`முதல் வாய்ப்பு, தந்தை ஸ்தானம், ஹார்ட் சர்ஜரி!' - மாணிக்க விநாயகம் நினைவுகள் பகிரும் மாலதி

பின்னணிப் பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். திரைப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகள், திரைப்பட பாடல்கள் பாடியவர் மாலதி லக்ஷ்மண். 19 ஆண்டுகளாக மாணிக்கம் விநாயகத்துடன் பயணம் செய்த மாலதி, அவருடனான தன் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

மாணிக்க விநாயகம்

``எதைச் சொல்றது, எதை விடுறதுனு தெரியல. காதுக்குள்ள அவர் குரல் கேட்டுக்கிட்டே இருக்கு..." என்று மனமுடைந்து பேச ஆரம்பித்தார் மாலதி.

``மாணிக்கம் ஐயாவை நான் அப்பானுதான் கூப்பிடுவேன். குரலிலும், தோற்றத்திலும் கம்பீரமா இருந்தாலும், மனதால் குழந்தை மாதிரி இருப்பார். 1997-ம் ஆண்டு தேவா சார், திரைப்படப் பாடலில் பின்னணி பாடகியாக என்னை அறிமுகப்படுத்தினார். ஆனா அந்தப் பாடல் பெரியளவுல ரீச் ஆகாததால தொடர்ந்து நான் இசைக் கச்சேரிகள்ல கவனம் செலுத்திட்டு இருந்தேன்.

2002-ம் ஆண்டு மாணிக்கம் அப்பாகூட சேர்ந்து, சிங்கப்பூர்ல ஒரு இசைக்கச்சேரி பண்ணேன். அந்தக் கச்சேரியில என்னுடைய குரல் வளத்தைக் கேட்டுட்டு, வித்யாசாகர் சார்கிட்ட என்னை அறிமுகம் பண்ணி வெச்சார். அந்த அறிமுகம் மூலமா கிடைச்ச வாய்ப்புதான், `மன்மத ராசா' பாடல். அந்தப் பாடல் ஹிட் ஆச்சு. அடுத்தடுத்து எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சுது. மாணிக்கம் அப்பாகூட சேர்ந்து, `உம்மா, உம்மம்மா'  பாடல் தொடங்கி நிறைய பாடல்கள் பாடினேன். எல்லா பாடல்களுமே ஹிட்தான். எனக்கும், மாணிக்கம் அப்பாவின் மூத்த மகனுக்கும் ஒரே வயசு. அதனால் என்னை, அவர் மகளாகத்தான் பார்ப்பார். அவங்க குடும்பத்துல நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் அவ்வளவு சந்தோஷத்தோடு என்கிட்ட சொல்லுவார். தகப்பன் ஸ்தானத்துல இருந்து பல விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கார். என்கிட்ட மட்டும் இல்ல யார்கிட்டயும் அவர் ஈகோ பார்த்தது இல்ல. திறமைசாலிகள் எங்கே இருந்தாலும் அவங்களுக்கு அடையாளம் கிடைக்கணும்னு சொல்லிகிட்டே இருப்பார்.

மாணிக்க விநாயகம் மற்றும் மாலதி

இசைக்கச்சேரிகளுக்காக நாங்க அடிக்கடி, வெளிநாடுகளுக்குப் போவோம். என்னை ரொம்ப கவனமா பார்த்துப்பார். ஒருமுறை கனடா நாட்டுக்கு கச்சேரிக்காகப் போயிருந்தோம். போன இடத்துல எனக்கு சிக்குன்குனியா காய்ச்சல் வந்திருச்சு. என்னை அவ்வளவு பொறுப்பா கவனிச்சுக்கிட்டார். அவர் பக்கத்துல இருக்கும்போது மறைந்த என் அப்பாவே என்கூட இருக்கற மாதிரி எனக்குத் தோணும்.

எப்போதும் பரபரப்பா இருக்கும் அவருக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ண வேண்டிய கட்டாயம் வந்தது. குழந்தை மாதிரி ரொம்பவே பயந்துட்டார். நாங்க கூடவே இருக்கோம்னு சொல்லி தைரியப்படுத்தி ஆபரேஷன் முடிச்சு, அவரை பழைய நிலைக்கு மீட்டுக் கொண்டு வந்தோம். `உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய சில நேரம் அடம்பிடிக்கிறார்'னு அம்மா போன் பண்ணிச் சொல்லுவாங்க. நான் மாணிக்கம் அப்பாகிட்ட பேசுவேன். உடனே வாக்கிங் போயிட்டு அதை போட்டோ எடுத்து எனக்கு அனுப்புவார்." குரல் உடைகிறது மாலதிக்கு.

சில நிமிடங்கள் அமைதிக்குப் பின் மீண்டும் தொடர்ந்தார்.

மாணிக்க விநாயகம் குடும்பத்தினருடன்

``அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுச்சு. ஆரம்பத்துல பயந்தாலும், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து மீண்டு வந்தார். கொரோனா நேரத்துல வீட்டுக்குப் போக முடியாததால தினமும் வீடியோ கால்ல பேசிப்போம். போன வாரம் அவருக்குப் பிறந்தநாள். கொரோனா சூழல்ல நேர்ல போய் அவரை சிரமப்படுத்த வேண்டாம்னு தோணவே போன்லல் ஆசீர்வாதம் வாங்கினேன். சனிக்கிழமைகூட போன்ல பேசினேன். கம்பீரமான குரலில் பேசினார். அந்த கம்பீரம் காற்றில் கரையும்னு நினைச்சுக்கூட பார்க்கல.

மாணிக்கம் அப்பாவின் இறப்புச் செய்தியைக் கேட்டதுலருந்து, இது கனவா இருக்கக்கூடாதானு மனசு ஏங்கிகிட்டே இருக்கு. மரணம் எல்லார் வாழ்க்கையிலும் நிகழும் இயற்கையான விஷயம்னாலும், மனசுக்குப் பிடிச்சவங்களை இழக்கும்போது, கடவுள் மேல கோபம் வருது. இறுதிச்சடங்குல கலந்துக்கிறதுக்காக அவர் வீட்டுக்குப் போயிருந்தேன்.

Also Read: "`நான் உனக்கு மகனா பிறக்கணும்டா'னு என் கணவர்கிட்ட சொன்னார்!"- மாணிக்க விநாயகம் குறித்து ராஜலட்சுமி

என்னை எப்போதும் ஆசையாக வரவேற்கும் அவரின் கைகள் கட்டப்பட்டு, கண்ணாடி பெட்டிக்குள் இருந்துச்சு. எனக்கு மனசு பட, படனு அடிச்சு தலைசுத்த ஆரம்பிச்சிருச்சு, அவர் முகத்தை மட்டும் பார்த்துட்டுக் கிளம்பி வந்துட்டேன். உண்மையிலேயே இது பேரிழப்பு. இதுலேருந்து எப்படி மீண்டு வரப்போறேன்னு தெரியல. அவருடைய இசை மூலமா நம்முடன் அவர் வாழ்வார்னு நம்புவோம்" என்று விடைபெறுகிறார் மாலதி.



from விகடன்

Comments