ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் `சர்வைவர்' நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ட்ரைபல் பஞ்சாயத்து, எலிமினேஷன் என்ற பெயரில் சக போட்டியாளர்களில் யாரை வெளியேற்றுவது, நிகழ்ச்சியில் எப்படி தாக்குப்பிடிப்பது என்ற ஸ்ட்ராட்டஜியைக் கிட்டத்தட்ட அனைத்துப் போட்டியாளர்களும் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
`வேடர்கள்' அணியில் வயதில் மூத்தவரான பெசன்ட் நகர் ரவியின் பெயரும் எலிமினேஷன் லிஸ்ட்டில் அடிபடத் தொடங்கியிருக்கும் நிலையில், அவர் நிகழ்ச்சியில் தாக்குப்பிடிப்பாரா, வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வியோடு, ரவியின் மகள் ஸ்வேதாவிடம் பேசினோம். அப்பாவின் மீது அளவுகடந்த பாசம் மட்டுமல்ல, அதீத மரியாதையும் கொண்டவர் ஸ்வேதா என்பது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது.
``அப்பா, அம்மா பிரபாவதி, நான், தம்பி பிரணவ்னு எங்கள் குடும்பத்துல நாலே பேர்தான். எனக்கும் தம்பி பிரணவுக்கும் நாலு வயசு வித்தியாசம். அப்பா சினிமாவுல இருந்தாலும் என்னையும் தம்பியையும் நல்லா படிக்கவும் நிறைய விஷயங்களைக் கத்துக்கவும் என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். படிப்பு மட்டுமல்லாம, ஃபிட்னஸ், ஸ்போர்ட்ஸ், மன நிம்மதிக்கான விஷயங்கள்னு எல்லாத்தையும் பண்ணச் சொல்லி, எங்களுக்கு கத்துக்கொடுத்தவரும் அப்பாதான். பார்க்கறதுக்கு அப்பா கொஞ்சம் ரஃப் அண்ட் டஃப்பா தெரிஞ்சாலும் நிஜத்துல அவர் ரொம்ப ஸ்வீட்.
அந்தந்த வயசுக்குண்டான கட்டுப்பாடுகள் வீட்டுல நிச்சயம் இருந்திருக்கு. ஸ்கூல் படிச்சிட்டிருந்தபோது போன் யூஸ் பண்ணக் கூடாதுன்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருந்தார். ஆனா, நானும் தம்பியும் காலேஜ் வந்ததும் நாங்க கேட்காமலேயே எங்களுக்கு போன் வாங்கிக் கொடுத்ததும் அப்பாதான். இதுவரைக்கும் இது வேணும் அது வேணும்னு நானோ தம்பியோ அப்பாகிட்ட கேட்டு வாங்கினதா ஞாபகம் இல்லை. கேட்காமலேயே எங்க தேவை தெரிஞ்சு எல்லாத்தையும் எங்களுக்கு செஞ்சிருக்கார் அப்பா. என்னையும் தம்பியையும் முழு சுதந்திரத்தோட வளர்த்தார்.
பெசன்ட் நகர் ரவின்னா எங்க ஏரியாவுல தெரியாத ஆட்களே இருக்க மாட்டாங்க. சின்ன வயசுல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கார்னு அப்பா எங்ககிட்ட நிறைய சொல்லியிருக்கார். சினிமாவுல வில்லன் கேரக்டர்லயும் நெகட்டிவ் கேரக்டர்லயும் நடிச்சதால அப்பா நிஜத்துலயும் அப்படித்தான் இருப்பார் போலன்னு நிறைய பேர் நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, எங்களுக்கு அப்பாவைத் தெரியும். பொண்ணுங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் அவங்களுக்கு அவங்க அப்பாதான் முதல் ஹீரோவா இருப்பார். எனக்கும் அப்படித்தான். சினிமாவுலதான் அவர் வில்லன். ரியல் லைஃப்ல அவர் எனக்கு ஹீரோ.
Also Read: பிக்பாஸ், மாஸ்டர் செஃப், சர்வைவர்... கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜுனுக்கு சம்பளம் எவ்வளவு?
எங்கள் குடும்பத்துல பொண்ணுகளை அதிகம் படிக்க வைக்க மாட்டாங்க. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொடுத்துடுவாங்க. என் விஷயத்துலயும் அப்படி நடந்துடுமோன்னு எனக்கொரு பயம் இருந்தது. ஆனா, அப்பாகிட்ட நான் படிக்கணும்னு ஆசைப்படுறேன்னு சொன்னதும் மறுக்காம உடனே ஓகே சொன்னார். `உனக்கு என்ன விருப்பமோ அதைப் படி... என்னவாகணும்னு ஆசைப்படுறியோ, அதைச் செய்'னு சப்போர்ட் பண்ணினார். நான் இன்னிக்கு சென்னையில பிரபல காலேஜ்ல புரொஃபஸரா வேலை பார்க்கறதுல அப்பாவுக்கு ரொம்பவே பெருமையும் சந்தோஷமும். என் தம்பி பிபிஏ முடிச்சிருக்கார். இத்தனைக்கும் அப்பா ஸ்கூல் படிப்புதான் முடிச்சிருக்கார். ஆனா, அவருக்கு புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிறதுல பெரிய ஆர்வம் உண்டு. அப்பா ஆறு மொழிகள் பேசுவார். இப்படி எல்லா விஷயங்கள்லயும் அப்பாதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்.
வில்லன் கேரக்டர்ல அதிகம் நடிச்சதால அப்பாவுக்கு ஷூட்டிங்ல நிறைய அடிபட்டிருக்கு. பலநாள் அடிபட்ட காயங்களோடவும் வலியோடவும் வீட்டுக்கு வருவார். ஆனா, அது எனக்கோ என் தம்பிக்கோ தெரிய வேண்டாம்னு அம்மாகிட்ட சொல்லியிருப்பார். நாங்க வளர்ந்த பிறகுதான் அவருடைய புரொஃபஷனை பத்தியும் அதுல உள்ள ரிஸ்க் பத்தியும் தெரிஞ்சுகிட்டோம்.
`முதல்வன்' படத்துல பயங்கரமான ஒரு ஸ்டன்ட் சீன். அதுல கிட்டத்தட்ட நூலிழையில உயிர் பிழைச்சதாகவும், அர்ஜுன் சார்தான் அப்பாவை காப்பாத்தினதாகவும் அப்பா எங்ககிட்ட சொல்லியிருக்கார்.
Also Read: ``பிடிச்சவங்க கன்னத்தைக் கடிக்குறது என் வழக்கம்; அது தப்பா?!" - டிவி சர்ச்சை குறித்து நடிகை பூர்ணா
அந்த ஷாட் முடிஞ்சதும் டைரக்டர் ஷங்கர் சார், அப்பாவுக்கு 500 ரூபாய் நோட்டுல கையெழுத்து போட்டுக் கொடுத்தாராம். அந்தப் பணத்தை அப்பா இப்பவும் பத்திரமா வெச்சிருக்கார். அப்பா நடிச்சதுல எனக்கு `சென்னை எக்ஸ்பிரஸு'ம் `போக்கிரி'யும் ரொம்ப பிடிக்கும். விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தோடதான் அப்பா எங்க ரெண்டு பேரையும் வளர்த்தார். சினிமா சூழலைப் பார்த்து வளர்ந்தாலும் எனக்கென்னவோ அந்தத் துறையில ஈடுபாடு இல்லை. நான் படிச்சு புரொஃபஸராகணும்னு ஆசைப்பட்டேன். எனக்குப் பிடிச்ச காமர்ஸ் படிச்சு, சென்னையில தனியார் காலேஜ்ல அதே துறையில புரொஃபஸரா வேலை பார்க்கறேன். தம்பிக்கு சினிமாவுல ஆர்வம் இருக்கு... பார்ப்போம்'' - அப்பாவின் அருமை, பெருமைகள் பேசும் ஸ்வேதா, `சர்வைவர்' நிகழ்ச்சியில் ரவியை நெகிழவைத்த அவர்களின் சில்வர் ஜூபிளி திருமணநாள் பற்றியும் பேசினார்.
``அம்மா-அப்பாவுக்கு இந்த வருஷம் 25-வது வெடிங் ஆனிவர்சரி. ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி இதே நாள்லதான் நான் என் கரியரை ஆரம்பிச்சேன். அதனால அந்த நாள் எனக்கு இன்னும் ஸ்பெஷல். முதல் மாச சம்பளத்துல அம்மா, அப்பாவுக்கு வெள்ளியில மோதிரம் வாங்கிக் கொடுத்தேன். இந்த வருஷம் அவங்க ஆனிவர்சரியை ரொம்ப கிராண்டா கொண்டாடணும்னு நானும் தம்பியும் நிறைய பிளான்ஸ் வெச்சிருந்தோம். ஆனா, எதிர்பார்க்காத நேரத்துலதான் அப்பா `சர்வைவர்' ஷோவுக்கு கிளம்பிட்டார். அதனால அப்பா கிளம்பறதுக்கு முன்னாடியே ஒரு குட்டி சர்ப்ரைஸ் கொடுத்துதான் அப்பாவை வழியனுப்பி வெச்சோம்.
சர்வைவர் ஷோவுக்கு போறேன்னு அப்பா சொன்னதும் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. இதுவரை அப்பாகிட்ட பேசாம ஒருநாள்கூட இருந்ததில்லை. மாசக்கணக்குல ஷூட்டிங்குக்காக எங்களை எல்லாம் பிரிஞ்சு இருந்திருக்கார். ஆனாலும் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் எங்களுக்கு போன் பண்ணிப் பேசுவார். அதனால அவரை மிஸ் பண்ணின ஃபீல் வந்ததே இல்லை.
Also Read: சர்வைவர்: `பப்ளிக்கா இப்படி தர்மசங்கடப்படுத்துவார்னு எதிர்பார்க்கல!' - விக்ராந்த் மனைவி மானசா
ஆனா, சர்வைவர் ஷோவுல போன்லகூட பேச முடியாதுன்னு சொன்னதும் ரொம்ப கஷ்டமா இருந்தது. நாங்க நாலு பேருமே ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப குளோஸ். ஒருத்தர் இல்லைனாலும் மத்த மூணு பேரும் மிஸ் பண்ணுவோம். ஆனாலும் அப்பா அந்த ஷோவுல ஜெயிக்கணும்னு மனசைத் தேத்திக்கிட்டு அனுப்பிவெச்சோம்...'' என்பவர், நிகழ்ச்சியில் எலிமினேஷன் லிஸ்ட்டில் அப்பாவின் பெயர் இடம்பெற்றது பற்றிய தன் கருத்தைப் பகிர்கிறார்.
``சர்வைவர்' ஷோவுல அப்பாவோட வயசை வெச்சு ஒரு பேச்சு போயிட்டிருக்கு. மத்த போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது அப்பா அவங்களைவிட வயசுல மூத்தவர்தான். ஆனா, அவங்களுக்கு சமமா அப்பாவும் போட்டி போடுறதைப் பார்க்கும்போது பெருமையா இருக்கு. யார், என்ன வேணா சொல்லட்டும். எங்கப்பாவோட டெடிகேஷன்மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. நிஜ வாழ்க்கைலயும் அப்பா சர்வைவர்தான். சர்வைவர் ஷோவுலயும் அவர் டைட்டில் ஜெயிக்கணும்ங்கிற ஆசை எனக்கு இருக்கு. அந்த நாளுக்காக நாங்க எல்லாரும் வெயிட்டிங்!'' - நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பாசமகள்.
from விகடன்
Comments