தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு நடைபெறும் கண்காட்சியில் பங்குகொண்டு அதன் மூலமாக அந்நிய முதலீடுகளை ஈர்க்கவே அவர் அங்கே பயணப்பட்டிருக்கிறார். அரசு முறை சந்திப்பாக அங்கிருக்கும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் உரையாடினார்.
இதைத் தொடர்ந்து எக்ஸ்போவில் தமிழ்நாட்டு அரங்கைத் திறந்துவைக்க வந்த முதல்வர் ஸ்டாலினைத் தனிப்பட்ட முறையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்தார். அங்கே ரஹ்மான் கட்டியிருக்கும் புது ஸ்டூடியோவிற்கு வந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் அவரது ஸ்டூடியோவிற்கு விஜயம் செய்தார். அவரோடு மனைவி துர்கா ஸ்டாலினும், உதயநிதியும் சென்றார்கள்.
அங்கே சென்ற முதல்வருக்கு ஸ்டூடியோ முழுவதையும் சுற்றிக் காண்பித்தார் ரஹ்மான். பிறகு 20 நிமிடங்களுக்கு மேல் தமிழ் இசை குறித்தும், ஒரு இசை பண்பாட்டு விழாவைத் தமிழகத்தில் நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் இருவரும் பேசிக்கொண்டார்கள். பின்பு கவிஞர் தாமரை எழுதி, தான் இசையமைத்த 'மூப்பில்லா தமிழே தாயே' என்று தொடங்கும் பாடல் ஆல்பத்தை ஸ்டாலினுக்குப் போட்டுக் காட்டினார் ரஹ்மான். பாடலை ரசித்துக் கேட்ட முதல்வர், அதற்குப் பிறகு அன்போடு விடைபெற்றுக்கொண்டார்.
"உங்களின் மிக பிஸியான நேரத்தில் எங்கள் ஸ்டூடியோவிற்கு வந்ததற்கு மிகவும் நன்றி. இது எனக்குச் சந்தோஷமான நிகழ்வு" என்று ரஹ்மான் சொல்ல "எனக்கும் அப்படியே!" என்று வாழ்த்தி விடைபெற்றார் முதல்வர். இதற்கு முன்னால் ரஹ்மானின் துபாய் ஸ்டூடியோவுக்கு இளையராஜாவும் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from விகடன்
Comments