"உண்மைக்குப் பல கோணங்கள் உண்டு..." - இயக்குநர் அகிரா குரோசவா வாழ்க்கை சொல்லும் பாடங்கள்!

குழ​ந்தைகளின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுங்கள்

அகிரா குரோசவா சிறுவயதில் கொஞ்சம் மந்தமாகவே இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் அப்பா அவரை ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடச் செய்தார். அதுமட்டுமல்ல அவர் ராணுவத்தில் பணியாற்றியவர். அப்போதெல்லாம் படித்தவர்கள் திரைப்படங்களைப் பார்ப்பது என்பது கொஞ்சம் கௌரவக் குறைச்சலாகக் கருதப்பட்டது. எனினும் தன் மகன் திரைப்படங்களை ஆர்வமாகப் பார்ப்பதை ஊக்குவித்தார் அவர் அப்பா. குடும்பத்தோடு அடிக்கடி திரையரங்குகளுக்குச் சென்றார். பல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அப்போது கிடைத்ததுகூட அகிரா குரோசவா பின்னாளில் பெரும் இயக்குநராக உருவானதற்கு வழிவகுத்தது.

அகிரா குரோசவா

உங்களைப் பற்றிய ‘உண்மைகளை’ ஒத்துக் கொள்ளுங்கள்

அவரவரும் தன்னுடைய தன்னைப்பற்றிய உண்மையை வெளிப்படுத்தினால், அதற்குரிய தைரியத்தை அவர்கள் வளர்த்துக் கொண்டால் உலகம் மேலும் சிறப்பானதாக இருக்கும் என்பது அகிரா குரோசவாவின் கருத்து. தன் வாழ்வில் தானும் தன்னைக் குறித்த மிகப்பெரும்பாலான உண்மைகளை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் கூறியதுண்டு.

உண்மைக்குப் பல கோணங்கள் உண்டு

ஒரே நிகழ்வைப் பற்றிப் பலருக்கும் பலவிதமான கோணங்களும் கருத்துகளும் இருக்கும். அதுமட்டுமல்ல, தனது கருத்துக்கு ஏற்ப அந்த நிகழ்வையே மிகவும் வித்தியாசமானதாகவும் மனிதர்கள் புரிந்து கொள்ள முடியும் என்பது அவரின் கருத்து. இதைத் தனது பிரபல 'ராஷோமொன்' திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார். புத்தத் துறவி ஒருவர் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மூவர் ஆளுக்கு ஒரு விதமாக விவரிப்பார்கள். அவர்கள் பொய் கூறவில்லை என்றாலும் அவர்களது கண்ணோட்டம் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு மிகமிக மாறுபட்டதாக இருக்கும்.

அனுபவங்களே மிகச் சிறந்த ஆசிரியர்

தன் திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களைக் கதை நிகழ்வு நடக்கும் சூழலில் நிஜமாகவே கொஞ்சகாலம் இருக்க வைப்பது அகிரா குரோசவாவின் வழக்கம். 'தி மோஸ்ட் பியூட்டிஃபுல்' என்ற அவரது திரைப்படம் அந்தக் காலத்தில் வாழ்ந்த தொழிற்சாலையில் பணிபுரியும் சில பெண் ஊழியர்கள் பற்றியது. அதில் நடித்த நடிகைகள் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களை சில நாள்கள் தொழிற்சாலையில் தங்க வைத்தார் அகிரா குரோசவா. அங்கு வழங்கப்படும் உணவைத்தான் அவர்கள் உண்ண வேண்டும். அந்த நாள்களில் ஒருவரை ஒருவர் அவரது கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தினார். (அதில் நடித்த யோகோ யகுசி என்ற நடிகை, தொழிற்சாலை அனுபவத்தின் காரணமாக, திரைப்பட ஊழியர்களின் தேவைகள் குறித்து அடிக்கடி அகிரா குரோசவாவுடன் விவாதிக்க, இதனால் இருவருக்குமிடையே நிறைய உரசல்கள் ஏற்பட்டன. என்றாலும் ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்!)

அகிரா குரோசவா

அறிவுத் தாகத்தை அணைய விடாதீர்கள்

1990-ல் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அதற்கான உரையில் அவர் பேசிய இரு வாக்கியங்கள் பலரையும் கவர்ந்தன. "இந்த விருது எனக்கு கொஞ்சம் கவலையைத் தருகிறது. ஏனென்றால் நான் இன்னமும் சினிமாவைப் புரிந்து கொண்டதாக நினைக்கவில்லை" என்றார்.



from விகடன்

Comments