சிறுவயதிலிருந்தே பாடல்கள் மீதும் நடிப்பின் மீதும் பேரார்வம் கொண்டவராக இருந்தவர் மனோரமா. குறிப்பாக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தவை. சிறுவயதில் குடும்பத்தில் நிலவி வந்த வறுமை காரணமாக திரையரங்குகளில் முறுக்கு விற்பனை செய்ய தொடங்கினார் மனோரமா. அப்போது திரைப்படத்தின் இடைவெளி வரும் வரை கதவுகளில் காதை வைத்து பாடல்களை அவர் கேட்பதுண்டு. அப்படி ஒருமுறை பாடல் கேட்பதில் முழுமையாக மூழ்கிப்போன மனோரமாவின் முறுக்குகளை மாடு ஒன்று தின்றுவிட அதற்காக தன் தாயாரிடம் பலமாக அடி வாங்கிய நிகழ்வும் நடந்ததுண்டு.
12 வயதில் இருந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய மனோரமா தன் முதல் திரைப்படத்தை சிங்கள மொழியில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படம் ‘மாலையிட்ட மங்கை’. கவிஞர் கண்ணதாசன் கதை மற்றும் வசனம் எழுதி அவரே தயாரித்த அப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்தார். அப்பாத்திரத்தில் நடிக்க அவர் முதலில் தயங்கவே கண்ணதாசன்தான், "கதாநாயகிகளாக நடிக்க பலரும் உண்டு. ஆனால் நகைச்சுவை நடிகைக்கான வெளியை நீதான் நிரப்ப வேண்டும்" என்று ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார்.
ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர் என்ற பெருமை மனோரமாவிற்கு உண்டு. அறிஞர் அண்ணா எழுதிய நாடங்களில் மட்டுமல்லாமல் அவருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் மனோரமா. அதேபோல 'காகிதப்பூ' என்ற நாடகத்தில் கலைஞருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆர், ஜெயலலித்தா, என்.டி. ராமராவ் போன்றவர்களுடன் நடித்துள்ளார் மனோரமா.
நகைச்சுவை நடிகையாக, கதாநாயகியாக, குணச்சித்திர பாத்திரமாக தமிழ்த் திரையுலகில் நீங்கா இடம் பிடித்த மனோரமாவை பற்றி முழுமையாக அறிய கீழுள்ள லிங்கில் உள்ள வீடியோவை முழுமையாகக் காணுங்கள்.
from விகடன்
Comments