் 2 தொலைக்காட்சித் தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவற்றில் 'காதல் மன்னன்', 'காதலா காதலா' போன்றவை குறிப்பிடத்தகுந்த படங்கள்.

* பெரும் சாதனையாக 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து, கிட்டத்தட்ட 30 வருடங்கள் எம்.எஸ்.வி யின் இசை ராஜ்ஜியம் இங்கே நடந்திருக்கிறது. இதில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களும் அடக்கம்.

கே.பாலசந்தர் - எம்.எஸ்.விஸ்வநாதன்

* குடும்பப் படங்களின் கலைஞர்கள் பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோக்சந்தர், கே.பாலசந்தர் ஆகியோருடன் அதிகமான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் கறுப்பு வெள்ளை காலகட்டத்தைத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள்.

* சொந்த குரலில் உச்சஸ்தாயில் பாடுவது அவரது ஸ்பெஷல். முன்பெல்லாம் ஒரு பாடலாவது அவரின் பாட்டுக் கச்சேரியில் கட்டாயம் இடம்பெறும்.

* விளையாட்டுக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத இசை மாமேதை. ஆனால் அத்தனை பேரும் பயிலக்கூடிய ஈடு இணையற்ற இசைப்பள்ளியாகத் திகழ்ந்தார்.

* வார்த்தைக்கு வார்த்தை மூச்சுக்கு மூச்சு சொல்வது 'முருகா முருகா' என்றுதான். நாத்திகவாதிகளுடன் பேசும் போது கூட நடந்த சுவாரஸ்யம் இது.

* தமிழ்த்தாய் வாழ்த்து 'நீராரும் கடலுடுத்த' பாடலுக்கு இசை அமைப்பு செய்த பெருமை இவருக்கு உண்டு. காலம் கடந்து நிற்கிற பாட்டு அது!

எம்.எஸ்.விஸ்வநாதன்

* எம்.எஸ்.வி மறைவிற்குப் பிறகு அவருக்காக அஞ்சலிக் கூட்டம் ஒன்றை நடத்தி அவரின் பாடல்களைப் பாடினார் இளையராஜா. ராஜா மனம் விட்டுப் பழகியது கூட இந்த இசை ராஜாவிடம்தான்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உங்களுக்குப் பிடித்த பாடல்களை கமென்ட்டில் சொல்லுங்கள்.


from விகடன்

Comments