காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு செய்யும் பெரிய குடும்பம் ஒன்றின் பேரனாக சிவகுமார். தன் கடைசி மகனுக்கும், மூத்த மகன் வழி பேரனுக்கும் பெரிய வயது வித்தியாசம் இல்லையென்றாலும், பேரனையே பேரன்போடு சொந்த ஊரில் தனி ஆளாக வளர்க்கிறார் தாத்தா வரதராஜன். ஒரு கட்டத்தில், ஊதாரியாகச் சுற்றும் சிவகுமாரை நல்வழிப்படுத்த அவனின் சித்தப்பாவுடன் சென்னைக்கு அனுப்புகிறார்கள். அங்கிருக்கும் பணக்காரக் குடும்பத்துடன் உருவாகும் முட்டல், மோதல், காதல் அதனால் மீண்டும் ஸ்பாட்லைட்டுக்கு வரும் பரம்பரைப் பகை, தாத்தாவுக்காகப் பேரன் போடும் சபதம் எனக் கலகல கலர்ஃபுல் சினிமாவாக விரிகிறது படம்.
சிவகுமாராக, படத்தின் மொத்தத்தையும் தாங்கும் பொறுப்பு 'ஹிப்ஹாப் தமிழா' ஆதிக்கு! கலகல காட்சிகளை ரகளையுடன் செய்பவர், நெகிழவைக்கும் சென்டிமென்ட் காட்சிகளில் மட்டும் சற்று சிரமப்படுகிறார். இசையமைப்பாளராக, இயக்குநராக 'ஹிப்ஹாப் தமிழா' டீம் தங்களின் திறமையை நிரூபித்திருந்தாலும், ஒரு நடிகனாக ஆதி இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது.
அதை உணர்ந்ததாலோ என்னவோ, தன் மேல் இருக்கும் பாரத்தை, தாத்தா வரதராஜனாக வரும் இளங்கோ குமணனின் மீதும் கொஞ்சம் இறக்கிவைத்திருக்கிறார். வாஞ்சையுடன் பேரனை வளர்க்கும் தாத்தா, கொடுத்த வாக்கை மீறாத ஊர் பெரியவர் எனப் பல பரிமாணங்களில் ஜொலிக்கும் இளங்கோ குமணன், நம் வீட்டுத் தாத்தாக்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். தமிழ் சினிமாவுக்கு நல்வரவு!
கதாநாயகி மாதுரிக்கு வழக்கம்போல காதலைத் தவிர வேறொரு பணியும் இல்லை. பெரிய குடும்பத்தின் அங்கமாக ஆங்காங்கே தலைகாட்டுகிறார், காதல் காட்சிகள், பாடல்கள் எனத் தவறாமல் அட்டென்டன்ஸ் போட்டிருக்கிறார். ஆதியின் நண்பனாக வரும் ஆதித்யா கதிர் சில காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். சித்தப்பா முருகனாக யூடியூப் பிராங்க்ஸ்டர் ராகுல். தொடக்கக் காட்சிகளில் சிரிக்கவைத்தாலும் ஒரு கட்டத்துக்குப் பிறகு ஓவர் ஆக்ட்டிங் உணர்வையே தருகிறார். சீரியஸான சென்டிமென்ட் காட்சிகளைக் கூட காமெடி செய்கிறேன் எனக் காலி செய்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான பாத்திரங்களும் இத்தகைய உணர்வையே தருகின்றன. அதுதான் படத்தின் மிகப்பெரிய மைனஸும்!
'கிளப்புல மப்புல' பாடல் மூலம் கடும் விமர்சனங்களைச் சந்தித்த ஆதி, இந்தப் படத்தில் செய்த தவற்றைத் தயக்கமுமின்றி ஒப்புக்கொள்கிறார். இந்த முயற்சியும் முதிர்ச்சியும் பாராட்டுக்குரியது. அதேபோல், 'காதலன் என்பவன் லைஃப் அல்ல, லைஃப் பார்ட்னர் மட்டும்தான்' என்பது போன்ற வசனங்களும் தனிக்கவனம் பெறுகின்றன.
Also Read: பேய் பிடிச்சாக்கூட தேவலாம் நண்பா... யோகி பாபுவின் 'பேய் மாமா' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
முதல் பாதி கலகலப்புடன் நகர, இரண்டாம் பாதியில் திரைக்கதை தட்டுத்தடுமாறுகிறது. எக்கச்சக்கக் காட்சிகள், பெரும்பாலும் இரண்டே லோக்கேஷன்கள் என ஒருவித அயர்ச்சியை ஏற்படுகிறது. வில்லனாக விஜய் கார்த்திக்கும், வில்லியாக ரஞ்சனா நாச்சியாரும் பெரிதாக எதுவும் செய்யாமல் தேமேவென சீரியல் மோடிலேயே பழிவாங்கத் துடிப்பதால், கதை முன்னோக்கி நகராமல் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டு தவிக்கிறது.
அர்ஜுன் ராஜின் ஒளிப்பதிவு தறி ஓட்டும் பட்டறையை ரம்மியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. பாடல்கள் ஸ்பீட்பிரேக்கராக இருந்தாலும் 'நேசமே' பாடல் நெஞ்சில் நிறைகிறது. 'பாகுபலிக்கொரு கட்டப்பா' தாளம்போட வைக்கிறது.
காஞ்சிபுரத்தின் பட்டுத் தொழிலாளர்களின் வாழ்வை ஒரு சில காட்சிகளில் மட்டுமே காட்டிவிட்டு, அவர்களின் பிரச்னைகளின் ஆழத்தை விவரிக்காதது நெருடல்.
இருந்தும் ஒரு கமர்ஷியல் படத்தில் தமிழர் பாரம்பரியம் சார்ந்த விஷயங்களைப் பேசியதற்காகவும், திரையரங்குகள் திறந்தபின்னர் வரும் ஃபேமிலி என்டர்டெயினர் என்பதற்காகவும் இந்த 'சிவகுமாரின் சபதம்' கவனம் பெறுகிறது.
from விகடன்
Comments