எங்கே பார்த்தாலும் 'மாநாடு' பற்றிய பேச்சுதான். சிம்புவின் கம்பேக் படம், எஸ்.ஜே.சூர்யாவின் மாஸ் நடிப்பு என இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணமிருக்கின்றன. மாற்றி யோசிப்பதையே தன் யோசனையாக வைத்திருக்கும் வெங்கட் பிரபுவிடம் பேசினோம். 'மாநாடு' படம் பற்றி பல தெரியாத விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
'மாநாடு' படத்திற்கான அந்த ஐடியா தோன்றியது எப்படி?
"இந்தக் கதையை டைம் லூப் எல்லாம் இல்லாமல் வெறும் அரசியல் மாநாட்டை மட்டும் சம்பந்தப்படுத்தி ஒரு ஐடியாவா வெச்சிருந்தேன். 'பிரியாணி' படத்துக்கு முன்னால் கார்த்திகிட்ட இதைச் சொன்னேன். அவர் அப்பதான் அரசியல் சாயத்தோடு 'சகுனி' படம் பண்ணியிருந்தார். அதனால்தான் 'பிரியாணி' வேறு ஜானரில் உருவானது. அப்பறம் சிம்புக்கு 'பில்லா' ரீபூட் பண்ற ஐடியா இருந்தது. ஆனா, எனக்கு வேற ஏதாவது ஒண்ணு புதுசா பண்ணுவோம்னு தோனிச்சு. பழைய அரசியல் கதையில் டைம் லூப் வெச்சு ஒரு ஐடியாவா மட்டும் சிம்புகிட்ட சொன்னேன். இப்படித்தான் சிலம்பரசனின் 'மாநாடு' உருவாச்சு."
'மாநாடு' படத்துக்கு சிம்பு, எஸ்.ஜே.சூர்யா எவ்ளோ முக்கியமோ, அதே மாதிரி யுவனோட பங்களிப்பும் மாஸ் மீட்டரை எகிற வெச்சுது. குறிப்பா வில்லன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அவர் போட்ட அந்த பிஜிஎம். அது எப்படிச் சாத்தியமானது?
"யுவன்கிட்டே இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று ஒரு கோடு போட்டாலே போதும். அவனுடைய அனுபவம் அப்படி! யுவன் கை வைச்சாலே நல்ல ட்யூனும், பிஜிஎம்மும் வந்து கொட்டும். நான் அவன்கிட்டே எஸ்.ஜே.சூர்யா வரும்போது ஒரு தீம் மியூசிக் எப்பவும் தேவைப்படும் என்றுதான் சொல்லியிருந்தேன். அந்தப் பாத்திரம் வில்லனில் ஹீரோயிஸம் கலந்த மாதிரி இருக்கும்னு அவனுக்கு ஏற்கெனவே தெரியும். இவ்வளவு ஏன், எங்க மொத்த யூனிட் எல்லோருக்கும் இந்தக் கதை அப்படியே தெரியும். சில பேர் அதையே ரிவர்ஸாகக் கூட சொல்வாங்க. அவ்வளவு தூரம் கதையில் தெளிவு இருந்ததால்தான் இதெல்லாம் சாத்தியமாச்சு."
கொஞ்சம் ஏமாந்தாலும் குழப்பிவிடுகிற 'டைம் லூப்' கான்செப்ட் அமைஞ்ச இந்தக் கதையை படமெடுப்பதில் தயாரிப்பாளர் மற்றும் யூனிட்டுக்குத் தயக்கம் இருந்ததா?
"உண்மையைச் சொல்லணும்னா, எனக்கே இந்தப் படம் செய்வதில் கொஞ்சம் பயம் இருந்துச்சு. 'என்.ஜி.கே', 'சர்கார்' படம் எல்லாம் ரெடியாகி வந்திருந்த நேரம் அது. இதையும் ஒரு அரசியல் படமா பார்த்துடுவாங்களோனு ஒரு சின்ன பயம் இருந்துச்சு. அப்புறம்தான் 'டைம் லூப்' கான்செப்ட்ல இதை நுழைச்சோம். யூனிட்டில் எல்லோரும் இந்தக் கதையை ஏகமனதா ஏத்துக்கிட்டாங்க. மக்கள் இதை புரிஞ்சிக்கிட்டு ஏத்துக்குவாங்களானு ஒரு பயம் எனக்கு கொஞ்சமா இருந்துச்சு. அதனால ஸ்கிரிப்ட்ல கூடுதல் கவனம் செலுத்தினோம். தயாரிப்பாளர் விருப்பப்படி ஸ்டோரி போர்டுகூட ரெடி பண்ணோம். இதனால் ஒளிப்பதிவாளர் படத்தை எப்படித் தர வேண்டும் என்பதில் ஒரு நல்ல தெளிவுக்கு வந்தார். ஆக எந்தக் குழப்பமும் இல்லாம நடந்த படம்தான் இது. சிம்பு முன்னாடியிருந்த உடம்பை அப்படியே குறைச்சிட்டு வந்து, நம்ப முடியாத வகையில் நின்றார். அவரோட ஓட்டமும் நடையுமான பயணங்கள், வேகம் எல்லாவற்றிலும் சூடு பறந்துச்சு. அதுதான் 'மாநாடு' படத்தோட பலம்."
எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் அவருக்காக மட்டுமே உருவானதா? வேற யாரெல்லாம் மைண்ட்ல இருந்தாங்க?
"இல்ல, இந்த ரோலுக்கு அவர் முதல் சாய்ஸ் கிடையாது. பேன் இந்தியா படமா பண்ணனும்னு நினைச்சு, ரவி தேஜாவைதான் சந்திச்சு கதை சொன்னேன். அவருக்கும் இந்த ரோல் ரொம்பவும் பிடிச்சிருச்சு. ஆனா, அவருக்கிருந்த டேட்ஸ் பிரச்னையால அவரால நடிக்க முடியல. அப்பறம் பெங்களூர் போய் சுதீப்பைப் பார்த்தோம். அவருக்கும் இந்த ரோல் பிடிச்சிருந்தாலும், அதே டேட்ஸ் பிரச்னை! அப்பறம், அரவிந்த் சாமியை பார்த்து சொன்னேன். அன்னைக்கு அவருக்குப் பிறந்த நாள். அவர் சந்தோஷப்பட்டு, 'இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். எனக்கான பர்த்டே பரிசைக் கொடுத்துட்டீங்க'னு சொன்னார். ஆனால், எங்க படம் ஆரம்பிக்கக் கொஞ்சம் தாமதமானதால அவர் 'தலைவி'க்குள்ள போயிட்டார். அப்புறம்தான் எஸ்.ஜே.சூர்யாவை பார்த்து கதை சொன்னேன். கட்டிப்பிடிச்சிட்டு, 'கண்டிப்பா நடிக்கிறேன்'னு சொன்னவர் அன்னைக்கு இருந்தே அதில் அப்டேட்ஸ் செய்ய ஆரம்பிச்சிட்டார்.
கல்யாணி முதல் சாய்ஸ்தான். பிரேம்ஜி கூட வேண்டாம்னு ஆரம்பத்தில சேர்க்கலை. அப்பறம்தான் வந்தார். இப்போ இந்தப் படம் எந்தப் பிரச்னையுமில்லாம வெற்றிகரமா ஓடிட்டிருக்கு. இது எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. படம் தொடங்கறப்ப பிரச்னை, கொரோனா லாக்டௌன், படம் ரிலீஸ்ல பிரச்னை எனப் பல தடைகளைத் தாண்டி படம் வெற்றி அடைஞ்சிருக்கு. தமிழ் மக்களுக்கு கோடான கோடி வணக்கம்."
உங்களோட பத்துப்படங்களுமே வெவ்வேறு ஜானர்னு சொன்னாலும், உங்கள் படம்னா காமெடிதான் முதல்ல மைண்ட்ல வரும். நீங்க உங்களை எப்படிப் பார்க்கறீங்க?
"என்னை நகைச்சுவையான இயக்குநர்னு சொல்லுவாங்க. ஆனா, நான் அப்படியில்லைனு நினைக்கிறேன். முடிஞ்சவரை எல்லாக் கதைகளையும் இயல்பாகத்தான் சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன். 'சென்னை - 28' கூட ஒரு முழுமையான நகைச்சுவை படம் கிடையாது. விளையாட்டோட எல்லா பரிமாணங்களையும் சுலபமா சொல்ல முடியுமானு அதுல ட்ரை பண்ணிருக்கேன். அந்தப் படம் பார்த்துட்டு கிரிக்கெட் விளையாட்டை புரிஞ்சுகிட்டவங்க இங்க அதிகம் பேர் இருக்காங்க. எல்லாக் கதைகளுமே திட்டம்போட்டு பண்ணதுதான். ஆனால் ஏதோ நான் ஈஸியா ஷூட்டிங் ஸ்பாட் போய்தான் ஷாட் யோசிக்கிறேன்னு நினைக்கிறாங்க. ஷூட்டிங் போயிட்டு எதையும் சேர்த்து எடுக்கறதில்லை. வசனங்கள்ல மெருகு கூடும்... அவ்வளவுதான்."
'டைம் லூப்' ஐடியாவைத் தாண்டி நீங்கள் எடுத்துக்கொண்ட படத்தின் ஒன்லைனும் பாராட்டப்படுகிறது. அந்த அரசியல் முடிச்சு பற்றி?
"எனக்கு அரசியல் தெரியும். அதுல இறங்கறதில்லை. சமீபமா படத்தின் கதாநாயகர்கள் முஸ்லிமா காட்டப்படவே இல்லை. ஒரு சில படங்கள்தான் அப்படி வந்திருக்கு. கதைக்களத்திற்குச் சம்பந்தப்பட்ட எல்லாமே பேசினோம். கமர்சியல் கதைகளில் இதை பேச முடிந்தால் நல்லது அப்படினு எல்லாம் எதுவும் யோசிக்கல. கதைக்கு என்ன தேவையோ அது மட்டுமே வந்திருக்கு."
ரஜினி போன் பண்ணப்ப என்ன பேசினார்? அஜித் படம் பார்த்துட்டாரா?
"ரொம்ப நல்லாயிருக்குனு பாராட்டினார். எனக்கு மட்டுமில்லை. சிம்பு, தயாரிப்பாளர்னு எல்லார்ட்டயும் பேசியிருக்கிறார். 14 வருஷத்துக்கு முன்னாடி 'சென்னை 28' பார்த்துட்டு எங்கிட்ட பேசினார். அப்பறம், இப்போதான் பேசியிருக்கிறார். ரொம்ப சந்தோஷம்.
'மாநாடு' படத்தை தல அஜித் இந்த வாரத்தில் பார்ப்பார்னு நினைக்கிறேன். அவர் கமென்ட்ஸுக்கு வெயிட்டிங்!"
அடுத்தது என்ன?
"கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த வெற்றியை அனுபவிப்போம். மத்ததை அப்பறமா பார்த்துக்கலாம்."
from விகடன்
Comments