தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடன இயக்குநராகப் புகழ்பெற்றவர் கே. சிவசங்கர். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து, `அப்பா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது' என அவரின் மகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கர் மாஸ்டர், மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
சிவசங்கர் மாஸ்டர் கொரியோகிராப் செய்த, `மன்மதராசா' பாடல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாயாசிங். சமீபத்தில் சாயாசிங், சிவசங்கர் மாஸ்டருடன் நடனமாடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அவரின் மறைவையடுத்து சிவசங்கர் மாஸ்டருடனான தன்னுடைய பயணத்தை சாயாசிங் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
``மாஸ்டரின் இறப்புச் செய்தியை இப்போவரை நம்ப முடியல. சாயாசிங்னு ஒரு நடிகை இருக்கேன்னு மக்களுக்குத் தெரியப்படுத்தினதுல மாஸ்டருக்கு முக்கியான பங்கு இருக்கு. `மன்மதராசா' பாட்டுதான் இப்போவரை எனக்கான அடையாளமா சொல்லப்படுது. அந்தப் பாடலுக்கு டான்ஸ் கொரியோகிராப் பண்ணப்போறது ரொம்ப சீனியர்னு சொன்னாங்க. அதனால் ஆரம்பத்துல கொஞ்சம் பயமா இருந்துச்சு.
ஆனா, எங்களுடைய முதல் சந்திப்பிலேயே மாஸ்டர் ரொம்ப ஃபிரெண்ட்லினு புரிஞ்சுகிட்டேன். தான் ஒரு சீனியர்னு எந்த ஆட்டிடியூடும் காட்டினது இல்ல. மன்மதராசா பாடலுக்கு மாஸ்டர் ஸ்டெப் சொல்லிக் கொடுத்ததும், `இல்ல மாஸ்டர் இந்த ஸ்டெப் எனக்கு வராது'னு சொன்னேன். ரொம்ப பொறுமையா, `ஒரு முறை முயற்சி பண்ணிப்பாருங்க'னு சொன்னாரு. டான்ஸ்ல சொதப்பினாகூட, `நல்லா பண்றீங்க. இன்னும் அழகா பண்ண, இன்னொரு டைம் ட்ரை பண்ணலாம்'னு சொல்லுவாரு. ஸ்டெப் சரியா வரலைனு ஒருமுறை கூட கோபப்பட்டது கிடையாது. தனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், அதை வெளியில காட்டிக்க மாட்டார். எப்போதும் ஸ்மைலிங் ஃபேஸ்தான். முகபாவனைகளோடு அவர் ஆடுறதை பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கும். திருடா - திருடி படம் ஷூட் நடந்துட்டு இருந்தப்போ, நான் மாஸ்டரோட போன் நம்பரை வாங்காம விட்டுட்டேன். படம் ரீலிஸ் ஆகி, பாட்டு ஹிட் ஆனதும் அவருக்கு நன்றி சொல்லணும்னு தோணுச்சு.
`திருடா - திருடி' கன்னடத்துல ரீமேக் செய்யப்பட்ட போது மாஸ்டர்தான் கொரியோகிராப் பண்ணார். அப்போ மாஸ்டர்கிட்ட அந்தப் பாடல் ஹிட் ஆனதுக்காக நன்றி சொன்னேன். ரொம்ப கூலா, `அது உங்க உழைப்பு, நீங்க நல்லா ஆடுனாதான் எனக்குப் பெருமை'னு சொன்னார். புகழ் மீது எப்போதும் ஆசை இல்லாதவர். அடுத்தபடியா திருப்பாச்சி படத்துல, `கும்பிடப் போன தெய்வம்' பாட்டுக்கும் அவர்தான் எனக்கு மாஸ்டர். எல்லார்கிட்டயும் ரொம்ப அக்கறையா இருப்பார். மன்மதராசா பாடல் ஷூட் நடந்தப்போ, என்னையும் தனுஷ் சாரையும், அவர் பக்கத்துல உட்காரவெச்சு சாப்பிடச் சொல்லுவாரு. டான்ஸ் சொல்லிக்கொடுக்கும்போது, டிரெஸ், ஷூ எல்லாம் வசதியா இருக்கான்னு கேட்டுட்டுதான் பிராக்டிஸ் ஆரம்பிப்பார்.
Also Read: “ஒரு லட்சத்தை முழுசா பார்த்தது `மன்மத ராசா’ பாட்டுலதான்!”
ஒருமுறை, டைரக்டர் சார், ஒரு லொகேஷன் நல்லா இருக்கு, அங்க டான்ஸ் பண்ணி ஷூட் பண்ணிப்போம்னு சொன்னார். ஆனா மாஸ்டர், `அங்க ஆர்ட்டிஸ்டுக்கு வசதியா இருக்காது சார். எவ்வளவு அழகான இடமா இருந்தாலும், ஆர்ட்டிஸ்ட் வசதியா ஃபீல் பண்ணலைனா, அந்த டான்ஸ் நல்லா இருக்காது' னு எங்களுக்காகப் பேசுனார். மத்தவங்க இடத்துல இருந்து யோசிக்கிற நல்ல மனுஷன் அவர்.
ரொம்ப வருஷம் கழிச்சு மாஸ்டரை `ஆக்ஷன்' திரைப்பட ஷூட்லதான் பார்த்தேன். பார்த்ததும் பயங்கர ஹேப்பி ஆயிட்டேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். அப்புறம் மாஸ்டர் ஒரு ரீல்ஸ் பண்ணலாமானு கேட்டேன். உடனே ஓ.கே சொல்லிட்டார். அந்த வீடியோதான் சமூக வலைதளங்கள்ல வைரல் ஆச்சு. அந்த ரீல்ஸ் மாஸ்டர் எனக்கு கொடுத்த கிஃப்ட்டுனுதான் சொல்லணும்.
Also Read: "என் படத்துல கண்டிப்பா ஒர்க் பண்றேன்னு சொல்லியிருந்தார். ஆனா..." - சிவசங்கர் மாஸ்டர் குறித்து நவீன்
அவரோட மறைவு அதிர்ச்சியா இருக்கு. நாம் ஒரு நல்ல மனிதரை இழந்துட்டோம். நடனமாடின அவருடைய கால்களும், கண்களும் அமைதியா உறங்க இறைவனை வேண்டிக்கிறேன்" என்று விடைபெறுகிறார் சாயாசிங்.
from விகடன்
Comments