Oprah Winfrey l America -வின் போக்கை மாற்றிய தேவதையின் கதை! | இன்று ஒன்று நன்று - 29

இத ஒரு ப்ளாக் ஸ்டோரி. ப்ளாக் ஸ்டோரினா என்னனு யோசிக்கிறீங்களா? கறுப்புனாலே நெகட்டிவ்னு ஒதுக்குற, ஒடுக்குன கதையெல்லாம் மாத்தி எழுதின கதைதான் இந்த ப்ளாக் ஸ்டோரி. யார் வளர விடலையோ, அவர்களையே அண்ணாந்து பாக்க வச்ச கதை; ஒரு டிவி நிகழ்ச்சியால ஒரு தேசத்தை புதுசா சட்டம் இயற்றவச்ச கதை. அமரிக்காவின் பெண் 'காலா' வோட கதை!

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில பிறந்து, துயரங்கள் நிறைந்த குழந்தைப்பருவத்தைக் கடந்த ஒரு பெண். அவருடைய பேச்சு திறமையால உலகப் பிரபலம் அடைந்து, அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் பில்லினியர் ஆன கதைதான் இது.

ஓப்ரா வின்ஃப்ரே

ஓப்ரா வின்ஃப்ரே (Oprah Winfrey) அமெரிக்காவில் உள்ள மிசிசிபியில் 1954ல் ஜனவரி 29 ஆம் நாள் வெர்னிடா லீ, வெர்னான் வின்ஃப்ரே என்ற கறுப்பின தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். ஓப்ரா பிறப்பதற்கு முன்பே இவரது தாயும் தந்தையும் பிரிஞ்சுடாங்க. அவங்களோட பாட்டிதான் இவங்கள வளர்ந்தாங்க. சிறு வயதில் மிகவும் வறுமையில வாடினார்களாம். எந்த அளவுக்கு வறுமைனா, போடறதுக்கு டிரஸ் இல்லாம உருளைக்கிழங்குகள் வைக்க பயன்படுத்துற சாக்குகளில் உடைகள் தச்சு போட்டுப்பாங்களாம். பாட்டியோட கண்டிப்பான வளர்ப்பால் தன்னுடைய இரண்டு வயதிலேயே படிக்க கத்துக்கிட்டாங்க. அதன்பிறகு அவர் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே தனது ஆசிரியருக்கு, நான் முதல் கிரேடு படிக்கத் தகுதியுள்ளவள் எனக் கடிதம் எழுதியிருக்காங்க‌. அந்த வருடத்திற்குப் பின்னர் அவர் மூன்றாவது கிரேடுக்கு உயர்வு பெற்றாராம். ஆறு வயசுல பாட்டியாலா ஓப்ராவ கவனிச்சுக்க முடியலன்னு அவங்க அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டாங்க. ஆனால் அங்க அவங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

அவர் தனது 9 வது வயதிலிருந்தே தனது குடும்பத்தினரால் நம்பிக்கையானவர்கள் என நினைக்கப்பட்டவர்களால் பாலியல் வன்முறைக்கு தொடர்ந்து ஆளாக நேரிட்டது.பின்னர், 14 வயதுல ஓப்ரா அம்மாவிடம் இருந்து அப்பாவிடம் வந்து சேர்ந்தார்.முடி திருத்தும் வேலை செய்து வந்த இவரது தந்தை மிகவும் கண்டிப்பானவர். இவங்களோட இந்த திறமைகளுக்கு வழிவகுத்தது அவங்க தந்தை தான் ன்னு சொல்லலாம். நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி அறிக்கை எழுத சொல்லுவார்.

தினசரி ஐந்து புதிய சொற்களை கற்றுக்கொள்ளாவிட்டால் ஓப்ராவுக்கு இரவு உணவு கிடையாது. இரவில் வெகுநேரம் வெளியில் இல்லாமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையே கட்டுக்கோப்பாக வளர்ந்தார் ஓப்ரா. நிறைய வாசித்ததால் அவருக்கு நன்றாகவும், சுவாரசியமாகவும் பேசும் தைரியம் வந்தது. பள்ளியில் நாடகக் குழுவில் சேர்ந்து சிறந்த பேச்சாளருக்கான ஆயிரம் டாலர் பரிசை வென்றார்.பேச்சுத் திறமை மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே 19 வயதில் ரேடியோ செய்தி வாசிப்பாளர் ஆனார்.நாஷ்விலேயில் இருந்த உள்ளூர் வானொலி நிலையம் ஒன்றால் இவர் `Miss Fire Prevention’ என முடிசூட்டப்பட்டார். எல்க்ஸ் க்ளப் (Elks club) நடத்திய பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதால் டென்னசி ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படிக்க அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதற்கு அடுத்த வருடம் `White House Conference on Youth’ என்கிற நிகழ்வில் கலந்துகொள்ள இவர் அழைக்கப்பட்டார்.

Oprah Winfrey

அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு இதழியல் மற்றும் ஊடகத்துறைகள் மேல் விருப்பம் ஏற்பட்டது. பால்டிமோர் டிவி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தார். பால்டிமோர் டிவி நிலையத்தில் வேலை பார்த்தபோது எப்படி பேட்டிகளை எடுப்பது, வி.ஐ.பிக்களிடம் எப்படி தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டார். ஆனால் இவரது சுபாவத்திற்கு செய்தி வாசிப்பு ஒத்து வரவில்லை. அதனால் சரியாக ஓடாத ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளினி ஆக நியமிக்கப்பட்டார். 1984-ல் ஏ.எம்.சிகாகோ டிவி நிறுவனமே, ஓப்ராவை வேலைக்குச் சேர அழைத்தது. அங்கேதான் தனது அடையாளமான டாக் ஷோ நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அதுவே, அவருடைய சொந்த நிகழ்ச்சியான `தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’வாக நாளடைவில் மாறியது.

ஒருமுறை அந்த டாக் ஷோவில் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில், சிறு வயதில் தாயின் உறவினர் சிலர் சிறுமி என்றுகூட பாராமல் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். பதினான்காவது வயதிலேயே கர்ப்பமாகி குழந்தையும் பெற்றேன். குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தை சில நாட்களிலேயே இறந்து போனது. எவருடைய மடியிலாவது முகம் புதைத்து வலி தீரும் வரை அழ வேண்டும் போல இருந்தது" என்று தன் கெளரவம் பாதிக்கப்படுமே என்று கொஞ்சமும் அஞ்சாமல் மில்லியன் கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் போது தன் சொந்தக்கதையை அந்த நிகழ்ச்சியை வழிநடத்தியவரே கூறிய ஓப்ரா வின்ஃப்ரே கூறினார். அதன்பிறகு பலர் தங்களது கருத்துக்களைகூற "குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்" என்று ஒரு புதிய சட்டத்தையே அறிமுகம் செய்தது அந்த தேசம். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் அந்தப்பெண் எதைப்பற்றி பேசினாலும் அந்தக் கருத்துகள் தேசமளவில் சிந்தனைகளை தூண்டிவிட்டன, பலரின் மனசாட்சிகளை கேள்வி கேட்டன. இதனால் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து தனித்து நின்றது இந்த டாக் ஷோ.

ஓப்ரா வின்ஃப்ரே

தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும், அதிக பேர் பார்க்கும் நிகழ்ச்சியாகவும் உருமாறியது. பல சமூக, பண்பாட்டுத் தடைகளை அந்நிகழ்ச்சி உடைத்தெறிந்தது. இதன் மூலம் ஓப்ரா பெண்களுக்கு குறிப்பாக அமெரிக்கப் பெண்களுக்கு முன்னுதாரணமாக உருவெடுத்தார். ` தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆக மட்டுமில்லாமல் ஹாலிவுட் நடிகையாகவும் பிரபலம் பெற்றவர் இவர். குயின்ஸி ஜோன்ஸ், இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இணைந்து தயாரித்த 'தி கலர் பர்பிள்' என்ற படத்தில் நடித்தார் ஓப்ரா. இந்த படம் மூலம் இவரது புகழ் மேலும் பரவியது.

1986-ம் ஆண்டு சமூகத்துக்கு பெரும் பங்கு ஆற்றியதற்காகக் கலைக்கான சிகாகோ அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. தேசிய பெண்கள் அமைப்பு அவருக்கு பெண் சாதனையாளர் விருது கொடுத்து கெளரவித்தது. தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ, சிறந்த டாக் ஷோ என அங்கீகரிக்கப்பட்டு பல `எம்மி’ விருதுகளையும் பெற்றது. 2004-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை ஃபோர்ப்ஸ் சர்வதேச பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்ற முதல் கறுப்பின பில்லியனர் இவர்தான். 2014-ம் ஆண்டு வின்ஃப்ரேயின் சொத்து மதிப்பு சுமார் 2.9 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் மதிப்பில் சுமாராக ரூ.20,000 கோடிக்கும் மேல்) ஆகும். உலகப் பிரபலமாகவும், பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஓப்ரா, சிறு வயதில் தனக்கு நேர்ந்ததைப் போல மற்ற குழந்தைகளுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதிகொண்டவராக இருந்தார். தனது பணத்தில் பெரும் பகுதியைக் கறுப்பின ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் செலவிட்டுவருகிறார்.

Oprah Winfrey

ஏழையாகப் பிறந்தும், தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் வளர்ந்தும், குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியும், அதள் காரணமாக தன் 14 வயதிலேயே பிறந்த அந்த குழந்தையும் சில நாட்களில் மரணித்துப் போன பிறகும் கூட ,வாழ்க்கை இதோட முடிஞ்சு போச்சுன்னு மூலையில் போய் உட்காராம தன்னோட திறமையை மட்டுமே நம்பி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்து வாழ்வில் மாபெரும் வெற்றி கண்டார், ஓப்ரா வின்ஃப்ரே. முற்றுப்புள்ளியின் அருகே புள்ளி வைத்தால் முடிவும் ஆரம்பமே என்பதற்கு உதாரணமாய் வாழ்பவர் ஓப்ரா வின்ஃப்ரே.

நம்ம வாழ்க்கை முழுக்க முழுக்க நம்ம கையில தான் இருக்கு. வாழ்க்கையில எதுவுமே இல்லாட்டியும் திறமை இருந்தா போதும் முன்னுக்கு வந்துடலாம். அப்படிங்கறதுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்காங்க ஓப்ரா வின்ஃப்ரே.ஊடகத் துறையில் சாதித்த பெண்களின் பட்டியலில் ஓப்ரா வின்ஃப்ரே-வின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.


from விகடன்

Comments