Minnal Murali Review: இந்தியத் தன்மையுடன் `முதல்' சூப்பர்ஹீரோ படம்... ஆனாலும் இன்னமும் ஏன் இப்படி?

மின்னல் தாக்கியதால் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கு புதிதாக சக்திகள் கிடைக்கின்றன. இவர்கள் இருவரால் அந்த கிராமம் என்ன ஆகிறது என்பதுதான் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'மின்னல் முரளி' திரைப்படத்தின் கதை.
Minnal Murali | மின்னல் முரளி

காதல் தோல்வியால் லேசான சோகம், கடுப்பு எனத் தவித்து வருகிறார் டோவினோ தாமஸ். இன்னொரு பக்கம், சின்ன சின்ன சிக்கல்களுடன் அதே ஊரில் உழன்றுவருகிறார் குரு சோமசுந்தரம். இருவரையும் ஒரு திருநாளில் மின்னல் இணைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குக் கிடைத்து இருக்கும் சக்திகள் குறித்து இருவருக்கும் தெரிய வருகிறது. இருவருக்குமான வாழ்க்கைச் சிக்கல்கள் வழி விரியும் கதையில் சூழ்நிலையால் மீண்டும் இருவரும் இணைகிறார்கள். இந்தியாவில் இதற்கு முன்னர் பல பட்ஜெட்களில் சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்தியத் தன்மையுடன் கூடிய முதல் திரைப்படமாக கவனம் பெறுகிறது 'மின்னல் முரளி'.

படத்தின் ஆகப்பெறும் பலம், சுவாரஸ்யமாய் எழுதப்பட்ட கதாபாத்திரங்கள். ஆரம்பத்தில் வரும் புராணக் கதையில் ஆரம்பித்து, பல கிளைக் கதைகளைக் கொண்டதாக திரைக்கதை நகர்கிறது. இறுதிக் காட்சியில், இரண்டு சூப்பர் ஹீரோக்களும் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும், சாமான்யர் ஒருவரின் உதவியால் தான் மிகப்பெரிய துயரம் ஒன்று தடுத்து நிறுத்தப்படுகிறது. அதேபோல், குரு சோமசுந்தரம் காதலிக்கும் ஷெல்லி கிஷோர் கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. பெரிய வசனங்கள் இல்லை. ஆனால், எப்போதும் முகத்தில் இழையோடும் சோகம், வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டிக்கொண்டே நிற்கிறது ஷெல்லி கிஷோரின் கதாபாத்திரம்.

Minnal Murali | மின்னல் முரளி

'ப்ரூஸ் லீ' பிஜியாக வரும் ஃபெமினா ஜார்ஜ், சிறுவன் ஜோஸ்மோனாக வரும் வசிஷ்ட், சிபி போத்தனாக வரும் அஜு வர்கீஸ் என நிறைய கதாபாத்திரங்கள் படத்துக்குத் தேவையான காமெடிக் காட்சிகளை வழங்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் உச்சாணிக் கொம்பாய் நிற்கிறது குரு சோமசுந்தரத்தின் நடிப்பு. தன்னை வெறுத்து ஒதுக்கும் கிராமத்தைக்கூட அமைதியாக புறந்தள்ளும் ஒரு மனிதரை மீண்டும் சீண்டுகிறது அந்தக் கிராமம். அழுதுகொண்டே ஒன்றைக் கடந்துவருவது, தயங்கியபடி நிற்பது, எல்லாவற்றையும் முடித்துவிட்டு சாதுர்யமாய் சிரிப்பது எனப் பல்வேறு காட்சிகளில் பல்வேறு முகபாவணைகளை வெளிக்காட்ட வேண்டும். மிகவும் சிறப்பாக அதைக் கையாண்டு இருக்கிறார் குரு சோமசுந்தரம்.

Minnal Murali | மின்னல் முரளி

சூப்பர்ஹீரோ படம் என்றாலே பெரிதும் பேசப்படுவது சூப்பர் ஹீரோக்களின் முகமூடியும், ஆடையும்தான். அதற்கென பெரிய அளவிலான பிரயத்தனங்கள் இருக்கும். ஆனால், அது எதுவுமில்லாமல், அத்தகைய படங்களுக்கு இணையாக பேசப்படும் அளவுக்கு இருக்கிறது 'மின்னல் முரளி'. இருவருமே லுங்கியுடன்தான் வேகமாக ஓடுகிறார்கள். துண்டைக் கொண்டு ஒருவர் முகத்தை மூடுகிறார் என்றால், இன்னொருவரோ சோளக்காட்டு பொம்மையின் சாக்கை வைத்து முகத்தை மூடிக்கொள்கிறார். கிளைமேக்ஸ் காட்சியைத் தவிர, எல்லா காட்சிகளிலும் இப்படியான ஆடைகள்தான்.

இத்தனை இருந்தும், சில விஷயங்களில் இன்னமும் எந்த மாறுதலும் இல்லாமல் இருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவரின் மகன் என்பதாலேயே ஷிபுவின் கதாபாத்திரமும் மனநலம் பாதிக்கப்பட்டவராகக் காட்டப்படுகிறது. அந்த ஊர் மக்களால் அதனாலேயே அவன் உதாசீனம் செய்யப்படுகிறான். DC காமிக்ஸின் ஜோக்கர் கதாபாத்திரமும் இத்தகையதுதான். ஆனால், அந்தக் கதை எழுதப்பட்ட காலம் என்பது வேறு. 2020களில் எழுதப்படும் கதைகளில்கூட ஏன் இத்தனை பிற்போக்குத்தனம் என தெரியவில்லை. மின்னல்களையும், வேகமான மனிதர்களையும் களமாகக் கொண்ட DC-யின் Flash கதாபாத்திரம்கூட, மறுவாய்ப்பு குறித்து போதிக்கும் ஒரு கதாபாத்திரம்தான். அவ்வளவு ஏன், சமீபத்தில் வெளியான 'Spider-Man: No Way Home' திரைப்படம்கூட மறுவாய்ப்பு பற்றித்தான் பேசியது. ஆனாலும், அப்படியானதொரு கிளைமேக்ஸ் ஏன்?

Minnal Murali | மின்னல் முரளி

சூப்பர்ஹீரோ படங்களில் எதிர்மறை நாயகனாக யார் நிறுத்தப்படுகிறார்கள் என்பதிலும் அத்தனை அர்த்தங்கள் உண்டு. ஃபேன்டஸி படங்களில் கூட, மலையாள சினிமா படைப்பாளிகளுக்கு, வில்லனாக ஒரு தமிழர்தான் தேவைப்படுகிறார். தமிழ் டப்பிங்கில் மட்டும் தமிழன் என்கிற வார்த்தையை வேறாக மாற்றியிருக்கிறார்கள். இதே மாதம் வெளியான தெலுங்குத் திரைப்படமான 'புஷ்பா'வின் தமிழ் டப்பிங்கில்கூட, நாயகன் அல்லு அர்ஜுன் தன்னை 'பச்சைத் தெலுங்கன்' என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்வார். தமிழ் டப்பிங்கில் அதை மாற்றியெல்லாம் சமாளித்திருக்க மாட்டார்கள். ஒரு மாஸ் மசாலா திரைப்படத்தில் இருக்கும் அறத்தைக்கூட மலையாள சினிமாக்களில் எதிர்பார்க்கக்கூடாது போல!

இப்படியான சின்ன சின்ன விஷயங்களைக் களைந்துவிட்டு பார்த்தால், சுவாரஸ்யமான கதைசொல்லலின் மூலம் ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக ஈர்க்கிறான் இந்த 'மின்னல் முரளி'.


from விகடன்

Comments