AKS 70: அலெக்ஸா உடைத்த காதல் ரகசியம்; முற்போக்கு மாயாவின் முதிர்ச்சி சராசரி சுந்தருக்கும் இருக்குமா?

மாயா சிவாவையும், காயத்ரியையும் ரெஸ்டாரன்ட் வரவைத்து அவர்கள் மனதில் இருப்பதை பேச வைக்கிறாள். சிவாவை காயத்ரிக்கு ப்ரொபோஸ் செய்யச் சொல்லி சொல்லும் மாயா, சிவாவின் கையில் பூவைக் கொடுத்து காயத்ரிக்குக் கொடுக்கச் சொல்கிறாள்.

சிவா காயத்ரியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறான். காயத்ரி தன் தந்தையின் ஞாபகம் வந்து பயத்தில் எழுந்து நிற்கிறாள். அதைக் கண்டு சிவா நீட்டிய பூவை மாயா வாங்கிக் கொள்ள முயற்சி செய்ய, காயத்ரி வேகமாக அதை வாங்கிக் கொள்கிறாள். காயத்ரி மிகவும் பயந்துபோய் இருக்கிறாள் என்பதால் அவளை எங்காவது அழைத்துச் செல்லும்படி சிவாவிடம் மாயா சொல்கிறாள்.

சிவாவும் காயத்ரியும் தனியாகப் பேசுகின்றனர். காயத்ரி மாயாவின் பெருந்தன்மையையும், மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனதைப் பற்றியும் பெருமையாக சிவாவிடம் சொல்கிறாள். தன்னால் கூட மாயாவை போல் பெருந்தன்மையாக நடந்துகொள்ள முடியாது என்கிறாள். மாயா புரிந்து கொண்டதைப் போல சுந்தரும் தங்கள் காதலை புரிந்துகொள்ள வேண்டுமென காயத்ரி எதிர்பார்ப்பதாக சிவாவிடம் சொல்கிறாள்.

AKS - 70

சிவா சொல்வதைப் போல மாயா வளர்ந்த விதமும், சூழ்நிலையும் வேறு. சுந்தர் ஒரு சராசரி ஆண். அவனுக்கு தான் காயத்ரியின் மீது வைத்திருக்கும் காதல் மிக உண்மையானது. பெரியதும் கூட. அவனால் மாயாவைபோல அவ்வளவு எளிதாக அவனது காதலை விட்டுத் தர முடியாது. ஏற்கெனவே புனிதாவின் வீட்டில் ஆண்களுடன் காயத்ரி ஒரே வீட்டில் தங்கி இருந்ததற்குக் கோபப்பட்ட சுந்தர், அதிகம் செலவு செய்து தனியாக வீடு பார்த்து, துணைக்கு ஆள் ஏற்பாடு செய்து காயத்ரியை குடி வைத்திருக்கிறான். அப்படியிருக்கும் சுந்தருக்கு காயத்ரி சிவாவை காதலிக்கிறாள் என்று தெரிந்தால் அவனால் அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்வளவு நாள்கள் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது காயத்ரி அமைதியாக இருந்ததை எல்லாம் வைத்து அவள் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொள்வான். தினமும் சுந்தர் காயத்ரியை அலுவலகத்தில் கொண்டு போய் விடுவது, வீட்டில் வந்து பேசிக் கொண்டிருப்பது, அவளுடன் ஜாக்கிங் செல்வது என காயத்ரி சுந்தருடன் இருக்கும் தருணங்களில் எல்லாம் அவள் அவனைக் காதலிப்பதாக சுந்தர் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

காயத்ரி சிவாவை மறக்கவும் அவனை விட்டு விலகவும் எவ்வளவோ போராடினாள். ஆனால், அவனது காதல் எல்லாவற்றையும் தாண்டி அவனைத் தேடிப் போய் நிற்கச் செய்திருக்கிறது. காயத்ரிக்கு சிவாவை பிடித்திருக்கிறது என்று தெரிந்தவுடன் காயத்ரி சுந்தருடன் பேசுவதை நிறுத்தியிருக்க வேண்டும். அவளால் அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவு அவள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள்.

காயத்ரி சுந்தரிடம் உண்மையை சொல்லி அங்கிருந்து வெளியேற வேண்டும் என்கிற விஷயத்தைப் பற்றி யோசிக்கவில்லை. காயத்ரி சிவாவை நினைத்துக் கொண்டு சுந்தருடன் பேசுவது தனக்கு மிகவும் அவஸ்தையாக இருந்ததாக சிவாவிடம் சொல்கிறாள்.
AKS - 70
சிவா மாயாவிடம் உணராத காதலை காயத்ரியிடம் உணர்ந்ததாகச் சொல்கிறான். காயத்ரியை காணாத இரண்டு நாள்கள் அவன் தவித்துப் போனபோதுதான் காதலின் தீவிரத்தைப் புரிந்து கொண்டதாகச் சொல்கிறான்.

மாயா சிவாவைக் காதலிப்பதாகச் சொன்னபோது சிவா தன்னையும் ஒரு பெண் காதலிக்கிறாள் என்று அவளை ஏற்றுக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் மாயாவை காணவேண்டும் என ஏங்கவோ காத்திருக்கவோ இல்லை. காயத்ரியின் காதலால்தான் சிவா தான் மாயாவிடம் 'சின்சியராக' இல்லை என்பதை புரிந்துக் கொண்டிருக்கிறான். காதல் அதன் போக்கில் இயல்பாக ஏற்படுவது என்பதையும், எவ்வளவு புறத் தடைகள் இருந்தாலும் மனம் அதன் போக்கில் காதலியைத் தேடி ஓடும் என்பதையும் சிவா - காயத்ரியின் காதல் நிரூபித்திருக்கிறது.

பாண்டியன் பொற்கொடியின் தந்தையை சந்திப்பதற்காக கிளம்பிச் செல்கிறான். கவிதாவுக்கு வருத்தமாக இருந்தாலும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. பாண்டியன் சென்ற பிறகு கவிதா தனிமையில் இருப்பதாக உணர்கிறாள். அவள் அலெக்ஸாவிடம் பேசுகிறாள். தன்னுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்ல முடியுமா என்று கேட்கிறாள். அலெக்ஸா முயற்சி செய்வதாகச் சொல்கின்றது. கவிதா அலெக்ஸாவிடம் தான் பாண்டியனை விரும்புவதை பற்றி சொல்கிறாள். பெங்களூரிலிருந்து கவிதா பாண்டியனிடம் பேசும்போது பாண்டியனும் கவிதாவை விரும்புவதைப் போல பேசியதாகவும் ஆனால் நேரில் வரும்போது பொற்கொடியை காதலிப்பதாகச் சொன்னதும் குழப்பமாக இருக்கிறது என்று கவிதா அலெக்ஸாவிடம் சொல்கிறாள்.

AKS - 70

அலெக்ஸா ஏற்கெனவே பாண்டியன் பேசி பதிவு செய்து வைத்திருந்ததை கவிதாவின் பேச்சுக்கு தொடர்புடையது என்று கருதி அதை ப்ளே செய்து காட்டுகிறது. அதைக் கேட்டு கவிதா மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். கவிதா பாண்டியனுக்கு அழைக்கிறாள். பாண்டியன் கவிதாவின் காலை கட் செய்கிறான். கவிதா தான் மீண்டும் மீண்டும் தவறு செய்வதாக எண்ணுகிறாள். கவிதாவும் பாண்டியனும் மற்ற விஷயங்களில் மிகவும் தெளிவானவர்களாகவும் மன முதிர்ச்சியுடனும் நடந்து கொண்டாலும் இன்னமும் தங்களது காதல் விஷயத்தில் முடிவெடுக்கத் தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக அவசரத்தில் பல தவறுகளைச் செய்கிறார்கள்.

Also Read: AKS 69: காதலை முகமூடி போட்டு மறைக்க முடியுமா? அரேஞ்ச்டு மேரேஜ் என்றால் காதல் தன்னால் வந்துவிடுமா?

இதுவரை அவர்கள் இருவரிடையே நடந்த எல்லாமே அவசர அவசரமாக நடந்து முடிந்த காரியம்தான். இவ்வளவுக்குப் பிறகும் பொற்கொடி காதல் விஷயமாக பாண்டியன் அவள் தந்தையை சந்திக்கச் சென்று இருப்பது தெரிந்தும் கவிதா பாண்டியனிடம் தன்னுடைய காதலைப் பற்றி பேச அழைக்கிறாள். கவிதா ஆரம்பத்திலிருந்தே தன்னை பிரதானமாக யோசிக்கும் சுயநலவாதியாக இருக்கிறாள்.

AKS - 70

ராஜேஷ் காதல் சொல்லும்போது, பிறகு ராஜேஷுடன் காதலில் இருந்து கொண்டு பாண்டியனைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தபோது, பாண்டியன் பொற்கொடியை காதலிப்பது தெரிந்து மீண்டும் ராஜேஷிடம் சென்று அவன் காதலை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னபோது, இப்போது எல்லாம் முடிந்து பொற்கொடியின் தந்தையை சந்திக்கச் சென்றிருக்கும் பாண்டியனுக்கு கால் செய்யும்போது என அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவிதா தான் நினைத்ததை நினைத்த உடன் செய்ய வேண்டும் என்று தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவளாக இருக்கிறாள்.

கவிதாவின் காதல் பாண்டியனுக்குத் தெரிய வருமா?
சிவா காயத்ரியின் காதலை சுந்தர் எப்படி எதிர்கொள்வான்?

காத்திருப்போம்!



from விகடன்

Comments