“42 ஆண்டுகளை சினிமாவில் தொலைச்சுட்டேன்” - Life of Assistant Director |Video

ஹரிஹரனுக்கு இப்போது வயது 63. சினிமாவில் இயக்குநராகும் லட்சியத்தோடு திருச்சியிலிருந்து வந்து 43 வருடங்களாகின்றன. வடபழனி, சாலிகிராமச் சாலைகள் தேயத்தேய நடந்து பார்த்துவிட்டார். இதுவரை இயக்குநராகும் கனவு சாத்தியமாகவில்லை. ஆனாலும் சோர்ந்துபோகவில்லை. தன் படத்தின் பெயரை சூட்கேஸில் ஒட்டிக்கொண்டு தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்.

ஹரிஹரன்

‘‘மொத்த வாழ்க்கையையும் சினிமாவுக்குள்ள தொலைச்சுட்டேன். இனிமே அதை எப்படி வெளியில தேடுறது? ஒரு பேய்க்கதை ரெடி பண்ணியிருக்கேன். படத்துப் பேரு, ‘தினசரி 3 காட்சிகள்.’ எப்படியும் ஒரு மாசத்துக்குள்ள படம் ஸ்டார்ட் ஆயிடும். வேலைகள் தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு...’’ - விழிகள் மின்னச் சொல்கிறார் ஹரிஹரன். இந்த வயதிலும் தளராது உழைப்பதற்கு அந்த நம்பிக்கைதான் உரமாக இருக்கிறது.

ஹரிஹரனின் அப்பா திருச்சியில் உணவகம் வைத்திருந்தார். தொழில் நொடித்து குடும்பம் நிலைகுலைந்து நின்ற சூழலில், எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு திருச்சி முருகன் டாக்கீஸில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் ஹரிகரன்.

ஹரிஹரன்

‘‘அந்த தியேட்டர்தான் சினிமா ஆசையைப் பத்த வச்சது. ‘இன்று இப்படம் கடைசி', ‘விரைவில் வருகிறது'ன்னு போர்டுகள் எழுதுவேன். ஆபரேட்டர் இல்லாத நேரத்துல படம் ஓட்டுவேன். என் மனசெல்லாம், பாலசந்தர் மாதிரி ஒரு டைரக்டராகணும்னுதான் இருந்துச்சு. ஒரு லாரியில ஏறி சென்னை வந்து இறங்கிட்டேன். பத்துப்பைசா கையில இல்லை. அப்போ வடபழனி ஆரம்பிச்சு சாலிகிராமம் வரைக்கும் நூத்துக்கணக்குல படக் கம்பெனிகள் இருக்கும். பெரும்பாலும் உப்புமா கம்பெனிகள். கொஞ்ச நாள் ஷூட்டிங் நடக்கும். ஏதோ ஒரு தேவை தீர்ந்ததும் மூடிட்டுப் போயிருவாங்க. அப்படி அஞ்சாறு படங்கள்ல வேலை பாத்தேன்.

ஒரு கட்டத்துல, இப்படியே டீ வாங்கிக்குடுத்துக்கிட்டிருந்தா வாழ்க்கை வீணாப்போயிரும்னு தோணுச்சு. அப்போ ‘உணர்ச்சிகள்' படம் வந்து பெரிசா போய்க்கிட்டிருந்துச்சு. அந்தப் படத்தை 15 முறைக்கு மேல பாத்தேன். நேரா டைரக்டர் ஆர்.சி.சக்தியைப் போய்ப் பாத்து ‘உதவி இயக்குநரா சேத்துக் கோங்க’ன்னு நின்னேன். ‘யார்கிட்டயும் வேலை செஞ்சிருக்கியா'ன்னு கேட்டார். ‘இல்லை'ன்னேன். ‘வேலை தெரியுமா'ன்னு கேட்டார். ‘தெரியாது'ன்னேன். ‘அப்பறம் எதுக்குடா இங்கே வந்தே’ன்னார்.

ஹரிஹரன் குடும்பம்

படம் பார்த்த 15 டிக்கெட்டையும் அவர் முன்னாடி எடுத்து வச்சேன். சிரிச்சுக்கிட்டே ‘படத்தோட கதையைச் சொல்லுடா'ன்னார். கடகடன்னு சொன்னேன். ‘சரி, நாளைக்கே பெட்டி, படுக்கையை எடுத்துக்கிட்டு வந்திடு'ன்னு சொல்லிட்டார். தாலிதானம், மனக்கணக்கு, தர்மயுத்தம், சிறை, கூட்டுப்புழுக்கள்னு அதுக்குப்பிறகு அவர் எடுத்த எல்லாப் படங்களிலும் வேலை செஞ்சேன். ‘வசன உதவி - ஹரி'ன்னு டைட்டில் போடுவார்...’ மீண்டுமொரு டீயும், பீடியும் ஹரியின் கைகளில் புகைகின்றன.சக்தி சார் இருக்கிறவரைக்கும் தனியா படம் பண்ணணும்னே தோணலே. அவர் இறந்தபிறகு புரொட்யூசர் தேட ஆரம்பிச்சேன். அன்பாலயா பிரபாகரன், அர்ஜுன்கிட்ட கதை சொல்லச்சொன்னார். அர்ஜுன் ஆறுமாதத்துக்கு மேல அலையவிட்டார். திடீர்னு ஒருநாள் போன் பண்ணி ‘வந்து கதை சொல்லு'ன்னு சொன்னார். எனக்கு பயங்கர கோபம். போய் டீ, பிஸ்கெட்டல்லாம் சாப்பிட்டு, ‘இன்னைக்குக் கதை சொல்ற மூடு இல்லே'ன்னுட்டு வந்துட்டேன். அதேமாதிரி ‘கொரில்லா'ன்னு ஒரு கதை ரெடி பண்ணிக்கிட்டு பிரபுதேவாகிட்ட கதை சொல்லப் போனேன். ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு பல் விளக்கிக்கிட்டே ‘கதையைச் சொல்லுங்க'ன்னார். அந்த அலட்சியம் எனக்குப் பிடிக்கலே. ‘இன்னொரு நாள் வந்து சொல்றேன்'னுட்டு வந்துட்டேன். தன்மானத்தை விட்டுட்டு அவங்க ரெண்டு பேருக்கும் கதையைச் சொல்லியிருந்தா இன்னைக்கு வெற்றிகரமான ஒரு இயக்குநராக்கூட இருந்திருக்கலாம். ஆனா அதுக்காக நான் வருத்தப்படலே...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஹரி.

மதியப் பொழுதுகளில் கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள சிமென்ட் இருக்கையைக் கடப்பவர்கள், அருகில் சிறு பெட்டியை வைத்துக்கொண்டு தாடியும் மீசையுமாக அமர்ந்து ஆழ்ந்து புகைத்துக்கொண்டிருக்கும் ஹரியைப் பார்க்கலாம். பாக்கெட்டில் அடுத்த வேளைக்கான அம்மா உணவக தயிர்சாதத்துக்கு 3 ரூபாய் வைத்திருந்தால் அவரது முகம் மலர்ந்திருக்கும். இல்லாவிட்டால் இறுகிப்போய் அமர்ந்திருப்பார்.

ஹரிஹரன்

‘‘பாவம் பிள்ளைங்க. அதுங்க உழைப்புல உக்காந்து திங்க மனசு கூசுது. கன்னிலெட்சுமி கம்பை ஊனி நடந்து நடந்து முதுகு வலியால தவிக்கிறா. அவளுக்கு ஒரு வண்டி வாங்கித்தரக்கூட வழியில்லாத நிலையில இருக்கேன். செக்யூரிட்டி வேலைக்காவது போய்யான்னு திட்டுறா. நீ செத்துட்டாக்கூட பரவால்லேங்கிறான் பையன். மனசு துடிக்குது. 43 வருஷம் இதுக்குள்ள போராடிட்டேன். தோத்துட்டேன்னு போய் இன்னொரு வேலையில இறங்க மனசு இடம் கொடுக்கலே. இன்னும் ஆறு மாசம். இதுவரைக்கும் பட்ட அவமானங்களுக்கெல்லாம் பதில் சொல்வேன். என் பொண்டாட்டி புள்ளைகளை சந்தோஷமா கூட்டிப்போய் தியேட்டர்ல உக்கார வைப்பேன்...’’ என்கிற ஹரிகரனின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் வீடியோ இது... பாருங்கள்... கருத்துகளை பகிருங்கள்.



from விகடன்

Comments