‘கம்பும் உடையக்கூடாது, பாம்பும் சாகணும்’ என்றொரு பழமொழி இருக்கிறது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த (?!) தாமரை – சுருதி விவகாரத்தை, சம்பந்தப்பட்ட பழமொழி போல் கமல் மேலோட்டமாக கையாண்டாரோ என்று பலர் நினைத்திருக்கக்கூடும். தவறில்லை. ஆனால் நீதி சொல்லும் இடத்தில் இருப்பவர்களுக்கு இது போன்ற நிதானம் மிக மிக அவசியம்.
‘மாஸ் ஹீரோ’ பட என்ட்ரி போல சீனில் நுழைந்தவுடன் ‘தீயவனை’ ஐம்பதடி உயரத்திற்கு சென்று கீழே விழுமாறு அடிக்க முடியாது. தாமரைக்கு பார்வையாளர்களின் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதால், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ‘சுருதி’யை எலிமினேட் செய்து கூட இந்த எபிசோடை கரம் மசாலாவாக ஆக்கியிருக்க கமலால் முடியும். அப்படிச் செய்திருந்தால் அது முதிர்ச்சியான அணுகுமுறை அல்ல.
ஹாலிவுட் இயக்குநரான ஹிட்ச்காக் திரைப்படங்களில் ஒரு சிறிய குற்றத்தைக் கூட பல்வேறு கோணங்களில் திறமையாகவும் நுட்பமாகவும் ஆய்வு செய்வார்கள். அப்போது நாம் பார்க்கத் தவறிய பல கோணங்கள் அதில் வெளிப்படும். நீதி சொல்லும் இடத்தில் இருப்பவர்களுக்கு சமூகவியல், உளவியல், வரலாறு, நுண்ணுணர்வு, கருணை போன்று பல அடிப்டையான விஷயங்களில் அறிவு இருக்க வேண்டும். ஒரு சராசரி நபரைப் போல ‘இவனுங்களை தூக்குல போடணும் சார்” என்று போகிற போக்கில் ஒரு பேருந்துப் பயணத்தில் பொழுதுபோக்காகக் கருத்து சொல்லி விட முடியாது.
எந்தவொரு சிறிய குற்றங்களிலும், பெரும்பான்மையான சமயத்தில் அனைவருமே சூழ்நிலை கைதிகள்தான். அவரவர் கோணத்தில் நின்று சமநிலையோடு பார்த்தால்தான் இதை யூகிக்க முடியும். இந்த நோக்கில் கமலின் இன்றைய விசாரணையில் மசாலா இல்லாவிட்டாலும் முதிர்ச்சியாகவே நடந்து முடிந்தது. "இது ஒண்ணும் IPC குற்றம் இல்லை” என்று சொன்னவர், “இந்த விளையாட்டில் பாசம்லாம் காட்டிட்டு இருக்காதீங்க. ஆனா பண்பு முக்கியம்” என்று இன்னொரு பக்கம் சரியான வார்த்தைகளில் இருதரப்பிற்கும் அறிவுறுத்தியது நன்று.
எபிசோட் 28-ல் என்ன நடந்தது?
தாமரை – சுருதி விவகாரம்தான் ஹாட் டாப்பிக் என்பதால் முதலில் அதைப் பற்றி விரிவாகப் பேசிவிடலாம். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சபையில் முறையிடும் தவிப்பு தாமரையின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ‘எப்போது சொல்லுவோம்' என்று தவித்துக் கொண்டிருந்தார். எனவே கமல் அதற்கான வாய்ப்பை தந்து "என்கிட்ட பேசணும்னு காத்துக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியும். சொல்லுங்க” என்று உடனே தலைப்பிற்குள் வந்தது நல்ல விஷயம்.
தாமரை, சுருதி, பாவனி, சிபி, ராஜூ ஆகியோர் அவரவர்களின் தரப்பை சொன்னார்கள். இந்த ஒட்டுமொத்த வாக்குமூலங்களை வைத்துக் கொண்டு "குற்றம் – நடந்தது என்ன?” என்பதை - என் பார்வையில் - விவரிக்க முயல்கிறேன். சற்று நிதானமாக வாசித்துவிடுங்கள்.
தாமரையின் நாணயத்தை ‘கைப்பற்றுவதற்காக’ நோட்டமிட்டுக் கொண்டிருந்த சுருதி இதற்காக பாவனியின் உதவியைக் கேட்கிறார். (“நீ திசை திருப்புகிறாயா?”). "அய்யோ... தாமரையா?” என்று முதலில் தயங்கும் பாவனி, பிறகு ஒப்புக் கொள்கிறார். இசைவாணி ஆடை கேட்டது சுருதிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. உள்ளே தாமரை எந்த நிலையில் இருப்பார் என்பதை இவர்கள் இருவரும் அவ்வளவாக யோசிக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் தாமரை சங்கடமான நிலையில்தான் இருந்திருக்கிறார். (சபையில் இதைச் சொல்லும் போது தாமரையின் முகத்தில் தெரிந்த சங்கடத்தைப் பார்க்க நமக்கும் அந்தச் சங்கடம் பரவியது).
பொருளை உள்ளே எடுப்பதற்காக சென்றபோது, இதெல்லாம் சுருதியின் மனதில் இல்லை. பொருளைக் கைப்பற்றுவது மட்டுமே அந்த நேரத்தில் அவருடைய பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது.
அறியாத இளம் வயதில் கடைகளில் பொருள்களை ‘சுட்டிருப்பவர்களால்’ இதைப் புரிந்து கொள்ள முடியும். அது அற்பமான பொருளாக கூட இருக்கலாம். குறைந்த மதிப்பாக கூட இருக்கலாம். அதை ‘சுடுவதில்’ ஏற்படும் த்ரில் மட்டுமே அப்போது முக்கியமாகத் தெரியும். கடைக்காரர் பார்த்துவிடுவார் என்கிற குழப்பமும் தத்தளிப்பும் ஒருபக்கம் பெருகும். “வேணாம். சரியல்ல... எடுக்காதே... வெளியே வந்துடு’ என்று மனசாட்சி இன்னொரு பக்கம் எச்சரித்துக் கொண்டேயிருக்கும். ஆனால் திருட முடிவு செய்துவிட்ட பிறகு ஏற்படுகிற அந்த Urge இருக்கிறதல்லவா? அது சூழலை முழுவதுமாக புரிந்து கொள்ள மறுக்கும். ‘அதெல்லாம் கடைக்காரர் பார்க்க மாட்டார்’ என்றே மனம் நம்ப விரும்பும். பிறகு சிலர் மாட்டிக் கொள்வார்கள்; பலர் அதிர்ஷ்டத்தால் தப்பி விடுவார்கள். (நான் ஃபுரொபஷனல் திருடர்களைச் சொல்லவில்லை).
இது போன்ற உந்துதலில் உள்ளே சென்ற சுருதி நாணயத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார். சுருதியும் பாவனியும் நாணயத்தைத் திருடுவதற்கு ‘திட்டமிட்டு’தான் உள்ளே சென்றார்கள். இதை சபையிலும் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் ‘டவலை’ எடுத்து தாமரையை பாவனி மறைத்தது என்பது அங்கு நடந்த ஒரு எதிர்பாராத ட்விஸ்ட். ஒரு நடிகன் மேடையில் தன் கையில் சட்டென்று கிடைக்கும் ஒரு ப்ராப்பர்ட்டியை பயன்படுத்துவது போன்ற நிலை. இதை பாவனி முன்கூட்டியே தீர்மானிக்கவில்லை.
நாணயம் திருடப்பட்டாகிவிட்டது. தாமரை சுருதியை அழைத்து தன் ஆட்சேபத்தைத் தெரிவிக்கிறார். ஆனால் தனக்கு வந்த கோபத்தில் ‘உன் வளர்ப்பு இப்படியா?’ என்பது போன்ற வார்த்தைகளை விட்டுவிடுகிறார். (இது மெயின் நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை). எனவே இது சார்ந்த ஆட்சேபமும், ராஜூ உள்ளிட்டவர்கள் சேர்ந்து செய்யும் விசாரணையும் சுருதிக்கும் பாவனிக்கும் கோபம் + தடுமாற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. எனவே எதிர்ப்பான வார்த்தைகளைச் சொல்லி தடுப்பாற்றல் ஆட்டத்தைத் துவங்குகிறார்கள்.
இப்போது தாமரையின் கோணத்திற்கு வருவோம். கையறு நிலையில் தான் இருந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இருவரும் தனக்கு ‘துரோகம்’ செய்துவிட்டார்கள் என்று நினைப்பதற்கான அனைத்து உரிமையும் தாமரைக்கு உண்டு. தனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று அவர் மனதார நம்பினால் அதில் தவறே கிடையாது. ஆனால் ‘இது ஒரு கேம்’ என்பதைப் புரிந்து கொண்டு தனிப்பட்ட வகையில் அநாவசியமான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம்.
ஓகே... இது கூட போகட்டும். சுருதி கண்ணீரோடு வந்து உரையாடுவதற்காக பலமுறை கெஞ்சும்போது ஒரு கட்டத்திற்கு பிறகு "சரி... சொல்லும்மா... என்னதான் உன் விளக்கம்?” என்று கேட்டு பிரச்னையை சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்திருக்கலாம். ஆனால் ‘தப்பாக இருந்தால் கூட மன்னிச்சுடுவேன். துரோகத்தை மன்னிக்க மாட்டேன்’ என்று வீம்பு பிடித்தால் இதற்கு என்னதான் முடிவு? தாமரை கோபத்தை உள்ளேயே வைத்துக கொண்டு சாடை மாடையாக தொடர்ந்து பேசினால் பார்வையாளர்களிடம் கெட்ட பெயரைச் சம்பாதிப்பதுதான் முடிவாக அமையக்கூடும். மாறாக மன்னித்தால் அவருடைய கிராஃப் இன்னமும் மேலே போகும். (இதைத்தான் ராஜூவும் வேறு வார்த்தைகளில் சுட்டிக் காட்டுகிறார்).
இந்த விவகாரம் தொடர்பாக கமலின் விசாரணை மிக நிதானமாகவும் முதிர்ச்சியாகவும் அமைந்திருந்தாலும் என் பார்வையில் தெரிந்த ஒரு சிறிய நெருடலை மட்டும் பதிவு செய்கிறேன். பாவனியை விசாரிக்கும் போது ‘எச்சில்’ உதாரணத்தை ராஜூ சொன்னது அருமையான தர்க்கம். மறுப்பில்லை. ஆனால் "நீ டிரஸ்ஸிங் ரூம்ல இருக்கும் போது நான் வந்தா ஒத்துக்குவியா?” என்பது போல் கேட்டது அராஜகமானது. கமல் இதைக் கடந்துவிட்டது மட்டுமல்லாமல், ராஜூவின் விசாரணையை ஆதரித்தது நெருடலாக இருந்தது. அந்த சர்காஸ்டிக் கமெண்ட்டின் மூலம் பாவனியின் தவறை உணர்த்துவதுதான் ராஜூவின் நோக்கம். இது நன்றாகவே புரிகிறது. “நீ டிரஸ் பண்ணிட்டு இருக்கும் போது தாமரை டக்குன்னு உள்ள வந்தா ஒத்துப்பியா?” என்பது கேட்பது வேறு ரகம். “நான் வந்தா ஒத்துப்பியா?” என்று கேட்பது முறையற்றது. இதைச் சுட்டிக் காட்ட கமல் தவறிவிட்டார்.
வெள்ளிக்கிழமை நிகழ்வில் நடந்த ‘நூடுல்ஸ்’ மேட்டரில் ஒரு அருமையான டிராமா இருந்தது. எடிட்டர் இதை ரசித்து தொகுத்திருப்பார் என்று நினைக்கிறேன். நூடுல்ஸ் தயார் செய்த ராஜூ, அங்கிருந்த அனைவருக்கும் சென்று ஊட்டி விடுகிறார். ஆனால் தூரமாக இருந்த தாமரையை அவர் அழைக்கவில்லை. "பாசம் இருந்தா கொடுத்திருப்பல்ல” என்று பிறகு உரிமைக் கோபத்தோடு தாமரை வந்து விசாரிக்கும் போது “உனக்குத்தான் நூடுல்ஸ் பிடிக்காதுல்ல” என்று மொக்கையாக பதில் சொல்கிறார். விஷயம் நூடுல்ஸ் அல்ல, மனிதரின் மீதுள்ள பாசம் என்பது ராஜூவிற்குப் புரியவில்லையா, புரியாதது போல் நடிக்கிறாரா என்று தெரியவில்லை. ‘என்கிட்ட இப்படில்லாம் பேசாத’ என்று கடுமையாகச் சொல்லும் இடத்தில் ராஜூவின் முகமூடி கழன்று தொங்கியது. பிறகு நடந்த ‘முகமூடி’ டாஸ்க்கில் ராஜூவே இதை ஒப்புக் கொண்டது நேர்மையான விஷயம்.
தாமரை – சுருதி விஷயம் தொடர்பாக கமலின் பஞ்சாயத்து முடிந்த பிறகும் வருண் இந்த மேட்டரை கிளறிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் நிதானமாக விளக்கம் அளித்த சுருதியும் பாவனியும் ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்து ‘உங்க பார்வையை மத்தவங்க கிட்ட போய் சொல்லுங்க’ என்று சொல்ல வருண் கோபத்தின் உச்சிக்கே சென்று “நான் வெளில போகணுமா... அதெல்லாம் நீங்க சொல்லக்கூடாது. அப்படித்தான் கேட்பேன்” என்று சத்தம் போடுகிறார். "என்ன வரூண்... நீங்க இருக்கற இடமே தெரியலையே” என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் அடுத்த நிமிடத்திற்கு மட்டும் இப்படி கத்தி தன் இருப்பை தெரிவிப்பது வருணின் பழக்கம்.
ஒரு வீட்டில் அனைவரும் இணைந்து புழங்கும்போது ஒரு பிரச்னையைப் பற்றி உரையாடுவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. எனவே வருணின் தலையீடு சரிதான். ஆனால்… கட் செய்து பார்த்தால் காலையில் நடந்த உரையாடலை நினைவு கொள்வோம். தாமரையிடம் வருண் சொல்லிக் கொண்டிருந்தார். “நீ பிரச்னையை சபைல தெளிவா சொல்லிடு. இந்த வீட்டில் வேற யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு இல்ல” என்பது போல் காலையில் அறிவு சொல்லும் வருண், அன்று மாலையில் தானே அந்த வேலையைச் செய்கிறார்.
நான் மறுபடியும் மறுபடியும் சொல்ல விரும்புவது இதைத்தான். பிக் பாஸ் மனிதர்களிடமுள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி பார்வையாளர்கள் வம்பு பேசுவது மிக எளிதான விஷயம். ஏனெனில் அதற்கான போதிய ஆதாரங்கள் வீடியோவாகப் பதிவாகியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் மேற்கோள் காட்டி உற்சாகமாக வம்பு பேச முடியும். ஆனால் இந்தச் சம்பவங்களின் மூலம் நாம் உள்ளுணர்வு அடையும் நீதியை நமக்கே பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். மற்றவர்களின் பக்கமே கை காண்பித்துக் கொண்டிருக்கக்கூடாது. ஒரு நாளின் இறுதியில் அமர்ந்து நிதானமாக யோசித்தால் வரூணைப் போலவே நாமும் மாற்றி மாற்றி எதையாவது பேசியிருப்போம். அது போன்ற கெட்ட வழக்கங்களை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.
“இசை... உங்களுக்கு ஒரு அதிகாரம் தரப்பட்டதே. அதைப் பற்றி சொல்லுங்க” என்று கமல் எடுத்துக் கொடுத்தும் இசை வழிந்த அசட்டுச்சிரிப்பு இருக்கிறதே... கொடுமை. கமல் எதையும் நேரடியாக கேட்க மாட்டார். அதற்கான வெளியை அமைத்துத் தருவார். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது போட்டியாளர்களின் பொறுப்பு, “யாருமே நான் சொல்றதைக் கேட்க மாட்றாங்க... கமல் சார் கிட்ட சொல்லிடப் போறேன்” என்று வாரம் முழுவதும் புலம்பிக் கொண்டிருந்த இசை, அதற்கான வாய்ப்பு வரும் போது எப்படிப் பூசி மெழுகினார் என்று பார்த்தீர்களா? மற்றவர்களை பகைத்துக் கொண்டு எப்படி அங்கு புழங்குவது என்கிற தற்காப்பு உணர்ச்சிதான் காரணம்.
ஒருவருக்கு மேடை கிடைக்கும்போது அதைச் சரியாகப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் மறுபடியும் அந்த வாய்ப்பு வாழ்நாள் பூராவும் கூட அவருக்குக் கிடைக்க முடியாமல் கூட போகலாம். இதற்காக இசை மற்றவர்களைக் கடுமையாகப் பேச வேண்டியதில்லை. தன் மனக்குறைகளை சபையில் அழுத்தமாக தெரிவித்திருக்கலாம். இதன் மூலம் வருங்கால போட்டியாளர்களுக்கு ஒரு தீர்வைத் தேடித் தந்த முன்னோடியாகியிருக்கலாம்.
இசை தன் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் போனதால், கமலே தலையிட்டு இமான் அண்ணாச்சியின் பழைமைவாத மனநிலையை “தலைமுறை மாறிடுச்சு” என்று வலிக்காமல் குட்டினார். இமானுக்கும் அது புரிந்துவிட்டது. சங்கடத்தோடு மன்னிப்பு கேட்டு அமர்ந்தார்.
Also Read: நாமினேஷன் பட்டியலில் 9 பேர்... பிக் பாஸ் இந்த வார எவிக்ஷனில் வெளியேறியது யார்?
இரட்டைத் தலைமைகள் விவகாரத்திற்கான தீர்வாக "அதிகாரக்குவியல் இருக்கக்கூடாது. அதிகாரப் பகிரல் இருக்க வேண்டும்” என்று கமல் சொன்னது நல்ல விஷயம். ‘இது வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் அவசியம்’ என்று சொல்வதின் மூலம் மாநிலங்களின் உரிமை சார்ந்த அரசியலை கமல் தொட்டுச் சென்றதை புரிந்துகொள்ள முடிகிறது.
"அவரவர்களின் தனிப்பட்ட ஆட்டத்தை ஆடுங்கள். பாசம் நேசமெல்லாம் வீட்டுக்கு வெளியே வெச்சுக்கங்க” என்று ஒவ்வொரு சீசனிலும் கமல் அறிவுறுத்தினாலும் ‘அன்பு’ கேங்குகள் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை. இதற்காக கிரிக்கெட் உதாரணத்தை கமல் சொன்னது சிறப்பு. (“சமாதானத்தை பார்டர்ல காட்டுங்க” – வாட் எ டயலாக் மேன்?!).
முகமூடி டாஸ்க்கில், மற்றவர்களின் முகமூடிகளைக் கழற்றுகிறோம் பேர்வழி என்று சிலர் தங்களின் முகமூடிகளையே கழற்றிக் கொண்டார்கள். ஐக்கி இயல்பாக சொன்ன விஷயத்திற்காக தன் மனதில் கோபத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பிரியங்காவின் செயல்பாடு நெருடலை ஏற்படுத்துகிறது. “இனியாவது மிக்சர் சாப்பிடாம ‘பேசு பொருளா’ மாறுங்க. உங்களைப் பத்தி பேசறதுக்காவது ஏதாவது மேட்டர் இருக்கணுமில்ல” என்று கமல் சொன்னது முக்கியம். சிபி, வருண், அபினய், சின்னப்பொண்ணு போன்றவர்கள் இன்னமும் ஆடவே துவங்கவில்லை.
இசை மற்றும் இமான் ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்ட செய்தியோடு விடைபெற்றார் கமல். வழக்கம் போல ‘எலிமினேட்’ சமாச்சாரம் இந்த வாரமும் லீக் ஆகி விட்டது. ‘சின்னப்பொண்ணு’ என்கிறார்கள். எனில் நிகழ்ச்சிக்கு இதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை. அந்த அளவிற்கு மிக சின்னப்பெண்ணாக அந்த வீட்டில் ஒளிந்திருந்தார் அவர்.
வருகிற நாள்களில் தாமரை, சுருதியை மன்னித்து இயல்பாகப் பழகுவாரா? அல்லது இருக்கிற நாள் முழுவதும் சம்பவத்தை மனதில் சுமந்திருப்பாரா?
என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
from விகடன்
Comments