அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பும் புனிதாவிடம் சிவாவை பார்த்துக் கொள்ளும்படி காயத்ரி சொல்கிறாள். அதற்கு புனிதா, “எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பது போல உனக்கு சிவாவை பிடிக்க ஆரம்பித்திருக்கிறதா” என்று கேலி செய்கிறாள். காயத்ரி அதைக் கேட்டு கோபித்துக் கொள்கிறாள். புனிதா தன்னையும், சிவாவையும் அப்படி சேர்த்து சொல்வது கூட தவறு என்பது போல காயத்ரி நடந்து கொள்கிறாள்.
காயத்ரிக்கு சிவாவின் மீது அன்பு இருக்கிறது. தனக்காக சண்டை போட்டான் என்கிற நன்றி உணர்வு இருக்கிறது. அதுபோக சிவாவுக்கு நேர்ந்த ஆபத்துக்கு தானும் ஒரு காரணம் என்கிற குற்ற உணர்ச்சியும் அதிகமாகவே இருக்கிறது. அதற்காகத்தான் மீண்டும் மீண்டும் அவனிடம் நெருங்கி சென்று பேச முயற்சி செய்கிறாள். ஆனால் அது காதல் இல்லை. அதுபோக தனக்கு சுந்தருடன்தான் திருமணம் ஆகும் என்பதும் காயத்ரிக்கு தெளிவாகத் தெரியும்.
ஆனால் புனிதா முற்போக்கான, அதே சமயம் ப்ராக்டிகலான பெண். அதனால் காயத்ரிக்கு சுந்தர் உடனான ஏற்பாட்டு திருமணத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தாலும் சிவாவின் மீது ஈர்ப்பு வருவது தவறில்லை என்பதை மனதில் வைத்து அவ்வாறு கேட்கிறாள்.
வீட்டில் தனியாக இருக்கும் சிவாவை வீட்டு காவலர் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறார். ஏதாவது உதவி வேண்டுமா என கேட்கிறார். அவரிடம் சிவா தன்னை கழிப்பறைக்கு செல்ல உதவச் சொல்லி கேட்கிறான். அவர் அவ்வாறு வந்து கவனித்துக் கொள்வதற்கு பரத் காரணம் என்று சிவா நினைக்கிறான். காயத்ரி அலுவலகம் செல்லும்போது சிவாவை கவனித்துக் கொள்ளுமாறும், சிவாவுக்கு சாப்பாடு வாங்கித் தர பணம் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் காவலர் சொல்கிறார்.
சிவாவுக்கு காயத்ரி எதற்காக இதெல்லாம் செய்கிறாள் என்று யோசனையாக இருக்கிறது. வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக சென்று சிவாவை பார்க்கும் காயத்ரி அவனுக்கு டீ, காபி வேண்டுமா என்று கேட்கிறாள். வேண்டாம் என்று சொல்லும் சிவா காயத்ரிக்கு நன்றி சொல்கிறான். காயத்ரியும் சிவாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். காயத்ரி சிவாவிடம் உரிமை எடுத்து விளையாட்டாக பேசுகிறாள்.
சிவா நன்றாக பேச ஆரம்பித்ததும் காயத்ரிக்கு தான் செய்த தவறு குறித்த குற்ற உணர்ச்சி குறைந்து விடுகிறது. சிடுமூஞ்சி மேலதிகாரியை சந்தர்ப்பம் கிடைக்கும் போது விளையாட்டாக அணுகுவது போல காயத்ரி சிவாவை டீல் செய்கிறாள். சிவா இயல்பிலேயே கோபக்காரனாக இருக்கலாம். ஆனால் அவன் காயத்ரியின் மீது கோபப்படுவதற்கான காரணம் மிக நியாயமானது.
ஒரு சாதாரண மனிதனுக்கு அந்த கோபம் கூட இல்லாமல் வாழ முடியாது. காயத்ரி தான் சிவாவை பார்க்கும் பொழுதெல்லாம் மன்னிப்பு கேட்டால் போதும், அவன் உடனே சமாதானமாகி விட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். தான் செய்த தவறுக்கான குற்றவுணர்ச்சியில் இருந்து அவசரமாக வெளிவர துடிக்கும் யாரும் மீண்டும் அதே தவறை செய்வார்கள். ஏனெனில் அவர்கள் செய்த தவறின் தீவிரம் அவர்களுக்கு புரிவது இல்லை.
கவிதா வேலை பார்க்கும் மேட்ரிமோனியல் அலுவலக கட்டடத்தில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவர் தனக்கு வரன் பார்க்க அங்கு வருகிறார். தனக்கு பெற்றோர், உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என கூறும் அப்பெண் தனக்கேற்ற வரன் பார்த்து தரச் சொல்லி தயக்கத்துடன் கேட்கிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ராஜேஷ் அந்தப் பெண்ணைப் போலவே ’தனக்கென்று வரும் வாழ்க்கை துணையிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை’ என்று சொல்லி இருக்கும் ஒருவரை பற்றி அப்பெண்ணுக்கு சொல்வதுடன் அப்போதே சம்பந்தப்பட்டவரை அழைத்து பேசுகிறான்.
நம் சமூகத்தில் இன்னமும் பெண் அழகாக இருக்க வேண்டும், மாப்பிள்ளை என்றால் அதிக வருமானம் இருக்க வேண்டும் என்பது போன்ற கண்டிஷன்ஸ் இருக்கின்றன. இவற்றை எல்லாம் கடந்து காதலிப்பவர்களும், காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களும் உண்டு. சாதி, மதம், பொருளாதாரம் எல்லாவற்றையும் பார்த்து செய்யப்படும் ஏற்பாட்டு திருமணங்களை விட, அன்பு, காதல், ஈர்ப்பு என மனப் பொருத்தம் பார்த்து நடக்கும் காதல் திருமணங்களே சரியென தொடர்ந்து பேசுகிறோம்.
ஆனால் நம் சமூகம், குடும்ப அமைப்பு, வளர்ப்பு முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வந்து விடாத சூழலில் பலரும் எத்தனை வயதானாலும் பெற்றோர்களே பார்த்து திருமணம் முடித்து வைக்கும் வரை அதைப் பற்றி பேச்சு எடுப்பதில்லை. குடும்பத்தை தாண்டி தன் மனதுக்கு பிடித்த வாழ்க்கை துணையை அமைத்து கொள்வது பற்றி யோசிக்க முடியாத அல்லது காதல் செய்வதே தவறு என்று சொல்லி வளர்க்கப்படும் காயத்ரியை போன்றவர்கள் தான் இங்கு பெரும்பான்மையான பெண்கள். இவர்களுக்கும், காதல் சரியாக அமையாமல், ஆனால் திருமண வாழ்வில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கான வரனைத் தேடிக் கொள்ளவும் உதவியாக திருமண ஏற்பாட்டு அமைப்புகள் இருக்கின்றன.
தங்கள் அலுவலகத்துக்கு வரன் தேடி வந்த இளம்பெண்ணுக்கு தன் நிறுவனத்தின் செலவிலேயே திருமணத்தை நடத்தி வைப்பதாக ராஜேஷ் சொல்லி அனுப்புகிறான். அதை கேட்டு கவிதா ராஜேஷிடம், “அவன் வியாபார புத்தியில் இருப்பதாக காலையில் தவறாக நினைத்து விட்டதாக” சொல்லி மன்னிப்பு கேட்கிறாள்.
ராஜேஷ், ’தான் ஆதரவில்லாத அந்த பெண்ணுக்கு தன்னுடைய செலவில் திருமணம் செய்து வைப்பதாக சொன்னது கூட வியாபார யுக்தி தான்’ என்கிறான். கவிதாவுக்கு புரியவில்லை. அவர்கள் இருவரது சம்மதத்துடன் அவர்கள் திருமணத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொள்வோம் என்று ராஜேஷ் கூறுவதை கேட்டு கவிதாவுக்கு அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் இருக்கிறது.
இன்று வியாபாரங்கள் இப்படித்தான் இருக்கின்றன. சம்பந்தப்பட்டவர்களிடம் முறைப்படி சம்மதம் வாங்கி விட்டால் எதுவும் தவறு இல்லை என்பது இன்று நியாயம் ஆகிவிட்டது. இதெல்லாம் சரி அல்லது தவறு என்கிற விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் இருக்கும் நன்மைகளை பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியமானது.
தனக்கெஎன்று யாரும் இல்லை என்று வந்து நிற்கும் ஒரு இளம் பெண்ணுக்கு, அவர் மனதுக்குப் பிடித்தவராக, பொருத்தமானவராக, மாப்பிள்ளை பற்றிய தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, தங்கள் செலவிலேயே திருமணம் செய்து வைப்பது மிகப்பெரிய விஷயம். மேட்ரிமோனியல் நிறுவனம் இதை விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்டாலும் கூட அதுவும் நன்மையே. பண வசதி இருந்தும் திருமணம் செய்து வைக்க தனக்கு யாரும் இல்லை என்று நினைத்து யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இது போன்ற அமைப்புகள் வழி காட்டுகின்றன. பல நேரங்களில் முற்போக்காக சிந்திப்பதை விட பிராக்டிக்கலாக இருப்பது அவசியம் அல்லவா?
புது வேலையில் ஜொலிப்பாள் என்று எதிர்பார்த்த கவிதாவுக்கு முதல் நாளே பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவள் எப்படி அங்கே Survive ஆவாள் என்பதும், காயத்ரி சிவாவின் உறவு புது Dimension எடுத்திருப்பதும் அடுத்த எபிசோடிற்காக காத்திருக்கும் ஆர்வத்தை அதிகமாக்குகிறது.
காத்திருப்போம்!
from விகடன்
Comments