'சார்பட்டா'வின் வெற்றிக்கு முன்பாகவே 'நட்சத்திரம் நகர்கிறது' என அடுத்தப்படத்துக்கு நகர்ந்துவிட்டார் இயக்குநர் பா.இரஞ்சித். காளிதாஸ் ஜெயராம், துஷாரா உள்பட பல இளம் நடிகர்கள் நடிக்கும் காதல் கதையை இயக்குகிறார் இரஞ்சித். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் பரபரப்பாக நடந்துவருகிறது.
தொடக்கத்தில் இந்தப் படத்தில் புதுமுகங்கள் மட்டுமே நடிப்பதாக இருந்த நிலையில் பின்னர் காளிதாஸ், 'சார்பட்டா' துஷாரா என இளம் நடிகர்கள் உள்ளே வந்தார்கள். இரஞ்சித்தின் வழக்கமான டீம் இந்தப் படத்தில் இருக்காது என்று முன்னரே முடிவெடுக்கப்பட்டதால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி, கலை இயக்குநர் ராமலிங்கம் ஆகியோர் இந்தப்படத்தில் இல்லை.
சந்தோஷ் நாராயணணுக்கு பதில் இளையராஜா படத்துக்கு இசையமைக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், 'காஸ்ட்லஸ் கலெக்டிவ்' குழுவின் இசையமைப்பாளரான டென்மா 'நட்சத்திரம் நகர்கிறது' படத்துக்கு இசையமைக்கிறார். டென்மா ஏற்கெனவே இரஞ்சித் தயாரிப்பில் உருவான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்துக்கு இசையமைத்திருந்தார். அதேப்போல் அந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் குமாரே 'நட்சத்திரம் நகர்கிறது' படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
''படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்துவிட்டது. தற்போது பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில், அடுத்ததாக ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடக்கயிருகிறது'' என்கிறார்கள் பா.இரஞ்சித் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள்.
from விகடன்
Comments