விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஜூன் 3 படம் ரிலீஸ், படத்தின் ப்ரோமோஷன் என நிற்க நேரம் இல்லாமல் பணியாற்றி கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அவரின் படங்கள் குறித்து கேள்விகளை முன்வைத்தோம்.
ரெட்ரோ மீதான உங்கள் காதல் பற்றி சொல்லுங்க...
"நாம சின்ன வயசுல எதைக் கேட்டு வளர்கிறோமோ அதன் தாக்கம்தான் என நினைக்கிறேன். 80-களின் பிற்பகுதி மற்றும் 90-களின் வளர்ந்த காலத்தில் நாம் பார்க்கிற படங்கள், பாடல்கள், இளையராஜா, ரஹ்மான் இப்படியான தாக்கம் தான், படம் பண்ண வருகிறபோது இதுபோன்ற பாடல்களைப் பயன்படுத்தினால் நல்லா இருக்குமே எனத் தோன்றச் செய்கிறது. நாஸ்டாலஜியான உணர்வைக் கொடுக்கும். `ஆரண்ய காண்டம்’ படத்துல 'வாழ்வது எதற்கு’ என்கிற பாடல் ஆரம்பத்துல இருந்தே பயன்படுத்தி இருப்பாங்க. அது ரொம்ப பிடித்தமானது."
"உங்க படங்களில் செல்போன், தோடு, பேப்பர் இப்படி நான்-லிவிங் திங்க்ஸ் பயன்படுத்தப்படுகிறது. விக்ரம்ல அப்படி எதுவும்... "
"வேணும்னு வச்சது இல்ல. அது எந்தவித எமோஷன்ஸ் கேரி பண்ணுது என்பதுதான் முக்கியம். ஒரு ரூபா காயின் ஆகக்கூட இருக்கலாம். தாத்தா பாட்டி கொடுத்தது. அது தொலையுற நாள் நமக்கு நல்ல நாளாக இருக்காதுல்ல. அதன் மதிப்பு நமக்கு மட்டும் தெரியும். தனக்கு நெருக்கமான ஒன்று தொலையும்போது ஹீரோ எப்படி ரியாக்ட் பண்ணுவான், எந்த எக்ஸ்ட்ரீமுக்கு ஒருத்தன் போவான் என்பதுதான் பாயின்ட். அதுபோல இந்தப் படத்துலயும் ஒன்று இருக்கு. ஆனால் கதைக்கு எள்ளளவு தேவையோ அந்தளவில மட்டும் இருக்கு."
நீங்க பத்திரப்படுத்துற பொருட்கள்ன்னு எதை சொல்வீங்க?
"பத்தாம் வகுப்பு படிக்கும் போது ப்ரண்ட் கொடுத்த கிஃப்ட்ல ஆரம்பிச்சு போன மாதம் வாங்குன வாட்ச் வரைக்கும் பத்திரமா வைச்சுருப்பேன். அது எதோ ஒருவிதத்தில் பர்சனல் கனெக்ட் கொடுக்கும். நமக்கு பிடிச்சவங்க ஃபாரின் போயிட்டு கொண்டு வந்த தர்ற காயின்ஸ், படம் பண்ணும்போது முதன் முதலா fan ஒருவர் கொண்டுவந்து கொடுத்த கடிதம் இப்படி நிறைய பத்திரமா வச்சுருக்கேன். கடைசியில் நம்ம கையில் இருக்க சொத்து இவைதாம்."
"உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக படம் பண்ண வரும் போது நீங்க பார்க்கிற பிளஸ், மைனஸ்..."
"பிளஸ் என்னன்னா வழக்கமான டெம்பிளேட் மற்றும் க்ளீஷே தவிர்த்துட்டு படம் பண்ண முடியும். மைனஸ் ப்ராக்ட்டிகல்லா படப்பிடிப்பின்போது சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம ஸ்கிரிப்ட்ல எழுதியிருப்போம். ஆனால் அதை படமாக்கும் போது 2000 சிக்கல்கள் வரும். உதவி இயக்குநரா பணியாற்றிய அனுபவம் இருந்தா ஈஸியா சமாளிச்சுட முடியும். தொழில் கத்துகிற மாதிரி தானே அது. மென்டாரின் முக்கியத்துவம் என்னன்னு வெற்றி மாறன் சார் சொல்லும் போது எனக்கு பீல் வந்தது. அவர் ரொம்ப நொந்து போயிருக்கும் போதோ யார் கிட்ட போய் பேசுறது எனத் தெரியாத போதோ அவர் குருவை பார்த்து இரண்டு வார்த்தை பேசுனாலேபோதும். பத்து நாள் தாங்கும் என சொல்லியிருப்பாரு. அதை நான் என் உதவி இயக்குநர்கள் கிட்ட உணர்ந்திருக்கிறேன். அவங்க மனச்சோர்வா இருக்கும் போது இரவு இரண்டு மணி ஆனாலும் வீட்டுக்கு வந்து பேசிட்டு இருப்பாங்க. மறுநாள் சரியாகி ஓர்க் பண்ணிட்டு இருப்பாங்க. நமக்கு அப்படி ஒரு ஆள் இல்லங்கிறது நான் ரொம்ப மிஸ் பண்ணது. 8 வருஷமா எனக்கு எதுனாலும் நானே தான் பார்த்துக்கணும். இப்படி ஒரு பிரச்சனை என பேச கூட யாரும் இருந்ததில்லை."
"இப்போ அப்படி இருக்காங்களா..."
"ஆமா. இப்போ கமல் சார், விஜய் சார் இவங்க கிட்ட பர்சனலா ஷேர் பண்ணிக்கலாம். எதுனாலும் பேச முடியும். அப்பறம், சேதுண்ணா. ஓர்க் பண்ண எல்லோரையும் சொல்லலாம். கார்த்தி சார் கூட பேசிட்டு இருப்பேன். அவரும் அந்தப் பக்கத்துல இருந்து இப்போ பண்ணிட்டு இருக்க படங்களைப் பத்திப் பேசுவாரு. ஒரு இயக்குநர் - நடிகர் என்பதையெல்லாம் தாண்டி இந்த பாண்டிங்தான். ஒரு downfall வரும் போது இப்படி யார்கிட்டவாது பேசுறது ஸ்வீட் ஆனா ஒன்று என நினைக்கிறேன்"
"விக்ரம் ட்ரெயலர்ல கமல் சொல்ற `பார்த்துக்கலாம்'ன்னு ஒரு வசனம் இருக்கும். அத பத்தி சொல்லுங்க..."
"கமல் சார் நிறைய படங்கள்ல `வீரம்னா என்ன தெரியுமா', `பயம்னா என்ன தெரியுமா', `மன்னிப்பு கேக்குறதுன்னா என்ன தெரியுமா…' இப்படியான வசனங்கள் பேசியிருப்பார். அதுபோலவே வேணும்னு குறிப்பா திட்டமிட்டு வச்ச டயலாக் அது. `எல்லா பக்கமும் மாட்டிகிட்டோம், இப்ப கமல் சார் என்ன பண்ண போறார்ங்கிற நிலைமை'. அப்ப இந்த டயலாக் வரும், 'இந்த மாதிரி சமயத்துல வீரங்கள்லாம் அதிகமா சொல்ற வார்த்தை என்ன தெரியுமா...' என கேட்ட பிறகு வேறு ஒரு லாங்குவேஜ்ல மிலிட்டரி கோட் வேர்ட் மாதிரி சார் ஒண்ணு சொன்னதுதான் முன்பு வச்சு இருந்தோம்.
அன்னிக்கு ஷூட் போகும் போது சரியான மழை. எப்பவும் இரண்டு பிளான் இருக்கும்ல. மழை வந்தா என்ன பண்ணுவோம் வரலைனா என்ன பண்ணுவோம்னு. அன்னிக்கு இரண்டாவது ஆப்ஷனே இல்ல. மழை வந்து அவ்வளவு காசும் நஷ்டம். மாட்டிக்குவோம். 900 ஜூனியர் ஆர்டிஸ்ட் மேல இருக்காங்க. என்ன செய்யுறதுன்னு ஒரு அசிஸ்டென்ட் கால் பண்ணி பொலம்பிக்கேட்ட இருந்தான். 'சரி, வைடா. பார்த்துக்கலாம்' எனச் சொல்லிட்டேன். அவன் மத்த உதவி இயக்குனர்கள்கிட்ட `பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாரு, ஏதாவது பண்ணிடுவாரு' என சொல்லிட்டான். ஒரு பாயிண்ட்க்கு மேல அங்க போன பிறகு தான் தெரிஞ்சது பார்த்துக்கலாம்ங்கிற வெர்ட் எவ்வளவு பவர்புல்லானதுன்னு. சுத்தி இருக்க நிறைய பேர மோட்டிவேட் பண்ணறது மாதிரி இருக்கும். கமல் சார் சொன்னா இன்னும் பவர்புல்லாக இருக்கும்னு அவர் கிட்ட சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது."
"படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு. எப்படி வந்திருக்கு படம்"
"இந்தப் படத்திற்காக ரொம்ப சின்ஸியரா உழைச்சுருக்கோம். படம் ஆரம்பித்த போது நானும் கமல் சாரும் தான். அப்போ பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் இன்னிக்கு வேறு படங்களோடு எல்லாம் ஒப்பிடுறாங்க. மத்த இண்டஸ்ட்ரில வந்த படத்தோடு ஒப்பிடுகிறார்கள். ஒவ்வொரு படத்திற்கும் அதற்கேற்ற உழைப்பு இருக்கு. அவர்கள் 8 வருஷம் உழைச்சு இரண்டு பார்ட் எடுத்திருக்காங்க. இங்க நம்ம படத்துக்கும் அத்தனை வருடங்கள் இல்லைனாலும் உழைப்பு கொடுத்திருக்கிறோம். எந்த இடத்துலயும் விளையாட்டா கூட இருந்திடக்கூடாதுன்னு கவனமாக இருந்திருக்கிறேன். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கு உழைப்பு மட்டுமே போதுமா இருக்கு. படம் கமல் சார் பார்த்துட்டு பாராட்டுனதும் அவ்வளவு திருப்தியா இருந்துச்சு. மக்களுக்கும் பிடிக்கும்"
from விகடன்
Comments