எப்படியிருந்தது ‘சிம்பு’வின் அல்டிமேட் சீஸன்? கமலுக்குப் பதில் சிம்பு என்றவுடன் ‘குருவி தலையில் பனங்காய்’ என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் 'ஆஹா.. ஓஹோ’ என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்டர் மார்க்கில் சிறப்பாக பாஸ் செய்து விட்டார் சிம்பு. “இனிமே இந்த நிகழ்ச்சியை சண்டையில்லாம ஜாலியா கொண்டு போவோம்” என்று ஒவ்வொரு போட்டியாளரிடமும் சிம்பு வாக்குறுதி வாங்கியது நல்ல விஷயம். இதன் மூலம் நிகழ்ச்சியின் நெகட்டிவிட்டி குறையும் என்பது பெரிய ஆறுதல். ஆனால் அது நடக்குமா? பிக் பாஸ் என்பது இதர ரியாலிட்டி ஷோக்களைப் போல சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பதல்ல. ஒரு மனிதனின் ஆதாரமான கீழ்மைக்குணங்களை அவனுக்கே காட்டி அம்பலப்படுத்துவது; அதன் மூலம் பார்வையாளனையும் சுயபரிசீலனைக்கு இட்டுச் செல்வது. போட்டியாளர்களின் உணர்ச்சிகளுடன் மோதும் விளையாட்டு இது. இதை வழிநடத்துவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் வேண்டும். இதுவரை கமல் இந்த கண்ணியமான எல்லையை கறாராக கடைப்பிடித்து வந்தார். சிம்புவும் இயன்ற வரையில் அதைப் பின்பற்றுவார் என்று எதிர்பார்ப்போம். சிம்பு வந்ததின் மூலம் பிக் பாஸிற்கு இளம் வயது பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கலாம். இது வரை பிக் பாஸ் அரங்கில் இளைஞர்களோடு நடுத்தர வயது நபர்களும் அமர்ந்திருந்தார்கள். ஆனால் சிம்பு வந்த பிறகு அரங்கில் இருந்த எல்லாமே இளைஞர்கள்தான். பார்வையாளர்கள் மாறியிருப்பதை பிக் பாஸ் அரங்கும் பிரதிபலிக்கிறது எனலாம். கமல் அறிவுத்தேடல்கள் உள்ளவர்; அனுபவஸ்தர். சிம்புவும் சிறுவயதிலிருந்தே சினிமாத்துறையில் அனுபவம் உள்ளவர்; வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை சந்தித்தவர். இது சார்ந்த தத்துவம் அவரது பேச்சில் இப்போதெல்லாம் அதிகம் தெரிகிறது. எனவே ஏற்கெனவே இருக்கும் பார்வையாளர்களோடு சேர்த்து இளம் ரசிகர்களையும் சிம்பு கவர்வார் என்று எதிர்பார்க்கலாம். இளைஞர்களை வழிநடத்தும் கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் நிகழ்ச்சியை சிம்பு வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கலாம். வெறும் ‘FUN’ ஆக பிக் பாஸ் முடிந்து விடக்கூடாது.
நாள் 28-ல் நடந்தது என்ன?
ஒரு புதிய டாஸ்க். ‘வலிமையான போட்டியாளர் யார் என்பதையும் ‘இந்தாளுல்லாம் என் லிஸ்ட்லயே இல்லை” என்பதையும் ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். வலிமையான போட்டியாளர் என்று பாலாவை பலரும் குறிப்பிட்டார்கள். பலவீனமான போட்டியாளர் என்று அபிராமியை நிரூப் சொன்ன போது “அப்புறம் ஏன் என் கூட பேசணும்னு மல்லுக்கட்டறே?” என்று கவுன்ட்டர் தந்தார் அபிராமி. அனிதாவிற்கும் அபிராமிக்கும் இடையில் நடந்த cat fight சுவாரசியம்.
‘பலமான, பலவீனமான போட்டியாளர் யார்?’
தன்னுடைய டர்ன் வரும் போது பலவீனமான போட்டியாளராக அனிதாவைக் குறிப்பிட்டு அமர்ந்தார் அபிராமி. ‘எனக்கு எதிரியா இருக்கணும்னா அதுக்கு கூட ஒரு தகுதி வேணும்’ என்கிற மாதிரி அலட்டலாக வந்து நின்ற அனிதா “அபிராமி ஜாடையா பேசறது, வம்பு பேசறதை விட மோசமான பழக்கம்” என்று இறங்கி அடிக்க “உங்க கூட பேச விருப்பமில்லைன்னு அதை சொல்லலாம் இல்லையா?” என்று திருப்பிடியத்தார் அபிராமி. பலரால் வலிமையான போட்டியாளராக கருதப்பட்ட பாலா, தன்னுடைய கடுமையான போட்டி என்று அனிதாவைத்தான் குறிப்பிட்டார். எனில் அபிராமி சொன்னது வெறும் பொறாமைதான் என்று தெரிகிறது.
சிம்பு என்ட்ரி. “இவங்க ஒரு சின்ன வரவேற்பாவது கொடுத்திருக்கலாம்” என்று பாவனையாக அனத்திய சிம்பு, க்ரே கலர் சூட்டில் பார்க்க பாந்தமாக இருந்தார். Atman வீடியோவின் உழைப்பு அவரின் கச்சிதமான உடலமைப்பில் தெரிந்தது. “எத்தனையோ ஸ்டேஜ் பார்த்துட்டேன். இருந்தாலும் படபடன்னு இருக்கு” என்று தயங்கியவர் “ஒவ்வொருத்தரையும் முதல்ல தனித்தனியா பார்த்து சில விஷயங்கள் பேசிடலாமா?” என்று ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்குச் சென்று “இருங்கப்பா. ஒரு பொஷிஷன்ல உக்காந்துக்கிறேன்” என்று லோயர் பர்த்தில் கையால் முகத்தை மூடி தூங்க முயற்சிக்கும் பயணி போன்ற நிலையில் அமர்ந்து கொண்டார்.
கடவுளை ரசித்த பரவசத்தில் போட்டியாளர்கள்
“ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு வாங்க” என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்தார் பிக் பாஸ். ‘என்னமோ ஏதோ’ என்று வந்தவர்கள் “இன்னாடா. இது மணிரத்னம் படம் மாதிரி இருட்டா இருக்குது?” என்று திகைத்து தடவிப் பார்த்தால் நாற்காலியில் அமர்ந்தார்கள். ஃபோகஸ் லைட் போடப்பட்டதும் லோயர் பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த சிம்பு “காஃபி.. காஃபி..’ என்று விற்பனையாளர் குரல் கேட்டதும் கண் விழித்துப் பார்ப்பது போல் எதிரே இருந்தவரைப் பார்த்தார். அவரைப் பார்த்த ஒவ்வொருவரும் இன்ப அதிர்ச்சியில் மிதந்தனர். சிலர் ஏதோ கடவுளையே தரிசனம் செய்தது போன்ற பரவச உணர்விற்குச் சென்றார்கள். ‘Oh. My God…” என்று திரும்பத் திரும்ப ஹைடெஸிபலில் அலறி பரவசத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அபிராமி. விட்டால் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று விடுவார் போலிருந்தது. “வேற ஏதாவது சொல்லணுமா?” என்று வெட்கத்துடன் மறுபடி மறுபடி கேட்ட சுருதி என்ன எதிர்பார்த்தார் என்றே தெரியவில்லை. அங்கிருந்து கிளம்பவே மனமில்லாமல் சென்றார். கோட்டை கழற்றி எறிந்து ‘தலைவா’ என்று கூவினார் பாலாஜி.
ஒவ்வொரு போட்டியாளரிடமும் தனித்தனியாக பேசி ஆலோசனைகள் சொன்ன சிம்பு, “இதுவரை நீங்க ஒருத்தரையொருத்தர் அடிச்சிக்கிட்டதெல்லாம் போதும். இனிமே இந்த நிகழ்ச்சியை Fun-ஆ ஜாலியா கொண்டு போணும். சத்தியம் பண்ணுங்க” என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டார். “வெளில போய் சொல்லிடாதீங்க. எதையாவது சொல்லி சமாளிங்க” என்று சிம்பு சிரித்துக் கொண்டே சொல்ல “டாக்டர் வந்தாரு. ஊசி போட்டாரு” என்கிற ஒரே பொய்யையே அனைவரும் சொன்னார்கள். (இதில் கூட கிரியேட்டிவிட்டி இல்லையா மக்களே?!).
முதலில் சென்று திரும்பிய பாலாஜி “டாக்டர் வந்தாரு.. பிரஷர் செக் பண்ணாங்க” என்று சொல்ல “நாங்க எத்தனை டாக்டரைப் பார்த்திருப்போம்” என்று முதலிலேயே கண்டுபிடித்தவர் ‘கால்குலேட்டர்’ அனிதா. ஆனால் இவருடைய டர்ன் வரும் போது ‘உள்ளே இருந்த டாக்டரைப்’ பார்த்து திகைத்து விட்டார். இது போன்ற சமயங்களில் விக்கல் வந்த மாதிரியே தொடர்ந்து சிரிப்பது அனிதாவின் வழக்கம். அது கேட்கவே விநோதமாகவும் பீதியாகவும் இருக்கும். அது அவருக்கும் தெரிந்திருந்தது போல. எனவே வாயை மூடிக் கொண்டு திகைப்பை வெளிப்படுத்த “ஷாக்கைக் குறைங்க” என்று சிம்புதான் அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.
‘அடிச்சுக் கேட்டாக் கூட சொல்லிடாதீங்க’ என்று அபிராமியை வெளியே அனுப்பினால் சிம்பு நடித்த பாடல்களாகப் பாடி ‘எங்க அப்பா குதிருக்குள் இல்லை’ என்று ஓவர்ஆக்ட் செய்தார் அபிராமி. உள்ளே இருந்த பிக் பாஸ் நிச்சயம் தலையில் அடித்துக் கொண்டிருந்திருப்பார். அடுத்து வந்த ஜுலியிடம் ‘தயவு செஞ்சு அபிராமியை பாடறதை நிறுத்தச் சொல்லுங்க” என்று கெஞ்சி அனுப்பினார் சிம்பு.
சிம்பு என்ட்ரி – கமலுக்குப் பதிலாக நான் வரவில்லை
ஒவ்வொருவரிடமும் பேசி முடித்த பிறகு அரங்கிற்குள் நுழைய தயாரானார் சிம்பு. கரகாட்டம், ஒயிலாட்டம் என்று வரவேற்பு தடபுடலாக இருந்தது. ‘அடப்பாவிகளா. நான் வரும் போது இதெல்லாம் ஒண்ணு கூட பண்ணலையே’ என்பது கமலின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம். சிம்புவைப் பார்த்ததும் இளம் ரசிகைகள் பரவசத்தில் ஆழ்ந்து திருஷ்டி கழித்தார்கள். “கமலுக்குப் பதிலா நான் வரலை. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த ஷோவையும் பிடிக்கும். அதனாலதான் வந்தேன்” என்று சிம்பு ஆரம்பத்திலேயே disclaimer போட்டுக் கொண்டது சிறப்பு.
ரசிகர்களிடமிருந்து கேள்விக்கணைகள் புறப்பட்டன. ‘லவ் பண்ணலாமா, வேணாமா.. வரவிருக்கும் திரைப்படங்கள், Atman வீடியோ அனுபவம், VTV 12 வருட நிறைவு என்று இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயல்பாக பதில் சொன்னார் சிம்பு. அகம் டிவி என்கிற வார்த்தையை சிம்பு பயன்படுத்தவில்லை. உள்ளே சென்றார். “எங்க டிவியே இப் புதுசா தெரியுது” என்று முதல் ஐஸ்பாரை தள்ளினார் அனிதா. (கமலின் மைண்ட்வாய்ஸ்: அட! விஷபாட்டில்!).
‘மாநாடு’ திரைப்பட அறிமுக விழாவின் போது “நீங்கதான் என்னைப் பார்த்துக்கணும்” என்று ரசிகர்களிட் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய சிம்பு, இங்கேயும் அதைச் சொன்னார். “எத்தனையோ மேடை பார்த்திருக்கேன். இருந்தாலும் படபடன்னு இருக்கு. நீங்கதான் என்னைப் பார்த்துக்கணும்” என்றதும் “உங்க கன்னத்துல குழி நல்லா இருக்கு” என்று இன்னமும் பரவசம் குறையாமல் அபிராமி உற்சாகமடைய “ம்க்கும். என் கன்னத்துல கூடத்தான் குழி இருக்கு. யாராவது கேட்டீங்களா?” என்று பாலாஜி நொடித்துக் கொண்டவுடன் ‘அது யாரு கன்னம்-ன்னு இருக்குல்ல” என்று டைமிங்கைப் பிடித்தார் சிம்பு.
“வல்லவன்’ திரைப்படத்தின் ஒரு பாடலில் பின்னால் ஓடி வரும் குழந்தைகளில் நானும் ஒருவன்’ என்று பாலாஜி சொன்ன போது “என்னை ஏதோ வயசாசவன்னு நெனச்சிடப் போறாங்க. சும்மா இருய்யா” என்கிற மாதிரி சிம்பு அதட்டியது ஜாலியான காட்சி.
“இது வரை நடந்த பிக் பாஸில் உங்க Golden Moment என்னன்னு சொல்லுங்க” என்று முதல் டாஸ்க்கை ஆரம்பித்தார் சிம்பு. “இதோ உங்களைப் பார்த்த இந்தக் கணம்” என்று அபிராமியின் உற்சாகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. சிம்பு தன்னை அக்கா என்று கூப்பிட்டதும் மகிழ்ச்சியில் பொங்கினார் தாமரை. அனைவரும் சொல்லி முடித்ததும் “ஓகே. இனிமே எல்லாத்தையும் கோல்டன் மோமெண்ட்ஸா மாத்தணும்” என்று கேட்டுக் கொண்டார் சிம்பு.
சிம்பு பிரேக் விட்டுச் சென்ற இடைவேளையில், உடன்பிறவா தோழிகளான அபிராமியும் ஜூலியும் தனியாக அமர்ந்து அனிதாவைப் பற்றி வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சிநேகன் மற்றும் பாலாஜியின் பேச்சு நடைபெற்றது. “நீங்க பாலாஜி கூட மட்டும்தான் பேசற மாதிரி தெரியுதே’ன்னு சிம்பு கேட்டாரு” என்ற சிநேகன், “நான் எல்லோர் கூடயும்தான் பழகத் தயாராக இருக்கேன். அவங்க என்னை ஒதுக்கறாங்க… இல்ல. ஒதுங்கிப் போறாங்க. நம்மள வயசானவங்கன்ற மாதிரியே சித்தரிக்கிறாங்க. அதிலயும இந்த நிரூப் பய இருக்கானே” என்று பொங்கினார். தலைமுறை இடைவெளிதான் இதற்கு காரணம். சிநேகனால் பாலா, நிரூப் போன்ற இளைஞர்களிடம் ஒட்ட முடியவில்லை. பெரும்பாலும் தனிமையின் மோனத்தவத்தில் இருக்கிறார்.
“வெங்காயம், பச்சை மிளகாய் சாப்பிடுங்க.. பிரெண்ட்ஸ்”
ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பிய சிம்பு, ‘சர்ப்ரைஸ்ஸாக’ சில பொருட்களை கொண்டு வரச் சொன்னார். “டின்னரா சார்?” என்று நிரூப் ஆவலாக கேட்க “வரும். பாருங்க..” என்று குறும்பாக பதில் சொன்னார் சிம்பு. வெங்காயம், பச்சைமிளகாய், முட்டை போன்ற பொருட்கள் வந்திருக்க “இப்பல்லாம் நீங்க இதைத்தானே விரும்பிச் சாப்பிடறீங்க?” என்று கலாய்த்த சிம்பு, அரக்கர் – தேவதை டாஸ்க் பற்றிய விசாரணைக்குச் சென்றார். “அரக்கியா பண்றது ஈஸியா இருந்தது” என்றார் தாமரை. சத்தமாக பேச முடிந்ததாம். அன்னை தெரசாவின் மறுபதிப்பாக இருந்த அனிதாவால் அரக்கியாக துளி கூட மாற முடியாமல் இருந்ததை மற்றவர்கள் கிண்டலடித்தார்கள்.
“ஓகே.. அரக்கரை விட்டுடுவோம். பாசிட்டிவ்வா போகலாம். ஏஞ்சல்ன்னு யாரைச் சொல்வீங்க?” என்று அடுத்த பகுதிக்கு நகர்ந்தார் சிம்பு. ஜூலி அபிராமியையும், அபிராமி ஜூலியையும் பரஸ்பரம் குறிப்பிட்டு கொஞ்சி கட்டிக் கொண்டார்கள். (இந்தப் பாசம் எத்தனை நாளைக்கோ?!). சிநேகனும் பாலாஜியும் பரஸ்பரம் ‘ஏஞ்சல்’ என்று சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதைப் போலவே நிரூப்பும் அனிதாவும் பரஸ்பரம் குறிப்பிட்டுக் கொண்டார்கள். “அரக்கர் டாஸ்க்ல உங்க நடிப்பு எனக்கு பிடிச்சிருந்தது” என்று நிரூப்பை குறிப்பிட்ட சிம்பு, நிரூப் காப்பாற்றப்பட்டதை தெரிவித்தார். ஆக… மக்களின் ஆதரவைப் பெற்ற லிஸ்ட்டில் நிரூப் தொடர்ச்சியாகவே முதலில் இருப்பதை அறிய முடிகிறது. டாஸ்க்கில் நிரூப் எப்போதும் காட்டும் ஆர்வம் இந்தத் தகுதியை அவருக்கு பெற்றுத் தந்திருக்கலாம்.
“அனிதாவைத் தவிர இங்கு எனக்கு நிறைய ஏஞ்சல்ஸ் இருக்காங்க” என்று சமாளித்த நிரூப்பிடம் “அவரு மாட்டுத் தொழுவத்துல பொறந்தாரு. அதான் நிறைய ஏஞ்சல்ஸ்” என்று பாலாஜி சொன்ன சுமாரான காமெடிக்கே “அண்ணே.. இதை்தான் நாங்க எதிர்பார்க்கறோம்” என்று பாராட்டிய சிம்பு, மறுபடியும் ஒரு பிரேக்கில் சென்றார். ‘மல்லிகையே.. மல்லிகையே’ பாடலில் வரும் ரம்பா, தேவயானி போல “நீ இல்லாம நான் என்ன செய்வேன்?” என்று கட்டிக் கொஞ்சிக் கொண்டார்கள் ஜூலியும் அபிராமியும்.
‘கலக்கப் போவது யாரு’ சதீஷ் என்ட்ரி
சிம்பு என்ட்ரி. “வீட்டுக்குள்ள சந்தோஷமா இருக்காங்க. இப்படி அவங்க டெய்லி சந்தோஷமா இருக்கறதுக்கு ஒரு ஆளை உள்ளே அனுப்பப் போறோம்” என்று அறிவித்தவுடன் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் கலக்கிய சதீஷ் பணிவாக மேடைக்கு வந்தார். அல்டிமேட் என்பது அனுபவமுள்ளவர்களுக்கான சீசன். ஆனால் பிக் பாஸில் எந்த விதியும் நிரந்தரமல்ல. இன்னொரு வகையில் சதீஷின் வருகை என்பது பாலாஜிக்கான மறைமுக எச்சரிக்கை அணி. பிக் பாஸ் வீட்டில் அவருடைய காமெடி எடுபடவில்லை என்பதால்தான் இன்னொருவரை உள்ளே அனுப்புகிறார்கள். இதைப் பாலாஜி புரிந்து கொள்வாரா?
“பிக் பாஸ் சீசன் பார்த்ததில்லை. பிரமோ மட்டும் கொஞ்சம் பார்த்திருக்கேன்” என்று அபிஷேக் மாதிரியே தடுமாறிய சதீஷ் பயந்து கொண்டே வீட்டிற்குள் சென்றார். “கதவைத் திறங்கப்பா.. உள்ளே போகணும்” என்று சிம்பு மைக்கில் பேசுவதைக் கேட்ட பிக் பாஸ் வீடு, அவர்தான் உள்ளே வரப் போகிறார் போல என்று எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. ஆனால் சிம்புவின் குரலில் மிமிக்ரி செய்தவர் சதீஷ். சிம்புவை எதிர்பார்த்து ஏமாந்த மக்கள், சமாளித்துக் கொண்டு ‘வைல்ட் கார்டா?” என்று கேட்டு சதீஷை வரவேற்றார்கள்.
புது நபர்களையும், சூழலையும் பார்த்து சதீஷ் தடுமாறியதைப் போல்தான் இருந்தது. வீட்டைச் சுற்றிக் காட்டிய நிரூப்பிடம் “நீங்களே சமைப்பீங்களா?” என்று ஜோக் அடிக்க முயன்றார். ‘இது ஒரு Scripted ஷோ, போட்டியாளர்கள் சமைப்பதில்லை, துவைப்பதில்லை, அதற்கென்று ஆட்கள் இருக்கிறார்கள்’ என்பது மாதிரியான வதந்திகளை மக்களில் இன்னமும் கூட பலர் நம்புகிறார்கள். அப்படியெல்லாம் செய்வது இந்த நிகழ்ச்சியின் ஆதார வடிவமைப்பிற்கே பாதகத்தை ஏற்படுத்தும். போட்டியாளர்களுக்கு பல நெருக்கடிகளைத் தருவதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையே. அவர்களுக்கு பல செளகரியங்களை செய்து தந்து விட்டால், எப்படி நெருக்கடி உற்பத்தியாகும்? மிக எளிய லாஜிக் இது.
“நீங்க சண்டை போட்டு போட்டு சண்டையே போரடிக்க ஆரம்பிடுச்சு” என்று சதீஷ் சொன்ன அப்சர்வேஷன் உண்மை. பாலா ஏதோ விளக்கம் கேட்க வர, அதற்கு தடுமாறிக் கொண்டே பதில் சொன்னார் சதீஷ். (ஆளைப் பார்த்தா டெரரா இருக்கான். அடிச்சிடுவானோ?!). ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த சிம்பு “ஒரு குறும்படம் போடலாமா?” என்று சீக்ரெட் டாஸ்க் பற்றிய ரகசியங்களை அவிழ்க்கத் துவங்கினார். பாலாவிடம் பாவனையாக சண்டையிட்டு ஓடி கழிவறையில் தாளிட்டுக் கொண்டார் அபிராமி.
எம்.ஜி.ஆர் படம் மாதிரி கதவை உடைத்து பாலா காப்பாற்றியதெல்லாம் அநாவசியம் என்பது இப்போதுதான் அவருக்குப் புரிந்தது.
சுரேஷ் தாத்தா என்ட்ரி
கமல் இருந்த சமயங்களில் குறும்படத்திற்கென்று ஓர் எதிர்பார்ப்பும் மதிப்பும் இருந்தது. ஆனால் கோயில் சுண்டல் மாதிரி வரிசையாக நான்கு குறும்படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்து நேரத்தை இழுத்தார் சிம்பு. (“இதே மாதிரி நீங்க நடிச்ச படங்களையும் அடுத்தடுத்து ரிலீஸ் பண்றதுக்கு கோ –ஆப்ரேட் பண்ணுங்க தம்பி’ என்பது தயாரிப்பாளர்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கக்கூடும்!). முதல் படம் முடிந்ததும் உடன்பிறவா (தற்காலிக) தோழிகளான அபிராமி & ஜூலி காப்பாற்றப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டது. இருவரும் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். கடைசி குறும்படம் முடிந்ததும் “நான் உங்களுக்கு நியூஸ் சொல்றேன்” என்ற சிம்பு, அனிதா காப்பாற்றப்பட்ட செய்தியை சொல்ல, அம்மணி பூரிப்பில் மூழ்கினார்.
“ஓகே.. ரொம்ப சந்தோஷமா இருக்காதீங்க. எவிக்ஷன் கார்டோட வரேன்” என்று மக்களுக்கு ஜெர்க் தந்த பிறகு பிரேக்கில் சென்றார் சிம்பு. “ரெண்டாவது வைல்ட் கார்டா இருக்குமோ?” என்று சரியாக சந்தேகப்பட்டவர் நிரூப். அனிதாவைப் போலவே இந்த விளையாட்டை அல்லும் பகலுமாக அனலைஸ் செய்கிறவர் நிரூப். அவரது யூகம் சரிதான். சுரேஷ் தாத்தா ரீஎன்ட்ரி ஆனார். (அடுத்தது என்ன? மறுபடியும் வனிதாவா?!) “தம்பி.. உங்களை குழந்தைல பார்த்திருக்கேன்” என்று இவரும் சிம்புவுடன் உள்ள நெருக்கத்தை உலகிற்கு பறைசாற்றிக் கொணடார். “உங்களை அப்பப்ப டாப்அப் பண்ணி அனுப்பறோம். ஆனா பேட்டரி டவுன் ஆகி திரும்பி வந்துடறீங்களே?” என்பது மாதிரி சிம்பு கிண்டலடிக்க “மக்களை எனக்கு வோட்டு போடச் சொல்லுங்க தம்பி” என்று சிம்புவையே தனது கொள்கை பரப்புச் செயலாளராக மாற்ற முயன்றார் சுரேஷ். ஒரு நிமிடம் ஜெர்க் ஆன சிம்பு “நீங்க நல்லா விளையாடினா மக்கள் கண்டிப்பா ஓட்டு போடுவாங்க” என்று சுதாரித்துக் கொண்டு சொன்ன கவுன்ட்டர் சிறப்பு.
அகம்டிவி வழியாக வந்து சிம்பு பேசிக் கொண்டிருக்கும் உள்ளே சைலண்ட்டாக நுழைந்தார் சுரேஷ். அவரைப் பார்த்தவுடன் தாமரை உள்ளிட்டவர்களின் முகங்களில் உற்சாகமும் குதூகலமும் வழிந்தது. ஆனால் ஒரு முகத்தில் மட்டும் எரிச்சலும் அதிருப்தியும் பொங்கி வழிந்தது. ஆம், அது கால்குலேட்டர் அனிதாவின் திருமுகம். அனைத்தையும் அனலைஸ் செய்யும் அனிதாவால், தனது எரிச்சலை மறைத்துக் கொள்ளவே தோன்றவில்லை. அப்பட்டமான ஏமாற்றத்துடன் ஒதுங்கியே நின்றார் அனிதா. (அப்ப இருக்கு.. சம்பவம் இருக்கு).
பாலாஜி, சிநேகன், சுருதி ஆகிய மூவரும் எவிக்ஷன் லிஸ்ட்டில் மீதம் இருந்தார்கள். “ஆக்சுவலி இன்னிக்கு டபுள் எவிக்ஷன். நான் பிக் பாஸ் கிட்ட பேசி கஷ்டப்பட்டு ஒருத்தரை காப்பாத்திட்டேன். ஒருத்தர்தான் இன்னிக்கு எவிக்ஷன். யாரு அது?” என்று கேட்க மூவருமே ‘நான்தான்’ என்று பலியாடு போல் நின்றார்கள். “இன்னுமா புரியலை. இனிமே ஜாலியா ஆடலாம்ன்னு சொல்லியிருக்கேன்.. அப்புறம் என்ன,. இந்த வாரம் நோ எவிக்ஷன்” என்று சிம்பு உற்சாகமாக அறிவிக்க, அந்த மகிழ்ச்சி வீட்டிற்குள்ளும் பரவியது. (இது சிம்புவின் முதல் எபிசோட் என்கிற ஒரு காரணம் ஒரு பக்கம் இருக்க, வனிதா திடீரென்று வெளியேறியதாலும் ‘நோ எவிக்ஷன்’ முடிவிற்கு பிக் பாஸ் டீம் வந்திருக்கலாம்).
கமல் Vs சிம்பு – பலமும் பலவீனமும்
சிம்பு விடைபெறும் நேரம் வந்தது. “சார். ஒரு கேள்வி. எப்போ கல்யாணம்?” என்று பாலா திடீரென்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார். கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் சமூகம் ஆவலுடன் கேட்கும் கேள்வி இது. “ஏம்ப்பா.. நான் ஜாலியா இருக்கறது பிடிக்கலையா?” என்று சிம்பு கேட்க “ஆமாம். சார். கல்யாணம் வேண்டாம்” என்று நிரூப் கூவ “பண்ணிக்கங்க சார். வாழ்க்கை நல்லாயிருக்கும்” என்று வெட்கத்துடன் உபதேசித்தார் தாமரை. “நான் தயார். பொண்ணு கிடைக்கலையே?” என்கிற தன் வழக்கமான soup boy முகத்தை ஜாலியாக வெளிப்படுத்தினார் சிம்பு. “பிக் பாஸ்ன்னவுடனே ஜாலியா ஒத்துக்கிட்டேன். ஆனா உள்ளே வரும் போது ஒரு மாதிரியா டென்ஷன் இருந்தது. கமல் சார் எப்படித்தான் இந்த சீசன் பண்ணாரோ” என்று பாவனையாக அலுத்துக் கொண்ட சிம்பு, ரசிகர்களை வணங்கி விடைபெற்றார்.
கமலையும் சிம்புவையும் ஒப்பிடுவது அநாவசியம்தான். இருவரும் வெவ்வேறு பாணியில் இயங்குபவர்கள். ஆனால் இன்னொரு வகையில் இந்த ஒப்பீட்டை தவிர்க்கவும் முடியாது. கமலின் தமிழ் பேச்சு, அதிலுள்ள டைமிங் நகைச்சுவை, அரசியல் கிண்டல், சமூக உபதேசம், போட்டியாளர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் திறமை போன்றவற்றை சிம்புவிடம் எதிர்பார்க்க முடியாது. “’ஜாலியா இருப்போம். Fun பண்ணுவோம்” என்று நவீன தலைமுறையின் மனோபாவத்தை பிரதிபலிக்கிறார் சிம்பு. மிக இயல்பாக பேசுகிறார். மிகையான ஜோடனைகள் இல்லை. இதையே சிம்புவின் பலமும் பலவீனமுமாக சொல்லலாம்.
என்றாலும் புத்தகப் பரிந்துரை உள்ளிட்ட பல விஷயங்களுக்காக கமல் இல்லாததை உணரத்தான் முடிகிறது. வீ மிஸ் யூ கமல்.
from விகடன்
Comments