ஆர்யன் கான்: KKR அணி நிர்வாகம்; படத்தயாரிப்பு மகனைத் தயார்செய்யும் அப்பா ஷாருக் கான்!

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் வரை சிறையில் இருந்தார். ஆர்யன் கான் சிறைக்குச் சென்றதில் ஷாரூக் கானின் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சமயத்தில் நவராத்திரி, பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகள் ஷாரூக் கானின் வீட்டில் கெண்டாடப்படவில்லை. ஷாருக் கான் படப்பிடிப்புக்குச் செல்லாமலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தும் வந்தார். சிறையிலிருந்து திரும்பிய ஆர்யன் கானுக்கு ஷாருக் கான் தியானம் உள்ளிட்டவை மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். ஆர்யன் கான் தற்போது அந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு சகஜ நிலைக்குத் திரும்பி இருக்கிறார். ஷாருக் கானும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டும் இப்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஆர்யன் கானும் வீட்டில் இருந்தால் சரியாக இருக்காது எனக் கருதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகத்தை ஆர்யன் கானிடம் ஷாருக்கான் ஒப்படைத்து இருக்கிறார்.

போட்டியில் ஆர்யன் கான்

இதனால் வீரர்கள் தேர்வு உட்பட அனைத்திலும் ஆர்யன் கானே முன்னின்று செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னையுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதி வெற்றி பெற்றது. வழக்கமாக கொல்கத்தா அணி பங்கேற்கும் போட்டிகளில் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் பங்கேற்பது வழக்கம். ஆனால் இம்முறை ஷாருக் கான் பதான் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார். ஏற்கனவே படம் தொடங்கி அதிக நாட்களாக முடிக்கப்படாமல் இருப்பதால் அதனை முடித்து ஜனவரி மாதம் வெளியிடவேண்டும் என்பதில் ஷாருக்கான் தீவிரமாக இருக்கிறார்.

இதனால் படத்தின் நாயகி தீபிகா படுகோனேயுடன் ஷாருக்கான் வெளிநாட்டு படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். எனவேதான் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கூட ஷாருக் கானால் கலந்து கொள்ள முடியவில்லை. அதில் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும் அவரது சகோதரியும் கலந்துகொண்டனர். அதோடு அணியின் பங்குதாரர் ஜுஹி சாவ்லாவின் மகளும் வீரர்கள் ஏலத்தில் கலந்து கொண்டார். தற்போது போட்டியிலும் ஷாருக் கானால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே அந்த இடத்தை ஆர்யன் கான் பூர்த்தி செய்துள்ளார்.

ஆர்யன் கான் - ஷாருக் கான்

ஆர்யன் கான் தனது நண்பர்களுடன் போட்டியைக் காண வந்திருந்தார். ஆர்யன் கானுடன் அவரது சகோதரி சுஹானா கானும் பங்கேற்றார். இதனால் கொல்கத்தா அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். கடந்த ஆண்டில் இருந்தே ஆர்யன் கான் ஐபிஎல் அணி ஏலத்தில் கலந்துகொண்டு வருகிறார். ஐபிஎல் அணியை நடத்துவது மற்றும் திரைப்படங்களை தயாரிப்பது போன்ற பபணிகளில் ஆர்யன் கான் கவனம் செலுத்த இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்காவில் படித்த ஆர்யன் கான் நடிப்பில் ஆர்வமில்லை. இதனால், ஐபிஎல் அணி நிர்வாகம் மற்றும் படத்தயாரிப்பு கம்பெனியை நிர்வகிப்பது போன்ற வேலைகளை ஆர்யன் கானிடம் கொடுக்க முடிவுசெய்திருக்கிறாராம் ஷாருக் கான். விரைவில் ஆர்யன் கான் பெயரில் படங்கள் தயாரிக்கப்படலாம் என்கின்றனர்.



from விகடன்

Comments