மாஸ்டர் செஃப்: விஜய் சேதுபதியின் தெலுங்குப் பட ஹீரோ கெட்டப்... ரகளையான காம்போவில் சமையல் பொருள்கள்!
மாஸ்டர் செஃப் போன்ற கடினமான சமையல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக செய்ய வேண்டிய முன்தயாரிப்பு தொடர்பாக நான் ஒரு டிப்ஸ் தருகிறேன். ஒன்றுமில்லை, உங்களின் கண்களை நன்றாக கட்டிக் கொண்டு சமையல் அறைக்குச் செல்லுங்கள். அங்கு கையில் தட்டுப்படும் பத்து சமையல் பொருள்களை குத்துமதிப்பாகத் தேர்ந்தெடுங்கள். கண்ணைத் திறந்து பாருங்கள். இப்போது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ‘கன்னாபின்னா’ ingredients பட்டியலை வைத்து சமைக்க வேண்டும் என்கிற சவாலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (‘குருட்டுத்தனமான முரட்டு சமையல்’ என்று வேண்டுமானாலும் இதற்கு பெயர் வைக்கலாம்!)
வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. மனித குலத்தின் பல கண்டுபிடிப்புகள் தற்செயல்களாலும் தவறுகளாலும்தான் பெரும்பாலும் நிகழ்ந்திருக்கின்றன. அதுவரை விலங்குகளின் மாமிசத்தை பச்சையாக சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதிமனிதன், ஒருமுறை காட்டுத்தீயில் வெந்திருந்த விலங்கின் மாமிசத்தை தற்செயலாகச் சாப்பிட்டு "அடடே” என்று நாக்கைச் சப்புக் கொட்டியதுதான் சமையல் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆரம்பம் என்று சொல்கிறார்கள்.
மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியிலும் வரவர இதுபோன்ற கன்னாபின்னா பட்டியலை வைத்துக் கொண்டு சமைக்க வேண்டிய சவால்கள் நிகழ்கின்றன. இந்தப் பதினைந்தாவது எபிஸோடிலும் இப்படி சுவாரஸ்யமான பல திருப்பங்களும் ரகளையான காம்பினேஷன்களும் அமைந்திருந்தன.
என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.
சுவரில் மாட்டியிருந்த ஒரு மரப்பலகையில் கத்தியை வீசி விளையாடிக் கொண்டிருந்தார் விஜய்சேதுபதி. அவரின் அதியிளமையான லுக்கும் உடைகளும் இன்று அட்டகாசமாக இருந்தது. வெள்ளை தாடியில் டை அடித்து, அடர்வண்ண நிறங்களில் கோட் சூட் அணிந்து… அவரை அப்படியே தூக்கிச் சென்று தெலுங்குப் படத்தின் ஷூட்டிங்கில் நிறுத்தி விட்டால் ‘ஓ... பாப்பா... ஓ... பாப்பா’ என்று கேமராவை ஆன் செய்து விடலாம் என்பது மாதிரி கலர்ஃபுல்லாக இருந்தார் விசே. இதைப் போலவே நீதிபதிகளின் ஆடைகளும் அட்டகாசம். குறிப்பாக செஃப் ஆர்த்தியின் ஆடை வண்ணம் அமர்க்களம்.
போட்டியாளர்கள் உள்ளே வந்தார்கள். “என்ன மணிகண்டா… இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்பவர்கள், ஷோ முடிந்த பிறகு இதைத் திட்டி இன்டர்வியூ கொடுப்பார்கள். நீ என்னடான்னா... நிகழ்ச்சி முடியறதுக்கு முன்னாடியே பேட்டி தந்திருக்கே போல... ஃபைனல்ல ஜெயிச்சியிட்டியனா, என்ன சொல்வே? எனக்கு பேட்டி கொடு” என்பது மாதிரி ஆரம்பத்திலேயே மணிகண்டனை ஜாலியாக வம்பிற்கு இழுத்தார் விசே.
அரங்கில் சாக்லேட், பழம், கீரை என்று மூன்று விதங்களில் 9 சமையல் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்களின் எண்ணிக்கையும் ஒன்பது என்பதால் ஆளுக்கொரு பொருளை வைத்து சமைக்கச் சொல்வார்கள் என்று முதலில் தோன்றியது. ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட் இருந்தது.
யார் யாருக்கு என்ன பொருளைத் தருவது என்கிற கேள்வி வந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த 9 கத்திகளை போட்டியாளர்கள் வரிசையாக வந்து எடுக்க வேண்டும். எதையாவது குறிபார்த்து எறியச் சொல்வார்கள் என்று பார்த்தால்… இல்லை... ஒவ்வொரு கத்தியின் பின்னாலும் ஒரு எண் குறிக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் வந்து பொருள்களைத் தேர்வு செய்ய வேண்டும். சுனிதாவிற்கு எண்.1 என்கிற அதிர்ஷ்டம் அடித்தது. அதன்படி ஒவ்வொருவரும் வந்து வரிசையாக பொருள்களை தேர்ந்தெடுத்தார்கள்.
இப்போது இரண்டாவது டிவிஸ்ட். “இதை நீங்கள் அணியாக சேர்ந்து செய்ய சமைக்க வேண்டும்” என்று அறிவித்த செஃப் கெளஷிக், மணி, கிருத்திகா, தேவகி ஆகிய மூவரையும் முன்னால் வரச் சொன்னார். “அய்யய்யோ... மணி கூடயா சேர்ந்து சமைக்கணும்?!” என்று அப்போதே கிருத்திகா ஜெர்க் ஆனார். மற்ற இருவரும் வேகமாகச் சமைப்பவர்கள் என்பதால் பூச்சாண்டியைக் கண்ட குழந்தை மாதிரி, “வரமாத்தேன்... வரமாத்தேன்” என்று பயந்து நடுங்கினார் தேவகி.
ஆனால், இவர்கள் அணியாகச் செயல்படப் போவதில்லையாம். மாறாக, இவர்கள் மூன்று பேரும் அணியின் கேப்டன்கள் என்று அறிவிக்கப்பட்ட போது மூவருக்குமே ஆச்சர்யமாக இருந்தது. இதற்கான காரணங்கள் சொல்லப்பட்டன. மணிகண்டனுக்கு மற்றவர்களுக்கு உதவும் மனோபாவம் இருக்கிறதாம். கிருத்திகாவிடம் தலைமைப்பண்பு இயல்பாகவே அமைந்திருக்கிறதாம். தேவகியை தேர்ந்தெடுக்க ஒரு விசேஷமான காரணத்தைச் சொன்னார் கெளஷிக். தேவகி எப்போதும் பின்வரிசையில் இருப்பதால் அவர் துணிச்சலாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்வாம்.
இப்போது அணித்தலைவர்கள், தங்களின் அணியின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அவர் கையில் என்ன பொருள் வைத்திருக்கிறாரோ அதையே வைத்திருப்பவரை அழைத்துக் கொள்ள முடியாது. மாறாக இதர இரண்டு பொருள்களை வைத்திருப்பவரை மட்டுமே அழைக்க முடியும். ‘தனக்கு இணக்கமானவர்’ மற்றும் ‘எந்தப் பொருளை வைத்திருக்கிறார்’ ஆகிய இரண்டு காரணிகள் இந்தத் தேர்வை தீர்மானித்தன.
அதன்படி தேவகி, நவ்சீன் மற்றும் சுனிதாவை தேர்ந்தெடுத்தார். கிருத்திகாவின் தேர்வு வின்னி மற்றும் கிருதாஜாக இருந்தது. சுமித்ரா மற்றும் நித்யாவை அழைத்துக் கொண்டார் மணிகண்டன். மூன்று அணிகளும் நீலம், பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களில் ஏப்ரன் அணிந்து வந்தார்கள்.
‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் தான் நடித்த பாத்திரத்தைப் போலவே ஒரு கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த விதிமுறைகளை கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு விளக்கத் துவங்கினார் விசே. இதில் நான்கு விதிமுறைகள் இருந்தன.
ஒன்று, அணியா சமைக்கணும். ஆனா தனித்தனியா சமைக்கணும். இரண்டு, பிளான் பண்ணி பண்ணணும். மூன்று, சிட்டா பறக்கணும், சீக்கிரம் எடுக்கணும். நான்கு, பேச்சு பேச்சாதான் இருக்கணும்.
இதன் பொழிப்புரையில்தான் அடுத்த டிவிஸ்ட் வெளிப்பட்டது. அதாகப்பட்டது, சமைப்பதற்காகத் தரப்படும் 60 நிமிடங்களில், முதல் 20 நிமிடங்களுக்கு ஒருவர் சமைப்பார். அவரது அணியில் உள்ள இன்னொருவர் அடுத்த 20 நிமிடங்களை எடுத்துக் கொள்வார். அடுத்தவர் கிளைமாக்ஸ் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்வார். ரிலே ரேஸ் போல இது நிகழும்.
முன்னவர் செய்த சிறப்போ அல்லது தவறோ அடுத்தவரின் தலையில் விழும் ப்ளஸ் மற்றும் மைனஸ் அம்சம் இதில் இருந்தது. போட்டியிடப் போடும் மூன்று அணிகளில் வெற்றி பெறும் ஓர் அணிதான் பால்கனிக்குச் செல்லும். இதர இரண்டு அணிகளும் கலைக்கப்பட்டு அடுத்து வரும் ‘பிரஷர் டெஸ்ட்டை’ சந்திக்க வேண்டும்.
‘என்ன சமைக்கலாம்?’ என்பதை அந்தந்த அணிகளே ஆலோசித்து முடிவு செய்து கொள்ளலாம். இதற்காக ஐந்து நிமிடங்கள் தரப்பட்டன. அடுத்ததாக சமையல் பொருள்களை எடுத்து வர இரண்டு நிமிடங்கள் தரப்பட்டன. பொருள்களைத் தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு அணியிலிருந்து ஒருவர் சென்றார். பரபரப்பான நொடிகளுக்குப் பிறகு இறுதியாக pantry-ல் இருந்து வெளியே வந்த நித்யா தலையில் கைவைத்துக் கொண்டார். அவர் முக்கியமாக எடுத்து வர வேண்டிய ‘முட்டை’யை மறந்து விட்டார். (ஆரம்பமே முட்டையா?! நல்ல சகுனம்).
போட்டி ஆரம்பித்தது. அதற்கு முன் முக்கியமான விஷயம். சமைப்பதற்காக அவர்களுக்கு அமைந்த ரகளையான காம்பினேஷன் பொருள்கள் என்னென்ன என்று பார்க்க வேண்டாமா?
சாக்லேட் வரிசையில், வொயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் ஆகிய மூன்று பொருள்கள் இருந்தன. பழங்களின் வரிசையில் அத்திப்பழம், சீதாப்பழம், ப்ளூபெரிஸ் இருந்தன. தாவரங்களின் வகையில் புதினா, லெமன்கிராஸ், ரோஸ்மேரி இருந்தன. ஒவ்வொரு அணியும் மூன்று விதங்களில் அமைந்திருக்கும் பொருள்களை வைத்து சமைக்க வேண்டும்.
மணியின் அணியில் நித்யா முதலில் சமைக்க வந்தார். இதைப் போலவே தேவகியின் அணியில் சுனிதாவும் கிருத்திகாவின் அணியில் அவரேவும் முதலில் சமைக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு அணியிலும் மீதமிருக்கும் இரு நபர்களும் அருகில் நின்று ஆலோசனைகள் தரலாம். ஆனால் சிவப்புக் கோட்டைத் தாண்டி நெருங்கி வரக்கூடாது. (பேச்சு. பேச்சா இருக்கணும்!).
முதலாமவர் பரபரப்பாக சமைத்துக் கொண்டிருக்கும் போது அடுத்த இருவரும் தொலைவில் நின்று கொண்டு ‘ஆங்... ஆங். அப்படித்தான்... அதை முதல்ல அவிச்சிக்கோ. அய்யோ... உப்பு அவ்ள போடாத... பார்த்து பார்த்து…’ என்று பல்வேறு ஆலோசனைகள் கூறி டென்ஷனை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கிருத்திகாவிடம் பூண்டு இரவல் வாங்கினார் நித்யா. கிருத்திகாவும் வின்னியும் அடுத்தடுத்து சொன்ன உத்தரவுகளால் திணறிக் கொண்டிருந்தார் கிருதாஜ்.
சுனிதா பரபரப்பாக இயங்கி மீதமுள்ளவர்களுக்கு அதிக வேலையில்லாதபடி செய்து கொண்டிருந்தார். நவ்சீன் கையாண்ட பாத்திரம் ஒன்று ஏறத்தாழ கீழே விழப் போய் மயிரிழையில் தப்பித்தது. அது கீழே விழுந்திருந்தால் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும். அவரது டீம்மேட்களான சுனிதாவும் தேவகியும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பதறி பிறகு ஆசுவாசம் அடைந்தார்கள்.
20 நிமிடம் கடந்ததும் விஜய் சேதுபதி ஹாரன் அடிக்க, அணியின் அடுத்த வரிசை உள்ளே பாய்ந்தது. தேவகி Sugar bowl செய்ய முயன்று கொண்டிருந்ததைப் பார்த்ததும், “நேரத்துல செஞ்சு முடிச்சிடுவீங்களா. இதைச் செய்யறது கஷ்டமாச்சே?!” என்று ஆச்சர்யப்பட்டார் செஃப் ஆர்த்தி.
இப்படி பல்வேறு களேபரங்களுடன் மூன்று 20 நிமிடங்களில் மூன்று நபர்களும் அடுத்தடுத்து வந்து சமைத்து போட்டியை ஒருவழியாக முடித்தார்கள்.
மணிகண்டனின் தலைமையில் அமைந்த முதல் அணி அழைக்கப்பட்டது. ‘தென்கிழக்கு சீமையிலே’ என்கிற வித்தியாசமான பெயரைச் சூட்டியிருந்தார்கள். பிரியாணி, முட்டை போன்ற வசீகரமான தோற்றத்தில் பிளேட் காணப்பட்டது. ஆனால் அது பிரைட் ரைஸ் மற்றும் இதர வஸ்துகளாம். “பிளேட்டிங் சிறப்பா இருக்கு... உணவு சுவையா இருக்கு” போன்ற பாசிட்டிவ் கமெண்ட்டுகள் வந்தாலும் ‘ஒண்ணுத்துல சால்ட் அதிகம், இன்னொன்னுல சால்ட் குறைவு’ என்கிற நெகட்டிவ் கமெண்ட்டும் வந்தது.
“எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சாப்பிட ஆரம்பிச்சதை நிறுத்த முடியலை” என்று சொன்னது மணியின் டீமிற்கு கிடைத்த பெஸ்ட் காம்ப்ளிமெண்ட்.
அடுத்ததாக கிருத்திகா தலைமையிலான அணி அழைக்கப்பட்டது. இவர்கள் ‘இணைந்த கைகள்’ என்கிற தலைப்பில் பெயரைச் சூட்டியிருந்தார்கள். பிளேட்டிங் செய்வதில் வின்னி எக்ஸ்பர்ட் என்பதால் கடைசியில் அவர் வருமாறு ‘பிளான்’ பண்ணியிருந்தார்களாம். இவர்களின் பிளேட்டும் பார்க்க அத்தனை வசீகரமாக இருந்தது. ‘தனித்தனியா சாப்பிட்டா நல்லாயிருக்குது... ஆனா சேர்த்து சாப்பிட்டா நல்லாயில்ல” என்று கலவையான கமெண்ட் வந்தது.
மூன்றாவது அணியின் தலைவரான ‘திருதிரு’ தேவகி அடுத்ததாக வந்தார். கடந்த எபிசோடுகளில் இருந்த தயக்கமெல்லாம் இப்போது விலகி சற்று துணிச்சலாக பேசி, தைரியமாகச் சிரித்துக் கொண்டிருந்தார். இந்த அணி கொண்டு வந்திருந்த உணவின் தலைப்பு 'எங்கள் சோலைவனம்'. (அடடே!) குறைந்த அவகாசத்தில் அட்டகாசமாக சுகர்பவுல் செய்திருந்த தேவகியைப் பாராட்டினார் ஆர்த்தி.
“இதை எப்படிச் சாப்பிடணும்?” என்று விசே வெள்ளந்தியாகக் கேட்டபோது சுத்தியலை எடுத்து, கிளாஸின் மீது குடை போல் மூடியிருந்த சாக்லேட் பவுலை ‘டப்’பென்று அடித்தார் ஆர்த்தி. அது உடைந்து சிதறி அப்படியே கிளாஸிற்குள் விழுந்தது. இவர்கள் தயாரித்திருந்த சாக்லேட் மூஸ்ஸில் சாக்லேட் திரிந்திருந்ததாம். அது நவ்சீன் செய்த பிழை. சூடான பாலேட்டில் சாக்லேட்டை ஊற்றியதால் திரிந்துவிட்டதாம்.
Also Read: மாஸ்டர் செஃப் - 14 | ஆர்த்தியின் `அறுசுவை வான்டன்’ அவ்வளவு மோசமா… எதனால் நிகழ்ந்தது எலிமினேஷன்?!
“திரிஞ்சு போன சாக்லேட்டை கொடுத்து எங்களைக் கொல்லப் பார்க்கறீங்களா?” என்பதுபோல் தேவகியை ஜாலியாக கலாய்த்தார் கெளஷிக். இந்தச் சமயத்தில் தேவகியின் ‘திருதிரு’ முழி மறுபடியும் திரும்ப வந்துவிட்டது.
மூன்று அணிகளும் அழைக்கப்பட்டு அவர்களின் அனுபவங்கள் கேட்கப்பட்டன. “எங்களின் உணவு சிறப்பாக அமைந்ததற்கு அணியின் உழைப்புதான் காரணம். எனக்கு அமைந்த டீம்மேட்கள் மிகவும் திறமைசாலிகள்” என்று மற்றவர்களுக்கு கிரெடிட் தந்து பேசிய மணியின் மனமுதிர்ச்சியை பாராட்டினார் கெளஷிக். முட்டை, பூண்டு போன்ற அயிட்டங்களை இந்த அணி இரவல் வாங்கிய விஷயமும் நகைச்சுவையாக விவாதிக்கப்பட்டது. “வின்னியா இருந்தா தண்ணி கூட தந்திருக்க மாட்டாங்க” என்பது போல் மணிகண்டன் சொல்ல ‘அய்யோ. நானா?” என்று வியப்பான அதிர்ச்சியில் ஆழ்ந்தார் வின்னி.
முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம். நீதிபதிகளும் விசேவும் ரகசியமாகக் கலந்து ஆலோசிக்கும்போது, “என்ன சொல்றீங்க... தேவகி சொதப்பிட்டாங்களா? அப்ப மணியை வீட்டுக்கு அனுப்பிடலாமா?” என்று ஜாலியாக உரத்த குரலில் சொல்லி போட்டியாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார் விசே.
“கடன் வாங்கி சமைத்த மணிகண்டனின் அணி வெற்றி” என்கிற முடிவை நீதிபதிகள் அறிவித்ததும் மணியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. தன்னுடைய தலைமைத்துவத்தில் வெற்றி அடைந்தோமே என்கிற பெருமிதம் அவரின் முகத்தில் வழிந்தது. இந்த அணியின் தயாரிப்பில் இருந்த ப்ளஸ் பாயிண்டுகளைச் சொன்ன நீதிபதிகள், இதர இரண்டு அணிகளின் பிசிறுகளையும் விவரித்தார்கள்.
ஆக, மணிகண்டன் டீம் வெற்றி பெற்று அந்த மூன்று நபர்களும் பால்கனிக்குச் செல்ல, இதர இரு அணிகளும் கலைக்கப்பட்டு அந்த ஆறு நபர்களும் ‘பிரஷர் டெஸ்ட்டை’ எதிர்கொண்டாக வேண்டும்.
இதிலும் தோற்பவர் எலிமினேஷனை எதிர்கொள்வார். அது யாராக இருக்கும்?
from விகடன்
Comments