பாலிவுட் சினிமாவின் ஆல்-ரவுண்டர் கரண் ஜோகரின் பெயர் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சர்ச்சையில் அடிபடுவது வழக்கம். இந்த முறை நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகக் காரணம் அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு விளம்பரம். மேட்ரிமோனியல் வலைத்தளத்துக்கான விளம்பரம் அது. சாதாரணமான மேட்ரிமோனியல் தளமாக இல்லாமல், கரண் விளம்பரப்படுத்துவது IIT,IIM போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக மேட்ரிமோனியல் வலைதளம். “உண்மையாகவா? இது ஜோக் இல்லையென்றால் ஒரு மோசமான விஷயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்” என ஒரு பதிவர் கமென்ட் செய்துள்ளார்.
கரண் அந்த பதிவின் கேப்ஷனில், “எது போலவும் இல்லாத ஒரு மேட்ரிமோனியல் தளம்- உண்மையான காதல் வாழ்க்கையில் இடம்பெறுவதைக் காண நான் ஆர்வமாக இருக்கிறேன், டாப் 10-15 கல்லூரிகளின் முன்னாள் மாணவர்களுக்காக… எந்த துறையைச் சேர்ந்தவராக இருப்பினும் இங்கு பதிவு செய்து உங்கள் இணையைத் தேர்ந்தெடுங்கள்” எனப் பகிர்ந்துள்ளார்.
‘இது சுத்த மேட்டிமைத்தனம்’ என ஒரு பதிவர் கமென்ட் செய்திருக்கிறார். தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியுடன் இவரை ஒப்பிட்டு “ராஜமௌலி RRR படம் எடுக்கிறார், இன்னொரு புறம் பார்த்தால் இந்த ஜோக்கர் ஒரு மோசமான தளத்துக்கு ஒப்புகொடுத்து கொண்டிருக்கிறார்" என்பது போலான விமர்சனங்கள் அவரது பதிவுக்கு வந்த வண்ணம் உள்ளன. iitiimshaadi.com என்று பெயரிடப்பட்டுள்ள மேட்ரிமோனியல் தளத்திற்கு paid partnership-ல் கரண் இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். கரண் ஜோகர் மார்ச் 28 ராஜமௌலியின் RRR படம் குறித்து பாராட்டிப் பதிவிட்டிருந்தார். அதற்கு ராஜமௌலியும் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from விகடன்
Comments