சிலம்பரசனின் அம்மா உஷா ராஜேந்தர் தலைவராகவும், டி.ராஜேந்தர் கௌரவ ஆலோசகராகவும் உள்ள தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றிப் பேசிய டி.ஆர், "வி.பி.எஃப் (virtual print fee) கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. அயல்நாடுகளில் பெரும்பாலும் VPF கட்டணம் கிடையாது. ஆனால் இங்கு தயாரிப்பாளர்கள்மீது ஒரு சுமையாகச் செலுத்தப்பட்டு இந்தக் கட்டணத்தால் சிறு படத் தயாரிப்பாளர்கள் முதல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, VPF கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும். அதே போல், எல்.பி.டி (LBD - Local Body Tax) வரியையும் ரத்து செய்யவேண்டும் என்று அரசிடம் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்துவருகிறோம். இதை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்" என அழைப்பு விடுத்திருந்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'தமிழக அரசே, உள்ளாட்சித் துறை வரியை நீக்க வேண்டும். திரைப்படத் துறை வலியைப் போக்க வேண்டும்...', 'உறவுகளே வாரீர், உரிமைக்குரல் தாரீர்', 'உணர்வு கொண்ட உறவுகளே வருக...', 'Film industry needs one India one tax...’, 'உரிமைக்குரல் மீட்க ஆதரவு தருக...' ஆகிய பதாகைகளுக்கு நடுவே டி.ராஜேந்தர் மேடையில் பேசியதாவது...
"சின்ன தயாரிப்பாளர்களுக்காக சங்கம் நடத்துறேன். வி.பி.எஃப். (virtual print fee) கட்டணத்திற்காக நாங்க ரெண்டு வருஷத்துக்கு மேலா போராடுறோம். நெகட்டிவை பாசிட்டிவ் பண்ணி, புரொஜக்டரில் படம் ஓட்டினது ஒரு காலம். தியேட்டர்களுக்கு 'சி'ஃபார்ம் லைசென்ஸ் கொடுக்க காரணமே அங்கே புரொஜக்டர் இருக்கணும். நானும், என் மனைவியும் திரையரங்க உரிமையாளர்கள். சிலம்பு திரையரங்கம், குறள் திரையரங்கம் நடத்துறோம்.
Also Read: "என் கண் முன்னாடி அவ இறந்துபோவான்னு நான் நினைச்சுப் பார்க்கல" - தங்கை பற்றி 'மெட்டி ஒலி' வனஜா
எங்களுக்கு சினிமா தியேட்டர் பத்தித் தெரியும். தியேட்டர்களுக்கு எதிரா நாங்க பேசல. திரையரங்குனாலே அங்கே புரொஜக்டர்கள் வைக்க வேண்டியது தியேட்டர்க்காரர்களின் உரிமை. அவங்கதான் புரொஜக்டர் வைக்கணும். க்யூப், யூ.எஃப்.ஓ., சோனினு போட்டால், அவங்கவங்க சொல்ற படம்தான் போட்டாகணும். இந்தியாவுக்குள் வரக்கூடிய இங்கீலீஷ் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் கட்ட வேணாம். அவங்கெல்லாம் அறிவாளி. இங்கே தயாரிப்பாளர்கள் கிள்ளுக்கீரை. நாங்கள் ஏமாளிகள். வாழத் தெரியாத கோமாளிகளா? நாங்கள் போராளிகள். வட இந்தியப் படங்களுக்கு வி.பி.எஃப். ஜார்ஜ் கிடையாது. தென்னிந்தியப் படங்களுக்கு மட்டும் வி.பி.எஃப்-பா? வேற சங்கம் தூங்கலாம். இந்தச் சங்கம் தூங்காது'' என்றவர்,
"நான் ஈன்றெடுத்த மகன் நடித்த படத்திற்கே செல்லவில்லை. அழையாதார் வாசல் மிதிக்க மாட்டேன். ஏன், சிம்புவின் தாயார் சென்றாரா? மதிப்பவர்களை விட்டுக்கொடுத்ததில்லை. எங்களுக்குக் கிடைக்காத மேடையா? நான் பேசாத மாநாடா? நான் பார்க்காத நாடா..?" என ரைமிங் பன்ச்சுகளையும் அள்ளி வீசினார்.
from விகடன்
Comments