தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் - வைரமுத்து இசைக் கூட்டணி; பாரதிராஜா, கௌதம் மேனன் நடிப்புக் கூட்டணி!

'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'தென்றல்', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' ஆகிய படங்களை இயக்கிய தங்கர் பச்சான், சில வருட இடைவேளைக்கு பின் மீண்டும் இயக்குநராகியிருக்கிறார். 'டக்கு முக்கு டிக்கு தாளம்' படத்தை அடுத்து 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்ற படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனனுடன் யோகி பாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்கள் மூவருமே இதுவரை நடித்திராத கதாபாத்திரம் இது என்கிறார்கள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தங்கர் பச்சான்

இதுகுறித்து தங்கர்பச்சான் கூறியதாவது, "என் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள 'டக்கு முக்கு டிக்கு தாளம்' விரைவில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தை இயக்குகிறேன். ஜி.வி.பிரகாஷுடன் முதன்முறையாக இணைகிறேன். இந்தப் படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜூலை இறுதியில் படப்பிடிப்புக்குக் கிளம்புகிறோம். கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றைச் செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத்தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதி முடித்து கொடுத்திருக்கிறார். அந்த பாடல் குறித்து அவர் ட்விட்டரில் கூட தெரிவித்திருக்கிறார்.

'இந்தப் படத்திற்கான பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப்போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை... கண்களாவது இருக்குமா?' என வைரமுத்து தன் அழுத்தமான மன உணர்வுகளைப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்கிறார் தங்கர் பச்சான்.



from விகடன்

Comments