"இந்த மூஞ்சியெல்லாம் வச்சிகிட்டு இவன்லாம் எப்படி நடிக்கனும்னு ஆசப்படுறான்னு நினைச்சேன்". என்று கவிஞர் வாலி ஒருமுறை மேடையில் கூறினார். ஒரே அறையில் தங்கியிருக்கும் நண்பரே இப்படி நினைத்திருக்கும்போது மற்றவர்களை கேட்கவே தேவையில்லை. அவர் பிறந்த தாராபுரத்தில், செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரனைப்பற்றி அந்த காலக்கட்டத்தில் எவரிடம் கேட்டாலும் இதே பதில்தான் வந்திருக்கும். பல அவமானங்களைப் பொருட்படுத்தாமல் தன்னை தன் திறமையை நம்பினார் நாகேஷ்வரன். காலம் கடந்தது. திறமையுடன் கூடிய அயராத உழைப்பு நாகேஷ்வரனை மகத்தான கலைஞனாக்கியது.ஆம், அவர்தான் நாகேஷ். தனது நகைச்சுவையால் இந்த சினிமாவில் தவிர்க்கமுடியாத கலைஞர் அவர்.
சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு வசனம் வரும். " நான் நாடகத்துல நடிச்சதே தப்புடா. அவங்க கையதட்டி என் வாழ்க்கைய கெடுத்துட்டாங்க. நானும் சென்னைக்கு கிளம்பி வந்துட்டேன்." என்று சுந்தரம் அவரது நண்பரிடம் சொல்வார். நாகேஷின் திரை உந்துதலும் அப்படி ஒரு நாடகத்தில்தான் தொடங்கியது. அந்த நாடகத்தைப் பார்த்து ரசித்து பாராட்டியவர் எம்.ஜி.ஆர். `நெஞ்சில் ஓர் ஆலயம்' படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் வின்சென்டிற்கு லைட் அமைப்பதற்கு வேண்டி ஒரு காட்சியை நாகேஷை நடித்துக்காட்ட சொன்னார் இயக்குநர் ஸ்ரீதர். அப்போது நாகேஷ் நடித்துக்காட்ட, " இவன் பண்ணுறது ஒருமாதிரி ஸ்பீடா சுறுசுறுப்பா நல்லா இருக்குல?" என்று கூறி அவரை கம்பவுண்டர் கதாப்பாத்திரமாக நடிக்க வைத்தார். அதில் காமெடியில் கலக்கிய நாகேஷ் தொடர்ந்து பல கதாப்பாத்திரங்களை செய்யத் தொடங்கினார்.
சினிமா ஒரு காட்சி ஊடகம். அதில் நடிகர்களின் பங்கு அளப்பரியது. என்னதான் பல தொழில்நுட்பங்கள் இணைய ஒரு திரைப்படம் உருவாகிறது என்றாலும், நடிகர்கள் தான் அக்கதையை உயிர் பெறச் செய்வதில் பெரும் பங்காற்றுவர். நாகேஷின் சிறப்பம்சமே, அவரது உடல் முழுவதுமே நடிக்கும் திறன் வாய்க்கப்பெற்றவர். இயல்பாகவே அமைந்த சுறுசுறுப்பும், நகைச்சுவையும் அத்தகைய உடல்மொழியோடு சேர்ந்து வெளிப்படுகையில் பிற தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு பல நேரங்களில் வேலை இருப்பதில்லை. மணிரத்னம் எப்போதும்" சிறந்த நடிகர்களிடம் நாம் பெரிதாக எதுவும் செய்யத் தேவை இல்லை. அவர்கள் நடிப்பதை சரியாக பின்தொடர்ந்து படம்பிடித்தால் மட்டும் போதுமானது" என்று கூறுவார். அதற்கு தலையாய உதாரணம் நாகேஷ் தான்.
பொதுவாக இரண்டு நபர்கள் ஒரு இடத்திலிருந்து பேசிக்கொள்ளும் காட்சிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அலுப்பையும் மேடை நாடகத்தின் தன்மையையும் அளிக்கும். அங்கு நாகேஷ் தனது உடல்மொழியால் மொத்த காட்சியையும் தூக்கி நிறுத்துவதில் வல்லவர். திருவிளையாடல் படத்தில் புகழ்பெற்ற காட்சி ஒன்றில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நாகேஷும் இனைந்து நடித்திருப்பார்கள். நாகேஷ் கதாப்பாத்திரம் கேள்விகளை தொடுக்க, சொக்கநாதராக நடிக்கும் சிவாஜி பதில் சொல்வதுமாக அமைந்த அக்காட்சி ஒரே இடத்தில் நடக்கும் உரையாடலாகவே இருக்கும். இரு நடிப்பு ஜாம்பவான்கள் அதை நடிக்கையில் சொல்லவா வேண்டும்?
ஒருபுறம் சிவாஜி தனது முகபாவனைகளில் மக்களை கவர்ந்துகொண்டிருக்க, மற்றொருபுறம் நாகேஷ் தனது சுறுசுறுப்பாலும், அதிவேக உடல்மொழியாலும் அப்பழுக்கற்ற நகைச்சுவை தன்மையாலும் அந்த மொத்த காட்சியையும் விறுவிறுப்பாக வைத்திருப்பார்.
நாகேஷின் உடல்மொழி எந்த அளவிற்கு சிறப்புமிக்கது என்றால் அவர் செய்யாத சம்பாஷனைகளே இல்லை என்பதால் தாங்கள் புதிதாக எதுவுமே செய்யமுடியாதா என்று பின்னாளில் வந்த நடிகர்கள் வருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலக நாயகன் கமல்ஹாசனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு படப்பிடிப்பின்போது கமல் அங்கு இங்கு தாவுவது, சுவற்றில் மோதுவது என என்னவெல்லாமோ அவர் முயன்றும் அனந்து அவர்கள் "இது நாகேஷ் மாதிரி இருக்கு. அது நாகேஷ் மாதிரி இருக்கு" என்று கூற, " அட அப்ப நான் என்னதான் பண்ண" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதை கமலே ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார். கமல் ஒரு தீவிர நாகேஷ் ரசிகர். எந்த அளவிற்கு என்றால், எந்தவித முன்பயிற்சியும் இல்லாமலே குறைந்தது 3 முதல் 4 மணிநேரத்திற்காவது நாகேஷைப் பற்றி அவரால் பேச முடியும். தான் எப்போது சினிமா பேசினாலும், நாகேஷும் பாலச்சந்தரும் இல்லாமல் அந்த உரையாடல் முடிவுறாது என்பார்.
பாலச்சந்தருக்கும் நாகேஷுக்கும் இடையேயுமான நட்பு அளப்பரியது. அதுமட்டுமன்றி அதுவரை மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த நாகேஷ் உச்ச கதாநாயகனாக மாறியது பாலச்சந்தர் திரைக்கதை எழுதிய படமான சர்வர் சுந்தரத்தில்தான். அந்த படம்தான் நாகேஷை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அப்படத்தில் 5 காபி தம்ளர்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி கீழே விழாமல் கொண்டுசென்று வழங்குவார். அதே போன்றே, அன்று கிடைத்த புகழ் சிறிதும் சரிவடையாமல் திரைத்துறையில் புகுந்து விளையாடினார் நமது சர்வர் சுந்தரம்.
பெண் வேடம், வில்லன் கதாப்பாத்திரம் என்று தமிழ் சினிமாவில் நாகேஷ் தொடாத எல்லைகளே இல்லை. அவரின் மற்றுமொரு தனிச்சிறப்பானது அவரது நடனம். நீர்க்குமிழி படத்தில் கண்ணி நதியோரம் பாட்டிற்கு அவர் ஆடிய ஆட்டம் முதலே தனது நடனத்தால் ரசிகர்களை வசீகரிக்கத் தொடங்கிவிட்டார். குணச்சித்திர வேடமென்று எடுத்துக்கொண்டால் பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் இல் தொடங்கி ரிதம் படம் வரை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த மாய முகம் உயிர்கொடுத்த கதைமாந்தர்களோ ஏராளம்.
நாகேஷைப் பற்றி பெரிதும் அறிந்தவர் முன்னரே கூறியதுபோல தொடக்க காலங்களில் அவரோடு ஒரே அறையில் வறுமையை பங்கிட்டுக் கொண்ட வாலிபக் கவிஞர் வாலிதான். தான் சும்மா இருந்த நேரங்களில் தனக்கு பால் வாங்கி கொடுத்து பாட்டெழுதுமாரு நாகேஷ் கண்டித்ததாக வாலி கூறுவார். வாலியை முதல்முதலில் கோல்டன் ஸ்டூடியோவிற்கு அழைத்து சென்று பாடல் எழுதுவதற்கு நீலகண்டன் அவர்களிடம் அறிமுகப்படுத்தியதும் நாகேஷ் தான். சினிமாவிலும் நடிப்பிலும் நகைச்சுவையிலும் நாகேஷைப் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் அறியாத ஒரு பக்கத்தை அறிந்தவர் வாலிதான். நாகேஷ் கர்நாடக சங்கீதத்தில் பெரும் நாட்டமுள்ளவர் என்றும் அதில் தேர்ந்து வல்லமை பெற்றிருந்தார் என்றும் வாலி ஒரு மேடையில் கூறினார். அதுமட்டுமன்றி டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் முதலியவற்றில் அவரை அடித்துகொள்ள ஆளே இல்லை என்றும் கேரம் போர்டு விளையாடினால் அனைத்து காய்களையும் பாக்கெட் செய்த பின்னரே கை எடுப்பார் என்றும் கூறினார்.
1958-ல் தொடங்கிய இவரது பயணம் எம்.ஜி.ஆர் சிவாஜியில் தொடங்கி 3 தலைமுறை நடிகர்களுடனும் நடித்து பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இம்மகா கலைஞன் 1974இல் கலைமாமணி விருதும் பெற்றார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இவரைப் பாராட்டி சிறப்பு விழா ஒன்றும் எடுத்தார்." எத்தனை விழாக்கள் வேண்டுமானாலும் எடுங்கள். எடுக்காமலும் போங்கள். ஆனால் நான் என் வீட்டில் யாரிடம் பேசினாலும் தினமும் அவருக்கு பாராட்டு விழா எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று அம்மேடையில் கமல் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தனது தோற்றத்தை ஒரு தடையாக கருதாமல் வெற்றி பெற்று பல தலைமுறை நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார், நாகேஷ். "வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல் என்று பாடி நடித்தது மட்டுமில்லை". அதற்கான வழித்தடத்தையும் வகுத்துக் காட்டினார். மனோபாலா அவர்கள் ஒரு நேர்காணலில் தான் நம்பிக்கையுடன் நடிக்க வந்ததற்கு முழு காரணம் நாகேஷ் தான் என்றார். மேலும் "என்னதான் தன் வாழ்க்கை முழுவதும் பல கோடி மக்களை மகிழ்வித்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் பல துயரங்களை அவர் சந்திக்காமலில்லை. அவை அனைத்தையும் தாங்கிக்கொண்டும் அவர் நம்மை மகிழ்வித்துக் கொண்டுதான் இருந்தார்" என்றார் மனோபாலா.சர்வர் சுந்தரம் படத்தில் பேட்டி கொடுக்கும் காட்சியில் ஒரு வசனம் பேசுவார். "கஷ்டம்கிறது கல் மாதிரி. அதை பக்கத்துல வச்சி பாத்தோம்னா அது உலகத்தையே மறைச்சிரும். அதை தள்ளி வச்சி பாத்தோம்னா , அது என்னனு நமக்கு தெளிவா தெரியும்.
அதைத் தூக்கி காலுக்கு கீழ எரிஞ்சிட்டோம்னா, அதைபத்தி நம்ம நினைக்கப் போறதே இல்ல" என்பார். அப்படி கடினமான சூழ்நிலைகளை தகர்த்தெரிந்து புன்முறுவலோடே தன் வாழ்க்கையை வாழ்ந்து , பல தலைமுறைகள்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பல நாகேஷ்கள் திரையுலகத்துல நம்பிக்கையா களமிறங்க நாகேஷ்தான் காரணம்.
from விகடன்
Comments