பாலகுமாரன் எழுதிய நாவலின் தலைப்பை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் சட்டப்படி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது,
"அப்பா பாலகுமாரன் எழுதிய 'பயணிகள் கவனிக்கவும்' என்கிற நாவல் மிகவும் புகழ்பெற்ற நாவல் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 1993 வருடம் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்து, அன்று முதல் இன்று வரை 10க்கு மேற்பட்ட பதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிற ஒரு உன்னதமான படைப்பு.
சில நாள்களுக்கு முன்பு அதே பெயரில் ஒரு திரைப்படத்தின் பெயர் போஸ்டராக வெளிவந்ததைக் கண்டு நானும் எங்களது குடும்பத்தாரும் கவலைக்குள்ளானோம். இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குநரோ, மக்கள் தொடர்பாளரோ எங்களிடம் இதைப் பற்றி தெரிவிக்கவோ, அனுமதி கேட்கவோ இல்லை" எனத் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இது தொடர்பாக சூர்யா பாலகுமாரனை தொடர்பு கொண்டு பேசினோம். "இன்றைக்கு காலையில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திராவும் இயக்குநர் S.P.சக்திவேல் அவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்து தாங்கள் அறியாமல் செய்துவிட்டதாகச் சொல்லி தன்னிலை விளக்கம் கொடுத்தனர். தலைப்புக்கு அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு தெரிவித்து கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அம்மாவிடமும் பேசினார்கள். நாங்கள் சமாதானமாக சென்றுவிட்டோம். நானும் சினிமா துறையில்தான் இருக்கிறேன். ஒரு படம் பண்ணுவதில் உள்ள வலி எனக்கும் தெரியும். படம் கொஞ்ச நாள்களில் வெளியாக இருக்கிறது. அதனால் நாங்கள் இந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடித்து கொண்டோம். பணத்தை அப்பா பாலகுமாரன் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. அதனால் நாங்களும் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.
'Vikrithi' என்கிற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாக்கி இருக்கும் படம் 'பயணிகள் கவனிக்கவும்' இந்தப் படத்தை S.P.சக்திவேல் இயக்கியுள்ளார். விதார்த், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க Aha ஓடிடி தளத்தில் ஏப்ரல் 29-ல் படம் வெளியாக இருந்த நிலையில்தான் இந்தச் சர்ச்சை ஏற்பட்டது.
from விகடன்
Comments