புலன் விசாரணை: "படம் ஓடலைன்னா என்னைப் பார்க்கவே வராதே..."- இயக்குநர் சந்தித்த சோதனையும், சாதனையும்!

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `புலன் விசாரணை’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

"இந்த ஆர்ட் பிலிம்ன்றாங்களே... திரைப்படக் கல்லூரி மாணவர்களால் அந்த மாதிரி ஒண்ணை வேணா எடுத்துட முடியும். ஆனா ஒரு கமர்சியல் சினிமாவை எடுத்து சக்சஸ் காட்ட முடியாது. அதற்கு நடைமுறை அனுபவ அறிவு வேணும். களத்துல ஏற்கெனவே நிரூபிச்ச கமர்சியல் டைரக்டர்கள்கிட்ட சேர்ந்து வேலை கத்துக்கணும். அப்பத்தான் முடியும்!"

சென்னை திரைப்படக் கல்லூரிக்கு விருந்தினராக வந்த ஒரு பிரபலம் மேடையில் பேசிய வார்த்தைகள் இவை. ‘பிலிம் இன்ஸ்டியூட் பசங்க’ பற்றி அப்போதைய தமிழ் சினிமா இப்படித்தான் அலட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது. இங்கு படித்து வெளியேறிய இயக்குநர் ருத்ரைய்யா உருவாக்கிய ‘அவள் அப்படித்தான்’ என்கிற படைப்பு இன்றைக்கும் கூட மிகச் சிறந்த திரைப்படமாகக் கருதப்பட்டாலும் அப்போது வணிகரீதியாக ஓடவில்லை. இது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆபாவாணன் - ஒரு வெற்றிகரமான முன்னோடி

பிரபலம் மேடையில் பேசிய அலட்சியமான வார்த்தைகளைக் கேட்டு அங்குள்ள மாணவர்களில் ஒருவர் மனம் கொதித்துப் போனார். ‘கல்லூரி படிப்பை முடித்து வெளியே வந்தவுடன் வணிகரீதியான வெற்றித் திரைப்படங்களை உருவாக்குவேன்’ என்று அப்போதே உறுதி பூண்டார். பிறகு அதை சாதித்தும் காட்டினார். அவர்தான் ஆபாவாணன். இன்றைக்கும் கூட சினிமாவிற்கு முயற்சி செய்யும் மாணவர்கள், ஷார்ட் பிலிம் எடுத்து அதை விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி வெகுசன சினிமாத்துறைக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் கணிசமாக இருக்கிறது. இதற்கான வாசலை உருவாக்கிய முதல் முன்னோடி என்று ஆபாவாணனைத்தான் சொல்ல வேண்டும். திரைப்படக் கல்லூரி மாணவர்களாலும் பிரமாண்டமான வணிகத் திரைப்படங்களை உருவாக்கி வெற்றியடைய முடியும் என்கிற முதல் அடையாளத்தை ஏற்படுத்தியவர் ஆபாவாணன்.

ஆபாவாணன்

அவரைத் தொடர்ந்து பல திரைப்படக் கல்லூாரி மாணவர்கள் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்கள். இயக்குநர்களாகவும் தொழில்நுட்பக் கலைஞர்களாகவும் வெற்றிக் கொடி நாட்டினார்கள். பெயருக்குப் பின்னால் DFT என்று போடுவது பெருமைமிகு அடையாளமாக மாறியது.

இந்த வரிசையில் முக்கியமானவராக ஆர்.கே.செல்வமணியைச் சொல்ல வேண்டும். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘புலன் விசாரணை’. இந்தத் திரைப்படத்தைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

சினிமாவிற்குள் செல்வமணி வந்தது எப்படி?

செல்வமணியின் தந்தை ஒரு தமிழாசிரியர் மற்றும் அரசியல் கட்சிப்பற்று உடையவர். வீட்டில் சினிமா பார்க்கத் தடை. சிறுவர்களுக்கான படங்களைப் பார்க்க மட்டுமே செல்வமணிக்கு அனுமதி கிடைத்தது. பிறந்தது முதல் கல்லூரி வயதை எட்டுவது வரைக்கும் இவர் பார்த்திருந்த திரைப்படங்கள் ஏறத்தாழ இருபது என்ற எண்ணிக்கையில்தான் இருக்கும். எதுவொன்று மறுக்கப்படுகிறதோ அதில் கூடுதல் ஆர்வம் பீறிடுவதுதான் இளமையின் பண்பு. தந்தையின் விருப்பப்படி, மனமில்லாமல் சென்னைக்கு வந்து பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்த செல்வமணி, ஓராண்டிற்குள் இருநூறுக்கும் மேலான திரைப்படங்களை ஆசை தீர பார்த்துத் தீர்த்தார். அதில் பெரும்பாலானவை ஆங்கிலத் திரைப்படங்கள். படங்களைப் பார்த்துவிட்டு அவற்றைப் பற்றி தனது நண்பர்களிடம் சுவாரஸ்யமாக ‘கதை சொல்வது’ செல்வமணிக்குப் பிடித்தமான விஷயம்.

சென்னையில் திரைப்படக் கல்லூரி என்று ஒரு விஷயம் இருப்பதே அப்போதுதான் செல்வமணிக்குத் தெரிய வருகிறது. வீட்டிற்குத் தெரியாமல் அங்கு விண்ணப்பித்து டைரக்ஷன் கோர்ஸில் இணைந்து விடுகிறார். இயக்கம் தொடர்பானது மட்டுமல்லாமல் எடிட்டிங், சவுண்ட், கேமரா என்று பல்வேறு துறைகளிலும் புகுந்து கற்றுக்கொள்ள அவர் காட்டும் ஆர்வம் ஆசிரியர்களுக்குப் பிடித்துப் போக சிறந்த மாணாக்கனாக திகழ்கிறார். இதன் இடையே ஓர் எடிட்டரிடம் உதவியாளராகவும் பணிபுரிகிறார். கல்லூரி படிப்பு முடிந்ததும் எடிட்டரின் வழிகாட்டுதலின் பேரில் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்கிறார். ஆர்.கே.செல்வமணி உதவி இயக்குநராக பணிபுரிந்த ஒரே இயக்குநர் மணிவண்ணன் மட்டுமே.

ஆர்.கே.செல்வமணி

மணிவண்ணன் அப்போது சற்று இறங்குமுகத்தில் இருந்தாலும் தனது வழக்கமான பாணியில் இரண்டு, மூன்று படங்களை ஒரே சமயத்தில் இயக்கிக் கொண்டிருந்தார். பாரதிராஜா பள்ளியில் இருந்து வெளியே வந்தவர்களின் இயக்கும் பாணி என்பது வித்தியாசமானது. கதையின் வரைபடம் அவர்களின் மனதில் இருக்கும். அதையொட்டி படப்பிடிப்புத் தளத்தில்தான் காட்சிகளையும் வசனங்களையும் சுடச்சுட உருவாக்குவார்கள். ஆனால் இது தொழில்முறை சார்ந்த அணுகுமுறை அல்ல. இந்தப் பாணி வெற்றி பெற வேண்டுமானால், ஒன்று அந்த இயக்குநர் பெரிய திறமைசாலியாக இருக்க வேண்டும் அல்லது தற்செயல் வெற்றிகள் கிடைப்பவராக இருக்க வேண்டும். கச்சிதமாக திட்டமிடப்பட்ட திரைக்கதையுடன் (Bounded Script) செல்வதுதான் சரியான வழி.

இயக்குநர் என்னும் கடினமான பாதை

மணிவண்ணனிடம் வேகமாக தொழில் கற்றுக் கொண்ட செல்வமணி, இயக்குநராகும் தீர்மானத்துடன் குறுகிய காலத்திலேயே அவரிடம் சொல்லிக் கொண்டு விலகுகிறார்.

வெளியே வந்துவிட்டாலும் இயக்குநருக்கான பாதை என்பது செல்வமணிக்கு அத்தனை எளிதானதாக இல்லை. ஆங்கிலப் படங்களைப் போல தமிழில் பிரம்மாண்டமான ஆக்ஷன் படத்தை உருவாக்க வேண்டும் என்கிற கனவு செல்வமணியிடம் இருந்தது. ஆபாவாணன் போட்டுத் தந்த பாதையின் பிரதிபலிப்பு அது.

இதற்காக சில முன்னணி நடிகர்களைக் கதையுடன் அணுகுகிறார். “புதுசா இயக்க வர்ற பசங்க படத்துல நடிக்கறதில்லப்பா... சாரி” என்று நேரடியாக சொல்லி ஒதுங்கிக் கொள்கிறார் சிவகுமார். அதே காரணத்தை இன்னொரு விதத்தில் தன்மையாகச் சொன்ன சத்யராஜ், “முதல் படத்துல உங்களை நிரூபிச்சுட்டு வாங்க. ரெண்டாவது படத்துல நிச்சயம் நடிக்கறேன்” என்று நம்பிக்கையூட்டுகிறார். அடுத்ததாக செல்வமணியின் மனதில் வந்த நடிகர் விஜயகாந்த்.

‘ஊமை விழிகள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்கிற வகையில் நம்பிக்கையுடன் அணுகுகிறார். ஆனால் விஜயகாந்த்தை நேரடியாகச் சந்திக்க முடியாது. இப்ராகிம் ராவுத்தர்தான் அதற்கான திறவுகோல்.

புலன் விசாரணை

“அண்ணனோட கால்ஷீட் ரெண்டு வருஷத்துக்கு ஃபுல்லா இருக்கே தம்பி” – ராவுத்தரை எப்போது போய்ப் பார்த்தாலும் அவரது நிரந்தர பதில் இதுவாகத்தான் இருந்தது. இந்தப் பதில் செல்வமணிக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் அங்கு அடிக்கடி சென்று வந்ததில் ஒரு விஷயத்தை அறிந்து கொண்டார். விஜயகாந்த்தை வைத்து ஹாலிவுட் பாணியில் ஒரு பிரமாண்ட படத்தை உருவாக்க வேண்டும் என்கிற கனவு ராவுத்தருக்கு உள்ளூற இருந்தது. அதைத் தெரிந்து கொண்ட செல்வமணி, ஆங்கிலப்படத்தின் பல ஸ்டில்களை வெட்டி விஜயகாந்தின் உருவத்தை அவற்றில் பொருத்தி நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் கொண்டு ஒரு ஆல்பமாக மாற்றினார். இதை அவரது நண்பர்கள் இன்னமும் மெருகேற்றித் தந்தனர். ஏறத்தாழ ஸ்டோரி போர்டு மாதிரி இருந்த அந்த ஆல்பம்தான் ‘புலன் விசாரணை’ என்கிற திரைப்படத்திற்கான முதல் விதை எனலாம்.

தனது முதல் திரைப்படத்திற்காக செல்வமணி மேற்கொண்ட விடாமுயற்சிகளும் உழைப்பும் புறக்கணிப்புகளும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கான பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆல்பம் மட்டுமல்லாமல், திரைப்படக் கல்லூரியில் தான் உருவாக்கிய குறும்படத்தையும் ராவுத்தருக்கு போட்டுக் காட்டினார் செல்வமணி. (‘ஊமை விழிகள்’ திரைப்படத்திற்காக ஆபாவாணன் முன்பு செய்த அதே டெக்னிக் இது). இதனால் ராவுத்தருக்கு செல்வமணியின் மீதான நம்பிக்கை சற்று அதிகமானது. அவர் இதை விஜயகாந்திடம் சொல்ல ‘புலன் விசாரணைக்கான’ வாசல் இன்னமும் அகலமாகியது. ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகராக, பிரமாண்டமான இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஆசைப்பட, செல்வமணிக்கும் உற்சாகம் கூடியது.

புலன் விசாரணை

இயக்குநராலேயே பார்க்க முடியாத திரைப்படம்

அதன் பிறகு மளமளவென வேலைகள் ஆரம்பமாகின. முதல் நாள் படப்பிடிப்பே செல்வமணிக்கு பிரமாண்டமாக அமைந்தது. ஐநூறு துணை நடிகர்கள், நூறு டான்ஸர்கள், பிரமாண்டமான செட், ஐந்து ஜெனரேட்டர்கள் என்று முதல் நாளில் ஒரு பாடல்காட்சியை படமாக்கத் துவங்கினார் செல்வமணி. படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக இயக்குநர் சில விஷயங்களைக் கறாராக எதிர்பார்க்க, அந்தத் தகவல் திரிக்கப்பட்டு வேறு மாதிரியான வம்பாகத் தயாரிப்பு நிர்வாகத்திடம் சென்று சேர்ந்தது. இதனால் விஜயகாந்த்தின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார் செல்வமணி.

ராவுத்தரால் செல்வமணியின் கடுமையான உழைப்பைப் புரிந்து கொள்ள முடிந்ததால் இயக்குநருக்கு ஆதரவும் உற்சாகமும் தந்தார். படப்பிடிப்புத் தளங்களில், ஓர் இயக்குநராக தனது எதிர்பார்ப்புகளைக் கறாராக சொல்வதால் சக தொழில்நுட்ப கலைஞர்களின் பகையையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஓர் அறிமுக இயக்குநருக்கு இத்தனை பெரிய பிராஜக்ட்டின் முதல் நாள் என்பது பரவசமும் மகிழ்ச்சியும் கலந்த நாளாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் செல்வமணிக்கு அது சோதனை நாளாக அமைந்தது. தகவல் இடைவெளி காரணமாக இந்தச் சோதனைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றன. ஹீரோவிடம் நேரடியாக பேச முடியாமல் மற்றவர்களின் மூலமே காட்சிகளுக்கான குறிப்புகளைச் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. செல்வமணிக்கு உறுதுணையாக இருந்த ராவுத்தருக்கும் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் விஜயகாந்த்திற்கும் ராவுத்தருக்குமான உறவிலேயே விரிசல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது.

புலன் விசாரணை

பல இடையூறுகள் இருந்தாலும் தன்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காட்சிகளை பதிவாக்குவதில் கவனம் செலுத்தினார் செல்வமணி. குறைந்த நாள்களே இருந்தாலும் பொங்கல் பண்டிகையன்று படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிர்வாகம் திட்டமிட்டது. (14-01-1990). எனவே சூறாவளியாக சுழன்று பணியாற்றினார் செல்வமணி. மூன்று யூனிட்களை வைத்துக் கொண்டு ஒரே நாளில் பாக்கியுள்ள காட்சிகளை முடித்து படத்தை ஒருவழியாக இறுதி நிலைக்குக் கொண்டு வந்தார்.

ஆனால் இத்தனை பாடுபட்ட இயக்குநரால், படத்தின் முதல் சிறப்புக் காட்சியைப் பார்க்க முடியவில்லை. தனிநபர்களின் அரசியல் காரணமாக இயக்குநருக்கு அனுமதி மறுக்கப்பட்டு அரங்கத்திற்கு வெளியே அவர் நிற்க வைக்கப்பட்ட பரிதாபமெல்லாம் நடந்தது.

படத்தைப் பார்த்துவிட்டு வந்த ராவுத்தர் “படம் ஓடிச்சின்னா நானும் தப்பிச்சேன். இல்லைன்னா என்னைப் பார்க்கவே வராதே” என்று சொல்லி விட்டுச் சென்றாலும் தனது உருவாக்கத்தின் மீது செல்வமணிக்கு மிகுந்த நம்பிக்கையிருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. ‘புலன் விசாரணை'யை தமிழக மக்கள் வெற்றிப்படமாக மாற்றினார்கள். செல்வமணி வெற்றிகரமான இயக்குநராக மாறினார்.

‘புலன் விசாரணை’ என்ன மாதிரியான படம்?

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, நகரில் நிகழும் தொடர் கொலைகளுக்கான காரணத்தைத் தேடிச் செல்லும் சாகசம்தான் இந்தத் திரைப்படத்தின் மையம். உண்மையான கொலை வழக்குகளையும் நபர்களையும் செய்திகளையும் வைத்து தனது திரைக்கதையை உருவாக்குவதுதான் செல்வமணியின் வழக்கமான ஸ்டைல். ஆட்டோ சங்கர் மற்றும் அவன் செய்த தொடர் கொலைகள் பற்றிய வழக்கு பரபரப்பாக இருந்த சமயம் அது. அந்த கேரக்டரையும் அது தொடர்பான சம்பவங்களையும் படத்தினுள் கொண்டு வந்தார் செல்வமணி.

அரசியல்வாதிகளுக்காக இளம்பெண்கள் கடத்தப்பட்டு பிறகு சுவரில் புதைக்கப்பட்டு எலும்புக்கூடுகளாக தோண்டியெடுக்கப்பட்ட சம்பவங்களைச் செய்தித்தாள்களில் வாசித்து உறைந்திருந்த மக்கள், பிறகு அவற்றை படத்தில் காட்சிகளாக பார்த்த போது பிரமித்துப் போனார்கள்.

புலன் விசாரணை

‘ஹானஸ்ட் ராஜ்’ என்று பெயரிலேயே நேர்மையைக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருந்தார் விஜயகாந்த். சில நடிகர்களுக்குத்தான் போலீஸ் யூனிபார்ம் கச்சிதமாக பொருந்தும்; பார்ப்பதற்கும் கம்பீரமாக இருக்கும். விஜயகாந்த் அத்தகைய நடிகர்களில் ஒருவர். ‘பொதுமக்கள் ஏன் போலீஸ்காரர்களை வெறுக்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள், அவர்களின் நன்மதிப்பை காவல்துறை பெறுவது எப்படி?’ என்று இளம் அதிகாரிகளிடம் விஜயகாந்த் பேசும் காட்சியும் வசனமும் முக்கியமானது. ஆக்ஷன் காட்சிகளில் கால்களை லாகவமாக உதைத்து எதிரிகளை பந்தாடும் விஜயகாந்த்தின் பிரத்யேக ஸ்டைல் இதிலும் சிறப்பாக பதிவாகியிருக்கிறது.

ஒரு வழக்கமான ஹீரோவிற்கான பாணியாக அல்லாமல், நாயகன் மனைவியை இழந்தவன், ஒரு பெண்ணுக்குத் தந்தை என்று வழக்கத்தை உடைத்து டூயட், ரொமான்ஸ், டான்ஸ் என்று எதுவுமில்லாமல் நடித்திருந்தார் விஜயகாந்த். அவருக்கே இது குறித்து உள்ளூற தயக்கம் இருந்தாலும் “இந்தக் கேரக்டர் அதையெல்லாம் செய்யாது” என்று செல்வமணி துணிச்சலாகக் காட்சிகளை உருவாக்கியதுதான் முக்கியமான காரணம்.

ஆட்டோ சங்கர் பாத்திரத்தில் நக்கலும் சீரியஸூமாக ஆனந்த்ராஜ் சிறப்பாக நடித்திருந்தார். தன்னைக் கைது செய்ய வரும் விஜயகாந்த்திடம், “நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சுதான் முன்ஜாமீன் மனுவை பின்பாக்கெட்ல பத்திரமா வெச்சிருக்கேன்” என்று அசால்ட்டாக சொல்வார். ஆனந்த்ராஜை தாண்டி கூடுதலாக ஒரு முக்கிய வில்லனும் இதில் உண்டு. ஏறத்தாழ படத்தின் இறுதிப்பகுதியில்தான் இவர் வெளிப்படுவார். அந்த மெயின் வில்லன் சரத்குமார். இதற்கு முன்னர் இரண்டு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் ‘புலன் விசாரணை’ திரைப்படம்தான் சரத்குமாரின் மீது பெரிய வெளிச்சம் போட்டுக் காட்டியது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தனது திடகாத்திரமான உடம்புடன் விஜயகாந்த்துடன் ஆவேசமான மோதும் சண்டைக்காட்சியும் அதன் வித்தியாசமான ஒளிப்பதிவும் பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

வழக்கமான வில்லன் என்றாலும் தன்னுடைய ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வித்தியாசமான ஒப்பனை, மேனரிசம் போன்றவற்றைத் தருவதற்காக மிகவும் மெனக்கெடுவார் ராதாரவி. இதிலும் அப்படியே கைக்குட்டையை நாசூக்காக வாயில் பொத்திக் கொண்டு மெல்லிய இருமல் வெளிப்படும் மேனரிசத்தை பின்பற்றியிருந்தார்.

“நாம ஒரு பக்கம் சோஷியலிசம் பேசிட்டு இருப்போம். ஜனங்க ஒரு பக்கம் சோத்துக்கு அலைஞ்சிட்டு இருக்கட்டும். அப்பதான் அரசியல்வாதியை மறக்க மாட்டாங்க” என்று தேர்தலையொட்டி இவர் அலட்சியமாகப் பேசும் காட்சியில் ரசிக்க வைத்திருப்பார். சரத்குமாரைப் போலவே படத்தின் கடைசிப் பகுதியில் வரும் ரூபிணி, விஜயகாந்த்திற்கு உதவி செய்யும் மருத்துவராக நடித்திருப்பார்.

புலன் விசாரணை
தன் முதலாளிகளை கொடூரமாகக் கொலை செய்யும் டிரைவராக ஜி.எம்.சுந்தர், குற்றவாளிகளுக்குத் துணை போகும் இன்ஸ்பெக்டராக பீலிசிவம், ஐ.ஜி.யாக எம்.என்.நம்பியார், தன் கணவரை போராடி மீட்கும் மனைவியாக வைஷ்ணவி, விஜயகாந்தின் மகளாக சோனியா ஆகியவர்களோடு ஜானி என்கிற பயிற்சி பெற்ற நாயும் நடித்திருந்தது.

அசத்தலாக அமைந்த தொழில்நுட்பக் கூட்டணி

இந்தத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி யாதவ். இவரும் திரைப்படக்கல்லூரி மாணவர்தான். ‘புலன் விசாரணை’தான் இவரது முதல் திரைப்படம். ஆனால் அனுபவமுள்ள ஒளிப்பதிவாளர் போல பல காட்சிகளில் அசத்தியிருப்பார். கவர்னர் சந்திப்பில் கார்கள் வரிசையாக வரும் காட்சி, பெய்யும் மழையில் பிணங்கள் தோண்டியெடுக்கப்படும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டை உள்ளிட்ட பல காட்சிகள் பிரமாண்டமாக அமைந்ததற்கு ரவி யாதவ்வின் உழைப்பும் திறமையும் ஒரு முக்கியமான காரணம். ஜெயச்சந்திரனின் கோர்வையான எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்க விஷயம்.

இளையராஜாவின் பாடல்களுக்காகவே திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டம் அது. அவரது இசை இருந்தாலே போதும், உத்தரவாதமாக வெற்றி பெறும், என்றிருந்த நிலைமை. அவரது பாடல்கள் தங்களின் படத்திற்குக் கிடைக்காதா என்று இயக்குநர்கள் தவமிருந்த காலக்கட்டத்தில் இதிலும் செல்வமணி வித்தியாசமாக இருந்தார். ஆங்கில திரைப்படத்தின் தாக்கத்தால், பாடல்களை விடவும் பின்னணி இசை முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். இந்த நோக்கில் இயக்குநரின் விருப்பத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியிருப்பார் இளையராஜா. காட்சிகளின் பிரமாண்டத்திற்கும் பரபரப்பிற்கும் ராஜாவின் பின்னணி இசை முக்கியமான காரணமாக இருந்தது. ‘குயிலே... குயிலே...‘ என்கிற மெலடி பாடலும் ‘இதுதான்... இதுக்குத்தான்’ என்கிற துள்ளலிசைப் பாடலும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இளையராஜா

இயக்குநர் செல்வமணிக்கு ஹாலிவுட் திரைப்படங்களின் மீதிருந்த தாக்கமும் விருப்பமும் ‘புலன் விசாரணையின்’ பல காட்சிகளில் வெளிப்படுவதைக் காண முடியும். உடல் உறுப்புகளுக்காக மனிதர்கள் கடத்தப்படும் குற்றம் என்பது இன்றைய தேதியில் நாம் அறிந்த விஷயமாக இருக்கிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே இதை திரைப்படத்தில் சித்திரித்திருந்தார் செல்வமணி. காவல்துறையால் மூடி மறைக்கப்படும் வழக்குகள் வெளிப்படுவதில் புலனாய்வு இதழ்களுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. அதிகாரத்தால் மறைக்கப்படும் சாமானியர்களின் பிரச்னைகளை இந்த இதழ்கள் துணிச்சலாக வெளிப்படுத்தும் போதுதான் அவை பரவலாக வெளியே அறியப்படுகின்றன. அந்த வகையில் காணாமல் போன தன் தங்கையைக் கண்டுபிடிப்பதில் காவல்துறை வேண்டுமென்றே மெத்தனம் காட்டுவதால் அதைப் பற்றி ‘ஜூனியர் விகடனுக்கு’ எழுதி அனுப்புகிறான் அண்ணன். இது வசனத்தின் மூலம் நேரடியாகச் சொல்லப்படுகிறது.

பிரமாண்ட திரைப்படங்களின் முன்னோடி

Ravan Raaj: A True Story என்கிற தலைப்பில், 1995-ம் ஆண்டு இந்தத் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. புலன் விசாரணையின் இரண்டாம் பாகம் 2015-ல் வெளியானது. சென்சார் பிரச்னை உள்ளிட்ட பல நெருக்கடிகளுக்குப் பின் வெளியிடப்பட்டாலும் இது பரவலான வரவேற்பைப் பெறவில்லை.

பிரமாண்டமான திரைப்படங்கள், Pan India மாய்மாலங்கள் போன்ற சமாச்சாரங்கள் இன்றைக்கு நமக்கு பழக்கப்பட்டு விட்டாலும் இதற்கான விதையை தமிழ் சினிமாவில் இட்ட முன்னோடிகளில் ஒருவர் ஆர்.கே.செல்வமணி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆர்.கே.செல்வமணி
சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட செல்வமணி, தானே டிக்கெட் வாங்கி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, தூங்கி மறுநாள் எழுந்திருக்கும் போது அடுத்த திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்காக அவரின் வீட்டின் வாசலில் ராவுத்தர் கம்பெனியில் இருந்து மூன்று வண்டிகள் காத்திருந்தன. தயாரிப்பாளர் ஜீவியிடம் இருந்தும் அழைப்பு வந்திருந்தது. வெற்றி கிடைத்தால் மரியாதை. இதுதான் சினிமா.


from விகடன்

Comments