பிரைம் டைம் பெருமாளு: 'பல்லும் போச்சு, பணமும் போச்சு'- கொதிப்பில் சீரியல் நடிகை; அண்ணே இது சரியா?

"இருப்பதே நாலு சேனல்; இடம் மாறினா சுத்திச் சுத்தி இதுங்களைத்தான் சுத்தணும். இப்படி இருக்க, ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குப் போனா பழைய இடத்தைப் பத்தி குறைச்சுப் பேசறது நல்லாவா இருக்கு" என்றபடியே வந்தமர்ந்தார் பிரைம் டைம் பெருமாளு. ‘என்ன விவகாரம்’ எனக் கேட்டோம்.

எல்லாரையும் 'அண்ணே’ போட்டுப் பேசற அண்ணாச்சி மேலதான் பழைய சேனல்காரங்க கடுப்புல இருக்காங்க. சமீபத்துல கலந்துகிட்ட நிகழ்ச்சி குறித்து அந்தச் சேனல்ல பெருமையாப் பேசின அண்ணாச்சி, அத்தோட நிறுத்தியிருந்தா பரவால்ல. `குழந்தைகள்கிட்டப் பேசிட்டிருந்தேனே, அப்ப கிடைச்ச புகழை விடப் பல மடங்கு இப்ப கிடைச்சிருக்கு’ எனச் சொன்னதுதான் கடுப்புக்குக் காரணமாம். `முகம் தெரியாம எங்கோ இருந்தவரைக் கூட்டி வந்து வளர்த்து விட்டதுக்குக் காட்டற விசுவாசமா?. இதெல்லாம் நல்லதுக்கில்ல’னு சொல்றாங்க’ என்ற பி.பி., அடுத்த செய்திக்குள் நுழைந்தார்.

பல்லும் போய் பணமும் போச்சே..!

ஹுயுமர் நல்லாவே வருகிற அந்தக் குணச்சித்திர நடிகைக்கு ஒரு தம்பி இருக்கிறார். மறுபடி கனா காண ஆசைப்பட்ட டீம், சிவனேனு இருந்த அந்தத் தம்பியை `நடிக்க வருவாரானு கேட்டுச் சொல்லுங்க’னு அக்காகிட்ட கேட்டிருக்காங்க. அக்காவும் கேக்க, அந்தத் தம்பியும் சரினு தலையாட்டி இருக்கார்.

ஃபோட்டோஷூட்டுகுப் போனப்பதான் தம்பி பல்லுக்குக் கிளிப் போட்டதைக் கவனிச்சிருக்காங்க. `இதைக் கழட்டிடுங்க’னு சொல்ல, ஒரு லட்சம் செலவழிச்சு இப்பதான் போட்டிருக்கான் தம்பி, அதனால நீங்க ஹீரோவாக்காட்டியும் பரவால்ல, கிளிப்பைக் கழட்ட மாட்டான்’னு சொல்லியிருக்காங்க அக்கா.

பிரைம் டைம் பெருமாளு

ஆனாலும் விடாத டீம். இந்த தொடர்ல நடிக்க பல பேர் வரிசையில நிக்குறாங்க; உங்களுக்கு வந்த வாய்ப்பை விடலாமாங்கிற ரீதியில பேசி ஒருவழியா கழட்ட வச்சிட்டாங்க.

அதுக்கப்புறம்தான் மேட்டரு. ஃபோட்டோஷூட் எடுத்து பல நாள் ஆகியும் ஷூட் கிளம்பறது பத்தி எந்த தகவலும் இல்லாததால சம்பந்தப்பட்டவங்களைத் தொடர்பு கொண்ட அக்காக்கு அங்கதான் அதிர்ச்சி காத்திருந்தது.

`ஸாரிங்க, அதுல நடிக்கத் தேவையான பசங்க கிடைச்சிட்டாங்க, அதனால தம்பிக்கு இன்னொரு சீரியல்ல பார்க்கலாம்’ என்கிற பதில் வர கொதித்தே போய் விட்டாராம் அந்த அக்கா.

`அவன் நடிக்க வர்றேனு உங்க கிட்டக் கேட்டானா, சும்மா இருந்தவனைச் சொறிஞ்சு விட்டது நீங்கதான். நீங்க சொல்லி கிளிப்பைக் கழட்டுனதுல பல் அழகும் போச்சு. திரும்ப மாட்டணும்னா மறுபடியும் ஒரு லட்சம் ஆகும்கிறாங்க எங்களுடைய பணமும் போச்சு’ என அவர்களிடம் கோபத்தைக் கொட்டித் தீர்த்து விட்டாராம் அந்த அக்கா.

சரி, நெக்ஸ்ட் நியூஸ்?

‘ஒரு காலத்துல மழை பெய்யுமா இல்லையான்னு சொல்றதுக்காகவே டிவியில வந்திட்டிருந்த ‘வானிலைச் செய்திகள்’ மோனிகாவை ஞாபகம் இருக்கா? சமீபமா அவங்க காட்டுல, ஒரே மழைதானாம். அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வேலை பார்க்கிற கம்பெனியை நடத்திட்டு வர்றார் அவரது கணவர்.

மோனிகா

இப்ப நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கிட்டதால அவங்களூடைய கம்பெனிக்குப் பல கட்சிகள்கிட்ட இருந்து வேலை வரத் தொடங்கி இருக்காம். கூடவே வட இந்திய மீடியா குரூப்பான ஜீ குழுமம் தெற்கே ஆரம்பிச்சிருக்கிற செய்திச் சேனல்களுக்கான புரொமோஷன் வேலைகளையும் இவங்களுக்குக் கொடுத்திருக்காங்க. `இந்த மாதிரியான ஆர்டர்கள் பெரிய நிறுவனங்களுக்குத்தான் கிடைக்குமாம், இந்தத் துறைக்குள் வந்த குறுகிய காலத்துலயே இவங்களுக்குக் கிடைச்சிருக்கறதாச் சொல்றாங்க.

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னாடி ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தயாரிப்புப் பொறுப்பும் இவங்ககிட்ட வந்தது’ என்ற பெருமாளு.

’சரி அடுத்த திங்கள் கிழமை சந்திக்கலாம்’ என ’பை’ சொல்லிக் கிளம்பினார்.



from விகடன்

Comments