டிரைபல் பஞ்சாயத்து நேற்று பல திருப்பங்களுடன் நடந்தது. பலிபீடத்தின் கடைசி நொடியில் இனிகோ தப்பித்தது ஒரு முக்கியமான திருப்பம். அதிர்ஷ்டம் அவருக்குக் கைகொடுத்தது.
ஐஸ்வர்யாவின் தராசு நேற்று மிகவும் எதிர்பக்கமாக சாய்ந்தது. அவர் சில வார்த்தைகளைத் தவறான புரிதலுடன் எடுத்துக் கொண்டு உணர்ச்சி வசப்படுகிறார். அது தெளிவாக்கப்பட்டு விட்டாலும் கூட மனதின் புகைச்சலை அவரால் அடக்க முடியவில்லை. எனவே எதையாவது பதிலுக்குச் சொல்லி எதிராளியை மடக்க நினைக்கிறார். ஐஸ்வர்யாவின் இந்த முதிர்ச்சியின்மையை அர்ஜுன் சூசகமாக நேற்று சுட்டிக் காட்டினார்.
“நான் ஓப்பனா பேசிடுவேன்” என்கிற காரணத்தை வைத்துக் கொண்டு எதிர்தரப்பை மிகவும் மலினமான வார்த்தைகளில் எள்ளி நகையாடுவதை இனிகோ ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார். விஜி உதவிக்கு வந்து சொல்வது போல ‘அது கிராமத்து மொழி, அவர் வெள்ளந்தி’ என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்ட முடியாது. அது கிராமவாசியோ, நகரவாசியோ ஒருவருக்கு அன்றாட வாழ்க்கையில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. அதிலும் கேமராக்கள் கண்காணிக்கும் நிகழ்ச்சியில் கூடுதல் கவனம் தேவை. நேற்றைய பஞ்சாயத்தின் மூலம் இனிகோ அந்தப் பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கக்கூடும்.
சர்வைவர் 78-ம் நாளில் என்ன நடந்தது?
‘இம்யூனிட்டி சவாலில்’ விஜி வென்று தன் நிலையை பாதுகாத்துக் கொண்டதால் எலிமினேஷன் பலிபீடத்திற்கு யாரை அனுப்பலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். வேறு யார்? வேடர்களின் கை இப்போது ஓங்கியிருப்பதால் ‘இனிகோ’வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இந்த விஷயத்தை விஜி, நாராயணனிடம் சொல்லும்போது “இது உங்களோட தனிப்பட்ட கருத்து” என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார். அவர் இப்போது இனிகோவிடம் இணக்கம் காட்டுகிறார்.
அர்ஜுன் தெளிவாக்கியும் கூட ‘கேரக்டர்’ என்கிற வார்த்தையை வைத்து அம்ஜத்தும் இனிகோவும் உருட்டிக் கொண்டிருந்தார்கள். அர்ஜுனின் முன்னால் ஐஸ்வர்யாவிற்கு அம்ஜத் சப்போர்ட் செய்த கோபம் இனிகோவிற்கு இருந்தது. “பிரதர்... நீங்க அந்த வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று மட்டுமே சொன்னேன். தவறான பொருளில் சொன்னீர்கள் என்று நானும் சொல்லவில்லை" என்பதை இனிகோவிற்கு புரியவைப்பதற்காக அம்ஜத் மிகவும் மல்லுக்கட்டினார்.
சரணுக்கு பதிலாக ஐஸ்வர்யா ஏன் வெளியே போனார் என்கிற கேள்விக்கு அம்ஜத்தின் மீது விஜி குற்றம் சாட்டினார். இதற்கு அம்ஜத் பதிலளிக்க முயலும் போது “இதை விக்ராந்த் & டீம் இருக்கும் போதுதான் பேச முடியும். அவங்களும் வரட்டும்” என்று இனிகோ சொல்ல, இந்த வாக்குவாதம் தற்காலிகமாக ஓய்ந்தது.
“இனிகோ என் மனதை கஷ்டப்படுத்தினார். இப்ப அழுதேன். ஆனால் அடுத்த முறை கதையை முடிச்சிடுவேன்” என்று அம்ஜத்திடம் ஆங்காரமாகச் சொன்னார் ஐஸ்வர்யா. ‘வார்த்தைகளை விடக்கூடாது’ என்று இனிகோவிற்கு புத்தி சொல்லும் ஐஸ்வர்யா தானும் அதைப் பின்பற்ற வேண்டும். ‘கதையை முடிச்சுடுவேன்’ என்றால் ஆட்டத்தில் வென்று விடுவேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் அதில் வேறு விபரீதமான அர்த்தமும் தொனிக்கிறது. அந்த நோக்கில் ஐஸ்வர்யா சொல்லியிருக்க மாட்டார்தான். ஆனால் ‘கேரக்டர்’ வார்த்தை மாதிரி இதுவும் பஞ்சாயத்தானால் ஐஸ்வர்யா என்ன செய்வார்?
“நாம சேர்ந்து இனிகோவிற்கு எதிராத்தான் வாக்களிக்கணும்” என்று அம்ஜத் மற்றும் நாராயணினிடம் அழுத்தம் திருத்தமாக சொன்னார் ஐஸ்வர்யா. ஏறத்தாழ ஓர் ஆணை போலவே அது இருந்தது. ஆக... காடர்கள் இதுவரை செய்த எண்ணிக்கை அரசியலை வேடர்களும் செய்கிறார்கள் என்றே பொருள். இனிகோவின் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தை வைத்துக் கொண்டு அவருக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்வதும் மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்துவதும் முறையற்றது. 'இது தனிநபர் ஆட்டம். நாங்கள் முடிவு செய்கிறோம்' என்று எதனால் அம்ஜத்தாலும் நாராயணனாலும் சொல்ல முடியவில்லை? இனிகோவிற்கு எதிராக வாக்களிக்க நாராயணன் அரைமனதாகவே சம்மதித்தார் என்பது நன்றாகவே தெரிகிறது.
“நான் யார்கிட்டயும் போய் கெஞ்சிட்டிருக்க மாட்டேன். நடக்கறது நடக்கட்டும்” என்று கெத்தாகச் சொன்னார் இனிகோ. “நம்மளுக்கு சப்போர்ட் குறைவுன்ற தைரியத்துல அம்ஜத் ஆடறார். கோபமா வருது” என்றார் விஜி.
டிரைபல் பஞ்சாயத்து துவங்கியது. ஒவ்வொரு முறையும் இதன் பின்னுள்ள டெக்னிக்கல் டீமை பாராட்டத் தோன்றுகிறது. அத்தனை அழகான பின்னணி, லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவு என்று அசத்துகிறார்கள்.
“விஜி... இம்யூனிட்டி ஜெயிச்சிட்ட மலர்ச்சி முகத்துல தெரியுதே?” என்று சிரித்தார் அர்ஜுன். “ஆமாம் சார். ரொம்ப சிக்கலான இடத்துல இருந்தேன். நான் தனி ஆள். பயந்துட்டே இருந்தேன்” என்று விஜி சொல்ல “இனி எல்லோரும் இங்க தனி ஆள்தான்" என்கிற செய்தியை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
“சோல் சர்வைவர்-ன்ற திசையை நோக்கி கேம் நகருது. இன்னமும் உங்க பழைய பஞ்சாயத்துக்களை சுமந்துக்கிட்டு இருக்காதீங்க. பாதை கடினமாயிடும்” என்பது அர்ஜுனின் உருப்படியான ஆலோசனை.
“இந்தப் பாட்டுப் பஞ்சாயத்து பெரிசா போயிட்டு இருக்கு போலயே. ‘தீமைதான் வெல்லும்’ல துவங்கிச்சு இல்லையா?” என்று அந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்தார் அர்ஜுன். “அவங்களுக்கு உடம்பு சரியில்ல. கேரக்டர்ன்ற வார்த்தையை நான் தப்பா சொல்லல. ஓப்பனா பேசிடற கேரக்டர் நான்" என்று பழைய பல்லவியை மறுபடியும் ஆரம்பித்தார் இனிகோ.
“சார். நான் அப்ப பாடினதுகூட நீங்க கேட்டதால்தான்” என்று ஐஸ்வர்யா தெளிவுப்படுத்த, “ஆமாம்... அது என் தப்புதான்” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் அர்ஜுன். இந்த விஷயம் அங்கேயே தெளிவாக்கப்பட்டும் ‘அவங்களுக்கு உடம்பு சரியில்லை’ என்கிற அனுதாப அலையை இனிகோ மீண்டும் மீண்டும் ஏற்படுத்துவது முறையல்ல.
‘கேரக்டர்’ வார்த்தை பிரச்னை மறுபடியும் எழுந்தது. “இனிகோ வெகுளியா சொன்னதை ஐஸ்வர்யா தப்பா எடுத்துக்கிட்டார்” என்று விஜி சாட்சிக்கு வந்தார்.
“ஓகே... அன்னிக்கு டபுள் எலிமினேஷன் நடந்தது. ஐஸ்வர்யா, சரண் வெளியே போனாங்க. இதுல கேமராக்கு பின்னாடி சில விஷயங்கள் நடந்தது. இது புகைஞ்சிக்கிட்டே இருக்கு. இதைப் பத்தி யாராவது தெளிவா சொல்லுங்க” என்று அடுத்த தலைப்பிற்குள் போனார் அர்ஜுன்.
"நான் சொல்றேன் சார்” என்று ஆரம்பித்தார் விஜி. “நந்தா இம்யூனிட்டி சவாலில் வென்ற சமயத்தில் ‘சரணை வெளியேற்றலாம்’ என்று கூட்டத்தில் முடிவெடுத்தார்கள். இதற்கு நந்தாவும் ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் திரும்பி தனியாக யோசித்துவிட்டு ‘சரணுக்கு எதிராக வாக்களிக்க மாட்டேன். என் முடிவுப்படிதான் செயல்படுவேன்’ என்று அம்ஜத்திடம் தெளிவாக சொல்லி விட்டார். இதை கேமராவின் முன் சொல்ல அவருக்கு தயக்கம்.
ஆனால் அம்ஜத் இந்த விஷயத்தை காடர்களிடம் வந்து சொன்ன போது ‘நந்தா சரணுக்கு எதிராக வாக்களிக்க மாட்டாராம்’ என்கிற பாதி விஷயத்தைத்தான் சொன்னார். எனவேதான் காடர்கள் குழம்பி தங்களின் உத்தியை மாற்ற, அந்த எண்ணிக்கை விளையாட்டானது குறி தவறி ஐஸ்வர்யாவின் மீது பாய்ந்திருக்கிறது” என்று விஜி விளக்கியதை எவ்வளவு தூரம் நம்பமுடியும் என்று தெரியவில்லை.
ஓகே. நந்தா எதற்காக பின்னர் மனம் மாறினார்? அவர் கூட்டத்தில் அரைமனதாக ஒப்புக் கொண்டாலும் திரும்பி வந்து யோசித்துப் பார்த்த பிறகு, “ஒரு சின்ன பையன் மன்னிப்பு கேட்ட பிறகும் இவர்கள் ஏன் விடாமல் அவனை குற்றம் சுமத்துகிறார்கள்?” என்கிற அனுதாபம் அவரின் மனதில் எழுந்தது. எனவே “நான் சரணிற்கு எதிராக வாக்களிக்க மாட்டேன். என் முடிவுப்படியே செயல்படுவேன்” என்று அம்ஜத்திடம் தெளிவாகக் கூறி விட்டார்.
அடுத்ததாக ஒரு வில்லங்கமான விஷயத்தை கையில் எடுத்தார் அர்ஜுன். சரண் – ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட விவகாரம். அவர்களுக்குள் உள்ள உறவு நட்பா, காதலா?
இது தொடர்பாக விஜி அளித்த சாட்சியம் அதிர்ச்சி தருவதாக இருந்தது. “சரண் காடர்கள் அணியில் இருந்த போது ‘அக்கா... அக்கா’ன்னு என்கிட்ட க்ளோஸா இருந்தான். 'ஐஸ்வர்யாவை லவ் பார்க்கறேன்க்கா. வொர்க் அவுட் ஆகும் போல இருக்கு’ன்னு சொன்னான். “டேய். உனக்குத்தான் வெளியில ஏற்கெனவே ஒரு ஆள் இருக்கேன்னு கேட்டேன். 'அதெல்லாம் அவ கால்ல விழுந்து சமாளிச்சுடுவேன். அது மட்டுமில்லாம ஷோவுக்குள்ள யாரையாவது காதலிக்கறா மாதிரி நடிக்கணும்னா அதைச் செய்' என்று காதலிதான் பர்மிஷன் தந்தாராம்.” – இந்த வாக்குமூலத்தை விஜி சொல்லி முடித்தபோது நமக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“சரண் அப்படிச் சொன்னாரா?” என்று மெல்லிய அதிர்ச்சியுடன் கேட்டார் அர்ஜுன். இதற்கு ஐஸ்வர்யாவின் எதிர்வினை முதிர்ச்சியாக இருந்தது. “இந்த விஷயத்தை அம்ஜத் எங்கிட்ட சொல்லிட்டார். ஆனால் சரண் இதுவரை என்னிடம் ஒருதுளி கூட தப்பான நோக்கத்தில் பழகவில்லை” என்று ஐஸ்வர்யா அளித்த சாட்சியம் சரணுக்கு மிகவும் ஆதரவாக இருந்தது.
“இதை அம்ஜத் வழியாக கேட்ட அன்னிக்கு அழுதீங்களா... அப்ப விஜி சொல்றது பொய்யா?” என்றெல்லாம் அர்ஜுன் வாயைக் கிளற, “விஜி சொல்றதை நம்பறேன் சார். அவங்க ஏன் பொய் சொல்லணும்?” என்றார் ஐஸ்வர்யா.
“அன்னிக்கு ஐஸ்வர்யா அழுதிட்டு இருந்தாங்க. எனக்கு அவங்க கூட பேசப்பிடிக்காது. இருந்தாலும் மனசு தாங்காம 'ஏன் அழுவறேன்'னு கேட்டேன். ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா டிரைபல் பஞ்சாயத்துல வந்து சரணுக்கு ஆதரவாத்தான் வாக்களிச்சாங்க” என்று தன் தரப்பை விளக்கினார் இனிகோ.
கேமராவிற்கு பின்னால் பேசிய இந்த விஷயங்கள் சபைக்குள் வந்ததால் ஐஸ்வர்யா சங்கமடைந்தார். எனவே தானும் பதிலுக்கு ஒன்றை சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரும் ஒரு வெடிகுண்டை தூக்கிப் போட்டார். “ஒரு பொண்ணு பத்தி இனிகோ தப்பா பேசியிருக்காரு. ஆனா அது என்னன்னு சொல்ல மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ஐஸ்வர்யா.
‘அடிச்சுக் கூட கேட்பாங்க. சொல்லிடாதீங்க’ காமெடி மாதிரி இது ஒரு சிக்கலான வாக்குமூலம். ஒரு புகாரை சொல்லிவிட்டு அது தொடர்பான முழு விவரத்தையும் தராமல் இருந்தால் ஒருவர் குற்றவாளியா, இல்லையா என்கிற சந்தேகத்தை பார்ப்பவருக்கு தந்துவிடும். அர்ஜுன் தொடர்ந்து வற்புறுத்தியும் அந்த விஷயத்தை சொல்ல மறுத்துவிட்டார் ஐஸ்வர்யா.
ஆனால், இந்த விவகாரத்தை மற்றவர்களின் வாக்குமூலத்தில் இருந்து தேடிப் பிடித்தார் அர்ஜுன். ஒரு டாஸ்க்கில் லட்சுமியை A வடிவ உயர கோபுரத்தில் பிடித்து தூக்கிவிட நேர்ந்த சம்பவம் தொடர்பாக கேமராவின் பின்னால் இனிகோ கொச்சையாக ஏதோ சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. இதைத்தான் ஐஸ்வர்யா சுட்டிக் காட்ட விரும்புகிறார். “இனிகோ கிராமத்து வழக்கில் சொன்னது அது. வில்லங்கமான நோக்கத்தில் இல்லை” என்று மறுபடியும் சாட்சியத்திற்கு வந்தார் விஜி. “சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால் கூட அத்தனை விபரீதமாகத் தோன்றாது. ஆனால், தமிழில் சொன்னால் அனர்த்தமாகி விடும். இதுதான் இந்த தவறான புரிதலுக்கு காரணம்” என்று விஜி சொன்னதை நாராயணனும் வழிமொழிந்தார்.
“என்னம்மா ஐஸ்வர்யா... உங்க புரிதல் தப்புன்ற மாதிரிதான் இருக்கு” என்று அர்ஜுன் சற்று கோபமாகக் கேட்க, “வார்த்தைகளை உபயோகிக்கும் போது கவனமாக பேச வேண்டும். இந்தச் செய்தியை இனிகோவிற்கு உணர்த்தவே யாம் இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தினோம்” என்பதுபோல் ஐஸ்வர்யா விளக்கமளித்தார். 'கேமராவின் பின்னால் ஏராளமான விஷயங்கள் நடக்கின்றன. என்னுடையது மட்டும் ஏன் பஞ்சாயத்தில் வருகிறது' என்பது அம்மணியின் கேள்வி.
இப்படியொரு குற்றச்சாட்டு சபையில் வந்ததும் இனிகோ கலங்கிவிட்டார். “நான் அந்த அர்த்தத்துல சொல்லல. எனக்கு ஆங்கிலமெல்லாம் தெரியாது. நான் அந்த மாதிரி கேரக்டரும் கிடையாது” என்று சொல்லி கலங்கினார்.
கலங்கிய இனிகோவைப் பார்க்க ஒருபக்கம் பரிதாபமாக இருந்தாலும், மற்றவர்களை மலினமாகக் கிண்டல் செய்யும் போது அவர்களுக்கு எப்படி வலிக்கும் என்கிற பாடத்தை இப்போதாவது இனிகோ கற்றுக் கொள்வது நல்லது. “பெண்களுக்கு இங்கு அவமரியாதை நடந்தால் 'வாயை மூடு' என்று சொல்லும் முதல் நபர் நான்தான்” என்று சினிமாவில் வருவது போல் பன்ச் டயலாக் பேசினார் அர்ஜுன். ஆனால் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்தே இதற்கான பல உதாரணங்களை எடுத்து தர முடியும். மூன்றாம் உலகத்தில் விஜியும் பார்வதியும் இருந்தபோது சரண் காதல் தொடர்பான விஷயம் குறித்து கொச்சையாகப் பேசி அவர்கள் கிண்டலடித்து சிரித்தது ஓர் உதாரணம்.
“நீங்க ஏன் அப்பவே இனிகோகிட்ட இதைக் கேட்கலை?” என்றொரு கேள்வியை அர்ஜுன் முன்வைக்க, ஐஸ்வர்யாவால் அதற்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை. “லூஸ் டாக் பண்ணக்கூடாதுன்றதுக்காக இதைச் சொன்னேன்” என்று ஐஸ்வர்யா விளக்கம் அளித்தார்.
“ஐஸ்வர்யா பத்தி அம்ஜத் என்ன சொன்னார்னு இனிகோவால சொல்ல முடியும். நாகரிகம் கருதி அவர் சொல்ல விரும்பவில்லை. ஆனால் மக்களுக்குத் தெரிய வரும்” என்று இந்தப் பஞ்சாயத்தை ஒருவழியாக முடித்த அர்ஜுன் அடுத்த விவகாரத்தை எழுப்பினார்.
“விஜி... மூன்றாம் உலகத்தில் உங்களுக்கும் அம்ஜத்திற்கும் இடையில் ஏதாவது ஒப்பந்தம் நடந்ததா?” என்று ஆரம்பிக்க அடுத்த வெடிகுண்டு வெளியில் வந்து விழுந்தது.
“காடர்கள் அணியில் அம்ஜத் வந்து சேர்ந்தப்ப வேடர்கள் நடுவில் நான் மறுபடியும் போனாலும் காடர்களுக்கு விசுவாசமாகத்தான் இருப்பேன். டாப் 4 –ல் நாம வரணும்-ன்னு பேசிக்கிட்டார். அதனால்தான் ரீஎன்ட்ரியில் அம்ஜத்தை உமாபதி தேர்ந்தெடுத்தார். இதான் ஒப்பந்தம்” என்று விஜி வாக்குமூலம் அளித்தார். (இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளியே வரும் போலிருக்கே?!).
“நான் இதற்கு விளக்கம் தந்துடறேன் சார். லேடி காஷூம் நானும் கூட இதைப் பத்தி பேசினோம். ‘நாங்கதான் முன்னாடி இருப்போம்’ன்னு காடர்கள் ஏற்கெனவே பிளான் பண்ணிட்டாங்க. அவங்க கூட இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் சில விஷயங்கள் செய்ய வேண்டியிருந்தது. அப்ப கூட சரணுக்கு எதிராகத்தான் நான் நியாயமா வாக்களிச்சேன். இங்க இருந்து எலிமினிடே் ஆகும் போது நல்ல பேரோட போகணும்னு நெனச்சேன்” என்றார் அம்ஜத். (தலை சுத்துது!).
“ஓகே. வோட்டிங் போயிடலாம்” என்று அந்தச் சடங்கை ஆரம்பித்தார் அர்ஜுன். அம்ஜத்திற்குக் கிடைத்த சலுகையின்படி அவர் இரண்டு வாக்குகளை அளிக்க முடியும். அவர் அளித்துவிட்டு வந்தார். அடுத்தபடியாக நாராயணனும் தன்னுடைய ஒரு வாக்கை அளித்துவிட்டு திரும்பினார்.
அடுத்ததாக ஐஸ்வர்யா. இவரால் யாராவது ஒருவரின் வாக்கைப் பறிப்பதோடு அதையும் சேர்த்து இரண்டாக அளிக்க முடியும். “யார் வாக்கைப் பறிக்கப் போறீங்க?” என்றார் அர்ஜுன். ஐஸ்வர்யா விஜியைப் பார்த்தார். “இதுக்குத்தான் சார். இந்தப் பொண்ணு காலைல இருந்து என்னை சுத்தி சுத்தி வருது. நீங்க யாருக்கு போடுவீங்க. எப்ப போடுவீங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தது” என்று சிரித்த விஜி, தன் வாக்கை ஐஸ்வர்யாவிடம் ஒப்படைத்தார். இனிகோவிற்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.
ஆக, அம்ஜத் இரண்டு வாக்குகள், ஐஸ்வர்யா இரண்டு வாக்குகள், நாராயணன் ஒரு வாக்கு என்று அனைத்து ஐந்து வாக்குகளும் இனிகோவிற்கு எதிராக விழுந்திருந்தன. “இது தெரிஞ்ச கதைதானே?” என்கிற நொந்து போன முகபாவத்தைத் தந்தார் இனிகோ. “அவங்களை வீட்டுக்கு அனுப்பிடணும். இவங்களை வீட்டுக்கு அனுப்பிடணும்” என்று சிரிக்கும் போதெல்லாம் இனிகோ இதை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும்.
ஆனால் பஞ்சாயத்தில் இப்போது ஒரு திருப்பம் நிகழ்ந்தது. தன்னிடமிருந்து நீலப் பெட்டியை அர்ஜுனிடம் ஒப்படைத்தார் இனிகோ. அதிலிருந்த ஓலையை எடுத்து வாசிக்கும் போது “இன்று எலிமினேட் ஆனவர் ஆட்டத்தை விட்டு இன்னமும் போகலை. அவருக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கு. அதிர்ஷ்டக் கல்லின் மூலம் முடிவு தெரியும். கறுப்பு நிற கல் வந்தால் அவர் காப்பாற்றப்படுவார் வெள்ளை நிற கல் வந்தால் எலிமினேட் செய்யப்படுவார்” என்று ஓலை சொல்லியது.
இனிகோ கண்ணை மூடிக் கொண்டு கல்லை எடுக்க, விஜி டென்ஷனில் முகத்தை மூடிக் கொண்டார். கறுப்பு நிற கல் வந்திருந்தது. எனில் இனிகோ காப்பாற்றப்பட்டார். இது அவருடைய அதிர்ஷ்டமா அல்லது சர்வைவர் ஆட்டத்தின் உருட்டு அப்படியா என்று தெரியவில்லை. ஏனெனில் ஆட்டக்காரர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் போது இருப்பவரையும் அனுப்பிவிட்டு யாரை வைத்து நாள்களை நிரப்புவார்கள்?
“உங்க மனசு வெள்ளை. அதான் கறுப்பு கல்” என்று ரைமிங் வசனத்தில் பின்னினார் நாராயணன். இனிகோ தப்பித்ததற்கு விஜி சந்தோஷம் அடைய, அம்ஜத் மற்றும் ஐஸ்வர்யாவின் முகங்களில் மெல்லிய அதிருப்தி எழுந்தது.
“பழைய விஷயங்களையெல்லாம் விட்டுட்டு சந்தோஷமா இருங்க. டேக் கேர்” என்றபடி அர்ஜுன் அவர்களுக்கு விடை தந்தார்.
from விகடன்
Comments