Bro Daddy: திட்டமிடாத கர்ப்பங்களால் நிகழும் குழப்பங்கள்... மோகன்லால், ப்ரித்விராஜின் ரகளை டிராமா!

ஸ்பாய்லர் அலெர்ட்!!! படம் பார்க்காதவர்கள் முதல் பத்தியைத் தவிர்க்கவும். 

மோகன்லால் - மீனா ஜோடியின் மகன் ப்ரித்விராஜ் விளம்பரத் துறையில் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவர். அவர்களின் குடும்ப நண்பரான லாலு அலெக்ஸ் உள்ளூரில் விளம்பர ஏஜென்சி ஒன்றை நடத்துகிறார். லாலு அலெக்ஸின் மகள் கல்யாணி பிரியதர்ஷனும், ப்ரித்விராஜும் பெங்களூரில் ரகசியமாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர். இப்படியான நிலையில், திட்டமிடாத நிகழ்வாக ஒரு பக்கம் கல்யாணி கர்ப்பமாக, அதேபோல் ஊரில் மீனாவும் தன் 45+ வயதில் மீண்டும் கர்ப்பமாகி விடுகிறார். இந்த இரண்டு பிரச்னைகளையும் ப்ரித்விராஜின் குடும்பம் எப்படிச் சமாளிக்கிறது என்பதுதான் ரகளையான ஒன்லைன்.
Bro Daddy

இயக்குநராக மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார் ப்ரித்விராஜ். அவரின் இயக்கத்தில் இதே மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிபர்' மாபெரும் ஹிட். அதன் இரண்டாம் பாகத்துக்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் சிம்பிளான லாக்டௌன் சினிமாவாக இந்த 'ப்ரோ டாடி'யை எடுத்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு இருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரிலிருந்து முழுநீளக் குடும்ப காமெடி சினிமாவுக்கு இதில் ஜம்ப் அடித்திருக்கிறார். ஶ்ரீஜித் மற்றும் பிபின் மலேக்கல் ஸ்க்ரிப்ட் பணிகளை மட்டும் பார்த்துக்கொள்ள இயக்குநராகவும் கதையின் நாயகனாகவும் மட்டும் இதில் பணியாற்றியிருக்கிறார் ப்ரித்விராஜ்.

ஆனால், படத்தின் அசல் நாயகன் ஜான் காத்தாடியாக வரும் மோகன்லால்தான்! தொடர்ந்து சீரியஸான படங்களைத் தந்துகொண்டிருந்தவர், இதில் டைமிங் காமெடியில் அடித்து நொறுக்கியிருக்கிறார். கண்கள் துடிப்பதைக் கூட காமெடியாக அப்படியொரு தேர்ந்த நடிகனால் மட்டுமே செய்துகாட்ட முடியும். தன் தாயிடம் உண்மையைச் சொல்லிவிட்டு குதூகலமாக ஓடி வருவது, மகனின் காலை ஜாலியாக வாருவது, மருமகளின் கொடுமையான காபிக்கு ரணகள ரியாக்ஷன் தருவது, ரூஃப்டாப் கார்டனுக்கு வழிகேட்டு, பின் அசடு வழிவது எனக் காட்சிக்குக் காட்சி நம் கண்களை அவர் பக்கமே இருக்க வைத்திருக்கிறார். சற்றே 'நீளமான' இந்தப் படத்திற்கு அவர்தான் உயிர்நாடி!

Bro Daddy

மோகன்லாலுக்குப் பிறகு நடிப்பில் ஈர்ப்பது க்யூட் பொண்ணு கல்யாணி பிரியதர்ஷன். 'ஹிருதயம்' படத்தின் இரண்டாம் பாதியில் இதயங்களைக் கொள்ளையடித்தவர் இதிலும் அதைத் தொடர்கிறார். அவர் தரும் ஸ்வீட் ரியாக்ஷன்கள், முகபாவனைகளில் ரசனை வழிந்தோடுகிறது. மற்றொரு பக்கம் சீனியரான மீனாவும் தன் பாத்திரம் அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கல்யாணியின் தந்தை குரியனாக வரும் லாலு அலெக்ஸுக்கு மட்டுமே படத்தில் சீரியஸ் முகம். கதையின் முக்கிய பங்கும் அவருக்குத்தான். கிட்டத்தட்ட சுலபமாகக் கணித்துவிடக்கூடியதொரு க்ளைமாக்ஸை சுவாரஸ்யமாக்குவது அவரின் தேர்ந்த நடிப்புதான்.

படத்தின் பெரும்பலம் காட்சிக்கு காட்சி வெடிக்கும் சிரிப்பு மத்தாப்புகள். சிலது நமத்து போனவையாக, காலாவதியானவையாக இருந்தாலும் பெரும்பாலானவை ரசிக்க வைக்கின்றன. அதற்கு வசனங்களும் பெருமளவில் உதவியிருக்கின்றன. ஆங்காங்கே வரும் தமிழ்ப் படங்களின் பின்னணி இசை ஜாலி ரெஃபரன்ஸ்.
Bro Daddy

படத்தின் நீளத்தை என்னதான் காமெடி சேர்த்து மூடி மறைத்தாலும், எப்படியும் முடிவு இதுதான் என்பது பாதியிலேயே தெரிந்து விடுகிறது. அதன்பிறகு, நிறைய புது கதாபாத்திரங்களையும், பிசினஸ் ப்ரோபசல் என்று துணைக் கதை சேர்த்தும் ஒப்பேற்ற நினைத்திருக்கிறார்கள். அது பெரியளவில் கைகொடுக்கவில்லை. குறிப்பாக சௌபின் சாஹிர் போன்ற சிறந்த நடிகரை மொக்கை காமெடி செய்ய வைத்தது ஏன் எனப் புரியவில்லை. பில்டப்பாக வரும் உன்னி முகுந்தனுக்கும் படத்தில் கைத்தட்டுவதைத் தவிர வேறு பணியேதும் இல்லை. நர்ஸாக ஒரேயொரு காட்சியில் மட்டும் எட்டிப் பார்க்கிறார் நிகிலா விமல். இப்படி இரண்டாம் பாதி முழுக்கவே நிறைய 'எதுக்கு பாஸ் இப்படி?' என்று கேட்க வைக்கிறார்கள்.

Bro Daddy
குறைகளைத் தவிர்த்து, லாஜிக், அரசியல் பார்வை போன்ற விவாதங்களுக்குள் எல்லாம் செல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் ஓடிடி வாயிலாக, குடும்பங்களைச் சிரிக்க வைப்பதுதான் அஜெண்டா என்றால், அதில் கட்டாயமாக ஜெயித்திருக்கிறது இந்த 'ப்ரோ டாடி'.


from விகடன்

Comments