சர்வைவர் - 49: `கேம் பிளானில் சேஞ்ச்' என கியரை மாற்றிய அர்ஜுன்... இன்று யாரெல்லாம் வெளியேறுவார்கள்?

‘இத... இத... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’ என்பது போல இதுவரை இரு அணிகளுக்கிடையே நடந்து கொண்டிருந்த போட்டி, இன்று ஜீவாத்மா, பரமாத்மா மாதிரி ஒன்றோடு ஒன்று ஐக்கியமாகியது. ஆம், ஒவ்வொரு அணியும் எதிரணி நபருடன் இணைந்து ஜோடியாகி போட்டியை சந்திக்க வேண்டும் என்பதுதான் வித்தியாசமான ஆரம்பம்.

இதில் ஒரு அணி மட்டுமே வெற்றி பெரும். மீதமுள்ள நான்கு அணிகளும் டிரைபல் பஞ்சாயத்திற்கு செல்ல வேண்டும். இரு அணிகளிலிருந்துமே தலா ஒருவர் வெளியேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இனிகோ ‘இம்யூனிட்டி ஐடலை’ கையில் வைத்திருக்கிறார். எனவே அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. எனில் யார் யார் வெளியேற்றப்படுவார்கள்?

சர்வைவரின் அடுத்தக்கட்ட ஆரம்பம் இந்த எபிசோடில் இருந்துதான் துவங்குகிறது. எனில் போட்டி இன்னமும் கடுமையாகவும் சுவாரஸ்யமாகவும் ஆகும் என்று யூகிக்கலாம்.

சர்வைவர் 49-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 49

எவ்வித முன்னுரையும் இல்லாமல் ‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்கிற அர்ஜுனின் குரலோடு எபிசோட் ஆரம்பித்தது. சமீபத்தில் பெய்த கடுமையான மழை, போட்டியாளர்களுக்கு வந்திருந்த கடிதங்கள், உறவுகளின் அன்பு போன்வற்றைப் பற்றி விசாரித்தார் அர்ஜுன். தனக்கு வந்திருந்த சாக்லேட்டுகளை எதிர்அணியுடன் பகிர்ந்து கொண்ட நாராயணனின் பண்பு பாராட்டத்தக்கது.

“ஓகே... இன்னிக்கு போட்டியைப் பற்றி பார்க்கலாம்” என்று ஆரம்பித்த அர்ஜுன் “உணர்வுகளை விட மனம் வலிமையாக இருந்தால் மட்டுமே போரில் வெற்றி பெற முடியும்” என்கிற மேற்கோளை சொன்னவுடனே புரிந்துபோயிற்று. இன்றைய போட்டியில் மனவலிமை மிக முக்கியமான தகுதியாக இருக்கப் போகிறதென்று.

“இன்னிக்கு ரெண்டு அணியும் கலந்து ஜோடியாக மாறப் போறீங்க... யார் உங்க ஜோடின்னு நீங்களே தீர்மானிச்சுக்கலாம்” என்ற அர்ஜுன் “நல்லா யோசிச்சு முடிவெடுங்க... உங்க பார்ட்னரை முடிவு செய்யறதுதான் இன்னிக்கு முக்கியமான விஷயமா இருக்கும்” என்கிற விஷயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

முதல் வாய்ப்பு லேடி காஷிற்குத் தரப்பட்டது. அவர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தது சரியான முடிவில்லையோ என்று தோன்றியது. வலிமையான போட்டியாளரோடு ஜோடி சேர்ந்தால், இவர் சற்று சுணங்கினாலும் எதிரிலுள்ளவர் சமாளிப்பார் என்கிற சிறிய அனுகூலம் கிடைத்திருக்கும். “அவர் கூட இன்னமும் பழகலை” என்கிற காரணத்தைச் சொன்னார் லேடி காஷ். பழகுவதற்கு இதுவா அம்மணி நேரம்?! நாராயணனும் பதிலுக்கு “ஓகே” என்றார்.

சரண், லட்சுமியைத் தேர்ந்தெடுத்தது சற்று எதிர்பாராத டிவிஸ்ட். லட்சுமிக்கு மனவலிமை அதிகம் என்று சரண் யோசித்திருக்கலாம். ‘ரூல்ஸை மீறின நபர் என்பதால் எனக்கு நெருடல்தான்’ என்கிற பாட்டை இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார் லட்சுமி. இவர் இருக்கும் அணியில் விக்ராந்த், உமாபதி ஆகியோரும் சரண் செய்த அதே பிழைகளைச் செய்திருக்கிறார்களே? அவர்கள் மீது ஏன் லட்சுமிக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை?! என்றாலும் சரணிற்கு ஓகே சொன்னார் லட்சுமி.

சர்வைவர் - 49

உமாபதி கொஞ்சம் கூட யோசிக்காமல் இனிகோ என்றார். இதில் ஆச்சரியமில்லை. இருவரும் நெருங்கிய தோழர்கள் என்பதால் புரிந்துணர்வோடு விளையாடுவார்கள். நந்தா, விக்ராந்த்தைத் தேர்ந்தெடுத்தார். எனில் கடைசியாக இருந்த ஜோடி ஐஸ்வர்யா மற்றும் வனேசாதான். அவர்களுக்கு வேறு வழியில்லை.

“நல்லா யோசிச்சுக்கங்க... இப்பக்கூட நீங்க தேர்வை மாத்திக்கலாம்” என்று அர்ஜுன் வலியுறுத்திய போது ‘உமாபதி’யை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால், "நான் நிம்மதியாக விளையாடணும் சார்” என்கிற குத்தலான கமெண்ட்டின் மூலம் இந்த கோரிக்கையை நிராகரித்தார் உமாபதி. விளையாட்டின் போது ஐஸ்வர்யா நிறைய சத்தம் போடுவாராம்.

ஆக... ஐந்து ஜோடிகளின் வரிசை இப்படியாக அமைந்தது. லேடி காஷ் + நாராயணன், சரண் + லட்சுமி, உமாபதி + இனிகோ, நந்தா + விக்ராந்த், ஐஸ்வர்யா + வனேசா.

அணிகள் அமைந்த பிறகு போட்டியின் விதிமுறைகளைப் பற்றி விளக்கத் துவங்கினார் அர்ஜுன். ஒவ்வொரு ஜோடியும் எதிரெதிரே அமர வேண்டும். இரண்டு நபர்களும் இணைந்து மரத்தினால் ஆன ஒரு டிஸ்க்கை (disc) கால்களினால் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது இருவரின் கால்கள் தரும் அழுத்தத்தினால் அந்தத் தட்டு கீழே விழாமல் இருக்கும். யாராவது ஒருவர் தாக்குப் பிடிக்க முடியாமல் விட்டுவிட்டால்கூட தட்டு கீழே விழும். அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் விசை காரணமாக, மேலே தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் இருவரின் தலை மேலும் விழும். அவர்கள் தோல்வியுற்றதாக பொருள்.

சர்வைவர் - 49

ஆட்டம் துவங்கியது. போட்டியாளர்கள் கால்களை நீட்டி தட்டை அழுத்திப் பிடித்தார்கள். பிறகு “லெப்ட் காலை கொஞ்சம் நகர்த்திக்கோ...” என்பது போல் தங்களுக்கு செளகரியமான நிலை வரும்படியாக அசைவுகளை சரிசெய்து கொண்டார்கள். இந்தப் போட்டியில் ஒருவர் அதிக நேரம் தாக்குப் பிடிப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஒருவரின் கால்கள் நீளமாக இருந்து எதிர் நபரின் கால் குட்டையாக இருந்தால் சிரமம். அமரும் நிலையும் கால்களை நீட்டியுள்ள நிலையும் கூட முக்கியம். கால்களை அசைத்துக் கொண்டேயிருந்தால் தட்டு கீழே விழுவதற்கான சாத்தியம் அதிகம். கடல் பக்கத்தில் நடந்த போட்டி என்பதால் பலத்த காற்று வேறு இவர்களை அவஸ்தைக்குள்ளாக்கியது.

சர்வைவர் - 49

பலமான, இணக்கமான போட்டியாளராகக் கருதப்பட்ட உமாபதியும் இனிகோவும் ஆரம்பத்திலேயே சரியான பொசிஷன் அமையாமல் நெளிய ஆரம்பித்தார்கள். இதைப் போலவே லேடி காஷூம் நாராயணனும் நடனம் ஆட ஆரம்பித்தார்கள். 15 நிமிடங்கள் கழிந்தன. லேடி காஷால் தாக்குப் பிடிக்க முடியாமல் போகவே இந்த ஜோடி தோல்வியடைந்தது. மேலேயிருந்து இரு தொட்டி நீர் ‘தொபேர்’ என்று இவர்களின் மீது விழுந்தது. (இன்றைக்கு குளிக்கும் வேலை மிச்சம்!).

போங்காட்டம் ஆடுவதில் லட்சுமி திறமைசாலியாக இருந்தார். கைப்பிடியில் கைகளை வைக்காமல் பின்னால் நன்றாக சாய்ந்து கொண்டு கையை வைத்துக் கொண்டிருந்தார். இதை அர்ஜுன் கவனிக்கத் தவறிவிட்டார். போலவே ஐஸ்வர்யாவும் சில சமயங்களில் ஃபவுல் ஆட்டம் ஆடினார். ‘வனேசா சுமாரான ஆட்டக்காரர்' என்கிற எண்ணமே ஐஸ்வர்யாவிற்குள் இதுவரை இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் வனேசா திறமையாக தாக்குப் பிடிப்பதை எண்ணி ஐஸ்வர்யாவிற்கு ஆச்சரியமாக இருந்ததாம்.

ஏற்கெனவே சிரமமாக போய்க் கொண்டிருந்த போட்டியில் அடுத்தத் திருப்பத்தை ஏற்படுத்தினார் அர்ஜுன். போட்டியாளர்கள் கைப்பிடியில் இருந்து கைகளை விலக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டுமாம். ஐஸ்வர்யா தனது பின்னந்தலையில் கைகளைக் கட்டிக் கொண்ட போது "அப்படிச் செய்யாதீங்க” என்று எச்சரித்தார் அர்ஜுன். சரணும் கைகளைத் தூக்கிவைப்பதில் சிரமப்பட்டார். நந்தாவும் விக்ராந்த்தும் ஒரு கச்சிதமான பொசிஷனில் இருந்தார்கள்.

சர்வைவர் - 49

ஒரு கட்டத்தில் லட்சுமி கையை கீழே வைத்ததால் "நீங்கள் தகுதிநீக்கம் செய்யப்படுகிறீர்கள்” என்று அர்ஜுன் சொல்ல லட்சுமி + சரண் ஜோடி போட்டியில் இருந்து வெளியேற நேர்ந்தது. "நான் என்ன சார் பண்ணேன்” என்று கேட்டார் லட்சுமி. தன்னிச்சையாக அவர் செய்த பிழையை அவரே உணரவில்லை போல. “முடியாமப் போய் தோத்திருந்தா கூட நல்லாயிருந்திருக்கும்" என்று பின்னர் வருந்தினார் LP.

லட்சுமியைப் போலவே வனேசாவும் கையை கீழே வைத்துவிட்டதால் அந்த ஜோடியும் தகுதிநீக்கம் செய்யப்பட்டு வெளியேறியது. ஆரம்பக் கட்டத்தில் தடுமாறிய உமாபதி + இனிகோ ஜோடி ஒரு மாதிரியாக செட்டாகி தாக்குப் பிடித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் உமாபதி கையை கீழே இறக்கி விட்டதால் இந்த ஜோடியும் வெளியே அனுப்பப்பட்டது.

ஆக... இறுதியில் எஞ்சி நின்ற நந்தா + விக்ராந்த் ஜோடி இந்தப் போட்டியில் வென்றது. தாக்குப் பிடித்து இவர்கள் அமர்ந்திருந்த நேரம் 46 நிமிடங்கள்.

சர்வைவர் - 49

“ஃபிட்னஸ் எந்த அளவிற்கு முக்கியம்னு சொல்லுங்க” என்று அர்ஜுன் கேட்டதற்கு "நாங்கள் ஒருவருக்கொருவர் சரியாகப் பேசிக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டோம். வெற்றி கிடைத்தது" என்றார் நந்தா. மனைவி பரிசாக அனுப்பிய டீ-ஷர்ட்டை அணிந்திருந்த விக்ராந்த்திற்கு அந்த அதிர்ஷ்டமும் இணைந்து கொண்டது போல. இந்த ஜோடிக்கு இந்த வாரம் எலிமினேஷன் ஆபத்து இல்லை.

இந்தப் போட்டியில் தோற்ற நான்கு ஜோடிகளும் இன்று டிரைபல் பஞ்சாயத்திற்கு வர வேண்டும். வாக்களிப்பிற்குப் பின்னர் யார் எலிமினேட் ஆவார்கள் என்று தெரியும். ஏற்கெனவே சொன்னபடி இனிகோவிடம் இம்யூனிட்டி ஐடல் இருக்கிறது.

இந்தப் போட்டியை விடவும் மிக உக்கிரமான போட்டி இரு அணிகளுக்குள் பிறகு துவங்கியது. ஆம், ‘யாரை எலிமினேட் செய்வது?' என்பதை இரு அணிகளும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தன. வேடர்கள் தீவில் இனிகோவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார் நந்தா. ஆனால் சரணிற்கு தன் ஆதரவைத் தெரிவித்தார் ஐஸ்வர்யா. இனிகோ மீது இவருக்கு முழு நம்பிக்கை வரவில்லையாம். ஏறத்தாழ நாராயணனும் இதே முடிவில் இருப்பதைப் போல் தோன்றுகிறது.

வேடர்கள் அணியில் எப்போதும் குடுமிப்பிடிச் சண்டைதான் நடக்கும். ஆனால் காடர்கள் அணி இப்போதும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடலை ஆசையாகப் பாடிக் கொண்டிருந்தது. ஆம். இவர்களுக்கு அணிப்பாசம்தான் முக்கியமாம். எனவே லட்சுமிக்குக் குறி வைத்துக் கொண்டிருந்தார்கள். “எல்லோரும் சேர்ந்து அடித்தால் லட்சுமிக்கு வலிக்கும். என்ன இருந்தாலும் லட்சுமி நம்ம டீமாப் போயிட்டாங்க. பார்த்து வலிக்கமா அடிக்கணும்” என்பது போல் பேசி அதற்கேற்ற வகையில் வாக்களிக்க தீர்மானித்தார்கள்.

சர்வைவர் - 49

தன்னைத்தான் டார்கெட் செய்வார்கள் என்று லட்சுமிக்கும் தெரியும். "வனேசாவும் புதிய நபர்தானே?” என்றெல்லாம்கூட கோத்து விட்டுப் குழப்பப் பார்த்தார் லட்சுமி. ஆனால் வனேசா வந்த புதிதிலேயே அணிக்கு தன் விஸ்வாசத்தை காட்டிவிட்டாராம். “அம்ஜத்தை வெளியே அனுப்பியதுதான் எனக்கு கில்டியாக இருக்கிறது” என்று தாமதமாக உருகிக் கொண்டிருந்தார் விக்ராந்த்.

காடர்கள் மறுபடியும் அதே தவறைத்தான் செய்கிறார்கள். பலவீனமான போட்டியாளர்களான லேடி காஷ், வனேசா ஆகியவர்களை விட்டுவிட்டு அணிக்கு உபயோகமாக இருக்கக்கூடிய லட்சுமியை வெளியே அனுப்புவது புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. ஆனால் இன்னொரு கோணத்தில் இது புத்திசாலித்தனமான முடிவுதான். ஏனெனில் இனி இது தனிநபர் ஆட்டமாக மாறப் போகிறது. எனில் லட்சுமி போன்ற போட்டியாளர்களை முதலிலேயே அனுப்பிவிட்டால் தங்களின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று விக்ராந்த்தும் உமாபதியும் யோசித்திருக்கலாம்.

Also Read: சர்வைவர் 48: லேடி காஷ் தேடிய `கடல்லயே இல்லியாம்’ ஸ்டார் ஃபிஷ்... நந்தாவுக்குக் கையில் என்ன பிரச்னை?

சர்வைவர் - 49

மூன்றாம் உலகம். இதுவரை வறட்சியாகவும் சோம்பலாகவும் காட்டப்படும் இந்த ஏரியா அம்ஜத்தின் குறும்பால் இன்று உற்சாகமாக தெரிந்தது. முன்பு காயத்ரி தனக்கு கலக்கித் தந்த அதே பாயசத்தை புதிதாக வருபவர்களுக்கு தரலாம் என்கிற சதியுடன் உற்சாகமாக அதற்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தார் அம்ஜத். “இங்க ஒண்ணும் சரியில்ல... சாப்பாடு இல்ல. ஒண்ணும் இல்ல... நைட்ல பாம்பு வரும். பூச்சி வரும்ன்னு சொல்லிடலாம். வரவங்க பதறியடிச்சு தோத்துட்டு ஓடிடுவாங்க” என்று இவர் உற்சாகமாக சொல்ல, “நானும் காயத்ரியும் உங்களை அப்படித்தான் ஏமாத்தினோம். அந்தச் சமயத்துல எங்களுக்கு பாவமா இருந்துச்சு. இப்ப என்ன தோணுதுன்னா. உங்களை ஏமாத்தினதுல தப்பேயில்லை" என்று சொல்லிச் சிரித்தார் விஜி.

“வேடர்களாக இருந்தால் நாராயணன் அல்லது நந்தா இங்க வருவாங்க. காடர்களாக இருந்தால் லேடி காஷ் அல்லது லட்சுமியா இருக்கும்” என்று ஏறத்தாழ சரியான யூகத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் அம்ஜத்.

டிரைபல் பஞ்சாயத்தின் வாக்கெடுப்பின்படி யாரெல்லாம் வெளியேறுவார்கள்?

பார்த்துடுவோம்.



from விகடன்

Comments