`இது சிவாஜி அங்கிளுக்காக எங்களோட `நவரசா!'' - பேச்சரங்க சுவாரஸ்யம் பகிரும் முக்தா சீனிவாசன் மகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த தினத்தை (அக்டோபர் 1) முன்னிட்டு, இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகள் மாயா ஃபேஸ்புக்கில் 9 நாள் பேச்சரங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். இதற்கான பின்னணி காரணத்தையும் சிவாஜி குடும்பத்துக்கும் தன் குடும்பத்துக்கும் இடையேயான நட்பையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

'மாயா' முக்தா சீனிவாசன்

``சிவாஜி அங்கிளோட பிறந்த நாளுக்காக அவரோட படங்களைப் பற்றிய பேச்சரங்கை ஒரு நாள் நடத்தணும்னு செப்டம்பர் 16-ம் தேதி எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. என்னோட இந்த ஐடியாவைப் பற்றிப் பேசுறப்போ, அங்கிளோட ரசிகர் ஒருத்தர் `சிவாஜியைப் பற்றி பேசறதுக்கு ஒருநாள் போதுமா'ன்னு கேட்டார். நியாயம்தானே... நான் உடனே, 9 நாள் வெச்சுக்கலாம். ஒவ்வொரு நாளும் அங்கிளோட நடிப்பில் ஒவ்வொரு ரசம்பற்றிப் பேசலாம்னு முடிவெடுத்தேன். சினிமா உலகைச் சேர்ந்தவங்க அங்கிளை பத்தி நிறைய பேசிட்டாங்க. அதனால, எழுத்தாளர்களைப் பேச வைக்கலாம்னு தோணுச்சு. விஷயத்தை ராம்குமார் அண்ணன்கிட்டயும் பிரபு அண்ணன்கிட்டயும் சொன்னவுடனே `தாராளமா செய்மா'ன்னு சொன்னாங்க.

ஃபேஸ்புக் வழியா எழுத்தாளர்களைத் தொடர்புகொண்டேன். முதல் நாள் செப்டம்பர் 23-ம் தேதி எழுத்தாளர் சத்திய பிரியன், அங்கிளோட `பயம்' ரசத்தைப் பத்தி பேசினார்.

அடுத்த நாள் `வீரம்' பத்தி எழுத்தாளர் நரசிம்மா,

25-ம் தேதி `சாந்தம்' பற்றி மஞ்சுளா ரமேஷ்,

26-ம் தேதி `வெறுப்பு' பற்றி அகிலா கண்ணன்,

27-ம் தேதி `இரக்கம்' பற்றி வித்யா சுப்ரமணியம்,

28-ம் தேதி `சிரிப்பு' பற்றி இந்திரா செளந்தர்ராஜன்,

29-ம் தேதி `கோபம்' பற்றி பட்டுக்கோட்டை பிரபாகர்,

30-ம் தேதி `ஆச்சர்யம்' பற்றி கிரிஜா ராகவன்,

சிவாஜி அங்கிள் பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதியன்று `காதல்' ரசம் பற்றி எழுத்தாளர் தேவிபாலா... இப்படிப் பலரும் பேசறாங்க. முதல் நாள் ராம்குமார் அண்ணா சிறப்புரையாற்றினார். 9-வது நாள் பிரபு அண்ணா சிறப்புரையாற்றப் போறார். ஜூம்லதான் இந்தப் பேச்சரங்கம் நடந்துக்கிட்டிருக்கு. அங்கிளோட வேலைபார்த்த மேக்கப்மேன், ஸ்டன்ட்மேன், கொரியோகிராபர்னு பலரும் கலந்துட்டு வர்றாங்க'' என்றவர், தன் குடும்பத்துக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் இடையே இருக்கிற நட்பு பற்றியும் பகிர ஆரம்பித்தார்.

முக்தா அக்கா திருமணத்தில்

Also Read: ``அப்போ நடிகை; இப்போ மேத்ஸ் டீச்சர்!'' - `உதிரிப்பூக்கள்' அஸ்வினி

``எங்க குடும்பத்துல நடந்த எல்லா கல்யாணத்துலயும் சிவாஜி அங்கிள் வந்து வாழ்த்துவார். அந்தளவுக்கு அவர் எங்க குடும்பத்துல ஒருத்தரா இருந்தார். அப்படித்தான் எங்க அக்கா முக்தா கல்யாணத்துக்கும் வந்திருந்தார். அப்போ நடந்த ஓர் இன்ட்ரெஸ்ட்டிங்கான சம்பவத்தைச் சொல்றேன். அக்கா கல்யாணம் திருச்சி பக்கத்துல இருக்கிற குணசீலம் கோயில்ல நடந்துச்சு. கோயிலைச் சுத்தியும் வீடுகள் இருக்கும். அந்த வீடுகள்லதான் திருமண வீட்டார் தங்குவாங்க. அந்த வீடுகள்ல இருக்கிற திண்ணைகள்ல மனநிலை சரியில்லாதவங்க உட்கார்ந்திட்டிருப்பாங்க. கோயிலுக்குள்ள கல்யாணம் நடக்கும்.

முக்தா அக்கா கல்யாணத்துக்கு சிவாஜி அங்கிளும் வந்திருந்தார்னு சொன்னேன் இல்லையா? அப்படி வந்தப்போ மனநிலை சரியில்லாத பலரும் அங்கிளை வேடிக்கை பார்த்துட்டிருந்தாங்க. அவங்கள்ல ஒருத்தர்கிட்ட என் பெரியப்பா `வந்துட்டுப் போறது யார்னு தெரியுதா?'ன்னு கேட்க, `நல்லா தெரியுமே. அது சிவாஜி'ன்னு சொன்னாராம் அவர். தன்னிலை மறந்தவங்களாலகூட சிவாஜி அங்கிளை மறக்க முடியலை பார்த்தீங்களா'' என்றவரின் குரலில் சிலிர்ப்பு தெரிகிறது.

மாயாவின் திருமணத்தில்

Also Read: `` `கொடி பறக்குது' படத்துல நானும் ரஜினிக்கு ஜோடிதான்'' - `வளையல் சத்தம்' பாக்யஶ்ரீ

``சிவாஜி அங்கிள் வீட்டு வாசல்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்தப் பிள்ளையாரை நாங்கெல்லாம் சிவாஜி பிள்ளையார்னு சொல்வோம். எங்க வீடு அங்கிள் வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கு. `முக்தா ஃபிலிம்ஸ்'ல ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் எங்கம்மாவும் பெரியம்மாவும் 108 கொழுக்கட்டை செஞ்சு சிவாஜி பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்வாங்க. எங்கப்பா இயக்கின `அந்தமான் காதலி' ரிலீஸானப்போவும் அதே மாதிரி கொழுக்கட்டை செய்ய, எங்க அண்ணன் ரவி அதை நைவேத்தியம் செய்றதுக்கு அங்கிள் வீட்டுக்கிட்ட போனாராம். அண்ணனைப் பார்த்துட்ட அங்கிள், `வெளிய இருக்கிற கணேசனுக்கு நைவேத்தியம் செய்றே. வீட்டுக்குள்ள இருக்கிற எனக்கு பண்ண மாட்டேங்கிற. நான்தானே அந்தப் படத்துல நடிச்சேன்'னு அண்ணனை செல்லமா கலாட்டா செஞ்சுட்டு தட்டுல இருந்து நாலஞ்சு கொழுக்கட்டைகளை எடுத்துட்டுப் போனாராம். அங்கிளை பத்தி பேசணும்னா இப்படி எத்தனையோ சம்பவங்கள் இருக்கு'' என்றபடி விடைபெற்றார் மாயா.



from விகடன்

Comments