காயத்ரியும் சிவாவும் காதலிக்கும் விஷயத்தை சுந்தரிடம் சொல்வதற்காக காயத்ரி, சிவா, புனிதா மூவரும் சுந்தரை சந்திக்கிறார்கள். சுந்தரிடம் புனிதா முதலில் பேசுகிறாள். காயத்ரி மற்றும் சிவாவின் காதலை பற்றி சொல்கிறாள். சுந்தர் முதலில் கோபப்படுகிறான். தனக்கு கமிட்மென்ட் கொடுத்துவிட்டு இன்னொருவரை எப்படி காதலிக்கலாம் என்று கேட்கிறான். வீட்டில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் சுந்தரை திருமணம் செய்துக் கொள்ள காயத்ரி சம்மதம் தெரிவித்தது பற்றி புனிதா கூறுகிறாள். சுந்தர் தனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றும் ஆணாக இருந்தாலும் வீட்டில் ஒழுக்கமாக வளர்த்திருக்கிறார்கள் என்றும் சொகிறான். ’காயத்ரியை ஐந்து வருடமாக காதலித்து வீட்டில் முறையாக பெண் கேட்டுத்தானே திருமணம் செய்துக் கொள்ள வந்தேன்' என்று சொன்னதோடு "என்னைப் போன்ற ஒழுக்கமான பையன்களை உங்களுக்குப் பிடிப்பதில்லைதானே!" என்று கோபமாகக் கேட்கிறான்.
சுந்தருக்கு தான் மட்டும்தான் இந்த சமூகத்தில் சிறந்த ஆண் என்கிற எண்ணம் இருக்கின்றது. மது, புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் ஒழுக்கமானவர்கள் என்றும் காதலித்தாலும் அதை அந்தப் பெண்ணிடம் நேராகச் சொல்லாமல் 'அந்நியன்' திரைப்படத்தில் வரும் அம்பி கதாபாத்திரம் போல பெற்றோர்களிடத்தில் சொல்லி திருமணம் செய்து கொள்வது ஒழுக்கமான காரியம் என்றும் சுந்தர் நம்பிக் கொண்டிருக்கிறான். இதில் காயத்ரியின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை பற்றி யோசிக்கவும், காயத்ரிக்கும் சுந்தரின் மேல் இயல்பான காதல் இருக்கின்றதா என்பதை பற்றியும் அவன் கவலைப்படவே இல்லை.
தான் காயத்ரியை விரும்புவது காயத்ரிக்கு இடும் தானம் என்பதைப் போல சுந்தர் நடந்து கொள்கிறான். அதேபோல இவ்வளவு ஒழுக்கமான, வசதியான ஆண் கணவனாகக் கிடைக்க காயத்ரி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் தன்னை எப்படிப் பிடிக்காமல் போகும் என்றும் சுந்தர் எண்ணுகிறான். சுந்தர் மட்டுமல்லாமல் அவனது குடும்பமும், காயத்ரியின் குடும்பமும் கூட இதே எண்ணத்தில்தான் இருக்கின்றனர். ஆனால் காயத்ரிக்கு சுந்தரின் அதீத அன்பே சித்ரவதையாக இருக்கின்றது. காரணம் காயத்ரி சொல்வதைப் போல சுந்தர் அவளை ஒரு கடையில் விலை கொடுத்து வாங்கிய பொருளை போல பயன்படுத்துகிறான். தான் சொன்னதை செய்யும் ஒரு ரோபோவாக, தனக்கு பிடித்த ஒரு பொம்மையாக காயத்ரியை சுந்தர் நடத்துகிறான். சுந்தர் காயத்ரிக்கு வேலைக்குச் செல்ல அனுமதி வாங்கிக் கொடுத்தது, தனி வீடு பார்த்துக் குடி வைத்தது... இவை அனைத்துமே காயத்ரிக்காக தான் எதையும் செய்பவன் என்றும், காயத்ரியின் கனவுக்குத் துணையிருப்பவன் என்றும் காட்டிக் கொள்ள மட்டும்தான். மற்றபடி காயத்ரியின், விருப்பம், சுதந்திரம் பற்றிய தெளிவு சுந்தரிடத்தில் இல்லை.
காயத்ரி தனக்கு சுந்தருடன் இருப்பது பயமாக இருக்கிறது என்றும், சுதந்திரமே இல்லாமல் மூச்சு முட்டுவது போல் இருப்பதாகவும் சுந்தரிடம் சொல்கிறாள். அதேசமயம் காயத்ரிக்கு என்ன பிடிக்கிறது என்றும் அவளது விருப்பம் என்ன என்றும் சிவா நேரம் ஒதுக்கி கவனிப்பதாகவும் அதைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்வதாகவும் அதனால் தன்னை அறியாமல் சிவாவின் மீது தனக்கு ஈர்ப்பு வந்தது என்றும் காயத்ரி சொல்கிறாள்.
பாகற்காய் உடலுக்கு நல்லது என்று அரைமணி நேரம் பாடம் எடுத்து காயத்ரிக்குப் பிடிக்காத உணவை சுந்தர் உண்ணச் செய்கிறான். காயத்ரிக்கு மாதவிடாய் சமயத்தில் உடல் சோர்வை புரிந்து கொள்ளாமல் அவனுடைய அம்மா, அக்காவை ஒப்புமைப்படுத்தி அவர்களை போல் காயத்ரியும் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறான். பிடிக்காததை உண்ண செய்வது, உடல்நலம் இல்லை என்றாலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, எப்போது தூங்க வேண்டும், எப்போது உண்ண வேண்டும் என்பது முதற்கொண்டு சுந்தர் தீர்மானிக்கும் நேரத்தில்தான் காயத்ரி அதை செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறாள்.
இவையெல்லாம் சிறிது சிறிதாக காயத்ரிக்கு தான் தானாகவே இல்லை என்கிற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது. காயத்ரிக்கு உடல்நலமில்லாமல் இருக்கும்போது அவளுக்குப் பிடித்த உணவு என்ன என்று ஞாபகம் வைத்து கேன்டீனில் வாங்கி வருவதாகச் சொல்கிறான். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரணமாக தெரிந்தாலும் நம்மோடு காலம் முழுவதும் வாழப்போகும் ஒருவருக்கு இந்த அடிப்படை அக்கறை கூட இல்லை என்றால், எப்படி நேர்மையாக மற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை ஏற்படும்?
காயத்ரி சிவாவை விரும்புவதாக சிவாவுடன் வெளிப்படையாக பேசிய அன்றே சுந்தரிடம் அதை கூறுவது பாராட்டுக்குரியது. சுந்தர், இதைத் தன்னால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தன்னுடையது 5 ஆண்டு காதல் என்றும், காயத்ரியை தவிர இன்னொரு பெண்ணை வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் சொல்கிறான்.
ஒருவர் தான் காதலிப்பவரை திருமணம் செய்ய முடியாவிட்டால் அதற்காக வாழ்க்கையில் வேறு யாரையுமே நினைத்துப் பார்க்க மாட்டேன் என '96' திரைப்படம் ராம் கதாபாத்திரத்தை போல் இருப்பது பெருமைக்குரிய விஷயம் இல்லை. உண்மையில் அப்படி இருப்பது அபத்தம். இந்த வாழ்க்கை மிகச் சிறியது. யாருக்கும், எதுவும், எந்த நேரமும் நிகழலாம் என்கிற சூழலில் காதலித்த ஒருவரை நினைத்துக் கொண்டே வேறு யாருடனும் சேர்ந்து வாழ மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து தனித்திருப்பது காதலுக்குச் செய்யும் மரியாதை என்று நினைத்துக் கொண்டு தமக்கு தாமே தண்டனை கொடுத்துக் கொள்கின்றனர். வாழ்க்கையையும் காதலையும் அவ்வளவு கடினமாக்கி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
Also Read: AKS 70: அலெக்ஸா உடைத்த காதல் ரகசியம்; முற்போக்கு மாயாவின் முதிர்ச்சி சராசரி சுந்தருக்கும் இருக்குமா?
காதலித்த ஒருவரை மறக்கவே முடியாமல் இன்னொருவர் பற்றி யோசிக்காமல் காதலித்தவருடன் வாழ்ந்த நாள்களை எண்ணி மகிழ்ச்சியாக வாழ முடிகிறவர்களையும் பார்த்திருக்கிறோம். அது வேறு. ஆனால் சுந்தர், காயத்ரி - சிவாவின் காதலை மனமுவந்து மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏமாற்றத்தில், துன்பத்தில்தான் அங்கிருந்து வெளியேறுகிறான். அப்படி இருக்கும்போது காயத்ரியை நினைத்துக்கொண்டே வாழ்வேன் என்று காயத்ரியிடம் சொல்வது கூட காயத்ரியை பிரிந்தும் அவளைச் சித்திரவதை செய்வது போலத்தான். சுந்தர் இப்படிச் சொல்வது காயத்ரிக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தலாம். அது காயத்ரியின் வாழ்க்கையையும் நிம்மதி இல்லாமல் செய்துவிடும். சுந்தருக்கு இப்போதும்கூட காதல் என்றால் என்னவென்று தெரியவில்லை. காதலின் மிக அடிப்படையான விஷயம் நாம் காதலிப்பவரை எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது அல்லது குறைந்தபட்சம் அவர்கள் மகிழ்ச்சியை காதலின் பெயரால் கெடுக்காமல் இருப்பது.
காயத்ரியை சுந்தர் நினைத்துக் கொண்டே இருப்பதுதான் காதல் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறான். காதலுக்கு இவ்வளவு புனிதத்தன்மை தேவையில்லை. காதல் இயற்கையானது. இயல்பாகத் தோன்றக் கூடியது. அதை கடவுள் போல ஆராதனை செய்து எங்கோ உயரத்தில் தூக்கி வைத்துவிட்டு பிறகு காதலுக்காக சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பரத் தனக்காக புனிதா ஏற்பாடு செய்திருக்கும் வங்கிக் கடனை வேண்டாம் என்று சொல்வதற்காக வங்கிக்குச் செல்கிறான். வங்கி மேலாளர் பரத்திடம் அவ்வாறு செய்ய இயலாது என்பதை சொல்கிறார். மேற்கொண்டு புனிதாவிடம் பேசிக் கொள்வதாகச் சொல்கிறார்.
புனிதா மற்றும் காயத்ரி, சுந்தரைச் சந்திக்க வந்தபோது, அவர்களிடம் ஏன் மழையில் நிற்கிறீர்கள் என்று கேட்பான். இறுதிவரை அந்தக் கேள்விக்கு யாரும் விடை சொல்லவில்லை. நமக்கும்கூட காரணம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது. அடுத்த எபிசோடில் சொல்வார்களா?
காத்திருப்போம்!
from விகடன்
Comments