மிஷ்கின் Exclusive: "வியாபார நோக்கில் படம் எடுப்பது ஒரு அடி பள்ளத்தைத் தாண்டுவது போல எளிதானது!"

தண்ணீர் பழத்தைத் திருடும் போலீஸ், நாயகனைக் காப்பாற்றும் நல்ல பிசாசு, முகத்தையே காட்டாத மொட்டை வில்லன்கள், மன்னித்து விடப்படும் சைக்கோ என முன்னெப்போதும் தமிழ் சினிமா பார்த்திராத களங்களை கையாண்டு வருபவர் இயக்குநர் மிஷ்கின்.

உலக இலக்கியங்களையும், உலக சினிமாக்களையும் உற்று கவனிக்கும் அவர், தமிழில் வெளிவரும் நல்ல படங்களையும் அதன் இயக்குநர்களையும் கொண்டாடி தீர்க்க தவறுவது இல்லை. அந்த வகையில், அண்மையில் வெளிவந்த 'கடைசி விவசாயி' திரைப்படத்தைப் பார்த்த மிஷ்கின் கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்களில் மிகச் சிறந்த படம் என வீடியோ பதிவிட்டிருந்தார்.

மிஷ்கின்

அதோடு நிறுத்திக் கொள்ளாமல் 'கடைசி விவசாயி' திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று அவரை வாழ்த்தினார். இதையடுத்து தேனி மாவட்டம் போடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்ந்த வந்த அவரிடம் பேசினோம்.

'கடைசி விவசாயி' போன்று கிராமப்புறங்களை கதைக்களமாக கொண்ட படங்களை இயக்கும் திட்டம் உண்டா?

"எல்லோரும் கிராமப்புறங்களில் இருந்துதான் நகர்புறங்களுக்கு வந்துள்ளனர். நாம் எல்லோரும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான். கிராம படமா, நகரப் படமா எனப் பார்க்க வேண்டியதில்லை. படத்தில் உள்ள கருத்து, கதை என்ன என்பதையே பார்க்க வேண்டும். மோசமான படங்கள் வரக் கூடிய இந்தக் காலகட்டத்தில் அமைதியாக 80 வயது கிழவனைப் பற்றி மிக எளிமையாக எல்லோர் மனதையும் தொடும்படி எடுத்துள்ளார் இயக்குநர் மணிகண்டன். அவரை ஆழ்மனதில் இருந்த பாராட்டியாக வேண்டும். ஒரு 10 இயக்குநர்கள் சேர்ந்தால் தமிழ் சினிமாவை மாற்றிவிட முடியும் என்ற எண்ணம் உள்ளது. வியாபார நோக்கமின்றி அத்தி பூத்தார் போல வரும் படங்களை கொண்டாடியே தீர வேண்டும். அந்த வகையில் மணிகண்டன், வெற்றிமாறன், ராம், பாலாஜி சக்திவேல், பூ சசி, பா.இரஞ்சித், அவர் பின்னே வரும் இயக்குநர்கள் எனப் பலரும் சேர்ந்து சினிமாவை வேறு தளத்துக்குக் கொண்டு செல்வார்கள்."

மிஷ்கின்

எளிமையான படம் எடுக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து படம் இயக்குவது இல்லையே?

"நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் மிகவும் எளிமையானவராக இருந்ததால் மட்டுமே காந்தி உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அதுபோல எளிமையாக படம் எடுப்பதும் மிகவும் கஷ்டம். எளிமையாக படம் எடுக்கக் கூடிய பாலாஜி சக்திவேல், லெனின் பாரதி போன்றவர்களும், எளிமையான படமாக 'நந்தலாலா' எடுத்த நானும் பெரும் கஷ்டங்களைக் கடந்துவிட்டோம். இதனால் பெரும் மலையை கடக்கக் கூடிய சக்தி கிடைத்துவிடும். வியாபார நோக்கில் படம் எடுப்பது ஒரு அடி பள்ளத்தைத் தாண்டுவது போல மிகவும் எளிதானது. மக்களின் மனதை மேம்படுத்துவற்காக எடுக்கப்பட்ட படம் 'கடைசி விவசாயி'. இப்படியான படங்களைத்தான் எடுக்க வேண்டும் என்ற திடத்தோடு இயக்குநர்கள் இருக்க வேண்டும். ஒரு படம் மனிதனை சிந்திக்க வைக்க வேண்டும், சிரிக்க, சந்தோஷப்பட வைக்க வேண்டும்."

மிஷ்கின் பார்வையில் பிரமாண்டமான படங்கள் என்றால் என்ன?

"கொஞ்சம் பெய்தாலும் மழைதான், அதிகமாக பெய்தாலும் மழைதான். பிரமாண்டமான மழை எனக் கூறமுடியாது. அதுபோல பிரமாண்டமான படம் என்பதே இல்லை. ஷங்கர், மணிரத்னம் அதிக பொருட்செலவில் படம் எடுத்தால் அது பிரமாண்டம் ஆகிவிடாது. எந்தப் படமாக இருந்தால் அதில் நல்ல கரு இருக்க வேண்டும். பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பொழுதையே போக்க முடியாமல் சிந்திக்க, நேசிக்க வைக்கிற படமாக இருக்க வேண்டும்."

மிஷ்கின்

தேர்ந்த வாசிப்பாளரான உங்களுக்கு நாவல், சிறுகதைகளைப் படமாக்கும் திட்டம் உண்டா?

"சினிமா வேற மீடியம். நாவல், சிறுகதை வேற மீடியம். திரைக்கதை எழுதி தான் சினிமா எடுக்கமுடியும். எனக்குள் நிறைய கேள்விகள் உள்ளன. அதைத்தான் திரைக்கதையாக மாற்றி சினிமா எடுக்கிறேன். என்னுடைய கேள்விகளைத் தழுவிக் கொள்கிறேன். எனக்குள் நிறைய கதைகள் உள்ளன. என்னுள் 40, 50 கேள்விகள் உள்ளன. அந்தக் கேள்விகளுக்கு விடையாக படங்களை எடுத்துமுடித்துவிட்டு, நாவல்களில் இருந்து படங்களை உருவாக்க முயல்வேன். ஆனால், தினமும் 4 மணி வாசித்துக் கொண்டேதான் இருக்கிறேன்."

என்னென்ன நாவல்களைப் படமாக்க விரும்புகிறீர்கள்?

"உயிர்தெழுதல், கரமசோவ் சகோதரர்கள், இடியட் இப்படிப் பல நாவல்கள் உள்ளன. ஏற்கெனவே இந்த நாவல்களில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் என் படங்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. முழுக்க முழுக்க நாவலைத் தழுவி தற்போது எடுக்கும் எண்ணம் இல்லை."

மிஷ்கின்

மிஷ்கின் படங்களில் அரசியலை எதிர்பார்க்கலாமா?

"தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியலை கதையாக்கி படமெடுத்தால் அதோடு முடிந்துவிடும். நான் எடுக்கும் படங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடியவை. என்னுடைய முப்பாட்டன் முதல் கொள்ளுப்பேரன் வரை இருக்கக்கூடிய அரசியலை பேச விரும்புகிறேன். மனித மனங்களில் நடக்கும் பிரச்னைகளை பேசுவேன். என்னுடைய படங்கள் மிகுந்த சமூக பார்வை கொண்ட படங்களாகும். ஆன்மாவின் ஆழத்தில் சென்று அதன் மையப்புள்ளியைத் தொடும். நான் அதிகமாக சமூகத்தை நேசிக்கிறேன். அதனால்தான் 'பிசாசு' கூட தேவதையாகிறாள்."



from விகடன்

Comments