AKS - 26 |காதலி எப்போதும் பரிசுப்பொருள்தான் கேட்பாளா… ஆணுக்கு பண உதவிகள் செய்வது யார்?!

மருத்துவமனையிலிருந்து சிவாவை புனிதாவும், பரத்தும் வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். பரத் சிவாவை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறான். பரத் புனிதாவை அலுவலகம் கிளம்பிச் சொல்கிறான். சிவாவை விட்டுவிட்டு எப்படி செல்வது என தயங்கும் புனிதாவை இருவரும் தாங்கள் பார்த்துக் கொள்வதாக சொல்கின்றனர்.

கவிதா அலுவலகம் செல்வதற்காக கிளம்பி வருகிறாள். ஹாலில் சிவா உட்காந்திருப்பதை கண்டு தயங்கி நிற்கிறாள். சிவா அவளை பார்த்ததும் தான் கோபப்பட்டதற்காக மன்னிப்பு கேட்கிறான். கவிதா சிவாவிடம் நலம் விசாரிக்கிறாள். சிவா கவிதாவின் புது வேலையை பற்றி விசாரித்து அவளுடன் மகிழ்ச்சியாக பேசுகிறான்.

மிக கோபக்காரனாகவும், யாரையும் மதிக்காதவனாகவும் மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட்ட சிவா அன்பானவனாக, கவிதாவிடம் கோபப்பட்டதற்கு வருத்தம் தெரிவிப்பவனாக, அவள் மீது அக்கறையுடன் வேலை வாங்கித் தருபவனாக இருக்கிறான். மேலும் கவிதாவிடம் கோபப்பட்டது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்கிறான். சிவாவின் கோபங்கள் குறைந்து கொண்டே வருவது தெரிகிறது. அதேசமயம் அன்பான, அமைதியான பெண்ணான காயத்ரி தன்னுடைய ஈகோவினால் ஒருவன் உயிருக்கு போராடும் போதும் காப்பாற்றாமல் பழிவாங்கும் எண்ணத்தில் மீண்டும் ஆபத்தில் தள்ளும் காரியத்தை செய்கிறாள்.

AKS - ஆதலினால் காதல் செய்வீர்

மிக பிராக்டிக்கலாக நடந்து கொள்ளும், எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் கவிதாவும் சிவா அவளை சாதாரணமாக திட்டியதற்கு அவனை மற்றவர்கள் அடித்தது சரிதான் என்கிற முடிவுக்கு வருகிறாள். இப்போதும் தான் திட்டியதற்காக சிவா வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கிறான். ஆனால், கவிதா சிவாவுக்கு அடிபட்டது சரியென தான் நினைத்தது தவறு என்றும், சிவாவை பாண்டியனிடம் திட்டியதற்காகவும் கவிதா வருந்தவில்லை. ஒருவரை அவர் பேசுவதை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வரக் கூடாது என்பதற்கு இவர்கள் மூன்று பேரும் தான் உதாரணம்.

காயத்ரிதான் சிவாவிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என புனிதாவிடம் சொல்கிறாள். மேலும் சிவாவுக்கு ஏதேனும் சமைத்துக் கொடுத்து உதவி செய்யவா எனக் கேட்கிறாள். புனிதா உன்னுடைய குற்ற உணர்ச்சிக்கு பரிகாரம் தேடாதே என்று எச்சரிக்கிறாள். அதை காதில் வாங்காமல் காயத்ரி சிவாவிடம் மன்னிப்பு கேட்கச் செல்கிறாள். அவளைக் கண்டதும் பரத்தும், சிவாவும் கோபப்படுகிறார்கள்.

புனிதா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காயத்ரிக்கு தன் மனதை சமாதானப் படுத்திக்கொள்வதுதான் அவளுடைய பிரதான எண்ணமாக இருக்கிறது. இப்போதும் சிவா மற்றும் பரத்தின் மனநிலை பற்றி யோசிக்காமல் காயத்ரி மன்னிப்புக் கேட்டால் போதும் என்கிற எண்ணத்துடன் இருக்கிறாள்.

AKS - ஆதலினால் காதல் செய்வீர்

பரத்தின் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என அவன் ஊருக்கு கிளம்பிச் செல்கிறான். பரத்துக்கு கால் செய்து புனிதா அவனுக்கு மன தைரியத்தை கொடுப்பதுடன் மருத்துவத்துக்குத் தேவையான பணத்தையும் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறாள். புனிதா பரத்துக்கு கால் செய்ததும் அவனை வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்வது, வேகமாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்வது, பரத் அவனது அம்மாவின் முன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என சொல்லும் காட்சிகள் அருமை. புனிதாவை போல் தன்னை சுற்றி இருப்பவர்களை புரிந்து கொண்டு உண்மையான அக்கறை மற்றும் அன்புடன் இருக்கும் பெண்கள்தான் அதிகம். ஆனால் காதலிக்கும் பெண்கள் என்றாலே அவர்கள் தொல்லை தருபவர்களாகவும், எல்லாவற்றிலும் தங்களுக்கே முன்னுரிமை வேண்டும் என சண்டை போடுவர்களும் இருப்பார்கள் என திரைப்படங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன.

காதலிக்கும் சமயத்திலேயே காதலர்கள் ஒருவருக்கொருவர் பொருளாதார உதவிகள் செய்து கொள்வது இயல்பு. ஏற்பாட்டு திருமணங்களை விட காதலித்து மணம் புரிந்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்பத்தினரை தனது குடும்பம் போல் நடத்துகிறார்கள். உதவி செய்தது யாருக்கும் தெரியப்போவது இல்லை என்ற சூழ்நிலையிலும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தனது காதலன் குடும்பத்திற்கான பண உதவிகள் செய்யும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். பெண்கள் காதலனிடம் பரிசு பொருட்கள் கேட்பார்கள், செல்போன் ரீசார்ஜ் செய்ய சொல்வார்கள் என்பதை திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளாக பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் காதலனுக்கு உதவி செய்யும் கதைகள்தான் ஏராளம்.

அதே சமயம் காதலிப்பவர்களால் பண விஷயத்தில் ஏமாற்றப்படுவது இருபாலருக்கும் நடக்கிறது. காதலிக்கும் காலத்தில் ஒருவர் மற்றொருவருடைய கனவுகளுக்கு உறுதுணையாக இருப்பதும் தன் ஆண்டுக்கணக்கான உழைப்பினால் ஈட்டிய பணத்தை காதலின் பேரில் செலவழித்துவிட்டு தங்கள் கனவுகள் நிறைவேறியதும் பறந்து செல்பவர்களை ஒன்றும் செய்ய இயலாமல் ஏமாந்து பார்த்துக் கொண்டு நிற்பவர்களும் ஏராளம்.

AKS - ஆதலினால் காதல் செய்வீர்

சிவாவை கவனித்துக் கொள்ள பரத் ஹோம் நர்ஸ் ஏற்பாடு செய்துவிட்டு செல்கிறான். வீட்டுக்கு வந்ததில் இருந்து நர்ஸ் செல்போனில் பேசிக் கொண்டேயிருக்கிறார். அவரது உரையாடல் சிவாவுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. ஆனாலும் முதல் முறையாக சிவா பொறுமையாக இருக்கிறான். அவன் கழிப்பறை செல்ல நர்ஸிடம் உதவி கேட்கிறான். அவனை கழிப்பறையில் விட்டுவிட்டு மீண்டும் அவர் செல்போனில் மூழ்கிப்போகிறார்.

மருத்துவ பணிக்கு வருபவர்கள் பெரும்பாலும் கருணை மனம் உடையவர்களாக இருப்பார்கள். வேலை சில சமயங்களில் அவர்களை சிடுசிடுப்பானவர்களாக மாற்றினாலும் எப்போதும் கடமையில் சரியாக இருப்பார்கள். வேலையில் நேர்மை இல்லாதவர்கள் எல்லா துறைகளிலும் உண்டு. அதற்காக மருத்துவ பணியில் இருக்கும் ஒருவர் ஒரே சமயத்தில் பலரை காதலின் பேரில் ஏமாற்றுவது, வேலை நேரத்தில் சரியாக நோயாளியை கவனிக்காமல் இருப்பது போன்ற கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை சித்தரித்திருப்பது வருத்தத்திற்குரியது.

புதிதாக வந்திருக்கும் ஹோம் நர்ஸ் சிவாவின் கோபத்தின் முன் தாக்கு பிடிப்பாரா, காயத்ரி சிவாவை பார்த்துக் கொள்ளும் சூழ்நிலை வந்தால் சிவா அதை ஏற்றுக் கொள்வானா?

காத்திருப்போம்!


from விகடன்

Comments