பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான ஆரி, உதயநிதி ஸ்டாலின் நடித்த `நெஞ்சுக்கு நீதி' படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். படம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
பிக் பாஸுக்கு அப்பறம் 'நெஞ்சுக்கு நீதி' வாய்ப்பு அமைஞ்சது எப்படி?
"பிக் பாஸ் பயணத்துக்குப் பிறகு எதுல இருந்து ஆரம்பிக்கணும்னு கேள்வி இருந்தது. ஏன்னா, வரலாற்று வெற்றின்னு எல்லாம் சொன்னாங்க. இந்தியாவிலேயே அதிகம் ஓட்டு வாங்குனா அஞ்சாவது ஆளுன்னு சொன்னாங்க. அளவுகடந்த அன்பை எல்லாரும் கொடுத்தாங்க. எல்லாருடைய வீட்டுலயும் ஒரு உறவா பார்த்தாங்க. அப்பா, அம்மா இல்லன்னு பீல் பண்ணுனப்போ நாங்க இருக்கோம்னு அணைச்சுக்கிட்டாங்க. இப்படியிருந்த நிலையில் போனி கபூர் டீம்ல இருந்து ராகுல்தான் முதல்ல போன் பண்ணுனார். இந்தியில வெளியான 'ஆர்ட்டிகள் 15' ரீமேக் பண்றோம்னு சொன்னார். இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அப்ப பார்க்கலை. 'சரி ப்ரோ, படம் பார்த்துட்டு வரேன்னு' சொன்னேன். 'இல்ல ப்ரோ, பார்த்துட்டு வேற ஐடியாவுக்கு போயிராதீங்கனு'னார். 'கட்டாயம் படம் பார்த்துட்டு வரேன்னு' சொல்லிட்டு படம் பார்த்தேன்."
அருண்ராஜா காமராஜை மீட் பண்ண மொமன்ட் எப்படியிருந்தது? இந்தி வெர்ஷன்ல இருந்து தமிழில் சில மாற்றங்கள் இருந்ததை எப்படி எடுத்துக்கிட்டீங்க?
"எப்போதும் உதய் சார் மேல பெரிய மரியாதை இருக்கு. ஏன்னா, 'நெடுஞ்சாலை' படத்தை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்தது உதய் சார்தான். அதனால், கண்டிப்பா உதய் சார் படத்துல நடிக்கணும்னு முடிவு செஞ்சிருந்தேன். இந்தியில படம் பார்த்தவுடனே குமரன் கேரக்டர் பண்ணணும்னு தோணிருச்சு. ஏன்னா, குமரன் கதையில சொல்ல வந்த கருத்தும், கொள்கையும் பிடிச்சிருந்தது.
இரண்டாயிரம் வருஷமா இருக்குற பிரச்னையைத் தாங்கி அரசியல்குள்ள மக்கள் எப்படியெல்லாம் சிக்கி தவிக்குறாங்கனு நிதர்சனத்தை வெளிப்படுத்துற கேரக்டர். இதனால, இந்த கேரக்டர் நமக்கு கிடைக்குறப்போ அதை பண்ணிடனும்னு நினைச்சேன். அருண்ராஜா சாரை மீட் பண்ண போகும் போது எந்தவொரு மனநிலையும் இல்லாமதான் போனேன். 'படம் பார்த்தீங்களானு' கேட்டார். ஒரு சின்ன அமைதியிருந்தது. 'உங்க கேரக்டர்ல சில விஷயங்களை மாத்துறோம்னு' சொன்னார். 'ஒரு சீன்னா இருந்தாலும் படத்துல நடிக்குறேன்'ன்னு சொன்னேன். அவருக்கு ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா, குமரன் கேரக்டருக்கு நிறைய ஆர்டிஸ்ட், டைரக்டர்ஸ்கிட்ட பேசியிருந்தாங்க. பலரும் நோ சொல்லியிருந்தாங்க. இதனால, யார் பண்ண போறாங்கனு கேள்வியிருந்தது. என்னை நம்பி குமரன் கேரக்டர் கொடுத்ததுக்கு பெரிய நன்றி சொல்லணும்."
உங்க நடிப்பைப் பார்த்துட்டு உதயநிதி என்ன சொன்னார்?
"படத்துல கொஞ்சம்கூட ஹீரோயிசம் காட்டுறாங்கனு தோணவே இல்ல. ஏன்னா, ஒரு சீன்ல நடிச்சிட்டு அமைதியா இருந்திருவேன். மானிட்டர்கூட பார்க்க மாட்டேன். ஏன்னா, அது என்னோட வேலையில்ல. ரஷ் கட் பார்த்துட்டு என்னோட போர்ஷன் நல்லா வந்திருக்குனு சொன்னாங்க. என்னோட போர்ஷன் நல்லா வந்ததுனால உதய் சார் என்ன சொல்ல போறார்னு அவங்களுக்கு டவுட் இருந்திருக்கு. ஆனா, உதய் சார் எல்லாத்தையும் கூலா எடுத்துக்கிட்டார்.
குமரன் கேரக்டர்ல ஆரி நடிச்சா நல்லாயிருக்கும்னு அவர்தான் டிக் பண்ணியிருக்கார். சோ, உதய் சாருக்கு நன்றி சொல்லணும். ஒரு நல்ல படத்துல எல்லாருடைய நடிப்பும் தனியா தெரியும். அப்படிதான் இதுல எல்லா கேரக்டருக்கும் சரியான ஸ்பேஸ் கொடுத்திருந்தாங்க."
உங்களைத் தேர்ந்தெடுக்கறதுக்கு முன்னாடி யாரெல்லாம் குமரன் கேரக்டருக்கான சாய்ஸா இருந்தாங்க? நீங்க குமரன் பாத்திரத்துக்கு நியாயம் செஞ்சதா ஃபீல் பண்ணீங்களா?
"குமரன் கேரக்டர்ல நடிக்க அருள்நிதிகிட்ட பேசியிருந்தாங்க. பட், அவர் நடிக்கலை. அதே மாதிரி பா.இரஞ்சித் சார்கிட்டயும் கேட்டிருக்காங்க. 'படம் பண்றது போதும். நடிப்புலாம் வேண்டாம்பா'ன்னு சொல்லியிருக்கார்.
படம் பார்த்துட்டு எல்லாரும் நல்ல விமர்சனம் கொடுத்திருந்தாங்க. 'ஆரியோட ரியல் கேரக்டர்தான் குமரன்'னு சொல்லியிருந்தாங்க. ஹீரோவா படங்கள் பண்ணிட்டு வந்தப்போ இதுல நடிச்சதுக்குக் காரணம் இருக்கு. ஏன்னா, குமரன் கேரக்டர் 'நான் பண்ணலனா யார் பண்ணுவா'ன்னு நானே எனக்குள்ள கேட்டுக்கிட்டேன். சமூகம் சார்ந்து வேலை செய்யுறோம். இதுல, ஏன் 'நோ' சொல்லணும்னு தோணுச்சு.
படத்தோட டப்பிங் போதும் அருண்ராஜா பக்கத்துல நின்னுட்டு எப்படி வாய்ஸ் மாடுலேஷன் இருக்கணும்னு சொல்லி கொடுத்துட்டே இருந்தார். மத்தப் படங்கள்ல பேசுன வாய்ஸூக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசமிருக்கும். ரொம்ப பேஸ் வாய்ஸ்ல பேசினேன்."
ஒரு நடிகனா இத்தனை வருடப் பயணத்துல நீங்க தவறவிட்ட வாய்ப்புகளை யோசிச்சுப் பார்த்து ஃபீல் பண்ணது உண்டா?
"சினிமால நிறைய படங்களைத் தவற விட்டிருக்கேன். ஆனா, இந்த குமரன் கேரக்டரைத் தவற விடமாயிருந்தது சந்தோஷம். சொல்லபோனா, 'தென்மேற்கு பருவகாற்று' நான் நடிக்க வேண்டிய படம். அதை மிஸ் பண்ணதுக்கு ஃபீல் பண்ணதே இல்ல. ஏன்னா, அதனாலதான் விஜய் சேதுபதி தமிழுக்குக் கிடைச்சார். நிறைய தோல்விகள் மற்றும் அவமானங்கள் தாண்டிதான் இப்போ இந்த இடத்துக்கு வந்திருக்கேன். சுயம்பா தனியா நின்னு கத்துக்கிட்ட பாடம் அதிகம்."
from விகடன்
Comments