சினிமா, அரசியல் என்று தான் நுழைந்த அத்தனை துறைகளிலும் தடம் பதித்த ஜெயலலிதாவின் தடாலடியான பர்சனல் வாழ்க்கையும் பரபரப்பானதே. முன்னாள் நடிகை சிமி, கரன் தாப்பர் என்று சிலருக்கு அரிதாக ஜெயலலிதா கொடுத்த பேட்டிகளில் பலரும் அறியாத அபூர்வ தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
* என் வாழ்க்கையில் நிபந்தனையற்ற அன்பைக் கண்டதில்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை. புத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில் மட்டுமே அது இருக்கிறது. உண்மையில் அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்திக்கவில்லை.
* திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு நான் யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், திருமண எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம்பெண்களையும் போல, நானும் எனக்கான இளவரசர் எப்போது வருவார் என்று கனவு கண்டிருக்கிறேன். என் 18 வயதில் அம்மா எனக்குத் திருமணம் செய்து வைத்திருந்தால், நான் மிக மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையில் பொருந்தியிருப்பேன். வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன். ஆனால், நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!
* எப்போது பார்த்தாலும், மிக சாந்தமாக, அமைதியாக நான் இருக்கக் காரணம், என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன். அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழப்பதில்லை. அழுததில்லை. என் உணர்வுகளை பிறருக்கு காட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனக்கு மன உறுதி அதிகம். சுய கட்டுப்பாடும் அதிகம்.
* அரசியல் என்னை நிச்சயமாக வலிமை வாய்ந்தவராக மாற்றி இருக்கிறது. என் இளம்வயதில் இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப் பெண் போல இல்லை நான். அதிக கூச்சமுடைய, அந்நியர்களை சந்திக்க விரும்பாத, மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான். என் இளமைக்காலம் முழுக்க, மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவதை வெறுத்திருக்கிறேன்.
* அரசியலுக்கு வந்ததிலிருந்து நான் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன். ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதில் எல்லோரும் எல்லா நேரங்களிலும் விதவிதமான பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் இயல்பாக இருக்கிறேன். எல்லா அரசியல்வாதிகளையும் போன்றவள் அல்ல நான். இங்கு அரசியல் என்ற விளையாட்டு, கணிசமான நடிப்பை எதிர்பார்க்கிறது. சினிமாவில் கேமராக்களுக்கு முன்பாக நான் நிறைய நடித்திருக்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் எனக்கு நடிக்கத் தெரியாது.
* ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை கணிசமான அளவு வெற்றிகளாலும் பல தோல்விகளாலும் நிரம்பியது. யாரும் எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது; எப்போதும் தோற்றுக்கொண்டே இருப்பவர்களும் யாருமில்லை. என் அரசியல் வாழ்க்கை மிகத் துணிச்சலான பயணம். எந்த சினிமா திரைக்கதையை விடவும் அதிக திருப்பங்களும் போராட்டங்களும் நிறைந்தது. எதிர்பார்க்காத ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்போது நான் ஆத்திரமடைந்திருக்கிறேன். ஆனால், அதை வெளியில் காட்டியதில்லை. நீங்கள் ஒரு தலைவராக இருக்கும்போது உங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வீர்கள்.
* நான் எப்போதும் தனிமையை விரும்புகிறவள். புத்தகங்கள் படிப்பதுதான் என் முதல் விருப்பம். சிறுமியாக இருந்தபோது, என் பிறந்த நாளில் அம்மாவோ, அத்தையோ ‘கேக்’ வாங்கிக் கொடுத்தால் திருப்தி வராது. புத்தகங்கள் பரிசளித்தால்தான் மகிழ்ச்சி. அப்போதெல்லாம் மகிழ்ச்சிக்காக புத்தகம் படித்தேன். வளர்ந்தபிறகு, அர்த்தமுள்ள புத்தகங்கள் படிக்கிறேன். எது தேவையோ, அதைப் படிக்கிறேன்.
* என் ஆறு வயதிலிருந்து பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தேன். அம்மாவைப் பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்தது. அம்மாவுக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன். என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், மிகக் குறைவான காலங்களையே அம்மாவுடன் கழித்திருக்கிறேன். யோசித்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து நான் அனுபவிக்கவே இல்லை.
* எனது அம்மா ஒரு நடிகை என்பதற்காக, பள்ளியில் என்னுடன் படித்த மேல்தட்டுக் குடும்ப பெண்கள் சிலர் என்னைக் கிண்டல் செய்வார்கள். அப்போதெல்லாம் நான் உடைந்துபோய் அழுததுண்டு. இப்போது அப்படி இல்லை. என்னை கிண்டல் செய்பவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கக் கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் கிண்டல் செய்தததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.
* பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவியாக நான் இருந்தேன். 'பெஸ்ட் ஸ்டூடன்ட்' என்று பட்டம் வாங்கியிருக்கிறேன். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வது அதைத்தான்.
* என் சினிமா வாழ்க்கையில் நான் தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகையாக இருந்திருக்கிறேன். நடிப்பு பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் சிறந்து விளங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். டான்ஸிலும் சரி, சினிமாவிலும் சரி, பிடிக்காவிட்டாலும் கடுமையாக உழைத்தேன்.
* நடிப்பு எனக்கு இயற்கையாகவே வந்தது. நான் ஒரு பிறவி நடிகை என்றுதான் சொல்லவேண்டும். யாரையும் பிரதி எடுத்து நடிக்க முயன்றதே இல்லை. அதேபோல் அரசியல் எனக்குப் பிடிக்காவிட்டாலும், நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். சேலஞ்ச் என்று எடுத்துக்கொண்டால், எதிலும் உற்சாகமாக ஈடுபட முடியும். என்னைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
* என் 23 வயதில் அம்மாவை இழந்தேன். அம்மாதான் என் உலகம். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித் தரவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, வருமான வரி பற்றியோ, ஏன்... என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, எனக்கு எதுவுமே தெரியாது. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட தெரியாது. அறியாக் குழந்தை ஒன்றை கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்டதைப் போல உணர்ந்தேன். வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவிப் பெண்ணாக இருந்த என்னை, சுற்றி இருந்த அத்தனை பேருமே பயன்படுத்திக்கொண்டார்கள்.
* பள்ளி மாணவிக்குரிய இயல்பான கனவுகளும் ஈர்ப்புகளும் எனக்கும் இருந்தன. கிரிக்கெட் வீரர் நாரி கான்டிராக்டர் மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களுக்குச் செல்வேன். இந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடித்த ‘ஜங்லி’, தற்போது வரை எனக்கு மிகப் பிடித்த படம்.
* ஒரு முழுமையான குடும்பம் எனக்கு இல்லை என்ற வருத்தம் எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன். தோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களைக் கைவிடும் குழந்தைகள் என்று என்னைச் சுற்றி நடப்பவற்றை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணம் ஆகாதது குறித்து வருத்தமில்லை. இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை, யாருக்கும் எதற்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் விரும்பவே செய்கிறேன்.
from விகடன்
Comments